Press "Enter" to skip to content

அமெரிக்காவின் இந்து கோயிலில் பட்டியலினத்தவருக்கு எதிரான ஒடுக்குமுறை

  • சலீம் ரிஸ்வி
  • பிபிசி ஹிந்திக்காக, நியூ யார்க்கிலிருந்து

பட மூலாதாரம், SALIM RIZVI

அமெரிக்காவில் பல அற்புதமான கோயில்களைக் கட்டிய அமைப்பான போச்சாஸம்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா பாப்ஸ் மீது நியூ ஜெர்சி கோவிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாங்கள் அடிமைத் தொழிலாளர்களைப் போல வேலை வாங்கப்பட்டதாகவும் சரியான ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட அதே மே 11 அன்று அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ராபின்ஸ்வில் பகுதியில் 159 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பாப்ஸ் கோயிலில் சோதனையும் நடத்தியது.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் துறை முகவர்களும் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பிறகு, கோயில் வளாகத்திலிருந்து 90 தொழிலாளர்களை பேருந்துகளில் எஃப்.பி.ஐ அழைத்துச் சென்றதாகவும் இப்போது அந்தத் தொழிலாளர்கள் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூ ஜெர்சியில் உள்ள அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமெரிக்க தொழிலாளர் சட்டத்தை முற்றிலுமாக மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பாஸ்போர்ட் பறிப்பு

அமெரிக்காவின் இந்துக் கோவிலில்

பட மூலாதாரம், SALIM RIZVI

தொழிலாளர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களில், சுவாமி நாராயண் சன்ஸ்தா அல்லது பாப்ஸ் அதிகாரிகள் விசா அதிகாரிகளிடம் உண்மையை மறைத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அந்தத் தொழிலாளர்களை அழைத்து வர, அவர்களைத் தன்னார்வலர்கள் என்று கூறியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவை அடைந்ததும், தங்களின் பாஸ்போர்ட்டுகளும் பறிக்கப்பட்டதாகவும் தங்களுக்கு முறையான உணவு கூட வழங்கப்படவில்லை என்றும், வெறு பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு மட்டுமே சாப்பிட வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஒரு டிரெய்லரில் தான் தங்களுக்குத் தங்கும் இடம் ஒதுக்கப்பட்டது என்றும் அங்கு பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், கோவில் வளாகத்திற்கு வெளியே செல்லவோ அல்லது வெளியாட்களுடன் பேசவோ கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களைக் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டல் வந்துள்ளது.

நீதிமன்ற ஆவணங்கள் 2018 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில், தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்பட்டதாகக் கூறுகின்றன. அதில் கற்களை உடைப்பது, கனரக இயந்திரங்களை ஓட்டுவது, சாலைகள் கட்டுவது, கழிவுநீர் வாய்க்கால்கள் போடுவது போன்றவை அடங்கும்.

ஒரு தொழிலாளி நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பு

இத்தகைய கடின உழைப்புக்குப் பிறகு, தங்களுக்கு ஒரு மாதத்திற்கு 450 டாலர்கள் அதாவது சுமார் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலர் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டது. நியூ ஜெர்சி அரசாங்க சட்டத்தின்படி, ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 12 டாலர்கள் வழங்கப்பட வேண்டும்.

அமெரிக்காவின் இந்துக் கோவில்

பட மூலாதாரம், SALIM RIZVI

நல்ல வேலை வாய்ப்பு என்று ஆசை காட்டித் தாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆனால் அமெரிக்காவில் அடிமைத் தொழிலாளர்கள் போல் தான் நடத்தப்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், ஒரு தொழிலாளி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முகேஷ்குமார் என்ற தொழிலாளி ஒரு வழக்கறிஞரை அணுகி நீதிமன்றத்தை நாட முடிவு செய்தார். 37 வயதான முகேஷ் குமார் இப்போது இந்தியா திரும்பியுள்ளார்.

இந்த தொழிலாளர்களுக்கு உதவிய நியூஜெர்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுவாதி சாவந்த், நியூயார்க் டைம்ஸிடம் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறினார்.

“தொழிலாளர்கள் அமெரிக்காவில் ஒரு நல்ல வேலை கிடைக்கும் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் வந்தார்கள். ஆனால் அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுவார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் விடுமுறைகளே தேவைப்படாத இயந்திரங்கள் போலவே கருதப்பட்டனர்.” என்று சுவாதி சாவந்த் கூறுகிறார்.

குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்வாமி நாராயண் அமைப்பு

இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் பட்டியலினத்தவர் என்று கூறப்படுகிறது.

நீதிமன்ற ஆவணங்களில் BAPS அதிகாரிகள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல ஆவணங்களில் தொழிலாளர்களின் கையொப்பத்தைப் பெற்றுள்ளனர் என்றும் ஆனால் அந்தத் தொழிலாளர்களுக்கு அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெரியாது என்றும் நீதிமன்றத்தின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தத் தொழிலாளர்களின் தரப்பில் வழக்காடும் வழக்கறிஞர் டேனியல் வெர்னர், “இது தொழிலாளர்களை துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஒரு பயங்கரமான வழக்கு. மேலும் இது அதிக கவலைக்குரிய விஷயமாக இருப்பது, பல ஆண்டுகளாக ஒரு கோவிலின் வளாகத்தில் இப்படி நடந்து கொண்டிருந்தததால் தான். இந்தத் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து, பிணைத் தொழிலாளிகளாக நடத்தியுள்ளனர்,”என்று கூறுகிறார்.

மறுபுறம், சுவாமநாராயண் சன்ஸ்தா அல்லது BAPS, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் லெலின் ஜோஷி, கோயிலில் உள்ள கற்களை ஒரு தனித்துவமான முறையில் செதுக்குவதற்காக இந்தத் தொழிலாளர்களைச் சிறப்புக் கைவினைஞர்கள் என்ற அடிப்படையில், விசா எடுக்கப்பட்டது என்று கூறினார்.

தேவ் பாஷிஷ்

பட மூலாதாரம், SALIM RIZVI

பக்தர்கள் என்ன கூறுகிறார்கள்?

நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் தவறாலம் இந்தக் கோயில்களுக்குச் சென்று வழிபடுவோர் பலர் உள்ளனர். இந்த பக்தர்களில் பலர் கோயிலுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வியப்படைந்துள்ளனர்.

நியூ ஜெர்சியிலுள்ள எடிசனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான தேவ் பாவேஷ் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வாமி நாராயண் கோவில்களில் வழிபாடு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அவர், “இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் நான் இந்த நிறுவனத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இருக்கிறேன். நான் ஒருபோதும் தவறான செயலைப் பார்த்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் ஏன் எழுந்துள்ளன என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இதனால் இந்தக் கோயிலின் கௌரவத்துக்கோ எங்கள் நம்பிக்கைக்கோ எந்த பங்கமும் நேராது என்பதை நான் உறுதியாகக் கூற முடியும். ” என்று கூறுகிறார்.

நியூ ஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உபேந்திர சிவுகுலாவும் இதே கருத்தைத் தான் தெரிவிக்கிறார். பாப்ஸ் பற்றிய நியூயார்க் டைம்ஸ் செய்தி குறித்து அவர் ஐயம் எழுப்பியுள்ளார்.

கோவில்

பட மூலாதாரம், SALIM RIZVI

உபேந்திர சிவுகுலா கூறுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உணவு பற்றி அவர்கள் கூறியுள்ளார்கள். பருப்பு நாங்கள் கூடத் தான் உட்கொள்கிறோம். கோயிலில் கோழிக் கறி வழங்க வேண்டும் என்கிறார்களா இவர்கள்? டிரெய்லரில் தங்குவது பற்றியும் கூறியுள்ளனர். இதுவும் விசித்திரமாக உள்ளது. BAPS இன் தலைமை நிர்வாக அதிகாரி எங்கள் நண்பர், அவரும் அவ்வப்போது டிரெய்லரில் தங்கியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு அனைத்து இந்துக் கோவில்களையும் கேவலப்படுத்தியுள்ளது.” என்று கொதிக்கிறார்.

இழப்பீடு கோரும் தொழிலாளர்கள்

பாப்ஸ் உடைட் மற்றும் அதன் துறவிகள் மற்றும் அதிகாரிகளுடன் தனக்குப் பல தசாப்தங்களாகத் தொடர்பு இருப்பதாக சிவுகுலா கூறுகிறார். ஒரு முறை பாப்ஸ் கோயிலில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தான் சந்தித்ததையும் அவர் நினைவு கூருகிறார். இந்த வழக்கு ஒன்றுமில்லாமல் பிசுபிசுத்துப் போகும் என்று தான் நம்புவதாகவும் இவர் கூறுகிறார்.

பாப்ஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து, இது போன்ற பிற அமைப்புகள் மீதும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற ஐயம் எழுகிறது. நியூ ஜெர்சியிலேயே, BAPS உட்பட பல அமைப்புகள், பல இடங்களில் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன. இன்னும் சில இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் தொழிலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் குறைந்த ஊதியம் என்ற குற்றச்சாட்டுகள் அந்த கோவில்களுக்கு எதிராக வரவில்லை.

நியூ ஜெர்சியில் எடிசன் பகுதியில் உள்ள சாய் தத்தா பீடம் நடத்தும் கோயிலில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

சாய் தத்தா பீடம் கோயிலின் தலைவரும் பூசாரியுமான ரகு ஷர்மா சங்கரமாஞ்சி, “நாங்கள் கோவிலுக்குச் சில பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தோம், அமெரிக்காவில் உள்ள பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் தொடர்ந்து கோயிலைக் கட்ட உதவுகிறார்கள், இது தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.” என்றார்.

இந்தக் கோயிலின் அதிகாரிகள் தங்கள் கோவிலில் அனைத்து வேலைகளும் சட்டப்பூர்வமாக நடைபெற்று வருவதாக வலியுறுத்தினர்.

விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற பாப்ஸ் கோயிலின் தொழிலாளர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தங்களின் பணிக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். பாப்ஸ் கோயிலின் வழக்கறிஞர்கள் குழுவும் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்துக்குத் தயாராகி வருகிறது.

தொழிலாளர்கள் தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட காலம் நடக்கும் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »