Press "Enter" to skip to content

இத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்களின் உடல்கள் – மனிதகுல வரலாறு

பட மூலாதாரம், ITALIAN CULTURE MINISTRY/AFP/GETTY

இத்தாலியின் ரோம் நகரின் தென் கிழக்கு பகுதியில் கழுதை புலிக்களால் வேட்டையாடப்பட்ட ஒன்பது நியாண்டர்தால் மனிதர்களின் உடல் எச்சங்களை வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

மண்டை ஓடுகள், உடைந்த தாடைகள் கொண்ட அந்த எச்சங்கள் கடற்கரை நகரமான சான் ஃபெலிஸ் சிர்சியோவில் உள்ள குட்டாரி குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித இனத்தின் ஆதி உறவினர்களாக கருதப்படும் இந்த நியாண்டர்தால் மக்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இன்றையக் மனிதர்களிடத்தில் அவர்கள் டிஎன்ஏவின் சிறு சுவடுகள் காணப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எட்டு உடல்கள் 50 ஆயிரத்திலிருந்து 68 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

அதில் பழமையானதாக கருதப்படும் எச்சம், 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என இத்தாலியின் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரோம் நகரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் குட்டாரி குகையில் இந்த உடல்களை கண்டெடுத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த உடல்கள் ஏழு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனுடையது என தெரிவித்துள்ளனர்.

ரோம் நகரில் உள்ள டோர் வெர்காடா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் மரியோ கதாபாத்திரம்ஃபோ, பெரும்பாலான நியண்டர்தால் மனிதர்கள் கழுதைப் புலிகளால் வேட்டையாடப்பட்டு உணவாக அதன் குகைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

“நியண்டர்தால்கள் இந்த விலங்குகளுக்கு இரையாக இருந்தனர்,” என அவர் தெரிவித்ததாக கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

“கழுதைப் புலிகள் அவர்களை வேட்டையாடின. குறிப்பாக உடல் பலவீனமானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர், முதியவர்களை வேட்டையாடின,” என அவர் தெரிவித்துள்ளார்.

நியாண்டர்தால் மனிதன்

பட மூலாதாரம், Science Photo Library

“மொத்த உலகமும் பேசக் கூடிய அளவுக்கு இது ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு” என இத்தாலியின் கலாசார அமைச்சர் டாரியோ ஃபிரான்செஸ்சினினி தெரிவித்துள்ளார்.

“இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நியண்டர்தால் மனிதர்கள் குறித்த ஆய்வுகளை மேலும் அதிகரிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

“இதற்கு முன்பு இதே குட்டாரி குகையில் 1939ஆம் ஆண்டு நியாண்டர்தால்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது நியாண்டர்தால்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான முக்கியமான ஓர் இடமாக இதை மாற்றியது” என இத்தாலியின் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த குகை பழங்காலத்தில் நடைபெற்ற ஒரு நிலநடுக்கத்தாலோ, நிலச்சரிவாலோ மூடப்பட்டுவிட்டது. அதுவே அதனுள் இருந்த உடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணமாகவும் அமைந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »