Press "Enter" to skip to content

தெற்காசியாவில் செல்வாக்கை விரிவுபடுத்த இந்திய பிரச்னைகளை பயன்படுத்துகிறதா சீனா?

  • பத்மஜா வெங்கட்ராமன்
  • பிபிசி மானிட்டரிங்

பட மூலாதாரம், Getty Images

தெற்காசிய நாடுகளுக்கு நிலையான தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்யப்போவதாக சீனா கூறியுள்ளது

கோவிட் -19 பெருந்தொற்றின் பேரழிவுகரமான இரண்டாவது அலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், சீனா தனது பிராந்திய போட்டி நாட்டின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் பெரிய பங்கை வகிக்க முற்பட்டது. முன்னதாக, இந்த தெற்காசிய நாடுகள் தனது மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் இந்தியாவையே பெரிதும் சார்ந்திருந்தன.

மில்லியன் கணக்கான தடுப்பூசி டோஸ்களை வழங்குவதிலிருந்து கொரோனா தொடர்பான வழக்கமான மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துவது போன்ற சீன அரசின் நடவடிக்கைகள், பாரம்பரியமாக இந்தியா தனது நட்புவட்டம் என்று கருதும் ஒரு பிராந்தியத்தில், அதன் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சீனா தனது ‘பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியை’ (பிஆர்ஐ) ஊக்குவிப்பதற்காக கொரோநா காலத்தில் தான் வழங்கும் உதவியை இணைத்துள்ளது. இந்த முன்முயற்சியில் இந்தியா இல்லை. ஆயினும், பல தெற்காசிய நாடுகள் ஏற்கனவே இதில் இணைந்துள்ளன.

பிஆர்ஐ நாடுகளுக்கு ஆதரவு

2020 ஜூலை மாதம், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக சீனா தெற்காசியாவின் பல்வேறு நாடுகளுடன் தொடர்ச்சியான பலதரப்பு உரையாடல்களை நடத்தத் தொடங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியில் நடைபெற்ற நான்காவது கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், சீனா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர், இந்த நாடுகள் அனைத்துமே பி.ஆர்.ஐ திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகள்.

இந்தியா இதில் இல்லை. பிராந்திய இறையாண்மை குறித்த கவலைகளை மேற்கோளிட்டு, இந்த உள்கட்டமைப்பு திட்டத்தில் சேரப்போவதில்லை என்று இந்திய அரசு பலமுறை கூறியுள்ளது.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லைக்கு அப்பால் நடந்த இரு நாட்டு வீரர்கள் இடையிலான கடும் மோதலைத் தொடர்ந்து சீனா உடனான உறவுகள் சுமூகமாக இல்லாத நிலையில் இந்த முன்முயற்சியில் இந்தியா பங்கேற்காதது ஆச்சரியம் தரவில்லை.

சீனா

பட மூலாதாரம், Getty Images

பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு “மேலும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான” தடுப்பூசி விநியோகத்தை எளிதாக்குவதாக, ஏப்ரல் 27 கூட்டத்தில் சீனா ஒப்புக் கொண்டது என்று அரசு ஒளிபரப்பு அமைப்பான சைனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) தெரிவித்துள்ளது.

“பி.ஆர்.ஐ.யின் கட்டமைப்பின் கீழ் ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கான” தங்கள் உறுதிப்பாட்டை கூட்டத்தில் கலந்துகொண்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தியதாக, அது மேலும் தெரிவித்தது.

கோவிட் உதவி, பி.ஆர்.ஐ உடன் இணைப்பு

சீனா கொரோனா இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தெற்காசியாவில் தனது செல்வாக்கை வலுப்படுத்த சீனா நீண்ட காலமாக பெல்ட் அண்ட் சாலை முன்முயற்சியைப் பயன்படுத்துகிறது. கோவிட் 19 மருத்துவ உதவியை பிஆர்ஐ ஒத்துழைப்புடன் தற்போது சீன அரசு இணைக்கிறது.

கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப்போராடும் முயற்சியாக, இலங்கைக்கும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷவிடம், கடந்த மார்ச் மாதம் உறுதி அளித்தார். மேலும், “கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்டா துறைமுகம் போன்ற முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல தமது அரசு தயாராக உள்ளது என்றும் உயர்நிலை பிஆர்ஐ ஒத்துழைப்பை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதேபோன்ற ஒரு நடவடிக்கையாக, “பிஆர்ஐ ஒத்துழைப்பை துரிதப்படுத்தவும், முழு இமயமலை பகுதியில் பல்பரிமாண இணைப்பு கட்டியெழுப்பும் திசையில் சீராக முன்னேறவும், சீன அதிபர் ஷி ஜின்பிங், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியிடம் மே 26 ஆம் தேதி உரையாடினார்.

சீனாவின் நீண்டகால நட்பு நாடான பாகிஸ்தான், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ; ‘ரஷ்காய்’ சிறப்பு பொருளாதார மண்டலத்தை மே மாதம் திறந்து வைத்தது.

இந்திய மருந்துகளின் இடத்தில் சீன தடுப்பூசிகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்தது. இதை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்ட் என்ற பிராண்ட் பெயரில் தயாரிக்கிறது. அதன் “தடுப்பூசி மைத்ரி” (தடுப்பூசி நட்பு) முன்முயற்சியில், அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூட்டான் மற்றும் நேபாளத்திற்கு மருந்துகளை வழங்குவதும் அடங்கும்.

ஆனால் பின்னர் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொண்ட இந்தியா தனது குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்கவே போராடிய காரணத்தால், தடுப்பூசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது சீனாவுக்கு காலூன்ற வாய்ப்பாக அமைந்தது.

சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் டோஸ் சினோஃபார்ம் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. வங்கதேசத்திற்கு அதன் 5,00,000 தடுப்பூசி டோஸ்கள் சென்றடைந்துள்ளன. நேபாளத்திற்கு கூடுதல் டோஸ்களை வழங்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில், சீனா நன்கொடையாக கொடுத்த தடுப்பூசிகள் மற்றும் பிற பொருட்களை மாலத்தீவுகள் பெற்றது. 4,00,000 டோஸ் சினோ ஃபார்ம் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாகவும் சீன அரசு உறுதியளித்துள்ளது.

இந்திய பின்னடைவுகளை சாதமாக்கிய சீனா

இந்தியா சீனா

பட மூலாதாரம், @ChinaEmbSL

இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறிப்பாக நேபாளம் மற்றும் வங்கதேசத்துடனான உறவுகள் கணிசமான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நேரத்தில், அவற்றுக்கு சீனாவின் தடுப்பூசி உதவி கிடைத்துள்ளது.

பிரதமர் கே.பி. ஷர்மா ஓலியின் கீழ் நேபாளம், சீனா நோக்கி அதிகம் சாய்ந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நேபாள நாடாளுமன்றம், இந்தியாவுடன் பிரச்னையாக உள்ள நிலப்பரப்பை உள்ளடக்கிய ஒரு புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் அளித்தபோது இரு தரப்பு பதற்றம் மேலும் அதிகரித்தது.

2019 ஆண்டில் இந்தியா அமல்செய்த சர்ச்சைக்குரிய புதிய குடியுரிமைச் சட்டம் குறித்து இந்திய மூத்த அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, வங்கதேசம் பல சந்தர்ப்பங்களில் அதிருப்தி தெரிவித்தது.

சீனாவின் விமர்சனம்

தடுப்பூசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் டெல்லியின் நடவடிக்கையை சீன அரசு ஊடகங்கள் பலமுறை விமர்சித்துள்ளன. “எந்த அண்டை நாடுகளை நம்பலாம் என்பதை இது காட்டுகிறது” என்றும் அவை குறிப்பிட்டன.

“இந்தியாவின் முக்கிய உதவி கிடைக்காத நிலையிலும், இந்தியாவை மகிழ்விக்கும் பொருட்டு, நேபாளம் சீனாவுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தத் தவறிவிட்டது. இதனால் இந்திய தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு, சீன தடுப்பூசிகளை நேபாளத்தில் அனுமதிக்க தாமதமானது.

பல எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், இரண்டாவது அலை நேபாளத்தை மிகவும் மோசமாகத் தாக்கியபோதிலும், இந்தியா காத்மாண்டுவுக்கு கருணை காட்டவில்லை,” என்று சீன அரசு நடத்தும் நாளேடான குளோபல் டைம்ஸ் (ஜிடி) மே 12 அன்று கூறியது.

சினோவாக்கின் கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பாளர் வங்கதேச அரசாங்கத்திடம் செலவைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறியதாக சொல்லப்பட்டதை அடுத்து, அதன் சோதனைகள் டாக்காவால் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, இந்திய அரசு “தலையிடுவதாக” இந்த நாளேடு ஜனவரி மாதம் குற்றம் சாட்டியது.

“தெற்காசிய பிராந்தியத்தில் பாரம்பரியமாக இந்தியாவின் செல்வாக்கு நிலைநிற்கும் காரணத்தால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் ஒத்துழைப்பு குறித்து இந்தியா அவதூறு பிரசாரம் செய்வதாக,” சீன சமூக அறிவியல் அகாடமியின் , நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டாடெர்ஜி அமைப்பின் உதவி ஆராய்ச்சியாளர் தியான் குவாங் கியாங் தெரிவித்ததாக ஜி.டி நாளேடு கூறுகிறது.

“தெற்காசியாவை வழிநடத்தும் இந்தியாவின் திறனின் வரம்புகளை தொற்று நோய் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டதாகவும், பிராந்தியத்தில் சீனாவின் நிலைப்பாட்டை இது உயர்த்தியுள்ளதாகவும்,” இந்திய ஊடகமான’ தி பிரின்ட்’ என்ற செய்தி வலைத்தளம் ஜூன் 1 ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் மற்றொரு நோக்கம்

பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, தெற்காசியாவிற்கு தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான சீனாவின் நடவடிக்கை, அதே பிராந்தியத்தில் இருந்து சீனாவுக்குள் கொரோனா பரவுவதை தடுக்கும் விருப்பத்தால் கூட உந்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.

“இந்தியாவில் ஏற்பட்டது போல அதிகமான தொற்று பரவல் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை, அதன் அண்டை நாடுகளிலும் ஏற்படக்கூடும் என்று சீனா கவலை கொண்டுள்ளது என்று முன்னணி ஹாங்காங் நாளிதழான செளத் சைனா மார்னிங் போஸ்ட் (எஸ்.சி.எம்.பி) ஏப்ரல் 29 அன்று, ஃபுடான் பல்கலைக்கழகத்தின் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் லின் மின்வாங் ஐ மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »