Press "Enter" to skip to content

2021 இல் கோவிட் -19: கொரோனா பற்றி நாம் கற்றுக்கொண்டவை என்னென்ன?

  • அமெலியா பட்டர்லி
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 ஐ ஒரு பெருந்தொற்றுநோயாக அறிவித்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் இந்த வைரஸைப் புரிந்துகொள்வதற்கும் சமாளிப்பதற்கும் முன்னெப்போதும் இருந்திராத வகையிலான அறிவியல் முயற்சியை நாம் கண்டிருக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முன்பு எப்போதுமே இதுபோல இணைந்து பணியாற்றியதில்லை. பொதுவாக பலபல ஆண்டுகள் எடுத்திருக்கக்கூடிய தகவல் சேகரிப்பு, ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குதல் போன்றவை, சில மாதங்களிலேயே செய்துமுடிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். கடந்த 12 மாதங்களில் நாம் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் இங்கே.

கோவிட் -19 இன் அறிகுறிகள்

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதல்முதலாக தாக்கிய காலகட்டத்தில் காணப்பட்ட அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் இருமல். விரைவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர் வாசனை அல்லது சுவை உணர்வை அல்லது இரண்டையுமே இழப்பதைக் கவனித்தனர். இது WHO வின் மிகவும் பொதுவான அறிகுறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தொற்றுநோய் தொடர்ந்தபோது மேலும் சில பொதுவான அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டன, அவை வருமாறு:

  • தொண்டை வலி
  • தலைவலி
  • வலிகள் மற்றும் நோவு
  • வயிற்றுப்போக்கு
  • தோலில் வெடிப்பு ; கைவிரல்கள் அல்லது கால்விரல்களின் நிறமாற்றம்
  • சிவப்பு அல்லது எரிச்சல் மிகுந்த கண்கள்

மிகவும் நோய்வாய்ப்பட்ட மக்களை உடனடி மருத்துவ சிகிச்சை பெற WHO ஊக்குவிக்கிறது. தீவிர அறிகுறிகளில் சுவாசிப்பதில் சிரமம், பேச்சு அல்லது இயக்கம் இழப்பு, குழப்பம் அல்லது மார்பு வலி ஆகியவை அடங்கும்.

முன்பே சில உடல்நலப்பிரச்சனைகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் கோவிட் -19 காரணமாக கடுமையாக நோய்வாய்ப்படக்கூடும் என்பதை நாம் அறிவோம். மேலும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் அதாவது சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்கள், நீரிழிவு, இதய நோய் அல்லது புற்றுநோய்தொலைபேசிறவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைரஸிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு WHO அறிவுறுத்துகிறது .

பெரும்பாலான நோயாளிகள் விரைவாக குணமடைவார்கள் என்றாலும் சிலருக்கு கோவிட் -19, இதயம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோவிட் -19 இன் பரவல்

மக்கள் தும்மும்போது அல்லது இருமும்போது வெளிவரும் திரவத்துளிகள்,காற்றில் நீடிப்பதை விட மேற்பரப்பில் விழுந்து அதன் மூலம் கோவிட் 19 பரவுவதாக தொற்றுநோயின் முதல் சில மாதங்களுக்கு WHO வலியுறுத்தியது.

அதனால்தான் கை கழுவுதல் ஒரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்கள் மேற்பரப்புகளையும் பொருட்களையும் மாசுபடுத்துவதைத் தடுத்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுவதை தடுப்பதே இதன் நோக்கம்.

தும்மல்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் சமீபத்திய கட்டுரை, “மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு SARS-CoV-2 பரவுதல், உள்ளிழுக்கலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு” என்று கூறுகிறது.

கோவிட் -19 பெரும்பாலும் ஏரோசோல் (திரவ சாரல்) டிரான்ஸ்மிஷன் மூலம் நெருங்கிய வரம்பில் உள்ள மக்களிடையே பரவுகிறது என்று சமீபத்திய சான்றுகள் கூறுகின்றன.

இது குறிப்பாக உட்புறங்களில், நெரிசலான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் நீண்ட நேரம் செலவிடும்போது பரவுவதாக WHO கூறுகிறது.

ஆகவேதான் நம் வாழ்வில் தற்போதுள்ள பல கட்டுப்பாடுகள், மக்களை வீட்டிற்குள் சந்திக்க தடை விதிக்கின்றன.

கோவிட் -19 தடுப்பூசிகளின் தாக்கம்

பிரிட்டனில் கோவிட் -19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீது தடுப்பூசி ஒரு பெரிய ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். தடுப்பூசிகள் , மருத்துவமனையில் சேர்க்கை மற்றும் இறப்புகளைக் குறைப்பதாகவும், சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

“இந்த தடுப்பூசி செயல்படுகிறது மற்றும் ஒரு டோஸ் நன்றாக வேலை செய்கிறது என்பதைக் காட்டும் சிறப்பான புள்ளிவிவரம் இது” என்று பிரிட்டனின் அரசு அறிவியல் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் கேலும் செம்பிள் கூறுகிறார்.

பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க 10 ஆண்டுகள் ஆகலாம் . ஆனால் ஃபைசர், மாடர்னா மற்றும் அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் போன்றவை, அந்தக் காலத்தின் ஒரு பகுதியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கென புதிய தொழில்நுட்பம், நிதி அதிகரிப்பு மற்றும் நிர்வாகத்துறையின் தலையீட்டு குறைப்பு ஆகியவற்றுக்கே நாம் நன்றி சொல்லவேண்டும். .

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

ஆனால் தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பிற்கு சில மாதங்களே பிடித்திருந்தாலும் பலர் ஊசியை பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

உலகளவில் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளும் திசையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன, பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையில் தடுப்பூசிகளை விநியோகிப்பதில் “அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு” இருப்பதாக WHO விமர்சித்தது.

மேலும், தடுப்பூசி நிச்சயமாக வைரஸை சமாளிக்க உதவும் என்றாலும், அது நிரந்தர பாதுகாப்பை வழங்காது. ஏனெனில் ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைந்துவிடும்.

நீண்டநாள் கோவிட் உங்களை மோசமாக பாதிக்கக்கூடும்

வைரஸால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் நீண்ட கோவிட் என அழைக்கப்படும் ஏராளமான அறிகுறிகளை அனுபவித்து வருகின்றனர்.

10 பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாகவும், தீவிர சோர்வு, தலைவலி, மார்பு வலி மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும் என்றும் WHO கூறுகிறது.

தொற்றுநோயின் ஆரம்பத்தில் மக்கள் தங்கள் நிலையை தீவிரமாக எடுத்துக் கொள்ளச்செய்வதற்கு போராடினார்கள். சில நோயாளிகள் ஏன் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகளுக்கு இன்னமும் தெரியவில்லை.

விஞ்ஞானிகள் கோவிட் -19 இன் நீண்டகால தாக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு ஆளானவர்கள், லேசாக பாதிக்கப்படிருந்தாலும் கூட, தொற்றுநோயைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் மரணம் அல்லது கடுமையான நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

“நீண்ட கோவிட் -19 இன் சுமை கணிசமானதாக இருப்பதால், இந்த நோயின் நீடித்த விளைவுகள் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களுக்கு எதிரொலிக்கும்,” என்று செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவி பேராசிரியரும், மூத்த எழுத்தாளருமான ஜியாட் அல்-அலி கூறுகிறார்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

“கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்வதில் மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த, பலதரப்பட்ட பராமரிப்பு தேவைப்படும்.”என்கிறார் அல்-அலி.

புதிய திரிபுகள் அதிகம் பரவக்கூடும்

கோவிட்டின் பல ஆயிரக்கணக்கான மாறுபட்ட திரிபுகள் அல்லது வகைகள் தற்போது பரவிவருகின்றன.

இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனென்றால் பரவும்பொருட்டு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் தங்களின் நகல்களை உருவாக்குகின்றன அதாவது உருமாறுகின்றன. பெரும்பாலும் இந்த வேறுபாடுகள் ஒரு பொருட்டல்ல. ஆனால் சில சமயங்களில் அவை வைரஸை அதிக ஆபத்துள்ளதாகவோ, அதிகம் பரவக்கூடியதாகவோ மாற்றக்கூடும்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்திய வகைகள் அனைத்தும் தங்கள் ஸ்பைக் புரதத்தில் மனித உயிரணுக்களுடன் இணையும் வைரஸின் பகுதி) மாற்றங்களை உருவாக்கிக் கொண்டுள்ளன.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக, N501Y பிறழ்வு, உயிரணுக்களைப் பாதிப்பதில் மற்றும் பரவுவதில் வைரஸை சிறந்ததாக்குகிறது. யுகே திரிபான பி .1.1.7 ஐப் பொருத்தவரை, இது 30% அதிக மரண அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பின் ஆபத்து குறைவு

குழந்தைகள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படலாம். ஆனால் பெரியவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைவு என்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் வைரஸைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

உருவாகிவரும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபுகளில் ஏதேனும் சில, இளம் வயதினரிடையே பரவலை அதிகரிக்குமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

2020 பிப்ரவரி முதல் 2021 மார்ச் 15 வரை, பிரேசிலில் ஒன்பது வயதுக்கு உட்பட்ட 852 குழந்தைகள் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் இவர்களில் ஒரு வயதுக்குட்பட்ட 518 குழந்தைகள் அடங்குவார்கள் என்றும் சென்ற மாதம் வெளியிடப்பட்ட பிரேசில் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

உலகில் தொற்று எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில், அதிக மக்கள் நோய்வாய்படுவதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் சிசுக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிசோதனையின் பற்றாக்குறை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற மாறுபட்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகள் கூடவே சுகாதாரப் பராமரிப்பை பெறமுடியாத நிலையில் உள்ளவர்கள் ஆகியவை நாட்டின் பிற சிக்கல்களில் அடங்கும்.

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

வைரஸின் மறைமுக விளைவுகள் குழந்தைகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கோவிட் -19 காரணமாக சுகாதார சேவைகளில் இடையூறு ஏற்படும் என்றும் இது தெற்காசியாவில் ஏறக்குறைய 239,000 தாய் சேய் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

கோவிட் -19 நம்மிடையே தொடர்ந்து இருக்கக்கூடும்

நேச்சர் இதழ், 100 நோயெதிர்ப்பு நிபுணர்கள், தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கோவிட் -19 உடன் பணிபுரியும் வைராலஜிஸ்டுகள் ஆகியோரிடம் கோவிட்டை ஒழிக்க முடியுமா என்று கேட்டபோது, கிட்டத்தட்ட 90% பேர் இது அவ்வப்போது வந்துபோகும் நோயாக மாறும் என்று நினைத்ததாகக் கூறினர்.

இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) “வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு உலக மக்கள்தொகையில் ஆங்காங்கே தொடர்ந்து பரவும்,” என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கோவிட் -19 உடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும்கூட கடந்த வருடத்தில் நாம் கண்ட அதே இறப்புகள் மற்றும் தொற்றுநோய்களை எப்போதும் பார்ப்போம் என்பது இதற்கு அர்த்தமல்ல.

முகக்கவசம்

பட மூலாதாரம், Getty Images

இன்ஃப்ளூயன்ஸா இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்கிறது. ஆனால் ஒரு சமூகமாக நாம் பெரும்பாலும் இந்தநோயை பொறுத்துக்கொள்ள கற்றுக்கொண்டோம். கோவிட் இது போன்ற ஒரு நோயாக மாறக்கூடும்; சமூகத்தில் சீரான இடைவெளியில் பரவக்கூடும், மக்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாதிக்கக்கூடும்.

உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க சிறந்த வழிகள்

தொற்றுநோயின் ஆரம்ப காலகட்டத்தில், கோவிட் -19 இன் பரவலை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த யோசனைகள் எப்போதுமே ஒரேபோல இருக்கவில்லை. உலக நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு வெவ்வேறு ஆலோசனைகளை வழங்கின. ஆனால் பாதுகாப்பாக இருக்க நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து WHO தெளிவாக உள்ளது.

குறைந்தது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பராமரித்தல், மூக்கு மற்றும் வாயை மூடும்படி முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் ஆகியவை இதில் முக்கியமானவை.

அறைகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருக்கவும், நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும் முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு இருமல் வந்தால் முழங்கையை மடக்கியோ அல்லது டிஷ்யூ பேப்பரால் வாயை மூடிக்கொண்டோ இரும வேண்டும்.

தும்மல்

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டால், நீங்கள் அதை கண்டிப்பாக விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும், “அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் தீவிரமாக நோய்வாய்ப்படுதல் மற்றும் நோய் காரணமான இறப்பிலிருந்தும் அதிக அளவு பாதுகாப்பை வழங்குகிறது” என்று WHO அறிவுறுத்துகிறது.

கோவிட் -19 பற்றி நமக்குத் தெரியாதவை

கோவிட் -19 குறித்து முன்னெப்போதும் இருந்திராத வகையில் விஞ்ஞான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டாலும், வைரஸைப் பற்றி நமக்குத் தெரியாதவை இன்னும் நிறைய உள்ளன.- குறிப்பாக எப்போது நாம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடைவோம், சிலர் ஏன் மற்றவர்களை விட அதிக நோய்வாய்ப்படுகிறார்கள், அல்லது நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எவ்வாறு மனிதர்களிடையே முதன்முதலில் வந்தது போன்றவை.

நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும், அல்லது தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பிற்கும் நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பாதுகாப்பு கவசத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளதா என்பதைக் கூறுவதும் இப்போது கடினம்.

கோவிட் -19 ஒரு நபருக்கு மீண்டும் ஏற்படுமா அல்லது இரண்டாவது முறையாக வரும்போது தீவிரம் குறைவாக இருக்குமா என்பதும் நமக்குத் தெரியாது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். அதே போல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பிறழ்வதால் அதன் மரபணுத்தொடரை வரிசைப்படுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

எதிர்காலத்தில் இந்த வைரஸையும் அதன் திரிபுகளையும் சமாளிக்க நாம் தயார் நிலையில் இருப்பதற்கு அவர்களின் முயற்சிகள் உதவும் என்று நம்புவோம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »