Press "Enter" to skip to content

மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது அவ்வளவு எளிதல்ல, ஏன்?

  • விஷால் சுக்லா
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

2011 நவம்பர் 29 ஆம் தேதி, இந்தியாவின் முதல் தங்க பண இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது என்ற செய்தி நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் இருந்து வந்தது. இந்த பண இயந்திரத்தில் இருந்து மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் அனைத்து வகையான நகைகளையும் வாங்கலாம். ஆனால் இந்த இயந்திரம் மக்களை ஈர்க்கவில்லை. மிகக்குறைவான வாடிக்கையாளர்களே இதைப் பயன்படுத்தினர் என அருகிலுள்ள கடைக்காரர்கள் கூறினர்.

ஒரு காலத்தில் இந்தியாவின் வைர வியாபார உலகில் கொடிகட்டிப் பறந்த மெஹுல் சோக்ஸியைப் பார்த்தால் அவரது கதையும் இந்த பண இயந்திரம் போலவே தெரிகிறது. அவரது ஒவ்வொரு தொடக்கமும் வைரங்களைப் போல பிரகாசமாக ஜொலித்தது. அவரது நடத்தை எப்போதுமே தங்கத்தைப் போலவே நெகிழ்வானவை. ஆனால் இதன் விளைவு ஒவ்வொரு முறையும் ஒரு நகைக் கடையில் ஒருவர் ஏமாற்றப்படுவதைப்போல இருந்தது.

அந்த பண இயந்திரம்-க்கும் மெஹுல் சோக்ஸிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான பதில், இந்த பண இயந்திரம் மெஹூலின் நிறுவனமான கீதாஞ்சலியால் நிறுவப்பட்டது. அடுத்த கேள்வி ஏன் மெஹுல் சோக்ஸி மட்டுமே நினைவிற்கு வருகிறார்? இதற்கு பல பதில்கள் உள்ளன.

தந்தை சீனுபாய் சோக்ஸியின் வைரங்களின் வெட்டு-மெருகூட்டல் வணிகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் வழியை மெஹுல் ஏற்படுத்தினார். ஆனால் நிறுவனத்தின் கெட்ட பெயர் காரணமாக ஊழியர்கள் வேலை இழக்க நேரிட்ட ஒரு காலம் வந்தது.

அவரது சகோதரியின் பெயரிடப்பட்ட நிறுவனம் கீதாஞ்சலி, 2006 இல் ஐபிஓவுக்குள் நுழைந்தது, பின்னர் 330 கோடி ரூபாய் வசூலித்தது. 2013 ஆம் ஆண்டில், மெஹூலின் நிறுவனத்தை, முறைகேடு சந்தேகத்தின்பேரில், பங்குச் சந்தையில் 6 மாதங்களுக்கு செபி நிறுத்திவைத்தது.

2008 ஆம் ஆண்டில், நடிகை கத்ரீனா கைஃப் அவரது வைரங்களுக்கு விளம்பரம் செய்தார். இதன் பின்னர் நிறுவனத்தின் விற்பனை ஒரு ஆண்டில் 60% அதிகரித்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீவாஸ்தவா, கீதாஞ்சலி தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து போலி வைரங்களை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினார்.

மெஹுல் சோக்ஸி

பட மூலாதாரம், Getty Images

2013 ஆம் ஆண்டில் 600 ரூபாயாக இருந்த கீதாஞ்சலியின் பங்குவிலை, 2018 பிப்ரவரியில் 33.80 ரூபாயாக சரிந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி வெளிவருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். ஒரு லட்சம் டாலர்களை முதலீடு செய்வதன் மூலம் குடியுரிமை பெறக்கூடிய ஒரு நாட்டையும் அவர் தேர்வு செய்தார். இன்று அதே நாட்டின் பிரதமர், மெஹுல் சோக்ஸி எங்கள் அவமானத்திற்கு ஒரு காரணமாகிவிட்டார் என்று கூறுகிறார்.

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த மனிதரான பிரதமர் நரேந்திர மோதி பொது மேடையில் இருந்து எழுந்து நின்று சோக்ஸியை ‘மெஹுல் பாய்’ என்று அழைத்த ஒரு காலம் இருந்தது. ஆனால் மோதி அரசில், அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்துக்கு, ‘மெஹுல் சோக்ஸி … அதுதான் அவர் பெயர்…’ என்று கூறி அறிமுகம் செய்யவேண்டியிருந்த ஒரு காலமும் வந்தது.

சோக்ஸி டொமினிகாவை அடைந்தது குறித்து எழும் கேள்விகள்

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கி மோசடி என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உள்ளான மெஹுல் சோக்ஸி இப்போது ‘தப்பியோடிய தொழிலதிபர்’ என்று அழைக்கப்படுகிறார். அவரைப் பற்றிய மிகச் சமீபத்திய செய்தி என்னவென்றால், தான் குடியுரிமை பெற்றிருந்த ஆன்டிகாவில் இருந்து அண்டை நாடான டொமினிகாவுக்குச் சென்றபோது அங்கு பிடிபட்டார். இதை அறிந்த ஆன்டிகாவின் பிரதமர், மெஹூலை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொமினிகாவுக்கு யோசனை கூறினார்.

சோக்ஸியை நாடு கடத்தி இங்கு கொண்டுவரும் முயற்சியை பல மாதங்களாக இந்தியா மேற்கொண்டுள்ளது. இருப்பினும், ‘ஆன்டிகாவிலிருந்து டொமினிகாவுக்கு அவர் எப்படி அழைத்துச் செல்லப்பட்டார்’ என்பது அவருடன் பேசிய பின்னரே தெரியும் என மெஹுலின் வழக்கறிஞர் கூறியுள்ளார். சோக்ஸி டொமினிகாவை அடைந்த பின்னணியில், அவரை நாடு கடத்துவது இப்போது எளிதானதா அல்லது மேலும் கடினமாவிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பழைய கதையை பார்ப்போம்

மெஹுல் சோக்ஸி

பட மூலாதாரம், Getty Images

மெஹுல் சோக்ஸி 2018 ஜனவரியில் இந்தியாவை விட்டு வெளியேறினார். சில ஊடக அறிக்கைகள், 2018 ஜனவரி 4 ஆம் தேதி அவர் சென்றதாகக் கூறுகின்றன. அதே மாதத்தின் கடைசி வாரத்தில், மெஹுல் சோக்ஸி, அவரது மருமகன் நீரவ் மோதி மற்றும் பிற கூட்டாளிகளுக்கு எதிராக மோசடி தொடர்பான முதல் எழுத்து மூலமான புகாரை பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), அளித்தது. அவர்கள் 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வங்கி குற்றம் சாட்டியது.

ஜனவரி 31 க்குள், சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பிப்ரவரி 14 அன்று, பி.என்.பி தன் இடைக்கால விசாரணையை முடித்து மும்பை பங்குச் சந்தையை அடைந்தது. 11,380 கோடி ரூபாய் அளவிற்கு ‘மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்’ தென் மும்பையில் உள்ள தங்களது கிளை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி, அமலாக்க இயக்குநரகம் (ED) ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது . பிப்ரவரி 23 அன்று, மும்பையின் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி சோக்ஸியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தார். விசாரணையின் இரண்டு மாதங்களுக்குள், இந்த மோசடியின் மதிப்பீடு 13,578 கோடி ரூபாயை எட்டியது.

மெஹுல் சோக்ஸி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

ஆரம்ப விசாரணையில் சோக்ஸி மற்றும் நீரவ் மோதி, சில வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, ஒரு போலி கடிதத்தை அதாவது LOUவை வெளியிட்டனர். இந்த ஆவணம் ஒரு வகைக்கான உத்தரவாதமாகும். இது, வங்கி தனது வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. இந்த உத்தரவாதத்தின் மூலம் வாடிக்கையாளர் மற்றொரு இந்திய வங்கியின் வெளிநாட்டு கிளையிலிருந்து மூலதன பணத்தை பெற முடியும். குறுகிய காலத்திற்கு பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட கடன் என இதை சொல்லலாம். ஆனால் அதற்கு ஈடாக வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டும்.

சோக்ஸி மற்றும் மோதியைப் பொருத்தவரை, எந்தவொரு தொகையும் வைப்பீடு செய்யப்படவில்லை கூடவே கடனுக்கு உச்சவரம்பு இல்லை என்பதே இதில் உள்ள பிரச்சனை. வழக்கமாக வாடிக்கையாளர்கள் LOU இன் அடிப்படையில் வேறொரு வங்கியிலிருந்து மூலதனத்தை பெறுகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் LOU வானது பஞ்சாப் நேஷனல் வங்கியால் அளிக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வெளிநாட்டு கிளையிலிருந்து பணமும் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் திருப்பித் தரப்பட வேண்டிய பணம் ஒருபோதும் வந்துசேரவில்லை.

இந்த மோசடி வெளியான பின்னர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோக்ஸி மீது அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்தது.

ஆன்டிகாவின் குடியுரிமை எப்படி கிடைக்கிறது?

நீரவ் மோதி

பட மூலாதாரம், Getty Images

‘நாட்டின் மிகப்பெரிய மோசடி’ என்று சேனல்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ​​அனைவரின் கண்களும் சோக்ஸி மற்றும் நீரவ் மோதியை தேடிக் கொண்டிருந்தன. சோக்ஸி ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். 2017 நவம்பர் மாதத்திலேயே ஆன்டிகாவின் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பித்திருந்தார் என்று தெரியவந்த போது அது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2018 ஜனவரி 15 ஆம் தேதி, அவருக்கு ஆன்டிகாவின் குடிமகனாக பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

ஆன்டிகாவின் குடியுரிமை பெற நான்கு வழிகள் உள்ளன என்று ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் கூறுகிறது. முதல் வழி, ஆன்டிகாவின் தேசிய மேம்பாட்டு நிதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவது. இரண்டாவது, நீங்கள் மேற்கிந்தியத் தீவுகள் பல்கலைக்கழகத்திற்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவது.

மூன்றாவதாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட்டில் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வது மற்றும் நான்காவது வழி, குடியுரிமையைப் பெறுவதற்கு, நீங்கள் முடிவு செய்த ஒரு வணிகத்தில் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வது.

இது தவிர சில கட்டணங்களும் உள்ளன. உங்களைக் குறித்த ரெக்அட்டைகள் சுத்தமாக இருப்பதை நீங்கள் நிரூபிக்க முடிந்தால் அதாவது , எந்தவொரு வழக்கும் உங்கள் மீது இல்லை என்றால், நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று ஆன்டிகா நினைத்தால், மூன்று முதல் ஆறு மாதங்களில் நீங்கள் குடியுரிமை பெறுவீர்கள்.

மெஹுல் சோக்ஸி

பட மூலாதாரம், Getty Images

ஆன்டிகாவின் குடிமகன் ஒரே நேரத்தில் இரண்டு நாட்டின் குடியுரிமைகளை வைத்திருக்க முடியும். அதே நேரத்தில், ஒரு நபர் குடியுரிமை பெற்ற விவரத்தை மற்ற நாடுகளுக்கு ஆண்டிகா அறிவிக்காது. ஆனால் குடியுரிமை பெற்றவர் தனது பெயரை மாற்றிக் கொள்ள முடியாது என 2014 ல் ஆண்டிகா அரசு முடிவு செய்தது. ஹென்லி & பார்ட்னர்ஸ் பட்டியலில், ஆன்டிகாவின் பாஸ்போர்ட் உலகின் 28 வது மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஆகும், இந்த பாஸ்போர்ட் மூலம் நீங்கள் விசா இல்லாமல் 151 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

சோக்ஸியை நாடு திருப்பி அனுப்புவது ஏன் மிகவும் கடினம்?

குற்றம் சாட்டப்பட்டவரை திரும்ப ஒப்படைக்க, இரு நாடுகளுக்கு இடையே நாடு கடத்தும் ஒப்பந்தம் அவசியம். அதாவது, தங்கள் நாட்டில் வேறொரு நாடு விரும்பும் நபர் இருந்தால் , அவரை பரஸ்பரம் திருப்பி அனுப்புவதாக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கவேண்டும். இந்த ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், ‘ஒப்படைப்பு ஏற்பாடு இருந்தாலும் இது சாத்தியம். இதில், இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒருவருக்கொருவர் ஒப்படைக்கின்றன.

சோக்ஸி ஆன்டிகாவில் இருப்பதைப் பற்றி அறிந்ததும், இந்திய அரசு தனது முயற்சிகளைத் தொடங்கியது. இருப்பினும், இந்தியா ஒப்படைப்பு உடன்படிக்கை செய்துகொண்டுள்ள 47 நாடுகளில் அல்லது ஒப்படைப்பு ஏற்பாடு உள்ள 11 நாடுகளில் ஆன்டிகா இல்லை. இந்த விவகாரம் வளர்ந்து வருவதைக் கண்ட சோக்ஸி, ஆன்டிகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆன்டிகா அரசியலமைப்பின் அடிப்படையில் தனக்கு குடியுரிமை இருப்பதாகவும், எனவே தன்னை பிடிக்கவோ, திருப்பி அனுப்பவோ ஆண்டிகா அரசுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என அதில் அவர் கோரியிருந்தார்.

பின்னர் நடந்தது என்ன:

2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் எந்தவொரு சலசலப்பும் இல்லாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆன்டிகாவின் சட்டத்தின் அடிப்படையில், இந்தியா ஒரு காமன்வெல்த் நாடாகக் கருதப்படும் என்றும், 1962 ஆம் ஆண்டின் இந்தியாவின் ஒப்படைப்புச் சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தைத் தவிர, மீதமுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகள் இரு நாடுகளுக்கும் இடையில் பொருந்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மையில், இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தான், குற்றம் சாட்டப்பட்டவரை மற்றொரு நாட்டிடம் ஒப்படைப்பதற்கான விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஆன்டிகா காமன்வெல்த் சட்டங்களின்படிதான், சோக்ஸியை ஒப்படைக்க முடியும்.

இந்தியாவிற்கும் ஆன்டிகாவிற்கும் இடையே ஏறக்குறைய ஒரு புரிந்துணர்வு ஏற்படும் கட்டத்தில் ​​மெஹுல் முதல் முறையாக 2018 செப்டம்பரில் மீண்டும் வெளியே வந்தார். அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தனது சொத்து சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தனது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ​​பாஸ்போர்ட்டை சமர்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என அவர் ஒரு காணொளியில் கூறினார்.

ஆன்டிகாவுக்கு சோக்ஸி தலைவலியாக மாறியது எப்படி?

மெஹுல் சோக்ஸி

பட மூலாதாரம், Getty Images

ஆன்டிகா அரசும், அதன் பிரதமர் காஸ்டன் பிரவுனும் மெஹுல் சோக்ஸியைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது 2019 செப்டம்பரில் தெரியவந்தது.

ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் பிரவுனிடம் சோக்ஸி பற்றி கேட்கப்பட்டபோது,​​’மெஹூலை வைத்திருக்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. அவரால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் மெஹுல் ஒரு நல்ல மனிதர் என்று இந்திய அதிகாரிகள்தான் ஒப்புதல் அளித்திருந்தனர். இந்தியா எங்களுக்கு தவறான தகவல்களை வழங்கியது, இதற்கு இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். இந்திய அதிகாரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில்தான் நாங்கள் மெஹூலுக்கு குடியுரிமை வழங்கினோம், இப்போது அவர்கள் மெஹுல் ஒரு மோசடி மனிதர் என்று சொல்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

ஆன்டிகாவில் சோக்ஸிக்கான அனைத்து சட்ட வழிகளும் மூடப்பட்டதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரவுன் ஒரு முறை கூறியிருந்தார்.

டொமினிகாவில் சோக்ஸி பிடிபட்ட பிறகும் பிரவுனின் இதே நிலைப்பாடு காணப்பட்டது. “சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், சோக்ஸியைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொமினிகாவிடம் கூறியுள்ளோம். நாங்கள் அவரை விரும்பவில்லை. ஆன்டிகாவிலிருந்து சோக்ஸி வெளியேறியது ஒரு பெரிய தவறு. டொமினிகா அரசு, ஆன்டிகா மற்றும் இந்திய அரசுக்கு உதவுகிறது. சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க டொமினிகா ஒப்புக் கொண்டுள்ளது.” என்று அவர் வலியுறுத்திக்கூறினார்.

சோக்ஸியை டொமினிகாவிற்கு கொண்டு வருவது சுலபமா?

இந்த கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, வெளியுறவு விவகாரங்களை தொடர்ந்து கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆதித்ய ராஜ் கெளலுடன் பேசினோம்.

“ஆன்டிகாவின் பிரதமர் பிரவுனின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் சோக்ஸியை ஒரு பிரச்சனையாகப் பார்க்கிறார், சோக்ஸி ஆன்டிகாவுக்குத் திரும்பக்கூடாது என்று விரும்புகிறார். பிரவுனின் கூற்றுப்படி, டொமினிகாவும் சோக்ஸியை ஒப்படைக்க தயாராக இருக்கிறது. ஆனால் சட்ட பிரச்சனைகள் இடையில் வரக்கூடும். ஏனென்றால் இந்தியாவிற்கும் டொமினிகாவிற்கும் இடையில் ‘ஒப்படைப்பு ஒப்பந்தம்’ இல்லை,”என்று அவர் விளக்கினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் ‘தடுப்பூசி ராஜதந்திரம்’ குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது குறித்து ஆன்டிகா பிரதமரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

“தடுப்பூசி தூதாண்மையின் கீழ், இந்தியா டொமினிகாவுக்கு ஆயிரக்கணக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதற்குப் பிறகு, டொமினிகாவின் பிரதம மந்திரி ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட், இந்தியா தனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தது என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார். முன்னதாக, 2011, 2015 மற்றும் 2017ல், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா டொமினிகாவுக்கு உதவிகள் வழங்கியுள்ளது. . அந்த நாடு கண்டிப்பாக அதை மனதில் வைக்கும்,” என்று ஆதித்ய ராஜ் கெளல் கூறினார்.

2021 மார்ச் மாதம் இந்தியா ஆன்டிகாவிற்கு 40 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியது. இதை விமான நிலையத்தில் பிரதமர் பிரவுன் பெற்றுக்கொண்டார்.

“போர்ட் ஆஃப் ஸ்பெயினுக்கான இந்திய ஹை கமிஷனர் அருண்குமார் சாஹு, டொமினிகா, ஆன்டிகா மற்றும் இன்டர்போலுடன் தொடர்பில் இருக்கிறார். சோட்டா ராஜன் மற்றும் கிறிஸ்டியன் மைக்கேல் ஆகியோர் வேறொரு நாட்டின் குடிமக்களாக இருந்தபோதிலும் அவர்களை திரும்பக் கொண்டுவருவதில் இந்தியா வெற்றி பெற்றதைப் போலவே, இந்த விஷயத்திலும் நடக்கலாம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இண்டர்போலின் குறியின் கீழ் வந்த சோக்ஸி

2017 வரை, இந்தியாவில் சோக்ஸி மீது வழக்குகள் எதுவும் இல்லை. இந்த அடிப்படையில், மும்பை அவருக்கு ‘நல்ல மனிதர்’ என்ற சரிபார்ப்பு சான்றிதழை வழங்கியது. அதன் அடிப்படையில் அவர் ஆன்டிகாவின் குடியுரிமையைப் பெற்றார். ஆனால் மறுபுறம், இண்டர்போல் பிறப்பித்த ரெட் கார்னர் அறிவிப்பை சோக்ஸி எதிர்கொள்கிறார். இதன் காரணமாக அவரை டொமினிகாவில் பிடிப்பது எளிதாகிவிட்டது.

மூன்று நாட்கள் நடந்த பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு இப்போது அவர் டொமினிகா காவல்துறையின் பிடியில் உள்ளார். அவரை திரும்பக் கொண்டுவர இந்திய அரசு கடினமாக உழைக்கவேண்டுமா அல்லது சோக்ஸியின் அதிர்ஷ்டம் மீண்டும் அந்த தங்க பண இயந்திரம் போல இருக்குமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »