Press "Enter" to skip to content

பிட் காயினை சட்டப்பூர்வ நாணயமாக அறிவித்த எல் சால்வடார் – ஏழை நாடுகளுக்கு உதவுமா?

பட மூலாதாரம், Reuters

மின்னணுப் பணமான பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாகியுள்ளது எல் சால்வடார்.

மத்திய அமெரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடு இது.

செவ்வாயன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிட்காயின், 90 நாட்களில் அமெரிக்க டாலரைப் போலவே நாட்டின் சட்டப்பூர்வ நாணயமாக மதிக்கப்படும்.

புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு வர்த்தக அமைப்பும், பிட்காயினை பண்டங்கள், சேவைகளுக்கான சட்டபூர்வ நாணயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிவர்த்தனை செய்யத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க முடியாத நிலையில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

வெளிநாடுகளில் வசிக்கும் எல் சால்வடார் மக்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவதை இந்த முறை எளிதாக்கும் என்று அதிபர் நயீப் புக்கேலே கூறினார்.

எல் சால்வடார் போன்ற நாடுகளில் உள்ள பலர், புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து வரும் பணத்தை பெரிதும் நம்பியுள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20 சதவீதம் ஆகும்.

20 லட்சத்துக்கும் அதிகமான சால்வடார் மக்கள் நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் பிறந்த மண்ணுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 400 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையை தாயகம் அனுப்புகிறார்கள்.

ஆனால் பிட்காயின் போன்ற மின்னணு நாணயங்கள் பணம் அனுப்புவதற்கான சிறந்த அணுகுமுறை ஆகுமா?

இடைத்தரகர் இல்லை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரிதும் நம்பியுள்ள நாடுகளில் ஒன்று எல் சால்வடார்.

பட மூலாதாரம், Getty Images

மக்கள் சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்பும்போது, அவர்கள் பொதுவாக வங்கி அல்லது பிற நிதி அமைப்பை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் நாட்டு எல்லையைத் தாண்டி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கான செலவு இந்த இடைநிலை அமைப்புகளால் உயரக்கூடும்.

எடுத்துக்காட்டாக, யாராவது அமெரிக்காவிலிருந்து எல் சால்வடாருக்கு 1,000 அமெரிக்க டாலர் அனுப்பினால், பரிமாற்ற கமிஷன் இல்லை என்ற அறிவிப்பு இருந்தாலும்கூட, வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையின் இரு புறமும் உள்ள வங்கிகளுக்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின், அதாவது மின்னணுப் பணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் இடைதரகர் யாரும் இல்லை.

இதன் விளைவாக, இந்த கட்டணங்களைத் தவிர்க்க விரும்பும் ஏழை நாடுகளுக்கும் தனிநபர்களுக்கும் பிட்காயின் லாபகரமானதாக இருக்கலாம்.

கிரிப்டோகரன்சிகள் வேறுசில இடர்ப்பாடுகளை கொண்டிருப்பது வேறு விஷயம்.

“எல் சால்வடார் காட்டியுள்ள வழியை பிற வளரும் நாடுகளும் பின்பற்றும் என்று நாம் எதிர்பார்க்கலாம்” என்று ‘டிவெர்’ குழுமத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான நைஜெல் கிரீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவற்றின் நாணயங்கள் பலவீனமானவை, சந்தை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. இது பணவீக்கத்தைத் தூண்டும்,”என்று அவர் குறிப்பிட்டார்.

Envelope, US currency, notepaper and a pen

பட மூலாதாரம், Getty Images

பிட்காயின் மேலும் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவலாக பயன்படுத்தப்பட்டால், அது இன்னும் நிலையானதாக மாறக்கூடும்.

“இதனால்தான் பெரும்பாலான வளரும் நாடுகள் பரிவர்த்தனைகளை முடிக்க அமெரிக்க டாலர் போன்ற பெரிய ‘வளர்ச்சியடைந்த நாட்டின்’ நாணயங்களை நம்பியுள்ளன” என்று கூறுகிறார் கிரீன்.

“ஆனால் மற்றொரு நாட்டின் நாணயத்தை நம்பியிருப்பதால் பரிமாற்ற செலவு அதிகரிப்பது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன,” என்கிறார் அவர்.

எடுத்துக்காட்டாக, வெளிநாட்டு செல்வாக்கு ஒரு நாட்டை மிகவும் பலவீனமானதாக மாற்றக்கூடும். அந்த நாடு தன் சொந்த நிதிக் கொள்கைகளை முழுமையாக வகுக்கும் திறனையும் இழக்க நேரிடலாம்.

மதிப்பின் ஏற்ற இறக்கம்

ஆனால் கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னணுப் பணத்திலும் பிரச்சனைகள் உள்ளன. இதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கம், எல் சால்வடாரில் பணம் பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

உண்மையான பொருளாதாரத்துடன் நேரடி தொடர்பு இல்லாத மெய்நிகர் சொத்தான பிட்காயின், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மதிப்பில் பெரிய ஏற்ற இறக்கங்களைக் கண்டது.

இது எவ்வாறு இயங்குகிறது என்பதும் இதில் உள்ள ஆபத்துகளும் எல்லோருக்கும் தெரிவதில்லை.

வலுவான வங்கி முறைகளைப் போலல்லாமல், பிட்காயின் மதிப்பு ஏறி இறங்கும்போது அதில் இருந்து வாடிக்கையாளரைப் பாதுகாக்க எந்த வழிமுறைகளும் இல்லை.

வெற்றிகரமான நாணயத்தின் இரண்டு அத்தியாவசிய அம்சங்கள் என்னவென்றால், அது ஒரு சிறந்த பரிமாற்ற வடிவமாகவும், நிலையான மதிப்புடையதாகவும் இருக்கவேண்டும் என்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான கென் ரோகாஃப் கூறுகிறார். பிட்காயினில் இந்த இரண்டுமே இல்லை என்கிறார் அவர்.

“உண்மை என்னவென்றால், இது தற்போது சட்டபூர்வமாக பொருளாதாரத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு பணக்காரர் அதை இன்னொருவருக்கு விற்கிறார். ஆனால் அது ஓர் இறுதிப் பயன்பாடு அல்ல. அப்படிப்பட்ட நிலையில் இதற்கு உண்மையில் நீண்ட எதிர்காலம் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது பிட்காயின், ஊக வர்த்தகத்தில் மட்டுமே முக்கியமாக பயன்பாட்டில் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

உலக அளவில் தரவு மையங்கள் பயன்படுத்தும் மொத்த மின்சக்தியில் பாதிக்கும் மேலானதை பிட்காயின்களே பயன்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Getty Images

இது பிரபலமடைந்து வருகிற போதிலும், உலகம் முழுவதும் பரிவர்த்தனைகளில் பிட்காயின் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. பிட்காயின் உரிமையாளர்கள் அதை வைத்து அதிக பணம் சம்பாதிக்க முனைகிறார்கள்.

ஆனால் அதிகப்படியான பணவீக்கத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு கருவியாக கிரிப்டோகரன்சிகள் இருக்கக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

பெருந்தொற்று காலகட்டத்தில் பல பொருளாதார வல்லரசு நாடுகள், தங்கள் பொருளாதாரங்கள் மூழ்காமல் தடுக்க பணத்தை அச்சிட்டு வருகின்றன.

நாணயத்தின் பாரம்பரிய வடிவங்களுடன், மேலும் மேலும் பணம் உருவாக்கப்படுவதால், புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பை அது குறைக்கிறது.

இந்த அரிப்பை மக்கள் பொதுவாக கவனிப்பதில்லை. ஏனெனில் அவர்களின் பணத்தின் அளவு பெயரளவில் அப்படியே உள்ளது. இருப்பினும், வாராந்திர கடையில் வாங்குதல், வெளியே சாப்பிடுவது மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதுதொலைபேசிறவைகளுக்கு அதிக பணம் செலவாவதை அவர்கள் கவனிக்கிறார்கள்.

பிட்காயின் மாறுபட்டது

பிட்காயின்களின் வழங்கல் கவனமாக கட்டுப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் யாரும் விருப்பப்படி அதிக பிட்காயின்களை உருவாக்கவோ வெளியிடவோ முடியாது.

21 மில்லியனுக்கும் அதிகமான பிட்காயின்கள் ஒருபோதும் இருக்காது. ஒவ்வொரு பிட்காயினும், சடோஷிஸ் எனப்படும் 100 மில்லியன் யூனிட்டுகளாக பிரிக்கப்படுகின்றன.

இது ‘சாதாரண’ நாணயத்தை’ பாதிக்கும் மதிப்பிழப்பைத் தடுக்கிறது (ஜிம்பாப்வே மற்றும் வெனிசுவேலாவில் வசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஒரு நிகழ்வு).

ஒரு ‘துணிச்சலான நடவடிக்கை

“எல் சால்வடாரின் இந்த துணிச்சலான நடவடிக்கையை புறந்தள்ளுகிற, பல செல்வந்த நாடுகளைச் சேர்ந்த விமர்சகர்கள் – நிச்சயமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்று கிரீன் கூறுகிறார்.

பிட்காயின் “பரிவர்த்தனைகளை நடத்துவதற்கான மிகவும் திறமையற்ற வழி” என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் முன்னர் விவரித்திருந்தார்.

கணினி மயமான நாணய பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதில் செலவாகும் “அதிகப்படியான” மின்சக்தி பற்றியும் அவர் கவலை தெரிவித்தார்.

பிட்காயின் எவ்வளவு மின்சக்தியை பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிரிப்டோகரன்சிகளின் வணிகத்தை ஆய்வுசெய்யும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாற்று நிதி மையம் (சி.சி.ஏ.எஃப்), பிட்காயினின் மொத்த மின்னாற்றல் நுகர்வு 40 முதல் 445 வருடாந்திர டெராவாட் மணிநேரங்கள் (டி.டபிள்யு.எச்) என்று கணக்கிட்டுள்ளது. அதாவது சராசரியாக சுமார் 130 டெராவாட் மணி நேரம் ஆகும்.

பிரிட்டனின் மின்சார நுகர்வு ஆண்டுக்கு 300 டெராவாட் மட்டுமே. அதே நேரத்தில் அர்ஜென்டினாவும் இதே அளவைத்தான் பயன்படுத்துகிறது. இது ஏறக்குறைய பிட்காயினுக்கான, சி.சி.ஏ.எஃப் இன் யூக அளவாகும்.

பாரம்பரிய வங்கிகள் பெரும்பாலும் பரிவர்த்தனைகளை பின்தொடர்ந்து கண்டறிய முடியும். ஆனால் பிட்காயின், மிகப் பெரிய பணக்காரர்களுக்கு வரியைத் தவிர்ப்பதற்கான கருவியாக மாறக்கூடிய அபாயமும் உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், உலகின் பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்களது சொந்த கணினி மயமான நாணயங்களை உருவாக்குவதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றன. சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த கணினி மயமான நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

வங்கிகள் வழங்கும் கணினி மயமான நாணயங்கள் அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் கிரிப்டோகரன்சிகள் ஒரு மைய சக்தியால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

பிட்காயின் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை, வங்கிக் கணக்கு இல்லாத 70% சால்வடார் மக்களுக்கு நிதி சேவைகளைத் திறக்கும் என்று அதிபர் புக்கேல் முன்பு கூறியிருந்தார்.

” அனைத்து மக்களுக்குமான நிதிசேவை, முதலீடு, சுற்றுலா, புதுமை மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை இது கொண்டு வரும்,”என்று இந்த வார வாக்கெடுப்புக்கு சற்று முன்னர் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் அவர் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »