Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிவது என்ன நன்மை தரும்?

  • ப்ரிட் யிப் மற்றும் வலேரியா பெரசோ
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

கோவிட் -19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸின் மூலத்தை ஆராயும், அறிவியல் அடிப்படையிலான ஓர் ஆய்வை விஞ்ஞானிகளிடமிருந்து தாங்கள் எதிர்நோக்குவதாக ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

தற்போதைய பெருந்தொற்றுக்கு காரணமான நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எங்கிருந்து வந்தது என்பதை அறியும் விசாரணைக்கு சக்திவாய்ந்த அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது இது முதல் முறை அல்ல.

முயற்சிகளை இரட்டிப்பாக்கி 90 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் தனது உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்திருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராய்வதும் இதில் அடங்கும்.

பலராலும் ‘ஒரு சூழ்ச்சி’ என்று கூறி நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆய்வக-கசிவு கோட்பாடு, சமீபத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இது சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே மோசமாக இருக்கும் உறவை மேலும் சிக்கலாக்குகிறது,

இந்த கோட்பாட்டை, ஓர் “அவதூறு பிரசாரம்” என்றும் மேற்கத்திய நாடுகளின் ” பழியை வேறுபுறம் திருப்பும்” முயற்சி என்றும் கூறி சீனா பலமுறை நிராகரித்துள்ளது.

கோவிட் -19 முதன்முதலில் வுஹானில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆனபிறகும்கூட, நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எவ்வாறு தோன்றியது என்ற கேள்வி ஒரு மர்மமாகவே உள்ளது.

இந்த தேடலின் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? அரசியலுக்கு அப்பால் சென்று வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிப்பது ஏன் முக்கியம்?

வுஹான்

பட மூலாதாரம், Reuters

நமக்கு என்ன தெரியும்… என்ன தெரியாது

SARS-CoV-2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதன்முதலில் சீனாவில் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது. 2021 ஜூன் மாதத்திற்குள் இது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இதன் காரணமாக இதுவரை சுமார் 17 கோடியே 80 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 39 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பகால தொற்றுக்கள், வுஹான் ‘வெட்’ மார்கெட்டுடன் (இறைச்சிச் சந்தை) தொடர்புபடுத்தப்பட்டது. இந்த சந்தையில்தான் நோய்த்தொற்றின் முதல் தொகுதி வெளிப்பட்டது.

கடந்த மாதங்களில் அறிவியலாளர்கள் ஒரு ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர். “ஜூனோடிக் ஸ்பில்ஓவரின்” விளைவாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுகிறது அதாவது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு செல்லும் ஒரு “நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜம்ப்” இது. அப்படி நிகழ்ந்த பிறகு இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு முகவும் வேகமாக பரவியது என்பதே இந்தக் கருத்து.

இந்தக் கருத்திற்குப்போட்டியாக மற்றொரு கோட்பாடு வலம் வருகிறது. வுஹான் வெட் மார்கெட்டிற்கு சிறிது தொலைவில் அமைந்துள்ள வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி என்ற ஆய்வகத்திலிருந்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்திருக்கக்கூடும் என்று இது கூறுகிறது. இந்த ஆய்வகத்தில் வெளவால்களில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இருப்பது குறித்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆராய்ச்சி நடந்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் இந்த சர்ச்சைக்குரிய கூற்றை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரித்தார். ஓர் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் பொருட்டு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மனிதனால் மாற்றியமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று சிலர் கூறினர். ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மனிதனால் இது உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்துக்கு எதிரான ஆதாரங்களை அளித்துள்ளன.

“SARS-CoV2 , மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கற்பனையான கோட்பாடுகள் முற்றிலுமாக மதிப்பிழந்துவிட்டன” என்று அறிவியலாளர்கள் குழு கடந்த ஜூலை மாதம் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீனில் எழுதியது. முன்பே இருக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களிலிருந்து ‘முன்னோக்கி வடிவமைக்கப்பட்டதை” நிரூபிக்கும்விதமாக இந்த வைரஸில் “மரபணு ரேகைகள் அல்லது “மரபணு வரிசைமுறைகள்” இல்லை என்று அவர்கள் கண்டறிந்தனர்.

பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டில், கொரோனா தொடர்பான புதிய விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணரான மருத்துவர் ஆண்டனி ஃபாசியும் சமீபத்தில் இந்த கருத்தை நிராகரித்துள்ளார். “சீனர்கள் வேண்டுமென்றே, தங்களையே கொல்லக்கூடிய ஒன்றை உருவாக்கியுள்ளார்கள் என்று சொல்வது… அபத்தமாக உள்ளதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், தற்செயலாக ஆய்வகத்திலிருந்து கசிந்தபிறகு, இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியிருக்கலாம் என்ற கருத்து சமீப காலமாக மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மூலத்திற்கான தேடல்

சில அறிவியலாளர்கள் இந்த இரு கோட்பாடுகளையும் ஆராயும் யோசனையை ஆதரிக்கின்றனர். முதலாவது, காடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட வைரஸின் ஆய்வக கசிவு. இரண்டாவது, இயற்கையான ஜூனோடிக் ஸ்பில்ஓவர் (இதன் மூலம் நோய்த்தொற்றுகள் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு, நேரடியாகவோ அல்லது ஒரு இடைநிலை விலங்கு அதாவது எறும்பு உண்ணி அல்லது இதுவரைஅடையாளம் காணப்படாத மற்றொரு பாலூட்டி வழியாகவோ பரவுதல்).

முதலாவது கோட்பாடிற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அதை புறந்தள்ளக்கூடாது என்றும் ஆஸ்திரியா, ஜப்பான், ஸ்பெயின், கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் மார்ச் மாதம் எழுதியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட அறிவியலாளர்கள் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் வுஹானுக்கு சென்று பெருந்தொற்றின் மூலம் பற்றி விசாரித்தது.

ஆனால் அவர்கள் ஒன்றாக இணைந்து சமர்ப்பித்த அறிக்கை Sars-CoV-2 எங்கிருந்து வந்தது என்பது குறித்து எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. மேலும் பலருக்கு பதில்களை விட கேள்விகளையே இது உருவாக்கியது.

மேலும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று இந்த அறிக்கையை விமர்சித்த அறிவியலாளர்கள் மே 18ஆம் தேதி ஓர் அறிவியல் இதழில் எழுதியுள்ளனர்.

“போதுமான தரவுகள் கிடைக்கும் வரை, இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இயற்கையாக அல்லது ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற இரண்டு கருத்துகளையும் நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

“முறையான விசாரணையானது, வெளிப்படையான, குறிக்கோளுடன் கூடிய மற்றும் தரவுகள் சார்ந்ததாக இருக்க வேண்டும். கூடவே “சுயாதீன மேற்பார்வைக்கு” உட்பட்டதாக இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசனில், நோயெதிர்ப்பு நிபுணரான பேராசிரியர் அகிகோ இவாசாகி இதை எழுதியவர்களில் ஒருவர்.

பேராசிரியர் அகிகோ இவசகி

பட மூலாதாரம், Dan Renzetti

எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்க இந்த வைரஸின் மூலத்தை புரிந்துகொள்வது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்திக்கூறுகிறார்.

“நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நேரடியாக வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டால், எதிர்கால தொடர்பைக் குறைப்பதற்கும், வெளவால்களுடன் தொடர்புள்ள மனிதர்களிடமிருந்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவுவது பற்றிய கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“ஓர் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்திருந்தால், அது எவ்வாறு நடந்தது என்பதை நாம் கூர்ந்து கவனித்து, இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் டேவிட் ராபர்ட்சனும் இந்தக்கருத்தை ஆமோதிக்கிறார்.

“வுஹானில் உள்ள ஆய்வகம் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எங்கிருந்து வந்தது, அவர்களுக்கு அது எங்கிருந்து கிடைத்தது என்பதைப் பற்றி நாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கையாளும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் (தொற்றுநோய்க்கு முன்பு) SARS-Cov-2 ன் மூலமாக இருக்கும்படியான அளவிற்கு தொடர்புடையதாக இல்லை என்று பேராசிரியர் ராபர்ட்சன் பிபிசியிடம் கூறினார்.

18 மாதங்களில் கொரோனாவால் 3.8 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

“ஆய்வக-கசிவு கோட்பாடு மற்றும் இயற்கையான தோற்றம் ஆகிய இரண்டையும் சமமாக கருதமுடியாது. இந்த இரண்டுமே சாத்தியம்தான் என்றாலும் இயற்கை நிகழ்விற்கு அதிக சாத்தியகூறு இருப்பதாக அவர் கூறுகிறார்.

பேராசிரியர் ராபர்ட்சனைப் போன்ற பெரும்பாலான அறிவியலாளர்கள் இதுவரை கிடைத்த அறிவியல் தடயங்களின் அடிப்படையில் ஒரு இயற்கை நிகழ்வின் கருத்தை தற்போது ஆதரிக்கின்றனர். ஆனால், கசிவுக் கோட்பாட்டை ஆதரிப்பதற்கான சான்றுகள் தற்போது பலவீனமாக உள்ளன. ஏனெனில் அது ஆழமாக ஆராயப்படவில்லை என்று ஒரு சிறிய பிரிவினர் வாதிடுகிறார்கள்.

கொரோனா

பட மூலாதாரம், Reuters

இயற்கை நிகழ்வா, ஆய்வக விபத்தா?

இயற்கை நிகழ்வை ஆதரிப்பவர்களுக்கு தொற்றுநோயியல், வரலாறு சான்றுகளை வழங்குகிறது. பெரும்பாலான தொற்று நோய்கள் , ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு இயற்கையாக நிகழும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலில் இருந்து தொடங்குகின்றன. இன்ஃப்ளூயன்ஸா, எச்.ஐ.வி, எபோலா அல்லது மெர்ஸ், இதற்கான உதாரணங்கள்.

சீன வெளவால்களில் மக்களைத் தொற்றும் திறன் கொண்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் இருப்பது தொற்றுநோய்க்கு முன்பே நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வுஹான் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கு நாம் ஓரளவு நன்றி சொல்லவேண்டும்.

மறுபுறம், ஆபத்தான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களை வைத்திருக்கும் பல உயர் பாதுகாப்பு மையங்கள் இருக்கும் ஒரு நகரத்தில் ஆரம்ப தொற்று நிகழ்ந்திருப்பதை ஆய்வக-கசிவு கோட்பாட்டாளர்கள் சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவத் தொடங்குவதற்கு முன்பு, 2019 இலையுதிர்காலத்தில் WIV இன் மூன்று அறிவியலாளர்கள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறிய ஓர் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள் . சீன அதிகாரிகள் இதை வன்மையாக மறுத்துள்ளனர்.

மேலும் குறிப்பிடத்தக்க வகையில், ராட்ஜி 13 என அழைக்கப்படும் , SARS-Cov-2 க்கு மிகவும் ஒத்ததான ஒரு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) , அதன் மரபணு வரிசையில் 96% மட்டுமே பகிர்ந்து கொள்கிறது என்ற உண்மையையும் ஆய்வக-கசிவு கோட்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தொற்றுநோய் ஏற்பட்டு 18 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இதைவிட கூடுதலான பொருத்தம் உடைய ஒன்றை விலங்குகளில் ஏன் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

எதிர்கால தொற்றுநோயை தடுத்தல்

மனிதர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறையாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மூலத்தின் தேடலை பெரும்பாலான அறிவியலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழின் மூத்த ஆசிரியர் ஜோஷ் பிஷ்மேன் தனது சமீபத்திய கட்டுரையில், “இன்னும் பல நோய்களை உருவாக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் இருக்கின்றன. எனவே ஒரு பதிலைப் பெறுவது “மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வைரஸால் பரவும் தொற்றுநோய் எவ்வாறு தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்வது, அதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்,” என்று எழுதியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்புகள் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடுகூடவே, ஒரு காலத்தில் “சீனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)” என்று அழைக்கப்பட்டதன் தோற்றத்தை கண்டுபிடிப்பதானது, இதுபோன்ற ஒரே மாதிரியான செயல்களைத் தடுக்கவும் இனவெறி அனுமானங்களைத் தவிர்க்கவும் உதவும்.

” சீன அறிவியலாளர்கள் ஒரு வைரஸை வெளியிட்டனர் என்ற உண்மை இல்லாத ஊகம், டிரம்ப் நிர்வாகத்தின் போது பரவலாக காணப்பட்டது. அமெரிக்காவில் ஆசிய எதிர்ப்பு இனவெறியின் மிகப்பெரிய அலைக்கு இது வழிவகுத்தது. நூற்றுக்கணக்கான வன்முறைச் செயல்கள் இதன் காரணமாக ஏற்பட்டன,” என்று பிஷ்மேன் எழுதினார்.

பொருளாதார உற்பத்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் மீதும் நீண்டகால தாக்கங்கள் இருக்கலாம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஜூனோடிக் ஸ்பில்ஓவர் உறுதிப்படுத்தப்பட்டால், ஆசியா முழுவதும் பிரபலமாக உள்ள இறைச்சி சந்தைகளுக்கான கடுமையான விதிமுறைகளுக்கு அது வழிவகுக்கும். அத்துடன் விவசாயம் மற்றும் வனவிலங்குகளை வணிக ரீதியாக பயன்படுத்துதல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களும் வரக்கூடும்.

அதற்கு பதிலாக ஆய்வக-கசிவு கோட்பாடு உண்மை என நிரூபிக்கப்பட்டால், இன்று மேற்கொள்ளப்பட்டுவரும் உயர் மட்ட ஆராய்ச்சிகளுக்கு இது சவால் விடும். குறிப்பாக, “செயல்பாட்டின் ஆதாயம்” சோதனை என்று அழைக்கப்படுபவை. இந்த சோதனைகளில், வெவ்வேறு தொற்றுநோய் சூழலை உருவாக்கி ஆராயும்பொருட்டு, நோய்கிருமிகள் மேலும் ஆபத்தானவையாக மாற்றப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருக்கும், உயிரி பாதுகாப்பு ஆய்வகங்களின் புதிய விதிமுறைகளுக்கு இது வழிவகுக்கும்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உறைந்த இறைச்சி இறக்குமதி மூலமாக நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என்ற மற்றொரு கோட்பாட்டை சீனா முன்வைத்துள்ளது. ஒரு முன்னணி வைராலஜிஸ்டின் ஆராய்ச்சி இதை ஆதரிக்கிறது.

இந்த கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டால், அது நிச்சயமாக சர்வதேச வர்த்தகம், உணவு போக்குவரத்து மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்தும்.

நாம் எப்போதாவது ஒரு உறுதியான பதிலைப் பெறுவோமா?

அறிவியல் எப்போதுமே மாறிவரும் ஒன்று. புதிய சான்றுகள் கிடைக்கும்போது பழைய கோட்பாடுகள் தொடர்ந்து திருத்தப்பட்டு நீக்கப்படுகின்றன.

ஆகவே நமக்கு ஒருபோதும் உறுதியான பதில் கிடைக்காமல் இருக்கலாம். அப்படியே கிடைத்தாலும் கூட, புதிய நோய்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை உறுதிப்படுத்த பல ஆண்டுகள் ஆகும்.

பேராசிரியர் டேவிட் ராபர்ட்சன்

பட மூலாதாரம், Professor David Robertson

உதாரணமாக, சுமார் 800 பேரைக் கொன்ற சார்ஸ் தொற்று ஏற்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டுதான், அது வெளவாலில் இருந்து வந்ததாக உறுதிசெய்யப்பட்டது.

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு ‘எச்.ஐ.வி’ யின் தோற்றத்தை ஆராய்ச்சி செய்வதில் தனது அனுபவத்திலிருந்து பேராசிரியர் ராபர்ட்சன் இதை உணர்கிறார்.

1980களில் எச்.ஐ.வி உலகின் கவனத்திற்கு வந்தது. 7.6 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டது. அயராத ஆராய்ச்சி இருந்தபோதிலும், 2000-ஆவது ஆண்டுகளின் நடுப்பகுதியில்தான், இந்த வைரஸின் தோற்றம் காட்டு சிம்பன்ஸிகளுடன் தொடர்புடையது என்ற விவரம் வெளியானது.

“ஆரம்பத்தில் சிம்பன்ஸிகளிடமிருந்து மிகக் குறைவான எச்.ஐ.வி-1 மாதிரிகளே கிடைத்தன. மாதிரியை எங்கு எடுக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் பிடித்தது” என்று வைராலஜிஸ்ட் கூறுகிறார்.

“சீனாவின் யுன்னானில் கூடுதல் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் தேடல் மேலும் கடினமானதாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

மிக முக்கியமாக, SARS-CoV-2 வைரஸைச் சுற்றியுள்ள சான்றுகள் ,”2020 வசந்த காலத்தில் இருந்து மாறவில்லை”என்று அறிவியல் பத்திரிகையாளர் ஆடம் ரோஜர்ஸ் எழுதியுள்ளார்.

“அந்த சான்றுகள் முழுமையாக இல்லை. அது ஒருபோதும் முழுமையடையாது” என்று அவர் ஒரு வலைதளக்கட்டுரையில் எழுதினார்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

“ஆய்வகம்-கசிவு / மூடிமறைக்கும் விஷயத்தை விட விலங்கு-தாவல் தான் அதிக சாத்தியம் என்று வரலாறும், அறிவியலும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே நம்மிடம் உள்ள தரமற்ற ஆதாரங்களைச் சுற்றி மக்கள் தங்கள் கருத்துக்களை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பது பற்றித்தான் நாம் இப்போது பேசுகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் இந்தத் தேடலானது, தொடக்கத்திலிருந்தே அதை உருவாக்கிய அரசியலில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்று ரோஜர்ஸ் வாதிடுகிறார்.

“வைரஸின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதற்கான எந்தவொரு நல்ல முயற்சியும் அரசியல் கருவிகளாக மாற்றப்படலாம்” என்று பேராசிரியர் இவாசாகி கருதுகிறார்.

பலர் அவருடன் உடன்படுகிறார்கள். மேலும் இந்த செயல்முறை வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்க-சீன உறவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

“ஓர் ஆசிய பெண் அறிவியலாளராக இருக்கும் நான், பரஸ்பர பழி சுமத்தலின் சாத்தியமான விளைவுகளை நன்கு அறிவேன். ஆசிய எதிர்ப்பு வெறுப்பு மேலும் தூண்டப்படாமல் இருப்பதை நாம் உறுதிசெய்யவேண்டும்,” என்கிறார் அவர்.

ஆய்வகம் VS முன்னணி களப்பணியாளர்கள்

உலக அறிவியலாளர்களின் முன்னால் முக்கியமான ஒரு கேள்வி உள்ளது. வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை உண்மையில் பாதுகாப்பான ஆராய்ச்சி சூழல்களை உருவாக்க முடியுமா?

ஆய்வக கசிவு நிரூபிக்கப்பட்டு, புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தாலும்கூட அது மீண்டும் நடக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் மற்றும் பிற கிருமிகள் கடந்த காலங்களில் ஆராய்ச்சி வசதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து வெளியே வந்திருக்கின்றன. 1977 ஆண்டில் ரஷ்யன் ஃப்ளு மற்றும் 2004ல் சார்ஸ் தொற்று, இதற்கான உதாரணங்கள். ஆனால் அறிவியல் மற்றும் மருத்துவ முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான , உயர் பாதுகாப்பு ஆய்வக வேலைகளில் இந்த ஆபத்து இயல்பாகவே உள்ளது.

தொற்றுநோய் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில், வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்வது முக்கியம். ஆனால் அது ஒரு முன்னுரிமை அல்ல என்று சிலர் வாதிடுகின்றனர்.

மரி மார்சல் டெசம்ப்ஸ்

பட மூலாதாரம், Marie-Marcelle Deschamps

“ஒரு மருத்துவர் என்ற முறையில், உயிரைக் காப்பாற்றுவதே எனது முன்னுரிமை” என்று ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் உள்ள ஒரு கிளினிக்கில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மேரி-மார்செல் டெஷ்சாம்ப் கூறுகிறார். சமீபத்தில் இங்கு தொற்று எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ள

அறிவியலாளர்களுக்கு இதைக்காட்டிலும் அவசர பணிகள் உள்ளன என்று கெஸ்கியோ என்ற லாப நோக்கற்ற சுகாதார குழுவை நடத்தும் இந்த முன்னணி மருத்துவர் கூறுகிறார்.

“எங்களிடம் இருக்கும் வளங்கள் குறைவு. ஆகவே மேலும் மக்கள் தொற்றுநோயின் பிடியில் சிக்குவதை நான் தடுக்க வேண்டும். எனவே உண்மையைச்சொன்னால், வைரஸின் மூலம் தெரிவதால் அது என் வேலைக்கு உடனடியாக எந்த உதவியும் செய்யாது,” என்று மருத்துவர் டெஷ்சாம்ப் பிபிசியிடம் கூறினார்.

இருப்பினும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது விஷயங்கள் உறுதியாகத்தெரியவருவது, மற்றொரு உலகளாவிய சுகாதார அவசரநிலையைத் தடுக்க உதவும் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

“என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அறிவியல் ரீதியாக இது எங்கிருந்து வந்தது என்பது வருங்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »