Press "Enter" to skip to content

ஈலோன் மஸ்க்: உலகின் முதல் பணக்காரராக உதவிய 6 ரகசியங்கள்

  • ஜஸ்டின் ரெளலட்
  • பிபிசி செய்திகள்

உலகின் முதல் பணக்காரராகியிருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் ஈலோன் மஸ்க், அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை விஞ்சியிருக்கிறார்.

ஈலோன் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்கள். இந்த அளவுக்கு ஒருவரால் அசாத்திய வெற்றியை எவ்வாறு சாதிக்க முடிந்தது? சில ஆண்டுகளுக்கு முன்பு ஈலோன் மஸ்குடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை செலவிட்டுப் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது இதே கேள்வியை அவரிடமே நேரடியாக கேட்டேன். தற்போது உலகின் முதல் பணக்காரராக ஈலோன் உருப்பெற்றிருக்கும் நிலையில், அவருடன் அப்போது நான் நடத்திய நேர்காணலில் இருந்து அவரது வெற்றிக்கு உதவியதாக அவரால் கருதப்படும் ஆறு ரகசியங்களை இங்கே தொகுத்து வழங்குகிறேன்.

1. இது பணம் தொடர்புடைய பயணம் அல்ல

இதுதான் ஈலோன் மஸ்க், தொழில் மீது கொண்டிருக்கும் அணுகுமுறை.

2014இல் ஈலோன் மஸ்கை நான் பேட்டி கண்டபோது இவ்வளவு பெரிய பணக்காரராக மாறியது எப்படி என தனக்கே தெரியவில்லை என்று அவர் பதிலளித்தார்.

“இது ஏதோ எங்கோ பணக்குவியல் இருப்பது போல கிடையாது” என்று கூறிய அவர், “டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், சோலார் சிட்டி போன்றவற்றில் எனக்கு சாதகமான பங்குகள் உள்ளன. அதுதான் உண்மை,” என்று தெரிவித்தார்.

செல்வ வளத்தை பெருக்குவது பற்றி பெரிதாக காட்டிக் கொள்ளாதவர் போல தோன்றிய ஈலோன் மஸ்க், சரியான வழியில் நெறிசார்ந்து எதை செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அவரது அந்த அணுகுமுறைதான் நிச்சயமாக அவரது வளர்ச்சிக்கு கைகொடுத்திருக்கக்கூடும்.

ஈலோன் மஸ்கின் டெஸ்லா எலக்ட்ரிக் தேர் தயாரிப்பு நிறுவனம் போட்டி, போட்டுக் கொண்டு வளர்ந்த வேளையில், அதன் பங்குகளின் மதிப்பு, கடந்த ஓராண்டாக உயர்ந்து 700 பில்லியன் டாலர்களைக் கடந்தது. அந்த பணத்தைக் கொண்டு ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன், ஃபியட் கிறிஸ்லர் போன்றவற்றை வாங்கியிருக்கலாம்.

ஆனால், தனது 50ஆவது வயதை இந்த ஆண்டு எட்டவிருக்கும் ஈலோன் மஸ்க், பணக்காரராக மண்ணை விட்டுப் போக விரும்பவில்லை. தான் ஈட்டும் பணத்தில் பெரும் பகுதியை செவ்வாய் கிரகத்தில் ஒரு தளத்தை கட்டியெழுப்பவும் அந்த திட்டத்துக்காக தனது ஒட்டுமொத்த பணத்தையும் செலவிட்டால் கூட அது ஆச்சரியமில்லை என்றும் கருதுகிறார்.

2. ஆசையை பின்தொடருங்கள்

ஈலோன் மஸ்க்

ஈலோன் மஸ்கின் நம்பிக்கையின்படி செவ்வாய் கிரகத்தில் தளத்தை அமைப்பதுதான் தனக்கான வெற்றி என்ற இலக்கை கொண்டவராக அவர் காணப்படுகிறார்.

“எதிர்காலத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் நாம் விரும்புவோம். புதிய ஆச்சரியமூட்டக்கூடிய விஷயங்கள் வாழ்வை நலம் பெறச்செய்யும் என நாம் விரும்புகிறோம்,” என்று ஈலோன் மஸ்க் என்னிடம் கூறியிருந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை உதாரணத்துக்காக எடுத்துக் கொண்டால், அமெரிக்க விண்வெளி திட்டத்தின் லட்சியமில்லாத பார்வையால்தான் அதை உருவாக்கினேன் என்று கூறினார் ஈலோன் மஸ்க்.

“பூமியைக் கடந்து மனிதன் முன்னேற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். செவ்வாய் கிரகத்தில் மனிதரை தரையிறக்க வேண்டும், நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும். பூமிக்கும் மற்ற கிரகத்துக்கும் தொடர்ச்சியாக விண்வெளி பயணங்கள் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் தெரியுமா?” என்று ஈலோன் மஸ்க் கூறினார்.

ஆனால், அப்போது அவர் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போனாலும், செவ்வாய்கிரகத்தில் சிறிய அளவிலான பசுங்குடில் அமைப்பை அனுப்ப அவர் மக்கள் விரும்பத்தக்கதுக் ஒயாசிஸ் திட்டம் என்ற ஒரு திட்டத்தை இலக்காக நிர்ணயித்தார். விண்வெளி பற்றிய மக்களின் உத்வேகத்தை கூட்டவும் நாசா தனது விண்வெளி வரவு செலவுத் திட்டத்தை உயர்த்தவும் வாய்ப்பாக அரசாங்கத்தை சம்மதிக்க வைப்பதே தனது நோக்கமாக இருந்தது என்று ஈலோன் மஸ்க் கூறினார்.

உலகின் மலிவான ராக்கெட் ஏவும் தொழில் திட்டம் ஈலோன் மஸ்கின் அந்த சிந்தனையில் இருந்தே பிறந்தது.

அதில் குறிப்பாக, அந்த திட்டத்தின் மூலம் பணத்தை ஈட்டுவது அவரது நோக்கமாக இருக்கவில்லை. மனிதரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதே அவரது திட்டமாக இருந்தது.

அடிப்படையில் தன்னை ஒரு முதலீட்டாளர் என்பதை விட, ஒரு பொறியாளர் என்றே தான் கருதிக் கொள்வதாக கூறிய ஈலோன் மஸ்க், காலையில் தினமும் எழும்போது தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகளை சரி செய்வதே தனது ஆசையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் எனது நேர்காணலுக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் ஈலோன் மஸ்க் தனது டெஸ்லா எலக்ட்ரிக் வாகனத்துக்கான உலகளாவிய தர அனுமதியை வேகப்படுதத்தும் முயற்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அது அவரது தொழில்நுட்ப சிந்தனையின் நீடித்த தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

3. பெரிதாக சிந்திக்க பயப்படக்கூடாது

ஈலோன் மஸ்க்

ஈலோன் மஸ்க்கின் தொழில்களை பற்றி உண்மையிலேயே நாம் குறிப்பிட வேண்டுமானால் அது மிகவும் துணிச்சலானவை என்றே தெரிவிக்க வேண்டும்.

கார் துறையில் புரட்சியை ஏற்படுத்தவும், செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்தவும், வெற்றிட சுரங்கங்களில் அதிவேக ரயில்களை விடவும், செயற்கை நுண்ணறிவை மனித மூளையில் ஒருங்கிணைக்கவும், சூரிய சக்தி மற்றும் மின்கலவடுக்கு (பேட்டரி) தொழில்களை மேம்படுத்தவும் ஈலோன் மஸ்க் விரும்பியது அந்த துணிச்சலின் எடுத்துக்காட்டுகள்.

இங்கே அவர் சிந்தித்த அனைத்து விஷயங்களை பொதுவான ஒன்று இணைக்கிறது. அது, ஈலோன் மஸ்க் உருவாக்கிய திட்டங்கள் அனைத்தும் 1980களின் முற்பகுதியில் ஒரு குழந்தை இதழில் காணப்பெற்ற எதிர்கால கற்பனைகள்.

இந்த கற்பனை வளத்துடனேயே தனது சுரங்க நிறுவனத்துக்கு தி போரிங் நிறுவனம் என்று அவர் பெயர் வைத்தார்.

தென்னாப்பிரிக்காவில் தனது மழலை பருவத்தில் படித்த புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களால் தான் ஈர்க்கப்பட்ட தகவலை பொதுவெளியில் கூற ஈலோன் மஸ்க் தயங்கியதில்லை.

பொதுவாக, குறைவான லட்சியத்தை கொண்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் ஊக்கம் தரும் கட்டமைப்புகளை சார்ந்தே இயங்குகின்றன என்று கூறுகிறார் அவர்.

“நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து, ஒரு சாதாரண முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டால், அது எதிர்பார்த்ததை விட வளர்ச்சியை எட்ட அதிக காலம் எடுக்கும். அதுவும் சரியாக செயல்படவில்லை என்றால், யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள். இது என் தவறு அல்ல என்று நீங்கள் கூறலாம், விநியோகம்யர்களின் தவறு என்று நீங்கள் கூறலாம். அதுவே நீங்கள் துணிச்சலாக இருந்து திருப்புமுனைக்காக உழைத்து அது பலன் கொடுக்காமல் போனால், நீங்கள் நிச்சயமாக பணிநீக்கம் செய்யப்படுவீர்கள. இந்த காரணத்தாலேயே பெரும்பாலான நிறுவனங்கள் முற்றிலும் புதியவற்றை கற்பனை செய்வதை விட சிறிய மேம்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. எனவே, எது வேலைக்கு ஆகுமோ அது பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்படுங்கள்” என்பது ஈலோன் மஸ்க் வழங்கும் அறிவுரை.

அந்த வகையில் ஈலோன் மஸ்க், தனது தனிப்பட்ட இலக்காக இரண்டு விஷயங்களை கொண்டிருக்கிறார்.

முதலில், புதைபடிம எரிபொருட்களிலிருந்து மாற்றத்தை வேகப்படுத்த விரும்புகிறார்.

“கேம்ப்ரியன் காலத்திலிருந்து பகல் ஒளியைக் காணாத ஆழமான எரிவாயு வயல்கள் மற்றும் ஆழமான எண்ணெய் வயல்களை நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். கடைசியாக வெளிச்சத்தைக் கண்ட சிக்கலான உயிரினம் எது என்றால் அது ஒரு கடற்பாசி. இது புத்திசாலித்தனமான நடவடிக்கையா என்று நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் ஈலோன் மஸ்க்.

எனவே, மனித குலத்தின் மேன்மைக்காக பெரிதாகவே எப்போதும் சிந்தியுங்கள், செவ்வாய்கிரகத்தை நமது காலனியாக்கி, பல கிரகங்களில் மனித குலத்தை வாழக்கூடியதாக மாற்றுவது பற்றி சிந்தியுங்கள் என தனது பெரிய சிந்தனைக்கு உரமிடுகிறார் ஈலோன் மஸ்க்.

4. ஆபத்தான காரியத்தை செய்ய தயாராகவே இருங்கள்

ஈலோன் மஸ்க்

இது வெளிப்படையானது.

சிறப்பாகச் செயல்பட உண்மையிலேயே உங்கள் நெஞ்சில் தில் இருக்க வேண்டும்.

2002ஆம் ஆண்டில், தனது முதல் இரண்டு முயற்சிகளில், ஜிப் 2 எனப்படும் இணைய நகர வழிகாட்டி மற்றும் கணினிமய கட்டண நிறுவனமான பேபால் ஆகியவற்றில் தனக்கு இருந்த பங்குகளை விற்றார் ஈலோன் மஸ்க். வயதில் 30களில் அடியெடுத்த சமயத்தில் அவரது வங்கியில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்களை அவர் வைத்திருந்தார்.

அப்போது அவர் எனது திட்டத்துக்காக பாதி பணத்தை செலவிடுவதும் மீதியை எனது தொழிலுக்காக பயன்படுத்துவதுமே எனது நோக்கம் என்று அவர் கூறினார்.

ஆனால், அவர் நினைத்தபடி உடனடியாக வெற்றி கைகூடவில்லை. நான் ஈலோன் மஸ்கை சந்தித்த காலகட்டத்தில் தனது வாழ்வின் இருண்ட சூழலில் இருந்து அப்போதுதான் அவர் மீண்டு வெளிச்சத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவரது புதிய நிறுவனங்கள் அனைத்தும் ஆரம்ப கால தடங்கல்களை எதிர்கொண்டன. ஸ்பேஸ்எக்ஸின் முதல் மூன்று விண்வெளி திட்டங்கள் தோல்வியடைந்தன, மேலும் டெஸ்லாவுக்கு அனைத்து வகையான உற்பத்தி சிக்கல்களும், விநியோகச் சங்கிலி மற்றும் வடிவமைப்பு சிக்கல்களும் இருந்தன. பின்னர் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இது பற்றி என்னிடம் குறிப்பிட்ட ஈலோன் மஸ்க், “எனக்கு முன்பாக அப்போது இரு தேர்வுகள் இருந்தன. ஒன்று, நான் ஈட்டிய பணத்தை நானே வைத்துக் கொண்டு எனது நிறுவனங்கள் நொடிந்து போக விடுவது. இரண்டாவது நான் வைத்திருந்த பணத்தை மீண்டும் அதே தொழில்களில் முதலீடு செய்து அவை வெற்றியடைய வாய்ப்பை ஏற்படுத்துவது. நான் இரண்டாவதை தேர்வு செய்தேன்,” என்றார் அவர்.

பணத்தை முதலீடு செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கடனில் மூழ்கிய அவர் தனது வாழ்க்கைச் செலவினத்துக்காக நண்பர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது.

அந்த காலகட்டத்தில திவாலாகும் நிலை உங்களை அச்சுறுத்தியதா என்று அவரிடம் நான் கேட்டபோது, “நிச்சயமாக இல்லை. அந்த சூழலில் எனது பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தேன். எனக்கு அது பெரிய கஷ்டமாக இருக்கவில்லை. நானும் அரசு பள்ளிக்கு சென்று படித்தவன்தான்,” என்றார் ஈலோன் மஸ்க்.

5. விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்

ஈலோன் மஸ்க்

உண்மையில் ஈலோன் மஸ்க்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது – 2014இல் நடந்த சம்பவம். அதை நினைத்து அவர் மிகவும் வருத்தப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது – பல தொழிலதிபர்களும் போட்டியாளர்களும் அவரது துன்பத்தை பார்த்து மகிழ்ந்தார்கள்.

“டெஸ்லா நிறுவனம் மரண குழிக்கு செல்வதை பார்க்க பலரும் காத்திருந்த காலம் அது,” என்று என்னிடம் அதை விவரித்தார் ஈலோன் மஸ்க்.

உங்களுடைய லட்சியம் மீதான உங்களுடைய ஒருவித ஆணவம் தோல்வியடைய வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கலாம் என்று அவரிடம் கூறினேன்.

ஆனால், அதை அவர் நிராகரித்தார். “ஒரு விஷயத்தை நினைத்து நிச்சயமாக இதை நான் செய்யப் போகிறேன் என்று சொன்னால் அதை ஆணவமாக எப்படி கருதுவது? ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு செய்வதை விட, அதை அடைய செயலில் இறங்குவது தானே சரியான நடவடிக்கை, அதை சிறப்பாக செய்துதான் பார்ப்போமே என்பது எனது நிலை என்றார் ஈலோன் மஸ்க்.

உண்மையில் ஸ்பேஸ்எக்ஸ் அல்லது டெஸ்லா நிறுவனத்தை தோற்றுவித்தபோது அவற்றின் மூலம் பொருளாதார வளம் கொழிக்கும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டார் ஈலோன் மஸ்க். அவரைப் போலவே பலரும் அந்த சிந்தனையுடனேயே அப்போது இருந்தார்கள்.

ஆனால் ஈலோன் மஸ்க், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் உதாசீனப்படுத்தி முன்னேறினார்.

அதற்கு காரணம் இதுதான். தான் எடுத்த முயற்சியில் எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என அவர் கணக்குப்போடவில்லை. எவ்வளவு கடினமான பிரச்னைகளை தீர்த்தோம் என்றுதான் அவர் சிந்தித்தார். அவர் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுத்தார். அந்த சிந்தனைகள், முடிவெடுக்கும் நடவடிக்கையை எளிதாக்கின. எந்த சிந்தனை சாத்தியப்படுமோ அதன் மீது அவர் முழு கவனத்தையும் செலுத்தினார்.

அந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டது.

விண்வெளி பயணத்தின் பொருளாதார செலவின எண்ணங்களை அவர் உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மாற்றிக்காட்டியது. அந்த மாற்றம் எந்த அளவுக்கு பெரியது என பார்த்தால், அது அமெரிக்க விண்வெளி திட்டத்துக்கே புத்துயிர் கொடுக்கக் கூடியதாக இருந்தது.

கடந்த ஆண்டு அவரது டிராகன் ராக்கெட்டுகள், ஆறு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றன. 2011ஆம் ஆண்டில் மூடுவிழா கண்ட அமெரிக்க விண்வெளி ராக்கெட்டுகளின் திட்டத்துக்கு பிறகு நடந்த முதல் பயணமாக ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் பூமியைத் தாண்டிச் சென்றன.

6. உங்களை முழுமையாக ரசியுங்கள்

ஈலோன் மஸ்க்

இந்த வழியைப் பின்பற்றினால், கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் பணக்காரர் ஆகலாம்.

ஈலோன் மஸ்க், அடிப்படையில் வேலை செய்து கொண்டே இருப்பவராக தன்னை காட்டிக் கொள்பவர். வாரத்தில் 120120 மணிநேரம் உழைப்பதாகக் கூறும் அவர், அந்த நேரத்தை டெஸ்லா மூன்றாம் ரக மாடல் தயாரிப்பில் கவனம் செலுத்த பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

2010இல் பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட டெஸ்லாவை 2018இல் தனியார் நிறுவனமாக்கப்போவதாக அவர் அறிவித்தபோது அமெரிக்க நிதி ஒழுங்குமுறை அமைப்பின் கடும் நடவடிக்கையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.

கொரோனா பெருந்தொற்று அமெரிக்காவில் தீவிரமானபோது, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது தொழிற்சாலையை மூட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அப்போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தபோது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை எதிர்கொண்டார் ஈலோன் மஸ்க்.

கொரோனா வழிகாட்டுதல் என்ற பெயரில் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு காரணமான பீதியை “ஊமை நிலை” என அவர் விவரித்தார். வீட்டிலேயே மக்கள இருக்குமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை “கட்டாய சிறைவாசம்” என்று அவர் அழைத்தார். அத்தகைய நடவடிக்கை “பாசிச” மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அமையும் என ஈலோன் மஸ்க் விமர்சித்தார்.

தான் சுமையாக கருதும் உடைமைகளை விற்கப்போவதாக திடீரென கடந்த ஆண்டு அவர் அறிவித்தார். தனக்கு பிறந்த மகனை எக்ஸ் X Æ A-12 என உலகம் அழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆயினும் கணிக்க முடியாத அவரது நடவடிக்கைகள், எந்த சூழலிலும் அவரது தொழில்களை பாதித்ததாகத் தெரியவில்லை. மேலும் எப்போதும் போலவே லட்சியம் மிக்கவராக ஈலோன் மஸ்க் இருக்கிறார்.

கடந்த செப்டம்பரில், மூன்று ஆண்டுகளுக்குள் டெஸ்லா கார்கள் “கட்டாயமாக” 25 ஆயிரம் டாலர்களாக இருக்கும் என்று மஸ்க் கூறினார். விரைவில் தனது நிறுவன புதிய கார்கள் ஓட்டுநரில்லா வாகனங்களாக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

2020ஆம் ஆண்டு இறுதியில் ஸ்பேஸ்எக்ஸ் அதன் விண்மீன்ஷிப் ஏவுதள வாகனத்தை பரிசோதித்தபோது, ​​அது மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய முன்னோட்டமாக அமையும் என்ற நம்பிக்கை அவருக்கு பிறந்தது.

ஆனால், புறப்பட்ட ஆறு நிமிடங்களிலேயே அந்த ராட்சத ராக்கெட் பூமியில் விழுந்து வெடித்தது. அது ஈலோன் மஸ்கின் சிந்தனையை சிதறடிக்கவில்லை.

அந்த பரிசோதனை அற்புதமான வெற்றி என்று சாதகமாகவே ஈலோன் மஸ்க் நம்பினார். தன்னையே நேசிக்கும் அவரது உணர்வாக அந்த நம்பிக்கை பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »