Press "Enter" to skip to content

லத்தீஃபா அல்-நாடி: 1933ஆம் ஆண்டிலேயே சாதனை படைத்த எகிப்தின் முதல் பெண் விமானி

பட மூலாதாரம், Social Media

1933 ஆம் ஆண்டின் இறுதியில், எகிப்திய பெண் ஆர்வலர் ஹோதா ஷாராவி ஒரு இளம் பெண்ணுக்கு தந்தி மூலம் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், நீங்கள் நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள். பெருமிதத்தால் எங்கள் தலை நிமிர்ந்துள்ளது. இளம் தலைமுறையினருக்கும் நீங்கள் மகுடம் சூட்டியுள்ளீர்கள் என எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பெண் 26 வயதான லத்தீஃபா அல்-நாடி. அவர் எகிப்தில் நடைபெற்ற சர்வதேச விமானிகள் போட்டியில் வெற்றி வாகை சூடியிருந்தார்.

லத்தீஃபா அல் நாடி 1907ல் கெய்ரோவில் பிறந்தார். இவரது தந்தை அமீரியா பிரஸ்ஸில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் லத்தீஃபாவும் தனது சில தோழிகளைப் போலவே முறையான கல்வி கற்க பள்ளியில் சேர்ந்தார்.

நடுநிலைப்பள்ளியில், லத்தீஃபா விமானம் ஓட்டுவது பற்றி தெரிந்து கொண்டார். அப்போது அது அவருக்கு ஒரு புதிய விஷயம். அந்த நேரத்தில், வானத்தில் பறப்பது என்பது அவருக்கு ஒரு கனவு போல இருந்தது, பின்னர் அவர் அதையே தனது வாழ்க்கையில் செய்ய முடிவு செய்தார்.

1932ம் ஆண்டில் அல்மாசாவில் எகிப்து ஏர் ஸ்கூல் நிறுவப்பட்டது. லத்தீஃபா அங்கு சென்றடைந்தார்.

ஆனால் தனது கனவுகளை நிறைவேற்ற, லத்தீஃபா இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. முதல் நிபந்தனை பெற்றோரின் ஒப்புதல், இரண்டாவது பள்ளிச் செலவு.

லத்தீஃபா அல்-நாடி

பட மூலாதாரம், Social Media

முதல் நிபந்தனையை பூர்த்தி செய்ய லத்தீஃபா தனது தாயுடன் பள்ளியை அடைந்தார். லத்தீஃபா ஒரு விமானப் பள்ளியில் சேருவது பற்றி அவரது தந்தைக்கு தெரியாது என்பதால், பள்ளியின் கட்டணங்களை செலுத்துவதற்காக அவர் அதே பள்ளியில் செயலாளராக பணியாற்றினார்.

அவர் வரலாறு படைத்தபோது

லத்தீஃபா வாரத்தில் இரண்டு வகுப்புகளுக்குச் சென்றார். அந்த பள்ளியில், வெளிநாட்டு மற்றும் எகிப்திய பயிற்சியாளர்களிடமிருந்து அவர் விமானத்தில் பறந்து பயிற்சி பெற்ற நேரம் 67 மணிநேரம் மட்டுமே.

1933 ஆம் ஆண்டில், லத்தீஃபாவுக்கு விமான ஓட்டியாக உரிமம் கிடைத்தது. இதன் மூலம், எகிப்தில் இந்த உரிமத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த உரிமத்தைப் பெற்ற உலகின் இரண்டாவது பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

உலகில் விமானி உரிமம் பெற்ற முதல் பெண் அமெரிக்காவின் எமிலியா ஹார்ட் ஆவார், அவருக்கு தனியாளாக விமானத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

எகிப்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றவர்களில் லத்தீஃபா 34 வது இடத்தைப் பிடித்தார்.

1933 டிசம்பரில், எகிப்தில் ஒரு சர்வதேச விமான மாநாடு நடைபெற்றது. இந்த நேரத்தில் ஒரு விமான பந்தயமும் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விமானிகள் பங்கேற்றனர்.

கெய்ரோவிற்கும் அலெக்ஸாண்ட்ரியாவிற்கும் இடையிலான இந்த பந்தயத்தில் லத்தீஃபாவும் பங்கேற்றார். இலக்கை முதலில் எட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அவர், மற்ற போட்டியாளர்களை விட ஒரு நிமிடம் முன்னதாகவே இலக்கை அடைந்து சாதனை படைத்தார்.

தலைப்புச் செய்தியான லத்தீஃபா

விமானம்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், அவரது வெற்றியை ஏற்க நடுவர் குழு மறுத்துவிட்டது. மத்தியத் தரைக் கடலோரப் பகுதியில் இருந்த இரண்டு கூடாரங்களில் ஒன்றை லத்தீஃபா கவனிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அவர் நாலாபுறமும் சுற்றவில்லை, ஒரே ஒரு முறை மட்டுமே வட்டமிட்டார் என்றும் கூறப்பட்டது. இப்படிச் சொல்லி நடுவர்குழு, ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போட்டியாளருக்கு பரிசை வழங்கியது.

ஆனால் எகிப்திய செய்தித்தாள்கள் இது குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டன. நாட்டின் முதல் பெண் விமானியான லத்தீஃபா அல் நாடியின் பெயர் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது.

1934 ஜனவரியில் நியூ பத்திரிகையில் சலாம் மூசா , லத்தீஃபா பற்றி எழுதினார்.

“எகிப்து இந்த பாரம்பரியங்களை எதிர்த்துப் போராடியது. அதற்கு எதிராக வெற்றிகரமாக போராடியது. எகிப்தின் பெண்கள் இலக்கிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் உலகுக்கு நிரூபித்துள்ளனர். மேலும் இதைச் செய்ய அவர்களுக்கு உற்சாகமும் மன உறுதியும், இருந்தது.

இது உலகில் போற்றத்தக்கது. எனவே இப்போது பெண்கள் முன்னணிக்கு வருகிறார்கள். இப்போது இந்த விமான கிளப்பின் வளர்ச்சியின் பலனை நாம் காண்கிறோம். இதில் எகிப்தின் குடிமக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறார்கள்,” என சலாம் மூசா எழுதினார்.

1934 ஜனவரியில் பேராசிரியர் அகமது ஹசன் அல்-ஃஜயாத், ‘அல்-ரிஸாலா’ செய்தித்தாளில் இவ்வாறு எழுதினார்.

விமானம்

பட மூலாதாரம், Getty Images

“பறக்கும் பயிற்சியின் நீண்ட வரலாற்றைக் கொண்ட மற்றும் நிறைய அனுபவமுள்ள நபர்களுடன் லத்தீஃபா போட்டியிடுவார் என்று யார் நினைத்தார்கள்? லத்தீஃபா ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்றார் . எல்லோரையும் விட ஒரு நிமிடம் முன்னதாக லத்தீஃபா பந்தயத்தை முடித்தது எப்படி நடந்தது?” என அவர் கேட்டிருந்தார்.

பெண் ஆர்வலர் ஹோதா ஷாராவி விமான கிளப்பின் வளர்ச்சிக்காக பல வாழ்த்து செய்திகளை அனுப்பினார்.

தனது தந்தைக்கு இந்த விஷயம் குறிட்து தெரிய வந்தபோது,லதீஃபா எல்லாவற்றையும் தன் தந்தையிடம் கூறினார். இந்த விஷயம் தெரிந்ததும் அவர் கோபம் கொண்டார், ஏனென்றால் தம்மால் விமானத்தை செலுத்த முடியும் என அவர் நம்பவில்லை, என லத்தீஃபா கூறினார்.

ஆனால் லத்தீஃபா அவரை விமானம் மூலம் எகிப்திய பிரமிடுகளை சுற்றிக் காண்பித்த போது, அவரது கருத்து மாறியது. அது தனது வாழ்க்கையின் மிக அழகான தருணம் என லத்தீஃபா குறிப்பிடுகிறார்.

லத்தீஃபாவின் வெற்றிக்குப் பிறகு, எகிப்தில் பல பெண்கள் விமானிகளாக சிறகடித்துப் பறந்தார்கள். அவர்களில் லிண்டா மசூத், அசீசா முஹர்ரம், ஐதா தக்லா போன்றவர்களும் அடக்கம்.

லத்தீஃபா பின்னர் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்து அங்கு குடியுரிமை பெற்றார். அவர் 2002 ஆம் ஆண்டு தனது 95 வது வயதில் இயற்கை எய்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »