Press "Enter" to skip to content

ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: “தினமும் கொடுங்கனவு”

ஒரு ஃபேஸ்புக்கின் பதிவுகளை மதிப்பிடும் மதிப்பீட்டாளர் (Moderator) ஒருவர் முதன்முறையாக ஒரு நாடாளுமன்ற குழுவிடம் தனது வேலையால் ஏற்படும் மன அழுத்தம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

பதிவுகளை மதிப்பீடு செய்வோர் ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு கொடூரமான காணொளிகள் போன்றவற்றை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி அயர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் விசாரித்தது.

மதிப்பீட்டாளர்கள் சார்பாகப் பேசும் ஃபாக்ஸ்க்ளோவ் என்ற சட்ட நிறுவனம், தொலைத் தொடர்பு ஊழியர் சங்கம் ஆகியவை தங்களுக்கு மனநல உதவியும் சுதந்திரமாகப் பேசுவதற்கு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றன.

ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 24 மணி நேர உதவி அளித்து வருவதாகக் கூறுகிறது.

இசெபெல்லா பிளங்கெட், ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதிப்பீட்டாளராகப் பணிபுரிகிறார்.

அவரது வேலை ஃபேஸ்புக் பதிவுகளில் வன்முறைக் காட்சிகள், தீவிரவாதம், வசவுகள், தற்கொலை போன்ற உள்ளடக்கங்கள் இருக்கின்றனவா என்பதை கண்காணிப்பது.

என்ன காட்சிகளைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் தனது நண்பர்களிடத்திலோ, வீட்டில் உள்ளவர்களிடமோ அவர் பேசக்கூடாது. ஏனெனில் வேலைக்குச் சேரும்போதே அதற்கான ஒப்பந்தத்தில் நிறுவனம் கையெழுத்துப் பெற்றிருக்கிறது.

அப்படியிருந்தும் அவர் வெளிப்படையாகப் பேச வந்திருக்கிறார். அந்தத் துணிச்சல் குறித்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அயர்லாந்து நாடாளுமன்றக் குழு பாராட்டியிருக்கிறது.

இசபெல்லா பிபிசியிடமும் பேசியிருக்கிறார்

“நான் இங்கு பேசுகிறேன். ஆனால் சட்டப்படி நான் என்ன பேசவேண்டும் என்ன பேசக்கூடாது என்பது எனக்குத் தெரியாது” என்றார் இசெபெல்லா.

“எங்களுடைய வேலை குறித்து நாங்கள் எதுவும் பேசக்கூடாது என்பது எப்போதும் தெளிவுபடுத்தப்பட்ட ஒன்று. நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் வேலையைப் பற்றி எதுவும் கூறக்கூடாது. அது ரகசியங்களைக் கொண்ட அலுவலகம்”

இசெபெல்லா

பட மூலாதாரம், OIREACHTAS TV

ஆனால் ஃபேஸ்புக் நிறுவனமோ, ஊழியர்களுடன் செய்து கொள்ளும் ரகசிய காப்பு ஒப்பந்தம் வழக்கமானதுதான் என்கிறது. மதிப்பீட்டாளர்கள் தங்களது வேலையின் எந்த அம்சம் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் பேசலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

வேலையில் இருக்கும் பொதுவான சவால்கள், வெகுமதி போன்றவை குறித்து தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் பதிவுகளின் உள்ளடக்கங்கள் குறித்து விவரமாகப் பேசக்கூடாது.

மன நலம்

“இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். மன நலனில் ஏற்படுத்தும் பாதிப்பால் இனியும் இந்த வேலை செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என பிபிசியிடம் தெரிவித்தார் இசெபெல்லா.

“அலுவலகத்துக்குச் சென்றோம், வீட்டுக்கு வந்தோம், அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருந்தோம் என்று இந்த வேலையில் இருக்க முடியாது. இது சாதாரண வேலையைப் போன்றதல்ல” என்கிறார் இசெபெல்லா.

இசெபெல்லா ஒரு நாளைக்கு சுமார் 100 “அனுமதிச்சீட்டுகளை” பரிசீலிக்க வேண்டும். அவை காணொளியாகவோ, படங்களாகவோ, எழுத்துகளாகவோ இருக்கலாம். பெரும்பாலும் அவை வன்முறைக் காட்சிகள், தற்கொலைகள், சுரண்டல்கள், வசவுகள் போன்றவையாக இருக்கும் என்கிறார் அவர்.

அயர்லாந்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்ததாரரான கோவேலன் என்ற நிறுவனத்தில் இசெபெல்லா பணியாற்றுகிறார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் நேரடியாக வேலை செய்யும் பிறரைப் போல தமக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி இல்லை என்கிறார் இசெபெல்லா.

அதனால் அதிக கொடூரமான காட்சிகளையும் பதிவுகளை அலுவலகத்தில் இருந்தபடி தாம் காண வேண்டியிருப்பதாகவும் இசெபெல்லா கூறுகி்றார்.

“அது கொடுங்கனவு”

வீட்டில் இருந்து வேலை செய்வோருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கொடூர வன்முறை, குழந்தைகள் தொடர்பானவை, தற்கொலைகள் போன்ற பதிவுகளைப் பரிசீலிக்கும் பணி தரப்படாது.

வீட்டில் வேலை செய்ய வாய்ப்பிருந்தும், அலுவலகத்துக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டதால், மனஅழுத்தம் அதிகமாகி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பதாக இசெபெல்லா கூறுகிறார்.

“எனக்கு ஒவ்வொரு நாளும் கொடுங்கனவு” என்று கூறும் இசெபெல்லா, நிறுவத்தின் சார்பில் அளிக்கப்படும் மனநல உதவி போதுமானதல்ல என்கிறார்.

மனநல உதவிகள் 24 மணி நேரமும் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்தாலும் தமக்கு நல்வாழ்வு குறித்து ஆலோசனை வழங்குவோர் தகுதிபெற்ற மனநல நிபுணர்கள் இல்லை என்கிறார் இசெபெல்லா.

“நல்வாழ்வு குறித்து ஆலோசனை வழங்கும் குழுவை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களால் எனக்கு உதவ முடியும் என்று நான் கருதவில்லை. நிம்மதியான உணர்வுடன் அலுவலகத்தில் இருந்து விடைபெறுகிறேன் என்றோ, வீட்டுக்குச் சென்று நிம்மதியாகத் தூங்குகிறேன் என்றோ என்னால் கூற முடியாது. அது சாத்தியமில்லை”

“அது என்னைத் தொடர்ந்து வருகிறது. நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட அலுவலகத்தில் கண்ட கொடூரக் காட்சிகள் கண் முன் வருகின்றன”

ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு வாரத்துக்கு ஒன்றரை மணி நேரம் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பயிற்சியாளரிடம் பேசுவது. காலாற நடப்பது போன்றவற்றுக்கு அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

“இது போதாது. வேலையின்போது பார்க்கும் கொடூரக் காட்சிகள் என் கனவுகளில் வருகின்றன. நினைவில் தங்குகின்றன. அது கொடூரமானது.”

“காணொளிகளிலும் படங்களிலும் அடுத்து என்ன வரப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் முழுமையாக அனைத்தையும் பார்த்தாக வேண்டும். ஏனெனில் எங்காவது விதிமீறல் இருக்கலாம்.”

PTSD – பொறுப்புத் துறப்பு

சில ஃபேஸ்புக் மதிப்பீட்டாளர்கள், PTSD எனப்படும் பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் தொடர்பான பொறுப்புத்துறப்புப் பத்திரத்தில் கையெழுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலையின்போது பார்க்கும் காட்சிகளால் மனநலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அயர்லாந்து நாடாளுமன்ற குழுவின் முன்பு அப்படியொரு ஒப்பந்தப் பத்திரம் படிக்கப்பட்டது. அதில் “பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் எனக்கு ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்,” என்று கூறப்பட்டிருந்தது.

மனஅழுத்தம்

பட மூலாதாரம், Getty Images

“நான் நல்வாழ்வு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கிறேன். ஆனால் ஆனால் PTSD போன்ற ஆபத்துகள் வராமல் தடுப்பதற்கு அவை போதுமானதல்ல என்பது எனக்குத் தெரியும்”

“ஃபேஸ்புக் பதிவுகளை சரிபார்க்கும் அனைவருக்கும் மிகவும் ஆழமான பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்களது நல்வாழ்வுக்குத் தேவையான மனநல உதவிகளும் வழங்கப்படுகின்றன” என ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.

“சில வகையான உள்ளடக்கங்களைப் பார்ப்பது மிகவும் கடினம் என அறிந்திருக்கிறோம். அதனால் பதிவுகளைப் பரிசீலிக்கும் ஊழியர்களுக்கு போதுமான உதவிகளை வழங்க வேண்டும் என்று எங்களுடன் ஒப்பந்தம் செய்து பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமும் வலியுறுத்துகிறோம்” என்கிறார் அவர்.

“24 மணி நேரமும் ஆலோசகர்களின் உதவி, தொலைபேசி வழியிலான ஆலோசனை,ஆகியவை அயர்லாந்தில் வழங்கப்படுகின்றன”

“தொழில்நுட்ப ரீதியாகவும் கொடூரமான காட்சிகளைப் பார்ப்பதை முடிந்தவரை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது முக்கியமான பிரச்னை. இதைச் சரிசெய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.”

தொழில்நுட்ப ரீதியான தீர்வு

பதிவுகளைப் பரிசீலிக்க மனிதர்களுடன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது ஃபேஸ்புக். வருங்காலத்தில் மனிதர்களைக் குறைத்துவிட்டு முற்றிலுமாக செயற்கை நுண்ணறிவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஃபேஸ்புக் நம்புகிறது.

ஆனால் இது ஃபேஸ்புக்கின் “அதீத கற்பனை” என்கிறார் இசெபெல்லா. தொழில்நுட்பம் இன்னும் அதற்கு அருகில் கூட வரவில்லை என்கிறார் அவர்.

ரகசியம் காக்கும் ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு ஊழியர்கள் மிரட்டப்படுவதாகவும், அவர்கள் தங்களது வேலை போய் விடும் என அஞ்சுவதாகவும் நாடாளுமன்ற குழுவிடம் இசெபெல்லா கூறினார்.

ஃபேஸ்புக் ஊழியர்களுக்கான தளத்தில் வெளியே வந்து பேசும் சில ஊழியர்களின் பதிவுகள் அகற்றப்பட்டிருப்பதை இசெபெல்லா சுட்டிக்காட்டுகிறார்.

“தாங்கள் நடத்தப்படும் விதத்தையும் உள்ளே என்ன நடக்கிறது என்பதையும் ஊழியர்கள் பதிவிட்டிருந்தனர்” என்று நாடாளுமன்றக் குழுவிடம் இசெபெல்லா கூறினார். “ஊழியர்களின் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன. சில கணக்குகள் முடக்கப்படுகின்றன”

தன்னுடைய அனுபவமே தன்னை நாடாளுமன்ற குழு முன் சாட்சியம் அளிக்கத் தூண்டியதாகக் கூறும் இசெபெல்லா, “எனக்கு இதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது,” என்கிறார்.

“ஊழியர்களுக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அப்படி அஞ்சிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்காக நான் பேச வேண்டியிருக்கிறது,” என்கிறார் இசெபெல்லா.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »