Press "Enter" to skip to content

மலேசிய பிரதமரை “சர்வாதிகாரி” என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர்

மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின் ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் சாடியுள்ளார். பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக மொகிதீன் யாசின் நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மலேசியாவில் திடீரென கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலையால் தினந்தோறும் சுமார் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து தொற்றை தடுக்கும் விதமாக மலேசியாவில் மீண்டும் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நாட்டில் அவசர நிலை மாமன்னர் பிரகடனப்படுத்தினார்.

அதில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவசர நிலை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அவசர நிலைக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த நிலையில், அவசரநிலை பிரகடனத்துக்கு எதிர்கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர நிலையை பிரகடனப்படுத்த, பிரதமர் மொகிதீன் யாசின் முன்வைக்கும் காரணங்களை ஏற்க முடியவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

மலேசிய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியும், அவசர நிலை பிரகடன உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தியும் மலேசிய மாமன்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தம்மைப் போலவே பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய சூழலில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மதும் அவசர நிலை பிரகடனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த அண்மைய வானொலிப் பேட்டி ஒன்றில், நடப்பு பிரதமர் மொகிதீன் யாசினை “சர்வாதிகாரி” என விமர்சித்துள்ளார்.

“மக்கள் எது குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முடியாத நிலை என்பது கிட்டத்தட்ட ஒருவித சர்வாதிகாரம் போன்றதுதான். யாரும் எதுவும் சொல்லிவிட முடியாதபடி பிரதமர் மொகிதீனுக்கு முழுமையான அதிகாரத்தைக் கொடுக்கும் நோக்கத்தில் அவசர நிலை பிரகடனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையானது நாம் ஜனநாயகத்தில் இருந்து முற்றிலுமாக விலகிச் செல்வதாக உள்ளது,” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

“உதாரணமாக, எனது பெஜுவாங் அரசியல் கட்சியின் பதிவை மலேசிய சங்கப்பதிவிலாகா ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில் மேல் முறையீட்டிற்கான வாய்ப்பே இல்லை. அந்த வகையில் அவர் (பிரதமர் மொகிதீன்) ஒரு சர்வாதிகாரி எனலாம். பிரதமர் மொகிதீனுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளது,” என்றார் மகாதீர்.

மலேசிய பிரதமர்

“மலேசியாவில் அவசரநிலை தேவையில்லை”

நாட்டின் பிரதமராக மொகிதீன் யாசினின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், மற்ற தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அவசர நிலையைப் பிரகடனப்படுத்த அவர் பரிந்துரை செய்தது கண்டிக்கத்தக்கது என மகாதீர் சாடியுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து மொகிதீன் யாசின் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி் வரும் நிலையில், அவசர நிலை பிரகடனத்தால் மொகிதீனுக்கு தமது அரசியல் எதிர்ப்பாளர்களிடம் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ள சிறிது கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும், இத்தகைய சூழலானது பிரதமருக்கு சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உள்ளதா எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“அவசர நிலை பிரகடனம் பிரதமருக்கு பெருமளவிலான அதிகாரங்களைக் கொடுக்கும். எனினும் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கையாள்வது தொடர்பான அறிகுறிகள் எதுவும் பிரதமரிடம் இருந்து வெளிப்படவில்லை.

“பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் ஏராளமான மக்கள் வருமானத்தை இழந்தும், உணவின்றியும் தவித்து வருகின்றனர். எனவேதான் இத்தகைய விவகாரங்கள் தொடர்பாக வெளிப்படையான பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்கிறோம். மலேசிய குடிமக்கள் அமைதியை, சமாதானத்தை நேசிப்பவர்கள். எனவே அவசர நிலை போன்ற கடுமையான நடவடிக்கை மலேசியா போன்ற நாட்டுக்குத் தேவையில்லை.

“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் விவகாரத்தை கையாள அரசாங்கத்திடம் ஏற்கெனவே போதுமான அதிகாரம் உள்ளது. பிற நாடுகளைப் போல் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை. மலேசியாவை பொருத்தவரை அரசாங்கம் என்ன சொல்கிறதோ நாங்கள் அதைச் செய்கிறோம். மாறாக எதிர்ப்பு தெரிவிப்பதில்லை, வீதிகளில் இறங்கி போராடுவதில்லை,” என்றார் மகாதீர்.

அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய சூழ்நிலையில் வேண்டுமானால் சட்டத்தை அமல்படுத்த கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படலாம் என்றார். மலேசியாவில் அத்தகைய சூழல் இல்லாத நிலையில், அவசரநிலைப் பிரகடனம் என்பது அதீத நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார்.

அமெரிக்கா, சீனா இடையே வணிகப்போர்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடேன் பதவியேற்றதும், சீனா தொடர்பில் டொனால்ட் டிரம்ப் பின்பற்றிய முட்டாள்தனமான, வேடிக்கையான தொழில் கொள்கையை (“silly trade war”) அமெரிக்கா கைவிடும் எனத் தாம் நம்புவதாகவும் அண்மைய பேட்டியில் மகாதீர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் குறித்து அதிபர் டிரம்புக்கு ஒன்றுமே தெரியாது என்றும், ஜோ பைடன் இவ்விஷயத்தில் மாறுபட்டு செயல்படுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் டிரம்ப். இந்நிலையில் இந்தக் கொள்கையை புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் மாற்றி அமைப்பார் என்றும் கடந்த காலங்களில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த நாடுகளுடனான நட்புறவு குறித்து அவர் புரிந்துகொள்வார் என்றும் கருதுகிறேன்,” என்று மகாதீர் கூறியுள்ளார்.

மேலும் சீனாவுடனான வணிகப்போரை ஜோ பைடன் தொடர்வார் என்று தாம் நம்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், மாறாக வணிகத்தில் உள்ள சமநிலையற்ற தன்மை உள்ளிட்ட சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

“சீனாவில் இஸ்லாமியர்கள் நல்லவிதமாக நடத்தப்படுவதில்லை. ஆனால் இதற்காக சீனாவை எதிர்க்க இயலாது. சீனாவை எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் மிகுந்த கவனம் தேவை,” என்றார் மகாதீர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »