Press "Enter" to skip to content

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி: ஒரே முறை போடப்பட வேண்டிய தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம், ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உள்ளது. அமெரிக்காவில் அனுமதி வழங்கப்படும் மூன்றாவது கொரோனா தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தடுப்பூசி விலை அதிகமான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகளுக்கு மாற்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மருந்தை சாதாரண குளிர்சாதனப் பெட்டியிலேயே சேமித்து வைக்கலாம்.

இந்த மருந்தை சோதனைக்குட்படுத்தியபோது, தீவிர உடல் நலக் குறைவில் இருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மிதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்கும் போது, இதன் செயல் திறன் ஒட்டுமொத்தமாக 66 சதவீதமாக இருக்கிறது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதியளிக்கும் முதல் நாடு அமெரிக்கா தான்.

இந்த நிறுவனம் வரும் ஜூன் மாதத்துக்குள் 10 கோடி டோஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க சம்மதித்திருக்கிறது. பிரிட்டன் (3 கோடி டோஸ்), ஐரோப்பிய ஒன்றியம் (20 கோடி டோஸ்), கனடா (3.8 கோடி டோஸ்) ஆகிய நாடுகளும் இந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் புரிந்துள்ளனர். இதுமட்டுமின்றி ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் கோவேக்ஸ் திட்டம், இந்த நிறுவனத்தின் 50 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்க உள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

அனைத்து அமெரிக்கர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தி என்றும், முன்னேற்றங்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது எனவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

“இன்று இந்த செய்தியை நாம் கொண்டாடினாலும், தொடர்ந்து கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள், தொடர்ந்து முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அனைத்து அமெரிக்கர்களையும் நான் வலியுறுத்துகிறேன். நான் முன்பே பல முறை கூறியது போல, கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவுவதால் நிலைமை மோசமாகலாம், அதனால் தற்போதைய முன்னேற்றம் தடைபட்டு பின்னடைவைக் காணலாம்” என்று பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நிபுணர்கள் குழு இந்த கொரோனா தடுப்பூசிக்கு முழுமையாக தங்கள் ஆதரவைக் கொடுத்திருந்த நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம் (எஃப்.டி.ஏ) தன் அனுமதியை வழங்கியது.

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்திய பரிசோதனையில், மோசமான உடல்நலக் குறைவு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85 சதவீதத்துக்கு மேல் செயல் திறனைக் காட்டியது இம்மருந்து. கொரோனாவால் மிதமாக பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் செயல்திறன் 66 சதவீதமாக இருக்கிறது.

குறிப்பாக, ஜன்சன் நிறுவன தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அதே போல தடுப்பு மருந்து போட்டுக் கொண்டு 28 நாட்களுக்குப் பின் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு ஒப்பீட்டளவில் சிறிது குறைவு தான். ஆனால் தீவிர உடல்நலக் குறைவு விஷயத்தில் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபின் மிதமான பாதிப்பில் இருந்து, ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி குறைந்த அளவில் மட்டுமே பாதுகாப்பு வழங்குவதை முன்பு நடத்திய பரிசோதனைகளில் தெரியவந்த பின், இந்த மாதத்தின் தொடக்கத்தில், தென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்குச் செலுத்தத் தொடங்கியது.

மார்ச் இறுதிக்குள் இரண்டு கோடி டோஸ் தடுப்பூசிகளை கொடுக்க திட்டமிடுவதாகக் கூறுகிறது ஜான்சன் & ஜான்சன்.

இந்த தடுப்பூசி ஒரேயொரு டோஸ் என்பதால், இந்த மருந்துக்கான மருத்துவமனை அனுமதிகளும், மருத்துவப் பணியாளர்களும் குறைவாகவே தேவைப்படும்.

பொதுவான சளி வைரஸைக் கொண்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அது மனிதர்களை பாதிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஒரு பகுதி மரபணுவை நம் உடலுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறது. நம் உடல் கொரோனா வைரஸை அடையாளம் கண்டு எதிர்த்துப் போரிட, இதுவே போதுமானது என்கிறது அந்த நிறுவனம்.

ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் நிலை என்ன?

ஒரேயொரு டோஸ் போதுமானது: ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவில் 7.28 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பைடன் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, 100 நாட்களுக்குள் 100 மில்லியன் (10 கோடி) பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என உறுதி ஏற்றிருக்கிறது.

இதுவரை அமெரிக்காவில் 5.08 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறைந்து வருகின்றன.

கொரோனா வைரஸின் புதிய திரிபு இந்த முன்னேற்றத்தை அச்சுறுத்தலாம் என எச்சரிக்கிறார்கள் முக்கிய பொது சுகாதார நிபுணர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »