Press "Enter" to skip to content

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் தொடர்புபடுத்துவதால் இந்திய அரசு சந்திக்கும் சவால்கள்

  • ஜுபைர் அஹ்மத்
  • பிபிசி

இந்தியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் இந்தியாவில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் இந்திய ஊடகங்களின் பெரும் பகுதியினர், வெளிநாடுகளில் குடியேறிய காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விவசாயிகள் போராட்டத்துக்கு நிதியுதவி வழங்குவதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜனவரி 26 அன்று டெல்லியில் நடந்த வன்முறை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதித்திட்டத்தின் விளைவே என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவசாயிகள் போராட்டத்துக்கான ஆதரவுக் குரல் கலிஃபோர்னியாவின் ஒரு சிறிய நகரத்திலும் ஒலித்தது. ஞாயிற்றுக்கிழமை, ‘சூப்பர் பௌல்’ என்றழைக்கப்படும் அமெரிக்காவின் பிரபலமான விளையாட்டுப் போட்டியான தேசிய கால்பந்து லீக் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தை 1.2 கோடி மக்கள் பார்த்தனர்.

விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு, வணிக இடைவேளையின் போது கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ கவுண்டியில், 30 விநாடி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது, அது இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் எதிர்ப்பைக் காட்டியது.

இந்த காணொளி விளம்பரத்தில் கலிஃபோர்னியாவின் விவசாய விளைபொருட்களுக்கு பெயர் பெற்ற ஃப்ரெஸ்னோ நகர மேயர் ஜெர்ரி டயர் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார்.

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் இணைத்து இந்திய அரசு பேசுவதால் என்னவாகும்?

சமீபத்தில், அமெரிக்க பாப் நட்சத்திரம் ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவாகச் செய்த ஒரு ட்வீட் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ரிஹானாவைப் பின் தொடர்பவர்கள் ட்விட்டரில் 10 கோடிக்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்வீட் இந்தப் போராட்டங்களுக்கு மிகப் பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்தது. உலகப் பிரபலங்களின் ஆதரவையும் பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் தனது ஒரு ட்வீட்டில் விவசாயிகளுடன் துணை நிற்பதாகத் தெரிவித்தார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினரான மீனா ஹாரிஸும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தார்.

இது குறித்து இந்தியாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பாலிவுட் மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள், இது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்று ட்வீட் செய்தனர்.

உதவி செய்வது யார்?

இந்த வாரம், மாநிலங்களவையில் பேசிய பிரதமர், விவசாயிகள் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தொழில்முறைப் போராட்டக்காரர்கள், அதாவது போராட்ட ஜீவிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார். விவசாயிகளின் அமைதியான எதிர்ப்புக்கு மத்தியில், சில நக்சல்கள், பயங்கரவாதிகள் தேசத்துக்கு எதிராகப் பதாகை ஏந்தியிருப்பதாக குறிப்பிட்டார்.

அவர், “சீக்கியர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் தவறான வழிநடத்தல் செய்யும் அவர்களின் முயற்சிகள், ஒரு போதும் நாட்டுக்கு நல்லது செய்யாது. இதுபோன்ற போலி போராட்டக்காரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். நாடு கிளர்ச்சியாளர்களிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும். கிளர்ச்சியாளர்கள் ஒட்டுண்ணிகள்” என்று குறிப்பிட்டார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான 73 வயதான வீரேந்தர் சர்மா, “காலிஸ்தானியர்கள் இந்தப் போராட்டத்துக்கு உதவுவதாகவோ, அவர்கள் அங்கு கலந்திருப்பதாகவோ இந்திய அரசிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

பிபிசியுடன் பேசிய அவர், “இது ஒரு அனுமானமாக இருக்கலாம், ஆனால் இதுகுறித்து குறித்து விளக்கமளிக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும்” என்றார்.

“காலிஸ்தானியர்கள் உதவுகிறார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்களை அளித்து, ராஜாங்க ரீதியில், இந்திய அரசு பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்க அரசுகளுடன் பேசி, ‘உங்கள் நாட்டில் உள்ள காலிஸ்தானிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டில் நடக்கும் விவசாயப் போராட்டத்துக்கு உதவுகிறார்கள்’ என்று தெரிவிக்கட்டும்” என்று கூறினார்.

கிசான் சக்தி சங்கத்தின் தலைவர் சவுத்ரி புஷ்பேந்திர சிங், தங்களது போராட்டத்தை இழிவுபடுத்த இந்திய அரசாங்கமும் பாஜகவும் முயற்சி செய்கின்றன என்று கூறுகிறார்.

“முதலில் சீக்கியர்களைக் குறிவைத்து காலிஸ்தானிய தலையீடு என்றார்கள். அது பலனளிக்காததால், இது பஞ்சாபின் போராட்டம் என்றார்கள். பின்னர் பஞ்சாப், ஹரியாணா இரு மாநிலங்களின் போராட்டம் என்றார்கள். இதை ஒரு தேச விரோதப் போராட்டமாகச் சித்தரிப்பதே அவர்களின் முயற்சி. ஆனால், அதில் தோல்வியடைந்தனர்” என்று கூறுகிறார்.

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் இணைத்து இந்திய அரசு பேசுவதால் என்னவாகும்?

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல் தலைவர் உஜ்ஜல் டோசன்ஜ், “கனடாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணிகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் மிகச் சிலரே” என்று கூறுகிறார்.

வான்கூவரிலிருந்து பிபிசியிடம் பேசிய அவர், “இங்கோ அல்லது அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் மட்டுமே தீவிர காலிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பார்கள். 200 பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு ஆர்ப்பாட்டத்தில், இரண்டு காலிஸ்தானிய ஆதரவாளர்கள் இருக்கலாம். இதனால், இந்தியாவுக்கு ஆபத்து என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இது வெறும் பிதற்றல்” என்கிறார்.

உஜ்ஜல் டோசன்ஜ் தனது 18ஆவது வயதில் பஞ்சாபிலிருந்து கனடாவில் குடியேறினார். அவரது குடும்பம் இன்னும் பஞ்சாபில் இருப்பதாகவும், தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் கவலைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு காலிஸ்தானிய சாயம் பூச முயற்சிப்பது தவறு என்று அவர் கூறுகிறார். “கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஒரு சிலர் காலிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதால் போராட்டம் முழுமைக்கும் இப்படிச் சாயம் பூசுவது தவறு. இந்த சிறு விவசாயிகள், அவர்களின் நிதி பாதுகாப்பு, வாழ்க்கை மற்றும் நிலங்களை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்” என்பது இவர் கருத்து.

தனக்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் இழிவுபடுத்த பாஜக அரசு முயற்சித்து வருவதாக அவர் கூறுகிறார், “நரேந்திர மோதியின் கீழ், அரசியலின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இனவாத நிறத்தை கொடுக்க இந்திய அரசு முயற்சித்தது, மேற்கு வங்கத் தேர்தலாகட்டும் வேறு மாநிலத் தேர்தல்களாகட்டும், ஷாஹீன்பாக் விவகாரமாக இருக்கட்டும் அல்லது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் அல்லது ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் மாணவர்களை காவல் துறையினர் அடித்த வழக்காகட்டும். உண்மை என்னவென்றால், தேசபக்தி என்றால் என்ன? என்பது பாஜகவுக்குத் தெரியாது.”

குர்பிரீத் சிங் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான பேரணிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் இணைத்து இந்திய அரசு பேசுவதால் என்னவாகும்?

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்குத் தங்களது ஆதரவைக் காட்டுவதற்காக வான்கூவர் அருகேயுள்ள சர்ரே பகுதியில் மாலை மூன்று மணி நேரம் தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன, இதில் 200-250 பேர் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன. இந்த இயக்கம் கனடாவில் யாருடைய உந்துதலும் இன்றித் தன்னெழுச்சியாகத் தொடங்கியது என்று அவர் கூறுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். சீக்கியர்களாக இருந்தால் காலிஸ்தானியர்கள் என்றும் சீக்கியர்கள் அல்லாதவர்கள் நகர்ப்புற நக்சல்கள் என்றும் தவறான கருத்து உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

கனேடிய நகரமான டொரோண்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு மூத்த பத்திரிகையாளர் குர்முக் சிங் கூறுகையில், “கனடாவில் சீக்கிய குடியேறிகளில் பெரும் பகுதியினர் விவசாயப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அவர் சில வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக நன்கொடைகளும் வழங்கியுள்ளனர்” என்கிறார்.

“காலிஸ்தானி ஆதரவு காரணமாக இந்திய அரசு கோபமடைந்துள்ளது. கனடாவில் நடந்து வரும் இயக்கத்தில் பங்கேற்கும் ஐந்து சீக்கிய அமைப்புகள் மற்றும் குருத்வாராக்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவற்றுக்குக் காலிஸ்தானிய இயக்கத்துடன் தொடர்புகள் உள்ளன என்று கூறியுள்ளனர். இந்தக் குழுக்கள் இந்தியத் துணைத் தூதரகங்கள் மற்றும் நகரங்களில் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன. கனடாவில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் கூட இந்தப் பேரணிகளில் கலந்து கொள்கிறார்கள்” என்று அவர் தெரிவிக்கிறார்.

மூவர்ணக் கொடி பேரணி

கனடாவைத் தவிர, டிசம்பர் முதல் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன, இது பெரும்பாலும் இந்திய தூதரகங்களுக்கு வெளியே போராட்டங்களில் முடிவடைகிறது.

“சீக்கிய புலம்பெயர்ந்தோர் இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு உலகளாவிய ஆதரவைப் பெற்று வருகின்றனர்” என்ற தலைப்பில், அண்மையில் ராய்ட்டர்ஸ் முகமையின் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த சில நாட்களாக, இந்திய அரசு மற்றும் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாகவும் பேரணிகள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமையன்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில அமைப்புகள் வான்கூவரில் ஒரு பேரணியை நடத்தின, அதில் 350 கார்கள் பங்கேற்றன.

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் இணைத்து இந்திய அரசு பேசுவதால் என்னவாகும்?

இந்தப் பேரணிக்குத் திரங்கா என்ற பெயரிடப்பட்டது. அதாவது இந்திய தேசிய மூவர்ணக் கொடி. குடியரசு தினத்தன்று புதுதில்லியில் நடந்த நிகழ்வுகள் இங்குள்ள இந்தியர்களின் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியதாகவும் இதனை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய முடிவு செய்ததாகவும் உள்ளூர் ஊடகங்களுக்கு இதன் பங்கேற்பாளர்கள் கூறினர். இந்திய அரசுக்கு ஆதரவாக, கனடாவில் நடந்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் குறிப்பிட்டு, ஒவ்வொரு நாளும் இங்கு இது நடக்கிறது என்று கூறினர்.

ஆனால் பத்திரிகையாளர் குர்பிரீத் சிங், “மூவர்ணக் கொடி பேரணியில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு, அதே நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தினமும் நடத்தப்படும் பேரணிகளின் எண்ணிக்கை மிக அதிகம், அதில் ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்தவர்களும் உள்ளனர்” என்று கூறுகிறார்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையீடு

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கான ஆதரவு வெளிநாட்டிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல. இது இப்போது கனடாவின் தேசிய அரசியலில் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. விஷயம் முற்றியுள்ளது.

டொரோண்டோவில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் குர்முக் சிங், “கனடா பிரதமர் டிசம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து, கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜ்ஜனின் அறிக்கை வெளிவந்தது என்றும் இதைத் தொடர்ந்து கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டார் என்றும் கூறுகிறார்.

ட்ரூடோவின் அறிக்கையால் இந்தியா மிகவும் கோபமடைந்தது, இந்திய அரசாங்கம் தனது கோபத்தை டெல்லியில் உள்ள கனேடிய தூதர் நாதிர் படேல் முன் வைத்து, இதுபோன்ற அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கெடுக்கக்கூடும் என்று எச்சரித்தது.

மறுபுறம், பிரிட்டனில் உள்ள 36 எம்.பி.க்கள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப்பிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர், அதில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண பிரிட்டன் அரசு இந்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த விவகாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, இது பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு விவாதத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், ஒரு மனுவில் ஒரு லட்சத்துக்கு மேல் கையெழுத்திடப்பட்டால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் இணைத்து இந்திய அரசு பேசுவதால் என்னவாகும்?

எம்.பி. வீரேந்தர் சர்மா கூறுகையில், “இதன் மீதான விவாதம் எப்போது நடக்கும் என்பது பற்றி மனுக் குழு முடிவு செய்யும். ஆனால் அது விவாதிக்கப்படும். அப்போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவோ அல்லது விவசாயிகளுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ இருக்கலாம். அதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” என்றார்.

வீரேந்தர் சர்மா எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் உறுப்பினர். பிரிட்டனின் ஆளும் கன்மேலாய்வுடிவ் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களும் உள்ளனர். உதாரணமாக, நாட்டின் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல், நிதியமைச்சர் ரிஷி சுனக் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் ப்ரீத்தி படேல் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மோதி அரசுக்கு ஆதரவாகவே கருதப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் நடைபெறும் பேரணிகளையும் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த அறிக்கைகளையும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் கருதுகிறது. கனடாவின் பிரதமர் ட்ரூடோவின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதில் கடுமையானதாகவே இருந்தது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கனடாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்தர் சர்மா, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றாலும், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான ஈலிங்-சவுத் ஹால் பகுதியில், இந்தியாவிலிருந்து, குறிப்பாக, பஞ்சாபிலிருந்து குடியேறியவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், இது பற்றிப் பேச வேண்டிய தேவையிருப்பதாகக் கூறுகிறார்.

“உங்கள் சட்டம் தவறு என்று நாங்கள் இந்திய மக்களிடம் கூறவில்லை. ஆனால் அங்கு (இந்தியாவில்) பரவியிருக்கும் அமைதியின்மை குறித்து எங்கள் மக்கள் கவலைப்படுகிறார்கள். ஏனென்றால் நாங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், எங்களுக்கு அங்கு உறவினர்கள் உள்ளனர். அதனால் நாங்கள் அறிக்கையை வெளியிடுகிறோம், இந்தியாவின் உள் விஷயத்தில் நாங்கள் தலையிடவில்லை” என்று அவர் கூறுகிறார்.

தம்மைப்போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் இந்தியாவிற்கும் அவர்கள் வாழும் நாடுகளுக்கும் இடையிலான தொடர்புச் சங்கிலியாக இருப்பதையும் பிற நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை வளர்ப்பதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் பங்கைப் புறக்கணிக்க முடியாது என்றும் தானும் தனக்கு வாக்களிக்கும் பெரும்பாலோரும் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள் என்பதையும் இந்திய அரசுக்கு நினைவு படுத்த வீரேந்தர் சர்மா விரும்புகிறார்.

“அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், பஞ்சாப் விவசாயிகளுக்கு எதிராக வன்முறை நடக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து இருவேறு கருத்து நிலவினாலும், பெரும்பான்மையானவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தான் குரல் கொடுக்கிறார்கள்” என்று சர்மா விளக்குகிறார்.

கிசான் சக்தி சங்கத்தின் தலைவர் சவுத்ரி புஷ்பேந்திர சிங், “இன்று உலகம் ஒரு உலகளாவிய கிராமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த நாட்டிலும் எந்த நிகழ்வு நடந்தாலும், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். இப்போது மியான்மரில் நிலவும் நிலை குறித்து இந்தியாவின் தரப்பிலிருந்து ட்வீட் செய்யப்பட்டது. பாகிஸ்தானில் ஒரு கோயில் உடைக்கப்பட்டால் இங்கு நாம் குதிக்கிறோம். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை இருந்தால், நாங்கள் குதிக்க ஆரம்பிக்கிறோம். அது சில நேரங்களில் உங்களுக்கு ஆதரவாகவும், சில நேரங்களில் உங்களுக்கு எதிராகவும் இருக்கலாம். அதில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. ” என்று கூறினார்.

இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் இணைத்து இந்திய அரசு பேசுவதால் என்னவாகும்?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முன்னாள் தலைவர் உஜ்ஜல் டோசன்ஜ், கிளர்ச்சி மேலும் தீவிரமடைந்தாலோ அல்லது விவசாயிகளைக் காலிஸ்தானியர்கள் என்று கூறுவது தொடர்ந்தாலோ நிலைமை என்னவாகும் என்று தாம் கவலைகொள்வதாகத் தெரிவிக்கிறார்.

அவர் ,”மோதி அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகளால் ஏதேனும் தவறு நடந்தால், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒரு சிறுபான்மை சமூகம் உள்ளது. அது நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, நாட்டுக்குச் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எனக்கு உள்ளது” என்று கூறுகிறார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்தர் சர்மா, இது நரேந்திர மோதியின் பிம்பத்தைப் பாதிக்கலாம் என்று கருதுகிறார். அவர், “மோதி வெளியுறவுக் கொள்கையில் புதிய உறவுகளை உருவாக்கியுள்ளார், மரியாதை சம்பாதித்துள்ளார். அவரது வெளிநாட்டு பயணங்கள் வெற்றிகரமாக உள்ளன. ஆனால் இந்த விவசாயிகள் போராட்டம், அவரது நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தியுள்ளது” என்று கூறுகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ போன்ற தலைவர்களின் அறிக்கைகள் குறித்துக் கருத்து தெரிவித்த வீரேந்தர் சர்மா, “அரசியல் தலைமை கேள்வி எழுப்பும்போது, ​​அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படாத போது, மக்களின் அபிமானம்மும் புகழும் குறைவது இயல்பானது” என்று கூறினார்.

“விவசாயிகள் போராட்டத்தை இழிவு படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு ICE என்ற ஆயுதமும் உள்ளது. அதாவது இன்கம் டாக்ஸ் (வருமான வரி), சிபிஐ மற்றும் ED (அமலாக்கத் துறை). இந்த அமைப்புகளை விவசாயிகள் மீது ஏவிவிட முடியாது. மூன்று விவசாயச் சட்டங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் வரை எங்கள் இயக்கம் தொடரும்” என்று கூறுகிறார் சௌத்ரி புஷ்பேந்திர சிங்.

ஆனால், அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் பாஜக தலைவர்களும், தேச விரோதிகள் இந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »