Press "Enter" to skip to content

டொனால்டு டிரம்ப் எடுத்த முடிவுகளை ஒரே நாளில் மாற்றிய ஜோ பைடன் – அமெரிக்க அரசு முடிவு

பட மூலாதாரம், Getty Images

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் அவர் பிறப்பித்த பல ஆணைகளை தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளியன்று ரத்து செய்துள்ளார்.

சிலைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை சேதப்படுத்தும் நபர்களைத் தண்டிக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் பிறப்பித்த ஆணையும் அவற்றில் அடக்கம்.

கருப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களின் போது அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வெள்ளை இனவாதிகள் என்று போராட்டக்காரர்களால் கருதப்பட்டவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன அல்லது வீழ்த்தப்பட்டன.

மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியாபொலிஸ் மாநிலக் காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்த போது, கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட பின்பு அமெரிக்காவில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இதன்போது கருப்பினத்தவர்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு ஆதரவாக கடந்த காலங்களில் இருந்தவர்களின் சிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகின.

இதேபோல அமெரிக்க வரலாற்று நாயகர்களின் சிலைகளைக் கொண்ட தோட்டம் ஒன்றை உருவாக்க டிரம்ப் பிறப்பித்த ஆணையையும் ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

அந்த தோட்டத்தில் யாருடைய சிலைகளெல்லாம் நிறுவப்பட வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தேர்வு செய்திருந்தார்.

பாடகர் விட்னி ஹௌஸ்டன், 19ஆம் நூற்றாண்டில் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடிய ஹேரியட் டப்மன், என்பிஏ கூடைப் பந்து நட்சத்திரம் கோப் பிரயண்ட், 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்க எல்லை பகுதியில் வாழ்ந்த டேவி க்ரோகெட், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ஸ்கேலியா, கிறிஸ்தவ மத போதகர் பில்லி கிரஹாம் உள்ளிட்டோர் சிலைகளை அந்த தோட்டத்தில் நிறுவத் திட்டமிட்டு இருந்தார் டிரம்ப்.

ஆனால் இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவும் இல்லை அந்த தோட்டத்தை நிறுவுவதற்கான இடமும் தேர்வு செய்யப்படவில்லை.

trump vs biden

மருத்துவக் காப்பீட்டுக்கு செலவு செய்ய இயலாதவர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து 2019ஆம் ஆண்டு டிரம்ப் ஆணை ஒன்றைப் பிறப்பித்திருந்தார்.

அந்த ஆணை தற்போது நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வருவதற்கு முன் இங்கு உண்டாகும் மருத்துவச் செலவுகளை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அக்டோபர் 2019ல் டிரம்ப் அரசாங்கம் பிறப்பித்த அந்த ஆணை வலியுறுத்தியது.

ஆனால் அதற்கு ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தடை விதித்திருந்தது. அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் தரமான, மலிவான விலையில் மருத்துவ வசதி தருவதை விரிவுபடுத்த வேண்டும் என்று தனது நிர்வாகம் உறுதி பூண்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

விமர்சிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை கட்டுப்படுத்த டிரம்ப் பிறப்பித்திருந்த ஆணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களின் விழுமியங்கள், பெருமைகளைப் பிரதிபலிக்கும் முத்திரை ஒன்றை வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் பொருட்களில் பதிக்கவேண்டும் என்றும் டிரம்ப் பிறப்பித்த ஆணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »