Press "Enter" to skip to content

ஃபைசர் தடுப்பு மருந்தை 12-15 வயதினருக்கு செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய மருந்துகள் முகமை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை 12-15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய மருந்துகள் முகமை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை மதிப்பிட்டு கண்காணிக்கும் ஒரு முகமையாகும்.

12-15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பு மருந்தின் முதல் டோஸை வழங்குவதற்கான அனுமதியைதான் ஐரோப்பிய மருந்துகள் முகமை வழங்கியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஃபைசர் மருந்தை பதின்ம வயதினருக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியிருந்தன.

உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற வேண்டும் என்ற அறிவித்ததையடுத்து ஐரோப்பிய மருந்துகள் முகமையின் இந்த ஒப்புதல் வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்லஜ், 70 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கவில்லை எனில் பெருந்தொற்று முடிவடையாது என தெரிவித்துள்ளார்.

என்ன சொல்கிறது ஐரோப்பிய மருந்துகள் முகமை?

ஐரோப்பிய மருந்துகள் முகமையின் தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் மார்கோ கவாலேரி, 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து குறைந்தது மூன்று மாதகால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு கோவிட் தொற்று வராமல் ஃபைசர் மருந்து அதிகப்படியான `தடுப்பாற்றலை வழங்குவது` பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக மார்கோ தெரிவித்தார்.

பைசர்

பட மூலாதாரம், Getty Images

“பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்த்தால், இளைஞர்களுக்கு இந்த மருந்தால் வந்த பக்க விளைவுகள்தான் 12-15 வயதினருக்கும் வந்துள்ளது. எனவே இந்த சமயத்தில் அது பெரிய கவலை தரும் விஷயமாக இல்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஃபைசர் மருந்தை ஏற்கனவே 16 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்தலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது என்ன?

வெள்ளியன்று, உலக சுகாதார நிறுவனத்தின் ஹன்ஸ் க்லஜ், ஐரோப்பா முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தும் பணி `மிக மெதுவாக` நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

மக்கள் தொகையில் 70% பேருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டால் மட்டுமே பெருந்தொற்று முற்றிலும் ஒழியும் என அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் புதிய திரிபுகள் குறித்தும் அது பரவும் வேகம் குறித்தும் தான் கவலை கொள்வதாக ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.

“எடுத்துக்காட்டாக B. 1617(இந்திய திரிபு), B.117(பிரிட்டன் திரிபு)-ஐ காட்டிலும் வேகமாக பரவுகிறது. இந்த வகை திரிபு முந்தைய திரிபைக்காட்டிலும் ஏற்கனவே வேகமாக பரவி வந்தது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாம் துரிதமாக செயல்பட வேண்டும். தடுப்பு மருந்து செலுத்துவதை உடனடியாக அதிகரிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் ஏற்கனவே 18 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்காக தடுப்பூசி திட்டம் தொடங்கிவிட்டது. அதேபோன்று பிரான்சில் மே 31ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போதுவரை அங்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

கனடாதான் முதல் முதலாக 12-15 வயதினருக்கு ஃபைசர் மருந்தை செலுத்தலாம் என ஒப்புதல் அளித்தது. இந்த முடிவை சில மருத்துவ பரிசோதனைகளை கொண்டு எடுத்ததாக அந்நாடு தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »