Press "Enter" to skip to content

அமெரிக்க போர்க்கப்பலை மோதுவதாகக் கூறி விரட்டி அடித்தோம்: ரஷ்யா

ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக கூறுகிறது ரஷ்யா.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ. தூரம் பயணித்த யுஎஸ்எஸ் ஜான் எஸ் மெக்கெய்ன் என்ற அமெரிக்கப் போர்க் கப்பல் மீது மோதிவிடுவதாக தாங்கள் மிரட்டிவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பிறகு அந்த அமெரிக்க கப்பல் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால், தாங்கள் எந்த தவறும் இழைக்கவில்லை என்றும், தங்கள் கப்பல் துரத்தியடிக்கப்படவில்லை என்றும் கூறி ரஷ்யாவின் கூற்றை மறுக்கிறது அமெரிக்க கடற்படை.

ஜப்பான், ரஷ்யா, கொரிய நாடுகள் ஆகியவை சூழ்ந்த இந்த கடற்பரப்புக்கு ஜப்பான் கடல் என்று பெயர். இதன் இன்னொரு பெயர் கிழக்குக் கடல் என்பதாகும்.

ரஷ்யா தமது பசிபிக் படைப்பிரிவைச் சேர்ந்த அட்மிரல் வினோகிராடோவ் என்ற போர்க்கப்பலில் இருந்து சர்வதேச சேனல் ஒன்றின் வழியாக அமெரிக்கக் கப்பலுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியதாகக் கூறுகிறது. அந்த எச்சரிக்கை செய்தியில் ஊடுருவிய கப்பலை தங்கள் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுவதற்காக அந்தக் கப்பல் மீது மோதுகிற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது என்று கூறுகிறது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்.

ரஷ்யா வெளியிட்ட இந்த செய்தி பொய் என்கிறார் அமெரிக்க கடற்படையின் 7வது பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜோ கெய்லி.

“அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா எப்போதும் அடி பணியாது. ரஷ்யா செய்வதைப் போல சட்டவிரோத கடற்பரப்பு உரிமை கோரல்களை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்காவை நிர்ப்பந்திக்கவும் முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

இது போன்ற நிகழ்வுகள் கடலில் நடப்பது மிகவும் அரிது. ஆனால், கிழக்கு சீனக் கடலில் ரஷ்யாவின் அட்மிரல் வினோகிரேடோவ் போர்க்கப்பல் அமெரிக்கக் கப்பல் ஒன்றின் மீது கிட்டத்தட்ட மோதச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சம்பவத்தின்போது ரஷ்யா- அமெரிக்கா இரண்டும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி குற்றம்சாட்டின.

வானிலும் கடலிலும் இரு நாடுகளும் அடிக்கடி இப்படிப்பட்ட அபாயகரமான மோதல் சூழ்நிலைகளை ஏற்படுத்துவதாக ஒன்றின் மீது மற்றொன்று குற்றம்சாட்டிவருகின்றன.

1988ல் கருங்கடலில் ரஷ்யக் கப்பல் ஒன்று அமெரிக்கக் கப்பலை மோதியது. அப்போதும் தங்கள் கடற்பரப்பில் அமெரிக்கக் கப்பல் ஊடுருவியதாக குற்றம்சாட்டியது ரஷ்யா.

2017ம் ஆண்டு சிங்கப்பூர் அருகே ஒரு எண்ணெய்க் கப்பல் மீது மோதியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜான் எஸ்.மெக்கெய்ன் போர்க்கப்பல். இதில் 10 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »