Press "Enter" to skip to content

சர்வதேச விதவைகள் தினம்: கொரோனா 2ஆம் அலையில் கணவரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர்க் கதை

  • சின்கி சின்ஹா
  • பிபிசி ஹிந்தி

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலக அளவில் பல குடும்பங்களைச் சிதைத்திருக்கிறது. பல இளம் பெண்களின் வாழ்க்கைத்துணைகளை இந்த பெருந்தொற்று பறித்துக்கொண்டுள்ளது. வயதில் இந்தப்பெண்களில் பலரும் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் உள்ளவர்கள்.

இல்லத்தரசிகளான இவர்கள் இதுவரை வேலைக்கு சென்றதில்லை. இப்போது பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் இவர்களின் முன்னால் நிச்சயமற்ற எதிர்காலம் விரிந்து கிடக்கிறது.

சமீபத்தில் விதவைகளாக மாறிய ஏராளமான பெண்கள், ஆணாதிக்க குடும்ப அமைப்புகளின் ஒரு பகுதியாக உள்ளனர். மேலும் அவர்களுக்கு தொழில்முறை பட்டங்கள் அல்லது முன் பணி அனுபவம் இல்லை. அவர்களில் நிறைய பேருக்கு, மறுமணம் என்பது ஒரு மாற்றுவழி அல்ல.

32 வயதான ரேணு ஏப்ரல் 25 ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு தனது கணவரை பறிகொடுத்தார். அவரது அச்சங்கள் மற்றும் கணவரின் இழப்பிற்குப் பிந்தைய அவரது வாழ்க்கை பற்றி பிபிசி நியூஸ் சமீபத்தில் அவருடன் பேசியது.

அவர் எங்களிடம் பேசியவை இதோ…

” அவர் இல்லாத துக்கம் என்னை வாட்டும்போது சில நாட்கள் நான் அவருடைய வெள்ளை சட்டையை அணிந்து கொள்வேன். ஆனால் இந்த சட்டை என்றென்றும் நிலைக்காது என்பதை நான் அறிவேன். எதுவுமே நிலையானது அல்ல. திருமணம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது நடக்கவில்லை.”

“அவர் இல்லாமல் படுக்கைக்குச் செல்வது மனதை வருத்துகிறது. அழுவதற்கு ஒரு அமைதியான இடத்தைத் தேடுவது அதை விட கடினம்.”

“எனது ஒன்பது வயது மகள் நான் உறங்கும்வரை தூங்கமாட்டாள். அவளுக்கு ஒன்பது வயதுதான், ஆனால் மரணம் ஒருவரை விரைவில் வளர வைக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு நாள் அவள் மாடியில் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவள் தன் தந்தையின் புகைப்படத்தை கையில் பிடித்தவாறு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று, இப்படியே நீ அழுதுகொண்டிருந்தால் நான் எப்படி சரியாக யோசிக்க முடியும், குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும் என்று கேட்டேன். இனி அழ மாட்டேன் என்று அவள் எனக்கு உறுதியளித்தாள். கூடவே நானும் அழ மாட்டேன் என்று உறுதி கூறும்படி என்னிடம் சொன்னாள். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க முயற்சிக்கிறோம்.”

என் மகனுக்கு நான்கு வயது. அப்பா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார், விரைவில் திரும்புவார் என்று அவன் நினைக்கிறான்.

“அவர் காலமான நாள் எனக்கு நினைவிருக்கிறது. அவரது நுரையீரல் முற்றிலுமாக சேதமடைந்தது. அவருக்கு கோவிட் -19 இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் முந்தைய நாள் இரவு அவர் மூச்சுத் திணறல் இருப்பதாக சொன்னதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ‘கொரோனா பாசிடிவ்’ என்று மருத்துவர்கள் கூறினர்.

மருத்துவமனையில் அதிக ஆக்சிஜன் இல்லை, ஆகவே அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்லும்படி கூறிவிட்டனர். அவரது நண்பர்களின் உதவியுடன் சில ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். “

ஒரு விநாடியில் புரட்டிப்போடப்படும் வாழ்க்கை

கொரோனா

“அன்று ஏப்ரல் 25. மதியம் அவர் நன்றாகத் தூங்கினார். அவரது நண்பர்கள் சிலர் எங்களை சந்திக்க வந்தனர். என் மாமியார், மாமனாரையும் குழந்தைகளையும் விலகி இருக்கும்படி சொன்னேன். நான் அவருடன் இருந்தேன். மாலையில் குழந்தைகளை தன்னிடம் அழைத்து வரச் சொன்னார். இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர் சொன்னார். பின்னர் அவர் இரு குழந்தைகளையும் பார்த்து புன்னகைத்தார். அவருக்கு எதுவும் நடக்காது என்று நான் சொன்னேன்.”

“நீ என்னுடன் இருப்பதால் இதிலிருந்து கண்டிப்பாக வெளியே வந்துவிடுவேன்,” என்று அவர் கூறினார்.

“இரவு 10:30 மணியளவில் நாங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை மாற்றிக்கொண்டிருந்தோம். அவரது நண்பரும் எங்கள் அண்டை வீட்டாரும் ஆக்ஸிமீட்டர் ரீடிங்கை பரிசோதித்தபோது அவருடைய SPO2 நிலை பூஜ்ஜியமாக இருந்தது. அவரது இதயதுடிப்பு விகிதம் 15 ஆக இருந்தது.

எனது கணவரின் நண்பர் சந்தீப், சிபிஆர் (cardio pulmonary resuscitation) மூலம் இதயத்தை துடிக்க வைக்க முயற்சி செய்தார். அவர் ஒரு மருத்துவர். மருத்துவமனையில் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு ஊசியையும் அவர் போட்டார். என் கணவரின் இதயம் துடிப்பதை நிறுத்தியது. அவர் என் கண்முன்னேயே இறந்து விட்டார். அவருக்கு வயது 37 தான். ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாக மாறக்கூடும் என்று சொல்வார்கள். இது உண்மைதான்,” என கண் கலங்கினார் ரேணு.

“அவர் சமையலறையில் என்னுடன் செலவழித்த நேரம் இப்போதும் என் நிலைவில் இருக்கிறது. பொதுமுடக்கத்தின்போது நாங்கள் சேர்ந்து சமைப்போம். அவர் சமையல் குறிப்புகளை கூகிளில் பார்ப்பார். நான் காய்கறிகளை நறுக்குவேன். அவர் சமைப்பார். இப்போது, என்ன சமைக்க வேண்டும் என்று என்னிடம் சொல்ல யாருமே இல்லை,”

“எல்லாவற்றுக்கும் மேலாக, நான் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறேன். நான் என் குழந்தைகளை நினைத்து பயப்படுகிறேன். அன்பு இல்லாத எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பயப்படுகிறேன்.

நான் எப்போதுமே ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞராக இருக்க விரும்பினேன். நான் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியிலிருந்து நின்றுவிட்டேன். எனக்கு படிக்க பிடிக்கவில்லை.

நான் பழைய டெல்லியில் வளர்ந்தேன். என் அம்மா ஒரு இல்லத்தரசி. என் தந்தை தொடர்வண்டித் துறையில் பணிபுரிந்தார். நானும் என் இரட்டை சகோதரனும் ஒரு பழைய வீட்டில் பிறந்தோம். உடன்பிறப்புகளில் நான் மூத்தவள். பின்னர் என் அம்மா மேலும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

நான் விதம் விதமாக உடை அணிவதை விரும்பினேன். ஒப்பனை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் 6 ஆம் வகுப்பில் இருந்தபோது என் அத்தையின் உதட்டுச்சாயத்தை எடுத்து போட்டுக் கொள்வேன். அவர் கோபப்படுவார். ஆனால் நான் கவலையே படமாட்டேன். என் தந்தையின் சகோதரிக்கு லட்சுமி நகரில் ஒரு பார்லர் இருந்தது. நான் அங்கு சென்று அவர் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருப்பேன்.”

என் இளவயதில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் யாரையும் சந்திக்கவில்லை. எனக்கு 20 வயதாகும்போது, என் கணவரை சந்தித்தேன்.

திருமண அனுபவம்

கொரோனா

அது 2009 ஆம் ஆண்டு.

“எனது குடும்பத்தினரை சந்திக்க அவர் தனது பெற்றோருடன் வந்தபோது நாங்கள் முதலில் பார்த்துக்கொண்டோம். அது ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். எனக்கு 20 வயதுதான். என் தந்தைக்கு உடல்நலம் நன்றாக இல்லை. அவர் விரைவில் என்னை திருமணம் செய்துகொடுக்க விரும்பினார். பழைய திரைப்படங்களில் வருவதுபோல, நான் தின்பண்டங்கள் மற்றும் தேநீர் நிறைந்த ஒரு தட்டை எடுத்துச் சென்றேன். அப்போதுதான் நான் அவரை முதலில் பார்த்தேன். தனிமையில் பேசவும் முடிவெடுக்கவும் நாங்கள் ஒரு அறைக்கு அனுப்பப்பட்டோம்.”

“விதம்விதமாக ஆடை அணிவதும், மேக்கப் போட்டுக்கொள்வதும் எனக்குப்பிடிக்கும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவரது குடும்பத்தினருக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். என்னை ஏற்கெனவே பிடித்துவிட்டதாக அவர் சொன்னார். நான் எங்கள் குடும்பத்தினர் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று, அவரை எனக்குப்பிடித்திருப்பதாக சொன்னேன். அவரது புன்னகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திருமணம் செய்துகொள்ள இது ஒரு நல்ல காரணம் நான் நினைத்தேன்.”

ஒரு வருடம் கழித்து, 2010 நவம்பர் 19 ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

சில மாதங்களுக்குப் பிறகு நான் எனது முதல் குழந்தையை கருத்தரித்தேன். அப்போது நான் தாயாக விரும்பவில்லை. இது மிகவும் விரைவாக நடந்து விட்டதாக நான் நினைத்தேன். ஆனால் என் கணவர் குழந்தையை பெற்றுக்கொள்வோம் என்று கூறினார்.

இப்படியாக என் மகள் பிறந்தாள். அவள் மீது என் கணவர் அன்பைப்பொழிந்தார்.

தனிமையில் வெறுமையான வாழ்க்கை

கொரோனா

2013 ஆம் ஆண்டில், நான் மேக்அப் கோர்ஸ் ஒன்றை படித்தேன். எனக்கு கிட்டத்தட்ட ஒரு வேலையும் கிடைத்தது. ஆனால் என் மகள் மிகவும் சிறியவளாக இருந்ததால் நான் வீட்டில் தங்க முடிவு செய்தேன். பிறகு நான் ஃப்ரீலான்ஸ் வேலையை மேற்கொண்டேன். மாதம் சுமார் 20,000-25,000 ரூபாய் சம்பாதித்தேன். எனக்கு 2016 ல் ஒரு மகன் பிறந்தான்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு 20 திருமண ஒப்பனை முன்பதிவுகள் இருந்தன. நான் நிறைய பணம் சம்பாதித்திருப்பேன், ஆனால் பொதுமுடக்கம் காரணமாக ஏறக்குறைய ஒரு வருடம் நான் வேலை செய்யவில்லை. சம்பாதித்த பணத்தை நான் சேமிக்கவில்லை. நகைகளை வாங்கினேன், பரிசுகள் வாங்கினேன், காலணிகள் மற்றும் கவுன்கள் வாங்கினேன்.

இதுபற்றி என் கணவர் அடிக்கடி வருத்தப்படுவார். வாழ்க்கை மற்றும் இறப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர் என்னிடம் சொல்லுவார். ஆனால் நாம் இளமையாக இருக்கும்போது நம்மிடம் பணம் இருக்கும்போது, மரணத்தைப் பற்றி நாம் நினைக்க மாட்டோம்.

பிப்ரவரியில், நாங்கள் ரஜெளரி கார்டனில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். குடும்பத்தில் ஒரு திருமணம் இருந்தது. அதற்காக நாங்கள் கடையில் வாங்குதல் செய்யச் சென்றிருந்தோம். அங்கே ஒரு பிங்க் நிற கவுன் பொம்மைக்கு அணிவிக்கப்பட்டிருப்பதை நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன் விலை சுமார் 4,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டேன். ஏனெனில் அந்த நேரத்தில் என்னிடம் அவ்வளவு பணம்தான் இருந்தது. ஆனால் நாங்கள் ஷோரூமுக்குள் சென்றபோது, விற்பனையாளர் அந்த கவுனின் விலை. 8,000 ரூபாய் என்று சொன்னார். எப்போதாவதுதான் கவுன் அணியமுடியும் என்பதால் இது வீண்செலவு என்று நான் என் கணவரிடம் சொன்னேன். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

மறுநாள் மாலை, என் கணவர் கையில் ஒரு பேக்கெட்டுடன் வீட்டிற்கு வந்தார். அதை திறக்குமாறு என்னிடம் சொன்னார். நான் அதை திறந்தபோது, உள்ளே அந்த கவுன் இருந்தது.

கணவர் கொடுத்த கடைசி பரிசு

கொரோனா

நான் அவருக்கு ஒரு பர்ஸ் வாங்கிக்கொடுத்தபோது, அவர் வருத்தப்பட்டார். நான் வீண்செலவு செய்கிறேன் என்று சொன்னார். அவர் எனக்கு அந்த கவுனை வாங்கிக்கொடுத்தது பற்றி நான் நினைவுபடுத்தினேன். அதுவே அவர் எனக்குக் கொடுத்த கடைசி பரிசு. அவருக்கு நான் கொடுத்த கடைசி பரிசு அந்த பர்ஸ்.

சில நாட்களுக்குப் பிறகு, என் கணவருக்குச் சொந்தமான பொருட்களை நான் கொடுத்துவிடுவேன். சடங்குகள் அப்படித்தான். ஆனால் சில பொருட்களைமட்டும் வைத்துக்கொள்வேன். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நான் அவருக்காக வாங்கிய பர்ஸ் அதில் ஒன்று.

ஏப்ரல் மாதத்தில் நாங்கள் செல்லவிருந்த கோவா பயணத்திற்குப் பிறகு நான் பணத்தை சேமிக்கத்தொடங்குவேன் என்பது நான் அவரிடம் சொல்ல விரும்பிய ஒரு விஷயம். நான் எப்போதுமே கடலைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மற்ற ஜோடிகள் கோவாவுக்குச் செல்லும்போது எடுத்த புகைப்படங்களைப் போல புகைப்படங்களை எடுத்துக்கொள்ள விரும்பினேன். அவர்தான் என் பயணத் துணை. நான் அவரை இழந்து தவிக்கிறேன்.

இப்போது இந்த எல்லா இடங்களுக்கும் என்னை யார் அழைத்துச் செல்வார்கள்? நான் மிகவும் தனிமையாக இருக்கிறேன்.

கணவர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. எனது மாமனாருக்கு சுமார் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. என் மகள் ஒரு தனியார் பள்ளிக்குச் செல்கிறாள், அவளுடைய பள்ளிக்கட்டணம் ரூ. 2,100. சேமிப்பு இல்லாத நிலையில் உயிர் வாழ்வதே கடினமாக இருக்கும். எனது கணவரின் சகோதரரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதிகம் சம்பாதிக்கவில்லை. எனவே அவர் குடும்பத்தை கவனித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

நான் வேலை தேடுகிறேன். நான் ஒரு சில படிவங்களை நிரப்பினேன். சைல்ட் சர்வைவல் இந்தியா என்ற நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைத்துள்ளது. வேலை தேட உதவிடுவதாக அவர்கள் சொன்னார்கள். கோவிட் -19 நிலைமை காரணமாக ஃப்ரீலான்சிங் ஒரு நீண்ட கால தீர்வு அல்ல.

நான் என் குழந்தைகளை நினைத்து பயப்படுகிறேன். எனது குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்களுக்கு ஒரு தொழில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எப்படியோ என் வாழ்க்கையை கழித்துவிடுவேன். ஆனால் தனிமை என்னை வாட்டும் என்று எனக்குத்தெரியும். எல்லோரும் அவரவர் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். அடர்த்தியான மூடுபனி போல தொங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளுடன் நான் இந்த அறையில் தனியே இருக்கிறேன்.இதிலிருந்து எப்படியே வெளியே வருவது?

நான் தனியாக இருக்கும்போதெல்லாம் அவரைப் பற்றியே நினைக்கிறேன். கைப்பேசியில் எங்கள் காணொளிக்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவருடைய பொருட்கள் என்னைச் சுற்றிலும் உள்ளன. அவர் திரும்பி வந்துவிடுவார், இவை எல்லாமே தற்காலிகமானது, இது ஒரு மோசமான கனவுதான் என்று சில நேரங்களில் நினைக்கிறேன்.

மறுமணத்தை தவிர்ப்பது ஏன்?

நான் கொடுத்த அந்த பர்ஸில் அவர் என் புகைப்படம், குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவரது பெற்றோரின் புகைப்படத்தை வைத்திருப்பார். அதுவே எங்களின் வாழ்க்கை. எங்களுக்கு கனவுகள் இருந்தன. அச்சங்கள் இருந்தன. இப்போது மிச்சமிருப்பது நானும், நான் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் மட்டுமே.

அவர் பெயர் அமித். அவருடைய பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது சிறியதாகவும் இனிமையாகவும் இருந்தது.

“பலர் என்னிடம் மறுமணம் செய்துகொள்ளுமாறு சொல்கிறார்கள். ஆனால் நான் என் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறேன். எனது பிள்ளைகள் புதிய தந்தையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என் மகளுக்கு தந்தையுடன் ஒட்டுதல் அதிகம். அவர் அதிகாலையில் எழுந்து அவளை எழுப்புவார். இருவரும் வாக்கிங் செல்வார்கள். நான் எப்போதாவது அவளைத் திட்டினால், அவர் வருத்தப்படுவார். மகள் மீது அவர் உயிரையே வைத்திருந்தார். அவள் ஒரு விமானி ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார்.”

“இது குறித்து சிந்திக்கும் நேரம் இன்னும் வரவில்லை. நான் மறுமணம் செய்ய முடிவு செய்தால் எனது மாமியார் மாமனார் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் நான் சென்றுவிட்டால் அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? நான் இங்கே எப்போதுமே இருப்பேன் என்று என் கணவருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன்.”

“எனது நண்பர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் நான் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டேன். ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். என் கணவருக்கும் அவர் பழக்கம். இரண்டு குழந்தைகளுடன் ஒரு விதவையை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியாது. தனது குடும்பம் முற்போக்கானது என்று அவர் கூறுகிறார். ஆனால் நான் அவரை திருமணம் செய்துகொண்டபிறகு அவர் என் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை என்றால் என்ன செய்வது. நான் மறுப்பு தெரிவித்த பிறகு, அவர் அதிகமாக பேசுவதில்லை.”

“நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன்,” என்கிறார் ரேணு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »