Press "Enter" to skip to content

ஜார்ஜ் ஃப்ளாயிட் நினைவு தினம்: வழக்கின் தீர்ப்பு குறித்து ‘கொண்டாட ஒன்றுமில்லை’

  • சாண்ட்ரின் லங்கம்பு
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

2020ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி – ஜார்ஜ் ஃபிளாயிட்டின் இறுதி தருணங்களைக் காட்டும் காணொளி, இனவெறி மற்றும் கருப்பின மக்களுக்கு எதிரான காவல் துறையினர் சிலரின் மிருகத்தனத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக்காட்டியது.

அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவரைக் கொன்றதற்காக வெள்ளையின காவல் துறை அதிகாரி டெரெக் ஷாவினுக்கு அரிதான வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதி நிலைநிறுத்தப்பட்டதை நிரூபிக்கிறது என்று சிலர் நினைத்தனர். ஆனால் பலர் அப்படிக்கருதவில்லை.

28 வயதான கேமிரா ஆபரேட்டர் டோனி, தனது விடுதி அறையிலிருந்து இந்தத் தீர்ப்பை கேட்டார். நாள் முழுவதும் படப்பிடிப்பில் ஈடுபட்ட பிறகு தனது அறைக்கு அவர் அப்போதுதான் திரும்பியிருந்தார்.

“இந்த உணர்வை என்னால் உண்மையில் விவரிக்க முடியாது. ஆனால் அது நிச்சயமாக ஒரு கொண்டாட்ட உணர்வல்ல,” என்று அவர் கூறுகிறார்.

“இது ஒரு நீண்ட பெருமூச்சு போல, ஆழ்ந்த நிம்மதிப்பெருமூச்சு போல நான் உணர்ந்தேன். அது நேரெதிர் அர்த்தம் கொடுப்பது போல இருந்தது,” என்கிறார் அவர். “இது நீதி அமைப்பில் எனக்கு அதிக நம்பிக்கையை அளித்ததா? என கேட்டால் உண்மையில் இல்லை,” என்கிறார் டோனி.

தனது இறுதித் தருணங்களில், ஜார்ஜ் ஃபிளாயிட் 20க்கும் மேற்பட்ட முறை கூக்குரலிட்டார். சின்ன (மினி)யாபோலிஸ் வீதியில் காவல்துறை அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டதால் மூச்சுவிட தன்னால் முடிவில்லை என்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் கதறினார்.

ஏப்ரல் மாதம், மூன்று வார விசாரணையைத் தொடர்ந்து ஷாவின், இரண்டாம் டிகிரி கொலை, மூன்றாம் டிகிரி கொலை மற்றும் படுகொலை ஆகியவற்றில் குற்றவாளி என ஜூரி முடிவு செய்தது.

இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு ஜூன் 16 ம் தேதி தண்டனை வழங்கப்பட உள்ளது.

2020 ஆம் ஆண்டில், ஜார்ஜ் ஃபிளாயிட் கொல்லப்பட்டதைப் பற்றி, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளம் கருப்பின மக்களுடன் நான் பேசினேன்.

ஒரு வருடம் கழித்து, டோனி அடெபெக்பா, லேட்டிஷா கண்டோலோ மற்றும் நியா டுமாஸ் ஆகியோரை நான் மீண்டும் தொடர்பு கொண்டேன்.

இந்த தணடனை வழங்கல் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க என்னைப்போலவே அவர்களும் சிரமப்பட்டார்களா என்பதை அறியவே இந்த நடவடிக்கை.

‘கொண்டாட எதுவும் இல்லை’

ஜார்ஜ் பிளாய்டு

பட மூலாதாரம், TWITTER/RUTH RICHARDSON

“குற்றவாளி என்று தீர்ப்பு வெளியான போது ஒரு குறுகியகால கொண்டாட்டம் இருந்தபோதிலும் கூட, சிறிது நேரத்தில் நான் கடுமையான சோகத்தையும், தீர்க்கப்படாத உணர்ச்சியின் வேகத்தையும் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.”

“நான் வீட்டில் இருந்தேன், எனது இன்ஸ்டாகிராமில் [அறிவிப்பு] இடுகையைப் பார்த்தேன். மேலும் விவரம் அறிய ட்விட்டரை பார்த்தேன்,” என்று லேட்டிஷா நினைவு கூர்ந்தார்.

“மகிழ்ச்சி என்பது சரியான சொல் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முதல் ஐந்து நிமிடங்களுக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். பின்னர் இது நடந்தே இருக்கக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.”

“இதில் கொண்டாட எதுவுமில்லை. ஏனென்றால் இந்த முழு வரலாற்றிலும் இதுபோல ஒரு முறை மட்டுமே நடக்கும். இந்த கொலைகள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன, தொடர்ந்து நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.”

“நீங்கள் நம்பிக்கையைப் பார்க்க விரும்புகிறீர்கள். சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதை கேள்விப்படும்போது, இனி காலம் மாறும் என்ற எண்ணமும் நம்பிக்கையும், ஏற்படுகிறது,” என்று டோனி கூறுகிறார்.

“இறுதியில், பெரிய பிரச்னைகள் கவனிக்கப்படும்வரை, இந்த விஷயங்கள் மாகையா பிரையன்ட்டுக்கு நடந்ததைப் போலவே நடக்கும் என்று நான் நினைக்கிறேன்,”என்கிறார் அவர்.

16 வயது மாகையா பிரையன்ட், அமெரிக்க மாகாணமான ஓஹையோவில் ஒரு வெள்ளையின காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கத்திக்குத்து முயற்சி தொடர்பான அவசர அழைப்பை விசாரிக்க அங்கு வந்திருந்தார்.

ஷாவின் விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நிக்கோலஸ் ரியர்டன், இந்த கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்றார்.

‘இது உங்கள் மனதில் பதிந்திருக்கும்’

டோனி

பட மூலாதாரம், TONI ADEPEGBA

ஜார்ஜ் ஃப்ளாயிட் காணொளி, ஜனநாயக குடியரசு. காங்கோவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரான லேட்டிஷாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ஆரம்பத்தில் காணொளிக்களைப் பகிர்வது இனவெறியாளர்களை பதில் சொல்ல வைக்கும் ஒரே வழி என்று அவர் நம்பினார். அதன் விளைவு தீவிரமாக இருக்கலாம் என்று இப்போது அவர் கருதுகிறார்.

“இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், அது என்னை ஃப்ளாயிட் காணொளிவுக்கு திரும்ப அழைத்துச்செல்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

“இறுதி தருணங்களில் அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று நான் யோசிக்க ஆரம்பிக்கிறேன், அவர்கள் தங்கள் தாய்க்காக கூக்குரலிட்டார்களா, அவர்களின் கண்களில் விரக்தியைக் காண முடிந்ததா, இதுதான் முடிவு என்பதை அவர்கள் உணர்ந்தார்களா? இந்த எண்ணங்கள் எப்போதுமே உங்கள் மனதில் பதிந்திருக்கும்.”

காணொளியைப் போலவே, கடந்த ஆண்டு இனம் பற்றிய உரையாடல்கள் பலருக்கு தவிர்க்க முடியாத தலைப்பாக இருந்தது.

தொற்றுநோய், இந்த விவாதங்களை தான் முன்பு அனுபவிக்காத வகையில் மாற்றியது என்றும் `பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தைச் சுற்றியுள்ள வேகத்தை வெளிப்படுத்தியது என்றும் டோனி கூறுகிறார்.

“நாம் அனைவரும் வீட்டில் அடைப்பட்டிருந்த ஒரு காலகட்டம். எனவே சில சங்கடமான உண்மைகளை நினைத்துப்பார்க்க, பலருக்கும் அப்போது அதிக நேரம் இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

இந்த கடினமான உரையாடல்களின் சுமை, பல கறுப்பின மக்களின் மன ஆரோக்கியத்தை தொடர்ந்து பாதிக்கிறது. நான் களைத்துப்போய் உணர்ச்சி மேலீட்டால் செய்வதறியாமல் இருப்பதாக உணர்ந்தேன்.

விசாரணையின் போது, ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் கைது மற்றும் இறப்புக்கு வழிவகுத்த தருணங்களின் புதிய காவல்துறை பாடிகேம் காட்சிகள் வெளியிடப்பட்டன.

“இந்த மனவேதனை தரும் காட்சிகளை மீண்டும் பார்க்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அவரது இறுதி தருணங்களின் முழு கிளிப்பையும் நான் மீண்டும் பார்க்கவில்லை” என்று டோனி கூறுகிறார்.

“இந்த சுமையை எனக்குள் இறக்கிவைக்காமல் இருப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். ஏனென்றால் அது என்னை உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப் போகிறது என்பதை நான் அறிவேன். என் ஆன்மாவை நிம்மதியாக வைத்திருக்க என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.”என்று அவர் குறிப்பிட்டார்.

டோனி மிகவும் சவாலான இந்த ஆண்டை சமாளிக்க, மன ஆரோக்கிய சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தில் மன நல ஆரோக்கிய பராமரிப்பில் பன்முகத்தன்மை இல்லாததால் உதவி கோர ஆரம்பத்தில் அவர் தயங்கினார்.

“உண்மை என்னவென்றால், இந்த நபர்கள் யாரும் என்னைப் போல் இல்லை. அவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். நான் தொடர்புபடுத்தக்கூடிய எவரும் என்னைச்சுற்றி இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

“பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்பதற்காக மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உதவும்பொருட்டு என் திறன்களை வளர்த்துகொள்வதற்காகவும் தொழில்முறை உதவியை நாடவேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் சமூகம் மீது பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதும் என்னுடைய இந்த முடிவுக்கான மற்றொரு காரணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

‘ வாழ்வதற்கான உரிமை இல்லை’

நியா

பட மூலாதாரம், NIA DUMAS

ஷாவின் குற்றவாளி அல்ல என்றே தீர்ப்பு வெளியாகும் என்று கடைசி தருணம் வரை நியா டுமாஸ் நினைத்தார்.

20 வயதான இந்த மாணவி, அமெரிக்காவில், ‘பெயர்கள் மற்றும் வலையொட்டு (ஹேஷ்டேக்)குகளின் பட்டியலுடன்’ – நீதி கேட்கும் இயக்கங்களுக்கு இடையே வளர்ந்தவர். இவை அனைத்தும் தண்டனை வழங்கப்படாமலேயே முடிந்தன.

பலியானவர்களின் பெயர்கள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு காவல் துறைமிருகத்தனத்திற்கும் இனவெறிக்கும் எடுத்துக்காட்டுகளாக அமைந்தன; ப்ரொன்னா டெய்லர், எரிக் கார்னர், சாண்ட்ரா பிளாண்ட், மைக்கேல் பிரவுன் ஆகியோர் இவர்களில் சிலர்.

“ட்ரைவோன் மார்ட்டின் வழக்கைப் பார்த்துவிட்டு பின்னர் பள்ளிக்குச் சென்று அரசின் மூன்று கிளைகள் பற்றியும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் கற்றுக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது” என்று நியா கூறுகிறார்.

” நிச்சயமாக அவர் தண்டிக்கப்படுவார் என்று 11 வயதில் நான் நினைத்தேன். ஏனென்றால் நீங்கள் சட்டத்தை மீறினால் தண்டனை கிடைக்கும் என்று அதற்கு முந்தைய வாரம்தான் நான் பாடத்தில் படித்தேன்.”என்கிறார் அவர்.

ஃப்ளோரிடாவில், 17 வயதான ஆயுதம் ஏந்தாத கருப்பின இளைஞரான ட்ரைவோன் மார்ட்டின் , சுற்றுப்புற காவலாளி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக்காவலாளி தற்காப்புக்காகவே இதை செய்தார் என்று கூறி 2012 இல் விடுதலை செய்யப்பட்டார்.

இப்படி,பெயர் பட்டியல் வளர்ந்துகொண்டே போனது.

” ட்ரைவோன் கொல்லப்பட்ட சில ஆண்டுகளுக்குப்பிறகு மைக்கேல் பிரவுன் இறந்தார். அதன் பிறகு என் ஊரைச்சேர்ந்த , தமீர் ரைஸ் கொல்லப்பட்டார்.”

கிளீவ்லேண்டில் வளர்ந்து வந்த நியா, திரைப்படத்திற்கு சென்றதும், தன் நண்பர்களுடன் ஸ்கேட்டிங் பூங்காவில் முடிவில்லாத நாட்களை செலவழித்ததும் தனது சிறந்த குழந்தை பருவ நினைவுகள் என்று கூறுகிறார்.

“என் குழந்தைப்பருவத்தை நினைத்து இப்போதும் நான் ஏங்குகிறேன். ஏனென்றால் என் கறுப்புத்தன்மையுடன் தொடர்புடைய எந்தப்பேச்சும் இல்லாமல் நான் பள்ளிக்கு, கடைக்கு அல்லது எங்கும் செல்ல முடிந்தது,” என்று அவர் சொல்கிறார்.

“இனிமேல் வாழ்வதற்கான உரிமை எனக்கு உண்மையில் இல்லை”

“இது என்னை விரைவாக முதிர்ச்சியடையச் செய்தது. ஏனென்றால் நீங்கள் அமெரிக்காவில் ஒரு கறுப்பின மனிதராக இருந்தால், இதுதான் நடக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துவிடுவீர்கள்.”

ஜார்ஜ் ஃப்ளாயிட் ஒரு தியாகி அல்ல

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

அரசியல்வாதிகள் , ஜார்ஜ் ஃபிளாயிட்டை தியாகியாக போற்றுவதாக சிலர் கூறுகின்றனர்.

“அவர் உண்மையில் கொலை செய்யப்பட்டவர்” என்று நியா கூறுகிறார். “ஒரு பெரிய காரணத்திற்காக அவர் இறந்திருந்தால் அது இந்த நிலைமையை கருப்பின மக்கள் ஏற்றுக்கொள்ள உதவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”

“எனது பிரச்சனை என்னவென்றால், அரசு இதை எவ்வாறு இதைப்பார்க்கிறது என்பதுதான், எங்களை கொலை செய்த பின்னர் காவல் துறை அதிகாரிகள் தண்டனை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை . அவர்கள் எங்களை கொலை செய்யக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்.”

காவல்துறை வன்முறையைக் கண்காணிக்கும் ஒரு சுயாதீன ஆய்வுத்திட்டத்தின்படி, அமெரிக்காவில் ,ஆண்டுதோறும் சுமார் 1000 பேர், காவல் துறை அதிகாரிகளால் கொல்லப்படுகிறார்கள். பெரும்பாலானோர் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மக்கள்தொகையில் சுமார் 13% மட்டுமே இருந்தபோதிலும், வெள்ளையினத்தவரோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமான நிராயுதபாணியான கறுப்பின மக்களை காவல்துறையினர் சுட்டுக் கொல்வதாக ஆய்வு காட்டுகிறது.

அமெரிக்காவில் காவல்துறையில் முறைசார்ந்த இனவெறி இருப்பதாக நியா நம்புகிறார். அது நீங்கும் வரை, ஷாவின் தண்டனையால் அர்த்தமுள்ள எதுவும் நடக்காது என்கிறார் அவர்.

“அவர்கள் கட்டமைப்பு மாற்றங்களை செய்யவிரும்பாததே, தண்டனைகளில் கவனம் செலுத்துவதற்கான காரணம். இது நம்மை சமாதானப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழி போன்றது” என்று அவர் கூறுகிறார்.

‘வேறு வகையான சுதந்திரம்’

லேடிஷியா

பட மூலாதாரம், FURIE PHOTOGRAPHE

2020 ஆம் ஆண்டில் உலகளாவிய பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டங்களின் உச்சத்தின் போது, லேட்டிஷா பாரீஸில் இருந்தார். அங்கு சிலைகளை சேதப்படுத்தி, இனவெறிக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தில் நூறாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர்.

29 வயதான அவர், செப்டம்பர் மாதம் முதல் டி.ஆர். காங்கோவில் உள்ள கின்ஷாசாவில் வசிக்கிறார்.

” நான் முழுமையாக நானாக இருக்க முடியும் ஒரு இடத்தில் வசிக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

அவருடைய ப்ளாட்,ஒரு தூசி நிறைந்த சாலைக்கு எதிரே உள்ளது. அங்கு அக்கம் பக்கத்து குழந்தைகள் விளையாடுவதைக் கேட்க முடிகிறது. மேலும் சமீபத்திய ரும்பா பாடல், காற்றில் எதிரொலிக்கிறது.

“அவர்களுக்கு வித்தியாசமான சுதந்திரம் உள்ளது. எனக்கு கிடைக்காத ஒரு மட்டத்தில் அது இருக்கிறது. நாம் நாமாக இருக்கும் மன மற்றும் உடல் ரீதியான சூழல் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் இங்கே கருப்பினக் குழந்தைகள் அல்ல. அவர்கள் வெறும் குழந்தைகள்,” என்று அவர் கூறுகிறார்.

“பெருந்தொற்று காரணமாகவே நான் இங்கு வந்தேன். உண்மையில் பாரிஸில் வசிப்பதை நான் விரும்பவில்லை. இப்படிச்சொல்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்.”

“எல்லோரும் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டும் அல்லது செல்லலாம் என்று நான் கூறவில்லை. ஏனென்றால் அது எளிதானது அல்ல. ஆனால் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு நாட்டை நீங்கள் உணரும்போது, உங்களால் திரும்பிச் செல்ல முடியாது.”

“நாங்கள் பிறந்து வளர்ந்த இடங்களில், இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் எங்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சரி என்று நாம் நினைக்கக்கூடாது ,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

‘ கருப்பா வெள்ளையா’

கண்ணை மூடிக் கொண்டுள்ள நபர்

பட மூலாதாரம், Getty Images

நியா, லேட்டிஷா மற்றும் டோனி போன்ற பல கருப்பின மக்களுக்கு , தாங்கள் உலகில் எங்கிருந்தாலும், வெள்ளையர்கள் செய்யக்கூடிய சிறிய தவறுகளை செய்யக்கூட தங்களுக்கு உரிமை இல்லை என்பது தெரியும்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஏன் இறந்தார் என்பதைப் புரிந்துகொள்வதற்கான வாழ்க்கை அனுபவம் இது என்று சிலர் நம்புகிறார்கள்.

“நீங்கள் மட்டுமே கறுப்பினத்தவராக இருக்கும்போது, நீங்கள் எப்போதும் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களை எப்படிப்பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பதால் நாம் எங்கோ தொலைந்து போனதாக உணர்கிறோம்,” என்று லேட்டிஷா கூறுகிறார்.

“ஆனால் அந்த மனஅழுத்தத்துடன் வாழ்வது கடினம். எனவே நீங்கள் எப்போதும் சிந்தித்து இரு மடங்கு கடினமாக உழைக்கிறீர்கள் . மற்றவர்கள் விஷயங்களைச் சரியாகச் செய்ய வேலை செய்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு குறையும் இல்லாமல் அதைச்செய்ய முயற்சி செய்கிறோம்.”

” ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ன செய்தார் என்பதை கடந்து, நீதி என்பது அவர் அடைந்த மரணத்தின் மூலமாக வந்திருக்கக்கூடாது<” என்று டோனி கூறுகிறார்.

ஒரு கடை ஊழியர் , ஃபிளாயிட் பற்றி காவல்துறையில் புகார் செய்தார். அவர் ஒரு பாக்கெட் சிகரெட்டை வாங்க பயன்படுத்திய 20 டாலர், கள்ளநோட்டு என்று அந்த ஊழியர் நினைத்தார். அரை மணி நேரம் கழித்து, ஜார்ஜ் ஃப்ளாயிட் இறந்து விட்டார்.

அனைவருக்கும் நியாயமான முறையில் சேவை செய்யும் ஒரு நீதி அமைப்பின் இயல்பான போக்காக அல்லாமல், டெரெக் ஷாவின் விசாரணையும் தண்டனையும் ஒரு விதிவிலக்கு போலவே தெரிகிறது.

நியா, லேடிட்ஷா மற்றும் டோனி இதை எளிமையான வார்த்தைகளில் வர்ணிக்கிறார்கள்.அதாவது கட்டமைப்பு உண்மையிலேயே சமமாக இருந்தால், ஜார்ஜ் ஃப்ளாயிட் இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »