Press "Enter" to skip to content

சர்ச்சைக்குரிய “கன்னித்தன்மை பரிசோதனை”: பிபிசியின் விசாரணை – விரிவான தகவல்கள்

பிரிட்டனில் மருத்துவமனைகளில் சர்ச்சைக்குரிய “கன்னித்தன்மை பரிசோதனை” நடத்தப்படுவதாக பிபிசி நியூஸ்பீட் மற்றும் பிபிசி வழங்கும் 100 பெண்கள் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட கள விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த உடலை ஊடுருவும் பரிசோதனைகள் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நாவால் மனித உரிமை மீறல்கள் எனக் கருதப்பட்ட சோதனைகளாகும். மேலும் இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இது அறிவியல்பூர்வமானதல்ல என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஒருவர் கன்னித்தன்மையுடன் உள்ளாரா என்பதை கண்டறிய முடியாது என்றும், இது ஒருவரை துன்புறுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் பெண்ணுறுப்பு பரிசோதனை செய்து பார்க்கப்படும்.

மேலும் பிபிசி விசாரணையில், பல தனியார் மருத்துவமனைகள் “கன்னித்தன்மை சரி செய்யப்படும் ” என்ற விளம்பரங்களை வெளியிட்டு வருவதும் கண்டறியப்பட்டது. அந்த மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு பேசியபோது, கன்னித்தன்மை பரிசோதனைகள், 150 பவுண்டுகள் முதல் 300 பவுண்டுகள் வரை செய்யப்படும் என்று கூறப்பட்டது.

RED TABLE TALK / FACEBOOK

இம்மாதிரியாக 21 மருத்துவமனைகளை பிபிசி கண்டறிந்தது. அதில் 16ல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏழு இடங்களில் “கன்னித்தன்மை பரிசோதனை” செய்யப்படும் என்று உறுதி செய்தனர். பலர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அவர்கள் அனைவரும் ஹைமன் என்று சொல்லக்கூடிய பெண்ணுறுப்பின் தொடக்கத்தில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற திசு பகுதியை சரி செய்யும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதாக தெரிவித்தனர். அதற்கு 1500 பவுண்டுகளில் இருந்து 3000 பவுண்டுகள் வரை ஆகும் என அவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் தகவல்களின்படி 69 ஹைமன் அறுவை சிகிச்சைகள் கடந்த ஐந்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கர்மா நிர்வாணா என்று அழைக்கப்படும் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவி பெற்ற ஒரு பெண்ணின் கதையை நியூஸ் பீட் அறிந்தது. இந்த தொண்டு நிறுவனம் குடும்ப மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கும், கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் உதவி வருகிறது.

“எனது பெற்றோர் என்னை அவர்கள் பார்க்கும் ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் வற்புறுத்தி துன்புறுத்தினர்” என அந்த பெண் தெரிவித்தார்.

ஓடி வருவதே எனக்கான ஒரே தேர்வு

“ஒரு நாள் எனது சமூகத்தை சேர்ந்த ஒருவர் எனது நண்பர்களுடன் என்னை பார்த்துவிட்டு அதில் ஒரு ஆண் எனது ஆண் தோழர் என என் பெற்றோரிடம் சொல்லி விட்டார். அப்போதிலிருந்து எனது சமூகத்தில் பல வதந்திகள் பர்வின,” என்கிறார் அவர்.

அதன்பின் ”உனக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்வோம்” என அந்த பெண்ணை அவரது பெற்றோர் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

”எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆணும் நான் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் திருமணம் நடக்கும் என்றும் கோரினர்,” என்று அந்த பெண் தெரிவித்தார்.

”எனக்கு அது என்னவென்றே புரியவில்லை. ஓடி வருவதுதான் எனது ஒரே தேர்வாக இருந்தது. அதைதான் நான் செய்தேன்,” என்று அவர் தனது நிலையை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

கர்மா நிர்வாணாவின் தொலைபேசி அழைப்புகளை ஏற்பவர் பிரியா மனோடா.

“இது குறித்து கவலைக் கொள்ளும் பெண்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இது அவர்கள் குடும்பத்தாருக்கு தெரிந்துவிட்டது என்ற அச்சமோ அல்லது அவர்கள் ஒரு உறவில் இருந்து கன்னித்தன்மையை இழந்ததாலோ. எதுவாயினும் குடும்பம் அவர்களை வற்புறுத்தலாம் மேலும் அதற்கான விளைவுகள் குறித்து அந்த பெண்கள் அச்சம் கொண்டிருக்கலாம்,”

”பெண்கள் அவர்கள் கணவரை அவர்களே தேர்வு செய்து கொண்டாலோ, அல்லது அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டாலோ, குடும்ப மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தப்படுதலுக்கும், கட்டாய திருமணத்திற்கும் ஆளாக்கப்படுகின்றனர். தொண்டு நிறுவனத்திடம் வரும் பல பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அசாதாரண சூழலில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் எங்களுக்கு தெரியவந்தது. மேலும் பலர் அவர்களின் குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டனர்.”

உலக சுகாதார நிறுவன தகவல்படி குறைந்தது 20 நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் பெண்கள் கன்னித்தன்மையுடன் உள்ளனரா இல்லையா என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஏனென்றால் ஹைமன் என்று சொல்லப்படும் அந்த திசு பல காரணங்களுக்காக கிழியலாம். ஏன் டாம்புன்களை பயன்படுத்தும்போதோ அல்லது உடற்பயிற்சியின் போதோ கூட அது கிழியலாம்.

இணையத்தில்விற்பனையாகும்கிட்கள்

RACHEL STONEHOUSE

இந்நிலையில் ஹைமனை சரி செய்யும் கிட்டுகள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதை பிபிசி கண்டறிந்தது. மேலும் 50 பவுண்ட்களை வரை அவை விற்கப்படுகின்றன.

104 பவுண்டுகளுக்கு விற்கப்பட்ட ஒரு கிட் ஜெர்மனியில் இருந்து வந்தது. அதில் பெண்ணுறுப்பை இறுக்கும் ஜெல் 60 மில்லி லிட்டர், நெகிழி (பிளாஸ்டிக்) ட்வீசர்ஸ், மூன்று போலி ரத்தம் நிறைந்த பாக்கெட்டுகள், இருந்தன. ஆனால் அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற குறிப்பு அதில் ஏதும் இல்லை.

அஷ்ஃப்க் கான் ஒரு மகப்பேறு மருத்துவர் கன்னித்தன்மை சோதனைக்கும், ஹைமனை சரி செய்ய வேண்டும் என்பதற்குமான கோரிக்கை இவருக்கு வருவதுண்டு.

“ஹைமன் இல்லையென்றால் நீங்கள் கன்னித்தன்மையற்றவர் என்ற கருத்து பொய்யானது. நான் அது கிழிந்திருக்கு என்று சொன்னால் அதை சரி செய்ய வேண்டும். பின் அதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் அது பொய் சான்றிதழாகத்தான் இருக்கும்,” என்கிறார் மருத்துவர் அஷ்ஃபக் கான்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »