Press "Enter" to skip to content

இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம் : `நான் ஒரு யூதனாக இருந்திருந்தால்`…யூதர்களுக்கு காந்தி சொன்ன செய்தி

  • குமார் ப்ரஷாந்த்
  • பிபிசி இந்தி வலைதளத்துக்காக

பட மூலாதாரம், Getty Images

2021 மே 10 அன்று தொடங்கிய இஸ்ரேல் – பாலத்தீனப் போர் 11 நாட்கள் நீடித்தது, இதன் விளைவாக பாலத்தீன தரப்பில் குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் தரப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 இஸ்ரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இப்போது சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான சண்டையோ அல்லது சண்டை நிறுத்தமோ அல்லது முடிவில்லாத பிரச்னையோ, இவை எல்லாவற்றிலும் இந்த இரு தரப்பைத் தவிர இவற்றால் குளிர் காயக்கூடிய அனைத்துத் தரப்புகளும் உள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனடியாக, இரு தரப்பினருடனும் ஒரு சந்திப்பை நடத்தினார். இஸ்ரேலின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதைக்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்றார்.

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட பாலத்தீனம் மற்றும் பாலத்தீனியர்களின் முழு வளர்ச்சிக்கும் அமெரிக்கா 75 மில்லியன் டாலர்களை வழங்கும் என்றும் அவர் கூறினார். இதற்குப் பொருள், சண்டையோ அல்லது சண்டை நிறுத்தமோ எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பது தான்.

இஸ்ரேல் – பாலத்தீன மோதல் வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, மகாத்மா காந்தி யூதர்களின் நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்தினார். ஐரோப்பாவில் உள்ள யூதர்களின் நிலை குறித்து அவர் குறிப்பாக ஈர்க்கப்பட்டார்.

இஸ்ரேல் காசா மோதல்

பட மூலாதாரம், Reuters

1938 இல் எல்லைப்புறச் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பின்னர், ‘கிறிஸ்தவத்தில் தீண்டாமை’ என்ற தலைப்பில் தனது முதல் தலையங்கத்தை எழுதினார், “யூதர்களுக்கு எனது அனுதாபங்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்த நாட்களிலிருந்து நான் அவர்களை அறிந்திருக்கிறேன். அவர்களில் சிலருடன் எனக்கு வாழ்நாள் நட்பும் உண்டு. அவர்கள் மூலமாக அவ்வினத்துக்கு ஏற்பட்ட கொடுமைகளை நான் அறிந்து கொண்டேன். இந்த மக்கள் கிறிஸ்தவத்தின் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்துக்களிடையே உள்ள தீண்டாமையுடன் இந்தக் கிறிஸ்தவத்தின் தீண்டாமையை ஒப்பிடலாம்.” என குறிப்பிட்டிருந்தார்.

“தனிப்பட்ட நட்பைத் தவிர, யூதர்களுடனான எனது அனுதாபத்திற்கு வேறு காரணங்களும் உள்ளன. ஆனால் அவர்களுடன் எனக்கு இருக்கும் ஆழமான நட்பு, நீதியை மறைத்து விட முடியாது. அதனால் யூதர்களின் தனி நாடு கோரிக்கை எனக்குச் சரியாகப் படவில்லை. பைபிளில் இதற்கான அடிப்படையைத் தேடி, பாலத்தீனப் பகுதிக்குத் திரும்புவதற்கான கோரிக்கையும் எழுப்பப்படுகிறது. ஆனால் உலகில் உள்ள மற்ற இனத்தவர் போல, யூதர்களும், தாங்கள் பிறந்த இடம், தங்களுக்கு உணவளிக்கும் இடத்தைத் தங்களதாகக் கருதி வாழ ஏன் முடியாது?” என்பது அவர் கருத்து.

கிறிஸ்தவர்கள் யூதர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதும் விவகாரம்

மகாத்மா காந்தி, “இங்கிலாந்து பிரிட்டிஷ்காரர்களுக்கு எப்படிச் சொந்தமோ, பிரான்ஸ் ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு எப்படிச் சொந்தமோ, அப்படியே, பாலத்தீனப் பகுதியும் அரேபியர்களுக்குச் சொந்தமானது. யூதர்கள் அரேபியர்களைக் கட்டாயப்படுத்துவது தவறானது மற்றும் மனிதாபிமானமற்றது. மாறாக, யூதர்கள் எங்கு பிறந்து வளர்ந்தார்களோ, எங்கு வாழ்வாதாரத்தைப் பெற்று வருகிறார்களோ அங்கு நல்லிணக்கத்துடன் சமமான மரியாதையுடன் அவர்கள் நடத்தப்படுவது தான் சரியானதாக இருக்கும். யூதர்களுக்குப் பாலத்தீனப் பகுதி தான் வேண்டும் என்றால், அவர்கள் இன்று இருக்கும் உலகின் எல்லா இடங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட விரும்புகிறார்களா? அல்லது அவர்கள் தங்களுக்கென்று இரண்டு நாடுகளை விரும்புகிறார்களா? எங்களுக்காக ஒரு தனி தேசம் என்ற கோஷம் தான் ஜெர்மனியிலிருந்து அவர்கள் துரத்தப்பட்டதற்குக் காரணம் என்று கூறவே இது வழிவகுக்கும்.”

.

பட மூலாதாரம், Getty Images

“ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்த கொடுமைக்கு ஒப்பு கூற வரலாற்றில் வேறு ஒரு நிகழ்வில்லை என்பது உண்மை தான். எந்தவொரு கொடுங்கோலனும் செய்யத் துணியாத கொடுமைகளைச் செய்யத் துணிந்தார் ஹிட்லர். அதுவும் மதத்தின் பேரில். தான் ஒரு சிறப்பு வகையான தூய்மையான மதத்தையும் ராணுவ தேசியவாதத்தையும் நிறுவுவது என்ற பெயரில், அனைத்து மனிதாபிமானமற்ற வேலைகளும் மனித சேவை என்ற பெயரில் அரங்கேற்றப்பட்டன. இந்தப் புண்ணியம் இப்போதோ பிறகோ கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. மனிதநேயத்தை நிறுவுதல் என்ற பெயரில் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட, நியாயப்படுத்தப்பட்ட ஒரு யுத்தம் நடந்துள்ளது என்றால், அது ஜெர்மனிக்கு எதிராக நடந்த போர் தான். அது ஒரு இனத்தின் மொத்த அழிவைத் தடுத்தது. ஆனால் எனக்கு எந்தப் போர் மீதும் நம்பிக்கையில்லை. ஆகவே இதுபோன்ற போர் குறித்த விவாதங்களுக்கே என் மனதில் இடமில்லை.”

“பார்ப்பதற்கு பலவீனமாகத் தோன்றும் மனிதநேயம் போன்ற விஷயங்களைக் கடந்த வன்முறை, எந்த அளவுக்கு வளமையைக் கொடுக்க முடியும் என்பதையும் ஜெர்மனி உலகுக்குக் காட்டிவிட்டது. வெளிப்படையான வன்முறை எந்த அளவுக்குப் பாவச் செயலாகவும் கொடூரமாகவும், பயங்கரமாகவும் இருக்கக்கூடும் என்பதையும் அது காட்டுகிறது”

“இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் இரக்கமற்ற அடக்குமுறைக்கு எதிராக யூதர்கள் போட்டியிட்டிருக்க முடியுமா? அவர்கள் மிகவும் உதவியற்றவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், தனித்துவிடப்பட்டவர்களாகவும் ஆகிவிடாத படி, அவர்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? ஆம், இருக்கிறது என நான் கூறுவேன். எந்த மனிதனிடம் கடவுளின் பேரில் பரிபூரண ஈடுபாடு உண்டோ, அவன், ஒருபோதும் இவ்வளவு உதவியற்றவராகவும் தனிமையாகவும் உணர முடியாது. யூதர்களின் இறைவன் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லது இந்துக்களின் கடவுளரை விட அதிக மனிதத் தன்மை உடையவர், மனிதனால் உருவாக்கப்பட்டவர். அவர் அனைவரிலும் உள்ளார். எனவே அனைவரும் சமமானவர். எந்த சித்தாந்தத்துக்கும் அப்பாற்பட்டவர் என்பது தான் உண்மை. ஆனால் யூத மரபில், கடவுளுக்கு இன்னும் மனித வடிவம் கொடுக்கப்பட்டு, அவர்களுடைய எல்லாச் செயல்களையும் அவர் ஒழுங்குபடுத்துவதாக நம்பப்படுகிறது, எனவே அவர்கள் இவ்வளவு உதவியற்றவர்களாக உணர வேண்டிய அவசியம் இல்லை.”

காந்தி யூதராக இருந்திருந்தால்…..

பீரங்கி

பட மூலாதாரம், Getty Images

மகாத்மா காந்தி, “நான் ஒரு யூதராக இருந்து ஜெர்மனியில் பிறந்து அங்கேயே எனது வாழ்வாதாரத்தையும் அமைத்துக்கொண்டிருந்தால், வேறு எந்த பலம் பொருந்திய ஜெர்மானியனுக்கும் இணையான உரிமை எனக்கும் அந்த நாட்டின்மீது உண்டு. அது என் வீடு என்று நான் மார் தட்டிக் கூறிக்கொள்வேன். நீங்கள் என்னைச் சுட்டாலும் பாதாளச் சிறையில் அடைத்தாலும் இங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கோ அல்லது எந்தவொரு பாரபட்சமான நடத்தையையும் ஏற்றுக்கொள்வதற்கோ நான் தயாராக இல்லை என்று துணிந்து நின்றிருப்பேன். மற்ற யூதர்களும் வந்து எனக்கு ஆதரவளிக்க நான் காத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்னை எல்லாரும் பின்பற்றி வரும் அளவுக்கு நான் தனியாகப் போராடியிருப்பேன்.” என கூறியிருக்கிறார்.

“ஒரு யூதராவது எனது இந்தச் செயல்முறையைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களின் நிலை இன்றைக்கு உள்ளது போல பரிதாபகரமானதாக இருந்திருக்காது.”

“ஜெர்மனியில் யூதர்கள் நடத்தப்பட்ட அதே விதத்தில் தான் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களும் நடத்தப்பட்டார்கள். அங்கேயும் அடக்குமுறைக்கு ஒரு மதச் சாயம் பூசப்பட்டது. ஜனாதிபதி க்ரூஸர் வெள்ளை கிறிஸ்தவர்கள் கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்ததியினர் என்றும், இந்தியர்கள் தாழ்ந்த சந்ததியினர் என்றும் கூறிவந்தார். வெள்ளையர்களுக்கும், ஆசியர்கள் அடங்கிய கறுப்பர்களுக்கும் எந்த சமத்துவமும் இல்லை என டிரான்ஸ்வாலின் அரசியலமைப்பில் ஒரு அடிப்படை விதியே உண்டு.”

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுடன் ஒப்பீடு

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES

“தென்னாப்பிரிக்காவில் கூட, இந்தியர்கள் ஒரு குழுவாக ஒரு குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதியில் தான் வாழ்ந்தார்கள். அதை ‘லொகேஷன்’ என்று குறிப்பிட்டார்கள். மற்ற எல்லா ஏற்றத்தாழ்வுகளும் ஜெர்மனியில் யூதர்களுக்கு இருந்ததைப் போலவே இருந்தன. அங்கே, அந்தச் சூழ்நிலையில், விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான இந்தியர்கள், ஒரு சத்தியாகிரக வழியில் இதை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது வெளி உலகத்தினரிடமிருந்தோ இந்திய அரசாங்கத்திலிருந்தோ எந்த ஆதரவும் இல்லை. எட்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு, உலக மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு, இந்திய அரசும் உதவ முன்வந்தது.”

“ஆனால் ஜெர்மனியின் யூதர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்தியர்களை விட மிகச் சிறந்த நிலையில் உள்ளனர். யூத இனம் ஜெர்மனியில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு. அவர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்தியர்களை விட திறமையானவர்கள் மற்றும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச ஆதரவைப் பெற முடியும். அவர்களில் எவரேனும் தைரியத்துடனும், புரிதலுடனும் உறுதியாக நின்று அவர்களை அகிம்சை வழியில் இட்டுச் சென்றால், கண்ணிமைக்கும் நேரத்தில், அவர்களின் இருள் சூழ்ந்த நாட்கள் முடிந்து விடியல் பிறக்கும். ஒளி பரவும் என்று நம்புகிறேன். “

“பாலத்தீனப் பிரதேசத்தில் வாழும் யூதர்கள் தவறான வழியில் செல்கிறார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பாலஸ்தீனத்திற்கு இன்று புவியியல் வடிவம் இல்லை. அரேபியர்களின் பெருந்தன்மையான ஆதரவுடன் தான் அவர்கள் இங்கு குடியேற முடியும். அரேபியர்களின் இதயங்களை வெல்ல அவர்கள் முயற்சிக்க வேண்டும். யூதர்களின் இதயங்களில் வசிக்கும் அதே கடவுள் தான் அரேபியர்கள் இதயங்களிலும் வசிக்கிறார். அவர்கள் அரேபியர்களுக்கு எதிராக ஒரு விரலைக் கூட உயர்த்தாமல், சத்தியாகிரக வழியில் பரிபூரணமாகச் செல்ல வேண்டும். குண்டடி பட்டாலும் கடலில் வீசி எறிந்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.”

“நான் அரேபியர்கள் செய்த அத்துமீறல்களை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டில் செய்யப்படும் நியாயமற்ற ஆக்கிரமிப்பைத் தான் எதிர்க்கிறார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அவர்கள் அதை வன்முறையற்ற முறையில் செய்ய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். ஆனால் சரி மற்றும் தவறுக்கான அங்கீகரிக்கப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில், பெரிய துன்பங்களுக்கு எதிராக அரேபியர்கள் பதிலடி கொடுத்த விதத்தை நீங்கள் எவ்வாறு விமர்சிப்பீர்கள்? தங்கள் இனம் மேன்மையானது என்று கூறிக்கொள்ளும் யூதர்கள், வன்முறை தவிர்த்த விதத்தில் எதிர்வினையாற்றி, தங்கள் மேன்மையை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார் காந்தி.

ஜெர்மனியில் எதிர்ப்பைச் சந்தித்த காந்தி

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், RAZA FOUNDATION

அத்தகைய கருத்துக்கு என்ன எதிர்வினை எதிர்ப்பார்க்கத் தக்கதோ அதுவே நடந்தது. ஜெர்மனியில் காந்திக்குக் கடுமையான எதிர்ப்பலை வீசியது.

அதற்கு அவர், “ஜெர்மனியில் யூதர்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்த எனது கட்டுரைக்கு நான் எதிர்பார்த்தது போலவே சூடான எதிர்வினை கிளம்பியுள்ளது. ஐரோப்பாவின் அரசியல் குறித்த எனது அறியாமையை நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டேன். ஆனால் யூதர்களின் நோய்க்கான சிகிச்சையை சொல்ல ஐரோப்பாவின் அரசியலைப் பற்றி நான் அறிந்திருக்க வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன். அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவை. ஜெர்மானியர்களின் மன நிலை சற்றே அமைதியடைந்து, அவர்கள் பொறுமையாக எனது கருத்தை மீண்டும் படித்தால், என் மீது மிக அதிகமாகக் கோபம் கொண்டிருக்கும் ஜெர்மானியர்கள் கூட எனது அறிக்கையில் அவர்களுக்கு எதிரான துவேஷம் சிறிதும் இல்லை என்பதையும், நட்புக்கரம் மட்டுமே நீட்டப்பட்டிருப்பதையும் உணர்வார்கள். “

“எனது கட்டுரையால், எனக்கோ, எனது போராட்டத்துக்கோ, அல்லது இந்திய – ஜெர்மன் உறவுகளுக்கோ எந்த நன்மையும் இல்லை என எனக்குத் தெரியும். நான் எந்தத் தர்க்கத்தையும் கருதவில்லை. ஆனால் அதில் அச்சுறுத்தல் மறைந்திருப்பதைக் காண்கிறேன். எனக்கோ எனது தேசத்துக்கோ இந்திய – ஜெர்மன் உறவுகளுக்கோ கேடு வரும் என்று அஞ்சி என் ஆழ் மனதில் சரி என்று கருதியதை நான் கூறாமல் தவிர்த்தால் நான் கோழையென்றாகிவிடும்.

“அந்த பெர்லின் எழுத்தாளர் ஜெர்மனிக்கு வெளியேயிருந்து எந்தவொரு நபரும், நட்பு ரீதியாகக் கூட, ஜெர்மனியின் எந்தவொரு நடவடிக்கையையும் விமர்சிக்கக் கூடாது என ஒரு அற்புதமான கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். ஜெர்மனி அல்லது எந்தவொரு நாட்டினரும் இந்தியாவை விமரிசித்தால் அதை நான் வரவேற்கிறேன்.”

1946 ஆம் ஆண்டின் மத்தியில், காந்தி தனக்கு விருப்பமான ஓய்விடமான பஞ்ச்கனியிலிருந்து, ஜூலை 14, 1946 இல், யூதர்கள் மற்றும் பாலத்தீனம் என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை எழுதினார்.

அதில் அவர், “யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான தகராறு பற்றி நான் இதுவரை பகிரங்கமாக எதுவும் சொல்வதைத் தவிர்த்து வந்தேன். அதற்கான காரணங்களும் உள்ளன. காரணம் இந்த விஷயத்தில் எனக்கு அக்கறை இல்லை என்பதல்ல, ஆனால் எனக்கு இது குறித்த போதிய அறிவும் புரிதலும் இல்லை என்பது தான் காரணம். இந்தக் காரணத்திற்காக நான் பல சர்வதேச விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு எனது கருத்தைச் சொல்வதைத் தவிர்க்கிறேன். நான் கவலைப்பட விஷயங்களுக்குக் குறைவில்லை. ஆனால் ஒரு செய்தித்தாளில் அச்சிடப்பட்ட நான்கு வரிகளின் செய்தி என் மௌனத்தை உடைக்கும்படி கட்டாயப்படுத்தியது. அதுவும் ஒரு பொது நண்பர் இது குறித்து என் கவனத்தை ஈர்க்க, ஒரு நண்பர் இந்தச் செய்தியை எனக்கு அனுப்பியதால் தான்.”

“உலகம் யூதர்களுக்கு மிகக் கொடூரமான அடக்குமுறையைச் செய்துள்ளது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஐரோப்பாவின் பல பகுதிகளில் யூதக் குடியேற்றங்கள் ‘கேட்டோ’ என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டிருக்காவிட்டால், அவர்கள் பாலத்தீனியப் பகுதிக்குச் செல்வதற்குத் தேவையும் இருந்திருக்காது. அவர்களது தனித்துவமான திறமை மற்றும் பங்களிப்பு காரணமாக உலகம் முழுவதும் அவர்களது வீடாக இருந்திருக்கும். “

“ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாகப் பாலத்தீனப் பகுதியை ஆக்கிரமித்துக் குடியேறியது அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு. முதலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியுடன், இப்போது வெறும் பயங்கரவாதத்தின் சக்தியுடன்! அவர்களது உலகக் குடியுரிமை அவர்களை உலகின் எந்த நாட்டிலும் மதிப்பிற்குரிய குடிமகனாக மாற்றக்கூடும். திறமை, பன்முகத்தன்மை மற்றும் ஞானத்துடன் பணியாற்றுவதற்கான சிறந்த திறனை வரவேற்காத நாடும் இருக்க முடியுமா? ‘புதிய ஏற்பாட்டை’ தவறாகப் படித்து தவறாகப் புரிந்துகொண்டு, யூத சமுதாயத்தை இலக்காக்கித் தாக்குவது, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஒரு கரும்புள்ளி. ஒரு யூதர் ஒரு தவறு செய்தால், முழு யூத சமுதாயமும் குற்றவாளியாகக் கருதப்படும் என்பது தவறு. ஐன்ஸ்டீனைப் போன்ற ஒரு யூதர் ஒரு பெரிய கண்டுபிடிப்பைச் செய்தால் அல்லது ஒரு இசைக்கலைஞர் சிறந்த இசையை உருவாக்கினால், அது அந்த நபரின் சாதனை என்று கருதப்படும், அவருடைய சமூகத்தின் சாதனை அல்ல. “

“யூதர்கள் இத்தகைய வேதனையான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள விதத்தில் எனது அனுதாபம் அவர்களுடன் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பாதகமான சூழ்நிலைகளும் நமக்கு அமைதி என்ற ஒரு பாடத்தை கற்பிக்கின்றன என்று நான் நினைக்கிறேன்! அவர்கள் வரவேற்கப்படாத இடத்தில் அமெரிக்க நிதியுதவி மற்றும் பிரிட்டிஷ் ஆயுதங்களின் உதவியுடன் அங்குள்ள மக்கள் மீது தங்களைத் திணித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? பாலத்தீனிய மண்ணில் தங்கள் கட்டாய இருப்பை வலுப்படுத்த யூதர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை எவ்வாறு நாடினர்? “

காந்தி வெளிப்படுத்திய அச்சம்

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், Getty Images

மே 5, 1947 அன்று, செய்தி நிறுவனமான ‘ராய்டர்ஸ்’ -ன் டெல்லி நிருபர் டூன் கேம்ப்பெல், பாலத்தீனிய பிரச்னைக்கு நீங்கள் என்ன தீர்வு காண்கிறீர்கள் என்று கேட்டு காந்தியின் கவனத்தை இவ்விஷயத்தில் மீண்டும் ஈர்த்தார்.

காந்தி அப்போது கூறியிருந்தார், “இது தீர்வொன்றும் கண்ணுக்கெட்டாத ஒரு பிரச்னையாக மாறிவிட்டது. நான் ஒரு யூதராக இருந்திருந்தால், நான் அவர்களிடம்,”இதற்காகப் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக எடுக்கும் முட்டாள்தனத்தை நீங்கள் செய்யாதீர்கள். இப்படிச் செய்தால் அது உங்களுக்கே கேடாக முடியும். நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் போது இப்படிச் செய்வது நல்லதல்ல” என கூறுவேன். இது வெறும் அரசியலால் உந்தப்படும் பிரச்னையென்றால், இது தேவையற்றது என்று கூறுவேன். யூதர்கள் முன் வந்து, அரேபியர்களுடன் நட்பு வைத்து, பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க உதவியின்றி, யகோவாவின் வாரிசுகள் தங்களின் மத அறிவுரைப்படி, தங்கள் மரபுகளைப் பின்பற்ற வேண்டும்”

ஆனால் யாருக்கும் எந்த மரபையும் காக்கும் நோக்கம் இல்லை. அனைவருக்கும் ஒரே நோக்கம் ஆட்சி அதிகாரம்.

அதிகாரத்திற்கான இந்தப் பசியை காந்தி உணர்ந்து கொண்டிருந்தார், எனவே அவர் கேம்ப்பெல்லிடம், “இது தீர்வே இல்லாத ஒரு பிரச்னையாகிவிட்டது” என கூறினார்.

இஸ்ரேல் உருவான மே 14, 1948-க்கு மூன்று மாதங்களுக்கு முன்பு காந்தி கொல்லப்பட்டாலும், காந்தி வெளிப்படுத்திய அச்சம், 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. யுத்தத்திற்கும் யுத்த நிறுத்தத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட பாலத்தீனிய – இஸ்ரேலியர்கள் இதுவரை எந்தத் தீர்வையும் எட்டவில்லை. உலகின் வல்லரசுகளும், இரு தரப்பு ஆட்சியாளர்களும் இதிலிருந்து விலகி நின்றால், ஜெருசலேமின் பிள்ளைகள் தங்கள் பாதையைத் தாங்களே அமைத்துக்கொள்வார்கள். ஆனால் அது நடக்க விடுவார்களா?

(இது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். இக்கட்டுரையை எழுதியவர் காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவர்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »