Press "Enter" to skip to content

வடகொரிய சுரங்கங்களில் குழந்தைப் பணியாளர்கள்: குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அரசு

பட மூலாதாரம், MINJU CHOSUN

வட கொரியாவில் இருக்கும் ஆதரவற்றவர்கள், தன்னார்வலர்களாக முன் வந்து அரசாங்கத்தின் சுரங்கங்கள் மற்றும் பண்ணைகளில் பணியாற்றுவதாக வட கொரிய அரசு ஊடகம் கூறுகிறது.

நல்ல அறிவும், தைரியமும் உள்ள இளமை காலத்தில், நூற்றுக்கணக்கான சிறுவர்கள், அரசு நடத்தும் நிறுவனங்களில் உடல் உழைப்பைக் கொடுக்க தீர்மானித்து இருக்கிறார்கள் என ‘தி கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி’ (KCNA) என்றழைக்கப்படும் அரசு ஊடகம் கூறுகிறது.

அவர்கள் வயது குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் படங்களைப் பார்க்கும் போது அவர்கள், தங்களின் பதின் வயதில் இருப்பது போலத் தோன்றுகிறது.

வட கொரியா குழந்தைகளை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாக மனித உரிமை குழுவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அதை வட கொரிய அரசு மறுத்து வருகிறது.

வட கொரிய அரசுக்கும், அதன் ஆயுத திட்டங்களுக்கும் பணத்தை ஈட்ட, போரில் கைது செய்யப்பட்ட தென் கொரிய கைதிகளை தலைமுறை தலைமுறையாக அடிமைகளைப் போல வட கொரிய நிலக்கரி சுரங்கங்களில் வேலை வாங்குவதாக, கடந்த பிப்ரவரி மாதம், குற்றச்சாட்டின் அடிப்படையில் பிபிசி செய்தி வெளியிட்டது.

கிட்டத்தட்ட 2.6 கோடி பேர் வட கொரியாவில் வாழ்கிறார்கள் என கருதப்படுகிறது. அந்நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு ஆட்சி செய்து வருகிறது.

வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஏப்ரல் மாதத்தில், வட கொரியா கடுமையான கால கட்டத்துக்கு தயாராக வேண்டும் என எச்சரித்து இருந்தார் கிம் ஜாங் உன். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணத்தால் வட கொரியா தன் எல்லைகளை மூடியது. அப்போது சீனா உடனான வர்த்தகத்தையும் மூடி விட்டது. அதுதான் வட கொரியாவின் வாழ்வாதாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், வட கொரிய அரசு ஊடகத்தில், நாடு முழுக்க தன்னார்வலர்கள் உடல் உழைப்பு பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாயின.

கடந்த சனிக்கிழமை, அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வில், 700 ஆதரவற்றவர்கள், தாங்களாகவே முன் வந்து ஆலைகள், பண்ணைகள், காடுகளில் உடல் உழைப்பு பணிகளை மேற்கொண்டதாக கூறியது.

“குழந்தை தொழிலாளர் முறையை வட கொரியா மிக மோசமாக செயல்படுத்தி வருவதாக” கடந்த 2020-ம் ஆண்டில் அமெரிக்க உள் துறை அமைச்சகத்தின் மனித உரிமைகள் பயிற்சி அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

“சிறப்புத் திட்டங்களை நிறைவு செய்வது, முக்கிய சாலைகளில் படர்ந்திருக்கும் பனியை அப்புறப்படுத்துவது, உற்பத்தி இலக்கை அடைவது” போன்ற பணிகளுக்கு, சில சமயங்களில் பள்ளிக் குழந்தைகளை அதிகாரிகள் வேலை பார்க்க அனுப்புகிறார்கள் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

16 அல்லது 17 வயது சிறுவர்கள் கூட இராணுவ பாணியிலான இளைஞர் கட்டுமான படைப்பிரிவுகளில் 10 ஆண்டு காலத்துக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தி குழந்தைகளை வேலை வாங்குவதால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுகிறார்கள், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, வளர்ச்சி பற்றாக்குறை ஏற்படுகிறது எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வட கொரிய அதிகாரிகள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்கள். வட கொரியாவுக்கு விரோதமான கொள்கைகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடைபிடிப்பதாக இம்மாத தொடக்கத்தில் வட கொரியா குற்றம் சாட்டியது நினைவுகூரத்தக்கது. அப்போது அவர் வட கொரியாவையும், அதன் அணு சக்தி திட்டங்களையும் எதிர்கொள்ளும் அமெரிக்காவின் திட்டத்தை வெளியிட தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »