Press "Enter" to skip to content

அமெரிக்க பொருளாதரத்தை கொரோனா தாக்கத்தில் இருந்து மீட்க 1.9 லட்சம் கோடி டாலர் நிதி: பைடன் திட்டம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலகத் தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார் ஜோ பைடன். இவர் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

இந்திய ரூபாயில் சொல்வதென்றால் (ரூ. 1,38,811,150,000,000) ஒரு கோடியே 38 லட்சத்து 811 கோடி – அதாவது கோடி கோடிக்கும் மேலே. இந்த கணக்கீடு ஒரு டாலர் 73.06 ரூபாய்க்கு சமம் என்ற தற்போதைய மதிப்பீட்டில் போடப்பட்டது.

இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இந்த நிதியில் 1 லட்சம் கோடி டாலர் நேரடியாக அமெரிக்கக் குடும்பங்களுக்கு உதவி நிதியாக அளிக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா ரூ.1,400 டாலர் நிதி உதவி பெறுவார்கள்.

இந்த நிதியில், குடும்ப உதவி தவிர, 41,500 கோடி டாலர் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தவும், 44,000 கோடி டாலர் சிறுவணிகங்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படும்.

தினம் 2 லட்சம் பேருக்கு தொற்று, 3.85 லட்சம் பேர் பலி

இதுவரை அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

குளிர் காலத்தில் சீற்றம் பெற்ற கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), அமெரிக்காவில் தினமும் 2 லட்சம் பேருக்கு தொற்றி வருகிறது.

இந்த நோயை வெற்றிகொள்ளப்போவதாக பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

குடியரசுக் கட்சியை சேர்ந்தவரான அதிபர் டொனால்டு டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பிரச்சனையைக் கையாளமுடியும் என்று ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன், கடந்த ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூறிவந்தார். அந்த பிரசாரத்தின் அடிப்படையில் வெற்றியும் பெற்றார்.

டெலாவேர் மாநிலத்தில் உள்ள வில்மிங்டன் என்ற தமது சொந்த நகரில் இருந்து வியாழக்கிழமை இரவு பேசிய பைடன், பல தலைமுறைகளுக்கு ஒரு முறை நேரும் சுகாதாரச் சிக்கல், பல தலைமுறைகளுக்கு ஒரு முறை நேரும் பொருளாதாரச் சிக்கல் ஆகியவற்றுக்கு நடுவில் நாம் சிக்கியுள்ளோம் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார்.

“ஆழமான மானுடத் துயரம் என்ற சிக்கல் வெறும் கண்களுக்கே தெரிகிறது. இனி காலம் கடத்த முடியாது. நாம் செயல்படவேண்டும். அதுவும் இப்போதே செயல்படவேண்டும்” என்று கூறினார் பைடன்.

அவர் அறிவித்துள்ள ஒவ்வொரு அமெரிக்கருக்குமான, 1,400 டாலர் நிதியுதவி கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த 600 டாலர் உதவித்திட்டத்தை உள்ளடக்கியது அல்ல. இரண்டுமே கிடைக்கும் என்பதுதான் பைடன் திட்டம்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றும், மரணங்களும் மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டமும் அமெரிக்காவில் உச்சத்தில் உள்ளது. 1 கோடியே 80 லட்சம் பேர் அமெரிக்காவில் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

பைடன் பதவியேற்ற உடனே, ட்ரம்ப் மீது நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை நிறைவேற்றிய கண்டனத் தீர்மானத்தின் மீதான விசாரணை செனட் அவையில் நடைபெறும். செனட் அவை ட்ரம்பை தண்டிக்குமா, இல்லையா என்பதைத் தாண்டி அந்த விவாதம், பைடன் நிர்வாகத்தின் கவனத்தை கொரோனா பிரச்சனையில் இருந்து சிதறடிப்பதாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »