Press "Enter" to skip to content

பெஞ்சமின் நெதன்யாகு: ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – அரசியல் வாழ்க்கை வரலாறு

பட மூலாதாரம், EPA

பல வருடங்களாக தனது ஆதரவாளர்களுக்கும், எதிர்த் தரப்பினருக்கும் அரசியல் ரீதியாக அசைக்க முடியாத ஒரு நபராக தோன்றியவர்தான் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலின் 73 வருட வரலாற்றில் எந்த ஒரு பிரதமரை காட்டிலும் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் நெதன்யாகு.

நான்கு முறை தேர்தலில் வென்றவர். ஐந்து முறை பிரதமராக இருந்தவர். ஆனால் இறுதியில் நெதன்யாகுவை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்த எதிர்ப்பாராத கூட்டணியால் அவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிரான சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒரு நபராக நெதன்யாகு தன்னை அடையாளப்படுத்தி கொண்ட காரணத்தால் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

பாலத்தீனர்களிடம் கடும்போக்கு நிலையை மேற்கொண்டார். எந்த ஓர் அமைதி பேச்சுவார்த்தையிலும் பாதுகாப்பு குறித்த கவலைகளையே பிரதானமாக முன்வைத்தார். இரானிடமிருந்து இஸ்ரேலுக்கு வரும் ஆபத்தை நீண்ட காலமாக எச்சரித்து கொண்டே இருந்தார்.

பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியிலிருந்த கடைசி நாட்களில் அவர்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டார். தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் அவரின் விருப்பத்திற்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்தன. அவர் பதவியைவிட்டு நீங்க வேண்டும் என வீதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன.

சகோதரரின் கொலை ஏற்படுத்திய தாக்கம்

ராணுவத்தில் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சாயேரெட் மட்கல்லில் பணியாற்றினார்.

பட மூலாதாரம், GPO VIA GETTY IMAGES

பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவ்-இல் 1949ஆம் ஆண்டு பிறந்தவர். நேதன்யாஹுவின் தந்தை புகழ்பெற்ற வரலாற்று நிபுணர் மற்றும் சியோனிச ஆர்வலர். அவருக்கு அமெரிக்காவில் கல்வி சார்ந்த பணி ஒன்று கிட்டியதால் நேதன்யாஹுவின் குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது.

பெஞ்சமின் நெதன்யாகு தனது 18 வயதில் இஸ்ரேலுக்கு திரும்பி ஐந்து வருடங்களை ராணுவத்தில் கழித்தார். ராணுவத்தில் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சாயேரெட் மட்கல்லில் பணியாற்றினார்.

பெய்ரூட் விமான நிலையத்தில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையில் பங்கேற்றார். 1973ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரிலும் பங்கேற்றார். ராணுவத்தில் பணியாற்றிய பிறகு நெதன்யாகு அமெரிக்காவுக்கு திரும்பி சென்றார். அங்கு மாசசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார்.

1976ஆம் ஆண்டு உகாண்டாவில் கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சியில் நெதன்யாகுவின் சகோதரர், ஜோனத்தன் கொல்லப்பட்டார். அவரின் இறப்பு நெதன்யாகுவின் குடும்பத்தில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேல் வரலாற்றில் அவரின் பெயர் பதிக்கப்பட்டது.

நெதன்யாகு தனது சகோதரரின் நினைவாக பயங்கவரவாதத்திற்கு எதிரான இன்ஸ்டிட்யூட் ஒன்றை தொடங்கினார். 1982ஆம் ஆண்டு வாஷிங்டனில் இஸ்ரேலின் துணைத் தூதர் என்ற பொறுப்பை பெற்றார்.

ஒரே இரவில் நெதன்யாகுவின் பொதுவாழ்க்கை தொடங்கப்பட்டது.

தனித்துவமான அமெரிக்க நடையில் சரளமாக பேசக்கூடிய நெதன்யாகு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான முகம் ஆனார். முக்கியமான இஸ்ரேலின் பிரதிநிதியாக தன்னை வளர்த்து கொண்டார்.

1984ஆம் ஆண்டு நியூயார்க்கில், ஐநாவின் இஸ்ரேலின் நிரந்திர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

அதிகாரத்திற்கு வளர்ந்த கதை

1988ஆம் ஆண்டுதான் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்கு திரும்பினார். அப்போது நாடாளுமன்றத்தில் லிகுட் கட்சியின் (தேசிய தாராளவாத இயக்கம், வலதுசார்பு அரசியல் கட்சி) சார்பாக வெற்றிப் பெற்று வெளியுறவு துணை அமைச்சரானார். அப்போதிலிருந்து உள்நாட்டு அரசியலில் ஈடுபட தொடங்கினார்.

நேதன்யாஹு

பட மூலாதாரம், Getty Images

அதன்பின் கட்சியின் தலைவரானார். 1996ஆம் ஆண்டு இஸ்ரேலின் பிரதமர் யிட்சாக் ராபின் கொலை செய்யப்பட்டப்பின் இஸ்ரேலின் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரானார்.

நெதன்யாகு இஸ்ரேலில் இளம் வயதிலேயே பிரதமர் ஆனாவர். மேலும் இஸ்ரேல் உருவான 1948ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த தலைவர் அவர்.

1993ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை தீவிரமாக விமர்சித்திருந்த போதிலும், பாலத்தீனத்தில் உள்ள ஹெப்ரான் என்று நகரை 80 சதவீதம் பாலத்தீன அதிகார கட்டுப்பாட்டிற்கு அளித்து, மேற்குகரையில் ஆக்கிரமிப்புகளை பின்வாங்கிக் கொள்ளும் ஓர் ஒப்பந்தத்தில் நேதன்யாஹு கையெழுத்திட்டார். இது வலதுசாரிகள் மத்தியில் பெரும் விமர்சனத்தை எழுப்பியது.

அதன்பின் 17 மாதங்களுக்கு முன்னதாக தேர்தலை நடத்தக் கோரினார் நெதன்யாகு. 1999ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றார். நெதன்யாகுவின் முன்னாள் கமாண்டர், தொழிலாளர் கட்சியை சேர்ந்த இஹூத் பாராக்கால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

அரசியல் எதிரிகள்

லிகுட் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் பெஞ்சமின் நெதன்யாகு. கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் ஏரியல் ஷாரோன். 2001ஆம் ஆண்டு ஷாரோன் பிரதமராக பதவியேற்ற பிறகு, நெதன்யாகு முதலில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பின் நிதியமைச்சராகவும் அரசாங்கத்தில் நுழைந்தார்.

2005ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆனால் அவருக்கான வாய்ப்பு மீண்டும் 2005ஆம் ஆண்டில் அமைந்தது.

காரணம் ஷாரோன் கட்சியிலிருந்து விலகி கடிமா என்ற கட்சியை தொடங்கியிருந்தார். ஆனால் சிறிது காலத்திற்குள் அவருக்கு ஸ்ரோக் வந்து கோமா நிலைக்கு சென்றார்.

முக்கிய தருணங்கள்

  • 1949 – டெல் அவிவில் பிறந்தார்.
  • 1967-73 – சிப்பாய் கமாண்டோ கேப்டனாக பணியாற்றினார்.
  • 1984 – ஐநாவின் தூதுவரானார்.
  • 1988 – நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1996 – பிரதமரானார்.
  • 1999 – தேர்தலில் தோற்றார்.
  • 2002-03 – வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
  • 2003-05 – நிதியமைச்சரானார். காசா தொடர்பான பிரச்னையில் பதவியை ராஜிநாமா செய்தார்
  • Dec 2005 – லிகுட் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2009 – மீண்டும் பிரதமரானார்.
  • 2013 – மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2015 – நான்காவது முறையாக வென்றார்.
  • 2019 – லஞ்சம், மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
  • 2020 – ஐந்தாவது முறையாக பிரதமரானார். விசாரணை தொடர்ந்தது.

பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சியின் தலைமை பொறுப்புக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்ப்ட்டார். 2009ஆம் ஆண்டு மீண்டும் இஸ்ரேல் பிரதமரானார்.

மேற்கு கரையில் குடியிருப்புகளை உருவாக்கும் பணிகளை 10 மாதம் நிறுத்தி வைத்தார். பாலத்தீனர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அந்த பேச்சுவார்த்தைகள் தோற்றுப்போனது,

2009ஆம் ஆண்டு பாலத்தீன அரசு உருவாவதற்கான தனது சம்மதத்தை தெரிவித்தார் ஆனால் அதற்கு பின்னான நாட்களில் தனது நிலையை கடுமையாக்கினார்.

“பாலத்தீன அரசு உருவாக்கப்படாது. அது நிச்சயமாக நடக்காது.” என 2019ஆம் ஆண்டு இஸ்ரேல் வானொலிவில் பேசினார்.

காசாவில் மோதல்

2009ஆம் ஆண்டில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராவதற்கு முன்னரவும், பிந்தைய காலக் கட்டங்களிலும், பாலத்தீன தாக்குதல்கள், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை என தொடர்ந்து இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டது.

காசா

பட மூலாதாரம், AFP

12 வருடங்களில் அம்மாதிரியான நான்காவது சண்டை 2021ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இந்த சண்டை பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்த சண்டைகளின்போது இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தது ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் உறவு சிக்கலாகவே இருந்தது.

2015ஆம் ஆண்டு அது மேலும் மோசமடைந்தது.

அணு திட்டம் தொடர்பாக இரானுடனான அமெரிக்கா நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் விளைவாக “மோசமான ஒப்பந்தம்” உருவாகப்போவதாக பெஞ்சமின் நெதன்யாகு காங்கிரஸில் எச்சரித்தார். ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் பயணம் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக இருந்தது என ஒபாமா நிர்வாகம் அதை கண்டித்தது.

டிரம்புடனான உறவு

2017ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றப்பின் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அரசுக் கொள்கைகள் நெருக்கமாகின. ஒரே வருடத்தில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஒப்புக் கொள்வதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்புடன்

பட மூலாதாரம், AFP

இந்த அறிவிப்பு அரபு நாடுகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரக்கு பிறகு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக் கோருவதை அரபு நாடுகள் ஆதரிக்கின்றனர். ஆனால் அது நெதன்யாகுவுக்கு எதிராக அரசியல் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்டது.

அதன்பின் ஒரே வருடத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியா கோலன் குன்றுகளில் இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். தசாப்தங்களாக இருந்த அமெரிக்காவின் கொள்கையை தளர்த்தி நெதன்யாகுவின் பாராட்டை பெற்றார் டிரம்ப்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் திட்டம் என டிரம்பால் முன்மொழியப்பட்ட திட்டத்தை “நூற்றாண்டுக்கான வாய்ப்பு” என பாராட்டினார் நெதன்யாகு. ஆனால் அது ஒருதலைபட்சமானது என பாலத்தீனர்கள் அதை நிராகரித்தனர்..

டிரம்ப் 2018ஆம் ஆண்டு இரான் அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி, இரான் மீது தடைகளை விதித்ததற்கும் நெதன்யாகு பாராட்டுகளை தெரிவித்தார்.

சிறப்பு விசாரணை

2019ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு வழக்குகளில் நெதன்யாகு மீது லட்ஞம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பென்னி கன்ஸுடன்

பட மூலாதாரம், AFP

நெதன்யாகு பணக்கார தொழிலதிபர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் ஊடகங்களில் அவருக்கு சாதகமான செய்திகளை பிரசூரிக்க உதவிகளை செய்து கொடுத்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆனால் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், எதிர்க்கட்சியினரின் `சூனிய வேட்டை`யால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் அவர்மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பிரதமர் நெதன்யாகு. எதிர்க்கட்சியினர் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ஒரே வருடத்தில் மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றிப் பெற்றார் நெதன்யாகு. ஐந்தாவது முறையாக பிரதமரான போது கொரோனா கால அவசர நிலையை சமாளிக்க அரிதாக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாக தனது அரசியல் எதிரியான பென்னி கண்ட்ஸுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டார் நெதன்யாகு.

எட்டு மாதங்களில் ஆட்சி கலைந்தது. இரண்டே வருடங்களில் நான்காவது தேர்தலுக்கு வித்திட்டது. லிகுட் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை வென்றிருந்தாலும், பிற வலதுசாரி கட்சியின் உறுப்பினர்கள் நெதன்யாகு பிரதமராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

அதன் விளைவாக இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாய், அரபு எம்பிக்களின் ஆதரவு பெற்ற தீவிர வலது மற்றும் இடது கொள்கைகள் கொண்ட பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்த `மாற்று ஆட்சி`யை உருவாக்கின. அது 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் போதுமான வாக்குகளை பெற்ற நெதன்யாகுவின் நீண்டகால வரலாற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »