Press "Enter" to skip to content

மிரட்டும் கொரோனா: மலேசியாவில் 2வது ‘லாக்-டவுன்’ உடனடி அமல்

மலேசியாவில் மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு முழுமையான பொது முடக்க கட்டுப்பாடுக்கான ஆணை (லாக் டவுன்) பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மொகிதீன் யாசின் திங்கட்கிழமை மாலையில் அறிவித்தார்.

தற்போது 5 மாநிலங்கள் மற்றும் 3 கூட்டரசுப் பிரதேசங்களில் முழுமையாகவும், ஆறு மாநிலங்களில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜோகூர் பாரு, சபா, புத்தரா ஜெயா, லாபுவான் ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் லாக்டவுன் உத்தரவு அமலுக்கு வருகிறது. ஜனவரி 13 முதல் 26ஆம் தேதி வரை இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது

இன்று திங்கட்கிழமை (ஜனவரி 11) நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வழி உரையாற்றிய மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின், தற்போதைய நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளதாக கவலையுடன் குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலன் கருதியே, அவர்களின் உயிரைக் காக்கும் நடவடிக்கையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதனால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்றார்.

நாடு முழுவதும் தற்போது 1,450 மருத்துவப் பணியாளர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களால் பணியில் ஈடுபட இயலாது என்றும் குறிப்பிட்ட பிரதமர் மொகிதீன் யாசின், இத்தகைய நிலை தமக்கு வருத்தம் அளிக்கிறது என்றார்.

கோலாலம்பூர், கிள்ளான் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ‘கோவிட் 19’ நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், 5 மாநிலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளில் 70 விழுக்காடு நிரம்பி விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“இந்தத் தகவல்களை வெளியிடுவது எனக்கு சுலபமான பணியாக இல்லை. ஆனால், இதுதான் தற்போதைய உண்மை நிலவரம்,” என்றார் பிரதமர் மொகிதீன் யாசின்.

கொரோனா

3 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மலேசியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மலேசியாவில் நாடு தழுவிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எனப்படும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு தொற்றுப் பரவல் வேகமாகக் கட்டுக்குள் வந்தது.

இதையடுத்து அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் இருந்தபோது நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 9,500ஆக மட்டுமே இருந்தது.

இந்நிலையில் சபா என்ற மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நடவடிக்கைகளால் பலருக்கும் மீண்டும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அம்மாநிலத்திற்குச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்தபின் அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.

இதனால் மூன்றே மாதங்களில் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தினந்தோறும் சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 7ஆம் தேதி மலேசியாவில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் மூவாயிரம் பேருக்கு புதிதாக வைராஸ் தொற்றியது.

எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் அன்றாடம் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துவிடும் என்று சுகாதார அமைச்சின் பொது ஆணையர் மருத்துவர் நூர் ஹிஷாம் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.

உடனடியாக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தாவிடில் நிலைமை மேலும் மோசமடையும் என்று அவர் எச்சரித்ததை அடுத்து மலேசிய அரசு பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற ஆலோசனைகளை அடுத்து இன்று மீண்டும் லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்மூலம் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, கட்டுமானம், சேவைகள், வர்த்தகம் மற்றும் விநியோகத் துறை ஆகிய 5 துறைகள் மட்டும் இந்த ஊரடங்கின்போது செயல்படலாம் என்றும் தோட்டங்கள் மற்றும் வியாபாரப் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறைகளும் சிறப்பு அனுமதியோடு செயல்படலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்காக ஒரு வீட்டிலிருந்து இருவர் மட்டுமே வெளியேறவும் வாகனத்தில் பயணிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே சென்றுவர முடியும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இவை தவிர, கடந்த ஊரடங்கின்போது இருந்த வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் இப்போதும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

மலேசியாவில் கொரோனாவின் புதிய திரிபு

இதற்கிடையே இங்கிலாந்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு பாதிப்பு தற்போது மலேசியாவையும் எட்டி உள்ளது. இதை மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் மருத்துவர் நூர் ஹிசாம் உறுதிப்படுத்தி உள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய ஒரு பயணியின் மாதிரியை சோதித்தபோது இது உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் மலேசியாவுக்குள் அந்தப் புதிய திரிபு பாதிப்பு இன்னும் சமூகத்தில் பரவவில்லை என்பதையும் உறுதிப்படுத்திய அவர், பல்வேறு நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“ஒருவர் தனது சுதந்திரத்தை தியாகம் செய்தல், தனித்திருத்தல், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் சில உயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே அடுத்து வரும் வாரங்களில் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது,” என பிரதமர் மொகிதின் யாசின் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் வீச்சுக்கு மத்தியில், மலேசிய மக்கள் இரண்டாவது முறையாக நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை எதிர்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »