Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்களிக்க அமெரிக்கா ஆதரவு: பிரிட்டன் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Reuters

கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையைக் கைவிடுவதற்கு உலக வர்த்தக அமைப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன. இதன் மூலமாக உலகம் முழுவதும் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும் என்று இரு நாடுகளும் நம்புகின்றன.

ஆனால் காப்புரிமையை தளர்த்துவதன் மூலம் எதிர்பார்க்கும் பலன் எதுவும் கிடைக்காது என மருந்து நிறுவனங்கள் கூறுகின்றன.

இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க அரசின் வர்த்தகத் துறைப் பிரதிநிதி கேத்தரின் டாய், “அசாதாரணமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அசாதாரணமான காலங்கள் நிர்பந்திக்கின்றன” என்றார்.

உலக வர்த்தக அமைப்பில் கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமையில் இருந்து விலக்கு அளிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது. ஆயினும் அது சிறிது காலம் பிடிக்கும் என்று கேத்தரின் கூறினார்.

அறிவுசார் சொத்துரிமைக்கான குழு இந்த விவகாரம் குறித்து அடுத்த மாதம் விவாதிக்க இருக்கிறது. இதில் உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிக்கும் 164 நாடுகளில் 100 நாடுகள் காப்புரிமையில் இருந்து கொரோனா தடுப்பூசிகளுக்கு விலக்கு அளிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

காப்புரிமையைத் தளர்த்துவது குறித்து கடந்த 6 மாதங்களாகக் குரல் எழுப்பி வரும் 60 நாடுகள் குழுவில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்னிலை வகிக்கின்றன.

ஆனால் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான முந்தைய நிர்வாகமும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

டிரம்புக்குப் பிறகு வந்த ஜோ பைடன் வேறு வழியைத் தேர்வு செய்திருக்கிறார். கொரோனா தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று கூறி வந்த அவர் புதன்கிழமையன்று அதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பைடன்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் இறங்கி வந்திருக்கிறது. “நெருக்கடியைத் திறம்படக் கையாள முடிகிற எந்தவொரு திட்டத்தையும் பற்றி ஆலோசிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் லேயன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நகர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர், “இது வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என்று கூறிப்பிட்டுள்ளார்.

அறிவுசார் சொத்து என்பது என்ன?

படைப்புகள், கண்டுபிடிப்புகள் போன்றவை காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தகச் சின்னங்கள் போன்றவை மூலமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதுதான் அறிவுசார் சொத்துரிமை. அடுத்தவரின் உழைப்பை மற்றவர் காப்பியடித்து சம்பாதிப்பதை இது தடுக்கிறது.

காப்புரிமை என்பது புதியனவற்றைக் உருவாக்கும் நிறுவனங்களுக்கு அவற்றைத் தயாரிப்பதற்கான தனியுரிமையை ஒரு குறுகிய காலத்துக்குக் கொடுக்கிறது. உருவாக்குவதற்கான செலவுகளை ஈடுகட்டவும், முதலீடுகளை ஈர்க்கவும் இது பயன்படுகிறது.

இதுபோன்ற பாதுகாப்பு இருப்பதால்தான் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முடிகிறது என உயிர்நுட்ப நிறுவனங்கள் வாதிடுகின்றன.

விலக்கு அளிப்பதால் என்ன கிடைக்கும்?

கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு காப்புரிமையில் இருநது விலக்கு அளிக்கப்பட்டால் தடுப்பூசிகளைத் தயாரிப்பு அதிவேகமாக நடக்கும் எனவும், வசதி குறைந்த நாடுகளுக்கு மலிவாக தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் இதை ஆதரிப்போர் கூறுகிறார்கள்.

காப்புரிமை கட்டுப்பாடுகளும், அதைப்போன்ற பிற அறிவுசார் சொத்துரிமை விதிகளும் கொரோனாவுக்கான தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் தடைகளாக இருக்கின்றன என்று வளரும் நாடுகள் பல வாதிடுகின்றன.

உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானம் அமெரிக்காவின் முடிவை “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்கிறார். “கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய தருணம்” என்று கூறுகிறார்.

ஆனால் மருந்து நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன. கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் முதன்மையான தடையாக காப்புரிமை விதிகள் இல்லை என்று அவை கூறுகின்றன. விலக்கு அளிக்கப்பட்டால் புதுமையான கண்டுபிடிப்புகளைப் அது பாதிக்கும் என்றும் அவை எச்சரிக்கின்றன.

தொழில்நுட்பங்களைத் தடையின்றிப் பரிமாற்றம் செய்ய நிர்பந்திக்கக்கூடாது என்று பிபிசி டுடே நிகழச்சியில் சர்வதேச மருந்து நிறுவனச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் குயேனி கூறினார்.

“தொழில்நுட்பங்களை நிறுவனங்களிடம் கொடுத்து தயாரித்துக் கொள்ள அனுமதியளித்தால் தடுப்பு மருந்துகளின் தரத்திலும் பாதுகாப்பிலும் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

தன்னார்வ அடிப்படையில் மேற்கு நாடுகளின் மருந்து நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை ஏற்கெனவே பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

“ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பொருள்களைக் கொண்டுசெல்வதில் இருக்கும் வர்த்தகக் கட்டுப்பாடுகள்தான் இப்போதைய சிக்கல். மருந்துகளை விநியோகிக்கும் விநியோகம் செயின் நடைமுறையில் பற்றாக்குறை இருக்கிறது.தயாரிக்கப்படும் மருந்துகளை ஏழைநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள பணக்கார நாடுகள் தயக்கம் காட்டுவதும் ஏமாற்றமளிக்கிறது. காப்புரிமையில் இருந்து விலக்கு அளிப்பதன் மூலம் இவற்றில் எதையும் சரி செய்ய முடியாது” என்றார் அவர்.

“காப்புரிமை விலக்கு அளிப்பது கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்குவதற்காக மருந்து நிறுவனங்கள் செய்த முதலீடுகளையும் அவற்றின் கண்டுபிடிப்பையும் அபகரிப்பதற்கு ஒப்பாகும்” என்று சுகாதாரப் பாதுகாப்புக்கான ஜான் ஹாப்கின்ஸ் மையத்தின் மூத்த ஆய்வாளர் அமேஷ் அடல்ஜா கூறுகிறார்.

உரிமம் வழங்கி அதன் மூலமாகவும் தடுப்பூசி உற்பத்தியை முடுக்க முடியும்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறது. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஸெனாகா நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று தடுப்பூசிகளைத் தயாரித்து வருகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »