Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

  • மாட் மெக்ராத்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தீவிர வானிலை சார்ந்த பாதிப்புகளின் காரணமாக 2020ஆம் ஆண்டில் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்டு என்ற தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த ஆண்டின் 10 பேரிழப்புகளை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இதில் பட்டியலிடப்பட்டுள்ள பத்து வானிலை சார்ந்த தீவிர பேரிடர்களில் அதிகபட்சமாக ஆறு ஆசிய கண்டத்தில் பதிவாகி உள்ளன. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்ததாக, அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் காட்டுத்தீ பாதிப்புகளினால் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு நேர்ந்துள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டெழுந்து வர போராடி வரும் வேளையில், லட்சக்கணக்கான மக்கள் இதுபோன்ற இயற்கை பேரிடர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ஆசியாவில் பதிவான மிகவும் மோசமான பேரிடர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பொழிந்த பருவமழையும், அதையொட்டி ஏற்பட்ட புயல்களும் தொடர்புடையதாக இருந்தன. இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளின் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், லட்சக்கணக்கானோர் தங்களது வசிப்பிடங்களை விட்டு இடப்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவற்றின் காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளின் மதிப்பு மட்டும் 70,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆண்டு இந்தியாவை காட்டிலும் வெள்ளப்பாதிப்புகளினால் பேரிழப்பை சீனாவே சந்தித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் வெள்ளப்பாதிப்புகளினால் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை அந்த நாடு சந்தித்துள்ளது. ஆனால், உயிரிழப்புகளை பொறுத்தவரை இந்தியாவை விட குறைவாகவே இருந்தது.

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

மேற்குறிப்பிட்டுள்ள மதிப்புகள் நீண்டகாலம் நிலவிய இயற்கை பேரிடர்களின் இழப்புகளாக உள்ள நிலையில், இன்னும் சில பேரிடர்கள் மிகவும் குறுகிய காலத்தில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தின.

கடந்த மே மாதம் வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயலால், ஒருசில தினங்களில் மட்டும் சுமார் 95,000 கோடிக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன.

“அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 30 – 33 செல்சியஸுக்கு இடையே வெப்பநிலை பதிவாகியுள்ளதை நாங்கள் கண்டோம்” என்று புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் பருவநிலை மாற்ற விஞ்ஞானி மருத்துவர் ராக்ஸி மேத்யூ கோல் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

“இந்த உயர் வெப்பநிலைகள் கடல் வெப்ப அலைகளை தூண்டியதே பருவமழைக்காலத்திற்கு முந்தைய புயல்களான ஆம்பன் மற்றும் நிசர்காவின் தீவிரத்தன்மைக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும்” என்று கிறிஸ்டியன் எய்டு அறிக்கைக்காக ராக்ஸி மேத்யூ தெரிவித்துள்ளார்.

“மழைக்காலத்திற்கு முந்தைய காலங்களில் வங்காள விரிகுடாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வலிமையான புயல்களில் ஆம்பனும் ஒன்றாகும்.”

புயல் மற்றும் மழையின் காரணமாக ஆசிய நாடுகள் பேரிழப்பை சந்தித்த நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினால் 60,000 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் ஏற்பட்ட தீவிர புயல் மற்றும் வெள்ளப்பாதிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் பதிவான அதீத மழைப்பொழிவு, ஆப்பிரிக்காவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் உள்ளிட்டவற்றை ஐக்கிய நாடுகள் சபை பருவநிலைமாற்றத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

கடந்த பிப்ரவரி மாதம் சூறாவளி சியாரா காரணமாக அயர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 14 பேர் உயிரிழந்ததுடன், 20,000 கோடிக்கும் ரூபாய்க்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டன.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்புகள் அனைத்தும் காப்பீட்டு மதிப்பை கொண்டு கணக்கிடப்பட்டதால், உண்மையான இழப்பு இதைவிட அதிகமாக இருக்குமென்று கிறிஸ்டியன் எய்டு தெரிவித்துள்ளது.

பணக்கார நாடுகளில் அதிக மதிப்புமிக்க சொத்துகள் உள்ளதால், அவை ஒப்பீட்டளவில் தீவிர பேரிடர்களால் அதிக இழப்புகளை சந்திக்கின்றன.

ஆனால், சூறாவளி மற்றும் காட்டுத்தீ உள்ளிட்டவற்றின் தீவிரத்தை நிதிசார்ந்த இழப்புகளை கொண்டு மட்டும் அளவிட முடியாது. உதாரணமாக, தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளம் பெரியளவில் நிதிசார்ந்த இழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், அது 138 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதித்துவிட்டது.

இந்த நிலையில், பேரிடர்களில் பருவநிலைமாற்றத்தின் பங்கு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும், இது வருங்காலத்திலும் தொடருமென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மருத்துவர் சாரா பெர்கின்ஸ்-கிர்க்பாட்ரிக், “2019ஆம் ஆண்டை போலவே, 2020ஆம் ஆண்டும் பேரழிவு மிகுந்ததாக உள்ளது” என்று கூறுகிறார்.

“உலகளாவிய சராசரி வெப்பநிலை 1 செல்ஸியஸ் உயர்வுடன் இவை அனைத்தையும் நாங்கள் காண்கிறோம். சராசரி நிலைமைகள் மற்றும் உச்சநிலைகளுக்கு இடையிலான முக்கியமான உறவை இது எடுத்துக்காட்டுகிறது.”

பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்

“பருவநிலை மாற்றத்தின் வெளிப்பாடுகள் பேரிடர்களின் மூலம் வெளிப்படுமே தவிர, சராசரியான மாற்றங்களின் மூலமல்ல. உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக 2020ஆம் ஆண்டை போன்று மோசமான ஆண்டுகளை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

2021ஆம் ஆண்டிலும் இதேபோன்ற இழப்புகளைப் பற்றிய சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் உயரும் வெப்பநிலையின் மோசமான தாக்கத்தை தவிர்க்க உலகிற்கு உதவக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“அமெரிக்காவின் அடுத்த அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில், உடனடி நடவடிக்கைக்கோரி உலகம் முழுவதும் இயக்கங்கள் முழங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், கொரோனாவுக்கு பிறகான காலத்தில் இயற்கைக்கு உகந்த மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருவதாலும், பிரிட்டன் தலைமையில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறவுள்ளதையும் பயன்படுத்தி பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம்” என்று கிறிஸ்டியன் எய்டை சேர்ந்த மருத்துவர் கேட் கிராமர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »