Press "Enter" to skip to content

கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள்: உளவுத்துறைக்கு உத்தரவிட்ட ஜோ பைடன்

பட மூலாதாரம், EPA

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த விஷயத்தில் தங்களுடைய முயற்சிகலை இரட்டிபாக்கி பணியாற்றுங்கள்,” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 16.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 35 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வூஹானில் உள்ள கடல்சார் உயிரின உணவுச் சந்தையில் இருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியதாக தொடர்புபடுத்திய ஆய்வாளர்கள், அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விலங்குகளிடம் இருந்தே முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக கருதினர்.

ஆனால், அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகளின்படி, வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படும் ஆய்வ கசிவு வாதங்கள்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்த வாதங்கள் குறித்து ஆன்டனி ஸர்ச்சர், வட அமெரிக்க செய்தியாளர் என்ன கூறுகிறார் என பார்ப்போம்.

அமெரிக்க அரசில் நிலவி வரும் வெளிப்படைத்தன்மையின்படி, கோவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தொடர்பாக அந்நாட்டின் உளவு சமூகங்களுக்கு இடையே பிளவு காணப்படுகிறது. அது ஆய்வத்தில் இருந்தோ, விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கோ பரவியிருக்கலாம் என்று வாதிடப்பட்டாலும், எந்த தரப்பும் நிச்சயமாக அதை உறுதிப்படுத்தவில்லை.

அதுவேகடந்த ஆண்டு அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ, செனட்டர் டாம் காட்டன் உள்ளிட்டோர் ஊடகங்களிடமும் உலவ விட்டு அரசியல் செய்த ஆய்வக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிவு வாதத்தில் இருந்து மாற்றிச் சிந்திக்க இப்போதைய ஆட்சியாளர்களை தூண்டியது.

டிரம்பும் மைக் போம்பியோவும் அப்போது அந்த கூற்றை நிரூபிக்க உதவவில்லை. ஆனால், சந்தேக விதையை விதைக்கத்தூண்டினர். அந்த செய்தி பல வகையில் விரிவடைந்தாலும், சீன ஆய்வகத்தில் இருந்துதான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியது என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றதாகவே இருந்தது.

இந்த விவகாரத்தில் சீனா ஒத்துழைக்காதவரை, வைரஸின் மூலம் தொடர்பான உண்மையை மக்கள் அறியாமலேயே போகலாம். இதனால்தான் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வைரஸின் மூலத்தை கண்டறிய முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், ஒருவேளை, ஆய்வகத்தில் இருந்துதான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்தது என அமெரிக்கா கண்டுபிடித்தால் அது அமெரிக்கா, சீனா இடையிலான உறவை இனி வரும் காலங்களில் கடுமையாகவே பாதிக்கச் செய்யும் என்கிறார் ஆன்டனி ஸர்ச்ச்ர்.

ஜோ பைடனின் திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்?

கொரோனா ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸின் மூலம் தொடர்பாக அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,அதிபராக பதவி ஏற்றவுடனேயே தொற்று பரவிய விலங்கிடம் இருந்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மனிதனுக்கு பரவியதா அல்லது அது ஒரு ஆய்வக சம்பவமா என்பதை விளக்குமாறு அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. .

அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை அதிபர் கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில், “இன்றைய நிலவரப்படி, இரு சாத்தியமான நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும், தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை,” என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் நாடாளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும், தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், “கோவிட்-19 மூலம் தொடர்பாக நாடாளுமன்ற குழுக்களின் விசாரணைகளின்போது எழும் கேள்விகளால் எழுந்த நெருக்கடியிலேயே, அந்த கேள்விகளுக்கான பதில் அளிக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதை உலக சுகாதார அமைப்பின் பொறுப்புக்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மாற்றியிருக்கிறது,” என்று கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது.

மேலும், சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி செய்தியில், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்திருக்கலாம் என்பதை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பின் பிரிவை, தேவையற்ற நிதிச்சுமை நடவடிக்கை எனக்கூறி அதிபரின் நிர்வாகம் மூடி விட்டது என்று கூறப்பட்டது. இந்தப்பின்னணியிலும் அதிபர் ஜோ பைடனின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆய்வகத்தில் இருந்துதான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்ததா?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு மார்ச் மாதம், சீன ஆய்வாளர்களுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் இருந்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியம் முழுமையாக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. அதே சமயம், இந்த விவகாரத்தில் மேலும் ஆய்வு தேவை என்று உலக சுகாதார அமைப்பு அப்போது கூறியது.

இந்த நிலையில், அமெரிக்க உளவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிவந்த சமீபத்திய தகவல்களின்படி, சீனாவில் முதலாவதாக புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்டதை அந்நாடு ஏற்றுக் கொள்ளும் முன்பே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை வூஹானின் வைரலாஜி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, முதன்மை சுகாதார ஆலோசகராக இருந்த ஆன்டனி ஃபெளட்சி, விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியிருக்க வேண்டும் என்று கூறினார். இந்த மாதம் அவர், கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இயற்கையாக உருவானது என இனியும் நம்பவில்லை என்று கூறினார்.

கொரோனா வைரஸின் மூலம் தொடர்பரான விசாரணை, வெளிப்படையாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் சேவியர் பெக்கெர்ரா கருத்து வெளியிட்ட சில நாட்களில் அதிபர் பைடனின் கண்டிப்பான உத்தரவு வெளிவந்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

“கோவிட்-19 பெருந்தொற்று நமது ஓராண்டு வாழ்வை மட்டும் பறிக்கவில்லை. அது கோடிக்கணக்கானோரின் உயிரையும் பறித்து விட்டது,” என்று உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

“கோவிட்-19 மூலத்தை அறியும் இரண்டாம் கட்ட ஆய்வு வெளிப்படையாக இருக்க வேண்டும். அது அறிவியல் அடிப்படையில், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் பதிவான தரவுகளை முழுமையாக அணுகும் சுதந்திரத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்ததாக அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது வெளியிட்ட தகவல்கள், உள்நோக்கத்துடன் அவரால் பரப்பப்பட்டது என கடந்த ஆண்டே அந்த கருத்தை பலரும் நிராகரித்தனர். பல ஊடகங்களும் அந்த கூற்று போலியானது என்று நிராகரித்தன.

இந்த நிலையில், ஆய்வக கசிவு தொடர்பாக நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்திக்கு மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்துள்ள டொனால்ட் டிரம்ப், “என்னைப்பொருத்தவரை நிச்சயமாக அது ஒரு தொடக்கமாக இருந்தது. ஆனால், என்னை எல்லோரும் மோசமாக விமர்சித்தார்கள். இப்போது அவர்கள் எல்லாம் நான் சொன்னது சரி என்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »