Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி செலுத்தி 95% இறப்பை குறைத்து சாதித்து காட்டிய பிரேசில் நகரம்

பட மூலாதாரம், Getty Images

பிரேசிலிலுள்ள நகரம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அங்கு பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு 95 சதவீதம் குறைந்துள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுமார் 45,000 மக்கள் வாழும் பிரேசிலின் செஹானா நகரில் 18 வயதிற்கு மேற்பட்ட கிட்டத்தட்ட அனைவருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவாக் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிலரும் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக ஆய்வு முடிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவுக்கு பிறகு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது, அங்கு இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் சுமார் 4,63,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த நாட்டின் தேவையை விட தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதல் மிகவும் குறைவாக உள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலும், உயிரிழப்பும் தொடர்ந்து உச்சபட்ச நிலையிலேயே இருக்கின்றன. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு முன்வைக்கப்படுகிறது.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி: கொரோனா இறப்பை 95%குறைத்து சாதித்த நகரம்

பட மூலாதாரம், Reuters

பிரேசிலில் சீனாவின் கொரோனாவாக் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இன்ஸ்டிடியூடோ புட்டான்டனால் கடந்த பிப்ரவரி – ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள செஹானா நகரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின் வீரியத்தை கணக்கிடும் வகையில், அந்த நகரமானது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இதில் மூன்று பகுதிகள் அல்லது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேல் ஆன சுமார் 75% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் கட்டுக்குள் வந்ததாக ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டமாக, நகர மக்கள் தொகையில் 95 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பின்வரும் முடிவு கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்:

  • கொரோனாவால் ஏற்படும் இறப்பில் 95% குறைவு
  • நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் 86% வீழ்ச்சி
  • அறிகுறிகளுடன் கூடிய நோய்த்தொற்று பாதிப்பு 80% குறைவு

75% மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தியதே இதில் முக்கியமானது என்று புட்டன்டானின் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் ரிக்கார்டோ பாலாசியோஸ் கூறுகிறார்.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி: கொரோனா இறப்பை 95%குறைத்து சாதித்த நகரம்

பட மூலாதாரம், Getty Images

”முக்கிய முடிவு என்னவென்றால் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு தடுப்பூசி போடாமலேயே பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் அவர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பலாசியோஸ் கூறினார். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்பதை இது குறிக்கலாம் என்று அவர் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பிரேசில் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமான பி1 என்று அறியப்பட்டு தற்போது காமா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபுக்கு எதிராகவும் இந்த தடுப்பூசி செயல்படும் என்று பலாசியோஸ் கூறுகிறார்.

சாவ் பாலோவிலிருந்து 315 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செஹானாவைச் சுற்றியுள்ள நகரங்கள் உச்சத்தை எட்டியுள்ள நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிராக போராடி வருகின்றன. 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 710,000 மக்கள்தொகை கொண்ட ரெய்பெய்ரோ பிரெட்டோவில் தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளது.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி: கொரோனா இறப்பை 95%குறைத்து சாதித்த நகரம்

பட மூலாதாரம், Getty Images

இந்த சோதனை முடிவுகள், பல வளர்ந்து வரும் நாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் கொரோனாவேக் தடுப்பு மருந்து குறித்து ஊக்கமளிக்கலாம். இந்த ஆண்டு, பிரேசில், இந்தோனீஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் இந்த தடுப்பூசிக்கு ஐம்பது முதல் தொண்ணூறு சதவிகிதம் என வேறுபட்ட செயல்திறன் இருப்பது தெரியவந்ததால் இது குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன.

கொரோனாவேக் தடுப்பூசி மூலம் இறந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அனுப்புவதன் வாயிலாக நோய்க்கு எதிரான தீவிர எதிர்பாற்றல் தூண்டாமல் தவிர்க்கப்படுகிறது.

இதே போன்றதொரு ஆய்வு, 1,48,000 மக்கள்தொகை கொண்ட பிரேசில் நகரான போட்டுகாட்டுவில் நடத்தப்பட்டு வருகிறது. பியோகிருஸ் நிறுவனத்தால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவிற்கு அடுத்து அதிகப்படியான நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உயிரிழப்புகள் பதிவான நாடு பிரேசில். மேலும், இங்கு உலகளவில் அதிகமான தொற்றுகள் (1.6 கோடி) பதிவான மூன்றாவது நாடாகவும் பிரேசில் உள்ளது. இந்த நிலையில், அதிபர் ஜெய்ர் போல்சனாரூ நோய்தொற்றை கையாள்வது மற்றும் தடுப்பூசி திட்டத்தை மெதுவாக செயல்படுத்துவது குறித்து பிரேசில் நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »