Press "Enter" to skip to content

மகாதீர் முகமதை குத்திக் கொல்ல திட்டம்: மலேசியாவில் ‘ஐ.எஸ் ஆதரவாளர்கள்’ 3 பேர் கைது

பட மூலாதாரம், Reuters

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று கூறி மூன்று பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்கள் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்று மலேசிய காவல் துறை தெரிவிக்கிறது.

ஜனவரி மாதம் நடந்த இந்தக் கைது குறித்து இப்போதுதான் அலுவல்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதீர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிலர் மீதும், மது ஆலைகள், சூதாட்ட விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என மலேசிய காவல்துறை தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமிட் படோர் தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் சேர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைதான மேலும் மூவர் அரசு வழக்கறிஞரது பரிந்துரையின் பேரில் விசாரிப்புக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் கைதானவர்களில் ஐந்து பேர் மலேசியர்கள் என்றும், ஒருவர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுவிக்கப்பட்ட மூவர் அந்த ஆறு பேரில் யார் என்று தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, விடுவிக்கப்பட்ட மூவர் உள்பட, ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ‘அன்ஷோருல்லாஹ் அட் தௌஹிட்’ (Anshorullah At-Tauhid) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மூலம் ‘சலாஃபி ஜிஹாதி’ (Salafi Jihadi) என்ற சித்தாந்தத்தைப் பரப்பும் நோக்கத்துடன் ஆட்களைத் திரட்ட முயற்சி செய்ததாகவும் மலேசிய காவல் துறை தெரிவிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மலேசியாவில் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட கைதானவர்கள் முடிவு செய்திருந்ததாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

‘மூன்று அமைச்சர்களை குறிவைத்த ஐஎஸ் ஆதரவாளர்கள்’

“மகாதீர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களின் உயிருக்கு இந்த மூன்று பேரால் அச்சுறுத்தல் இருந்து வந்தது. எனினும் தாக்குதல் நடத்த விரிவான திட்டங்களை வகுத்துச் செயல்படவில்லை.

“மேலும் கெந்திங் ஹைலேன்ட்ஸ் பகுதியில் உள்ள சூதாட்ட மையங்களையும், கிள்ளான் பகுதியில் உள்ள மதுபான ஆலைகளையும் பிடிபட்ட நபர்கள் குறிவைத்திருந்தனர். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் எந்த வகையிலும் அவர்கள் தயாராகவில்லை. இந்நிலையில் கைது செய்யப்பட்டனர்.

Islamic State

பட மூலாதாரம், youtube

“காவல்துறை எப்போதும் இதுபோன்ற கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் கூடுதலாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும். சிறப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின்போது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும், பிடிபட்டவர்கள் ஆதரிக்கும் அமைப்பின் கொடிகளும் கைப்பற்றப்பட்டன.

“மகாதீர் முகமதுவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங், மத விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா, முன்னாள் சட்டத்துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) டோனி தாமஸ் ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருந்தது,” என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகாதீரை கத்தி அல்லது கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைதானவர்களில் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து தீவிரவாத இயக்கங்களும் இத்தகைய கொலை மிரட்டல்களை விடுப்பது வழக்கமான ஒன்றுதான் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஜனவரி மாதமே மகாதீர் உள்ளிட்டோரைக் கொலை செய்யும் எண்ணத்துடன் அந்த தனி நபர் நாட்டில் வலம் வந்ததாகவும் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மலேசிய காவல்துறை இப்போதுதான் இந்த தீவிரவாத செயல்பாடு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ‘சலாஃபி ஜிஹாதி’ (Salafi Jihadi) சித்தாந்தத்தை ஊக்குவித்து, அதை பரப்பும் நடவடிக்கைகளுக்காக அமைத்த புதிய பிரிவில்தான் தற்போது கைதான ஆறு பேரும் இடம்பெற்றிருந்தனர். இந்தப் பிரிவில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து மலேசியாவில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்தது.

“மகாதீர் தலைமையிலான அரசு மதச்சார்பற்ற அரசாக பார்க்கப்பட்டதன் காரணமாகவே அவருக்கும், அமைச்சரவை சகாக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது,” என்றார் ஐஜிபி அப்துல் ஹமிட் படோர்.

இதுவரை 558 பேர் கைது

மலேசியாவில் தீவிரவாதச் செயல்களில் திட்டமிட்டிருந்ததாகவும், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரிலும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை 558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது

பட மூலாதாரம், Getty Images

இதுவரை 256 பேர் மீது குற்றம்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும், குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (போகா) 51 பேரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (போடா) 37 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மலேசியாவில் இருந்து சிரியா சென்ற 56 பேர், அங்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டனர் என்றும், அவர்கள் தற்போது நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதீர் இப்போது என்ன செய்கிறார்?:

கடந்த 2018ஆம் ஆண்டு தமது 92ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்றார் மகாதீர்.

எனினும் கூட்டணிக் குழப்பங்களால் அவரது தலைமையிலான மிகச்சரியாகத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கடந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியில் கவிழ்ந்தது. அதையடுத்து நடப்புப் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி அரசு பதவியில் உள்ளது.

பிரதமர் மொகிதின் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என மகாதீர் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் மகாதீர் வலியுறுத்தி வருகிறார்.

அவரது பங்களிப்புடன் புதிய அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது 95 வயதிலும் தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவிய தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »