Press "Enter" to skip to content

டெல்டா திரிபு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஆஸ்திரேலியா, ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் இப்போது தான் கொரோனா இரண்டாம் அலையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று புதிய கட்டுப்பாடுகள் செயல்பாட்டிற்கு வந்தன.

நாளை டெல்லியில் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள், திருமண மண்டபம் போன்ற சமூக விழாக் கூடங்கள் திறக்கப்படவிருக்கின்றன. ஹரியானா மாநில அரசும் சில தளர்வுகளை நாளை முதல் அமல்படுத்தவிருக்கிறது.

நிபுணர்களோ கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்து எச்சரிக்கையோடு இருக்குமாறும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற விஷயங்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி வருகிறார்கள். அதோடு இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் எனவும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பல நாடுகளில் கொரோனாவின் டெல்டா திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியா

கொரோனா தடுப்பு பணிகள்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு மிக சமீபத்தைய உதாரணம் ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் மட்டும் 128 பேர் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு ஜூலை 09ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது போக குவின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பல மாதங்களில் முதல்முறையாக, ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில், ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த புதிய பிரச்னை குறித்து விவாதிக்க, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஓர் அவசர கூட்டத்தை நடத்தினார். நான்கு மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து தங்கள் எல்லைகளை மூடி இருக்கிறார்கள்.

சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய உத்தரவுகளுக்குப் பிறகு சுமார் 50 லட்சம் மக்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவுகள், ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரத்தில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத புதிய உச்சம். கடந்த ஆகஸ்ட் 23 – 29ஆம் தேதி வரையான காலத்தில் கூட 135 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதம் முதல், நாள் ஒன்றுக்கு சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 30 – 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் இதுவரை 4.7 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, பாதிக்கப்படுபவர்கள் இறப்பதும் அதிகரித்து இருக்கிறது. ஜூன் 20 – 26ஆம் தேதி வரையான காலத்தில் 3,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

இதற்கு முன் இந்த அளவுக்கு அதிகமான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்படவில்லை. இந்த காலகட்டத்தில் 1.32 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஜனவரி முதல் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது.

ரஷ்யாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றில் பெரும்பாலானோருக்கு டெல்டா திரிபு தொற்று ஏற்பட்டிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி முகமையில் கூறப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ரஷ்யா என உலகம் முழுக்க சுமார் 85 நாடுகளில் இந்த ஆபத்தான கொரோனா திரிபு பரவிக் கொண்டிருக்கிறது.

போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்யாவில் மொத்தம் 11.52 சதவீத பேருக்கு மட்டுமே இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் சில பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் யூரோ 2020 கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு எந்தவித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

வங்க தேசம்

நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்துகள்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத்தில் ஜூன் 27 (சனிக்கிழமை) ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன் ஒரே நாளில் இத்தனை கொரோனா மரணங்கள் நிகழ்ந்ததில்லை.

கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் விதத்தில் சில தளர்வுகளுடன் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பொது போக்குவரத்துகள் நிறுத்தப்படவிருக்கின்றன. அரசு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை மட்டும் வைத்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

வணிக வளாகங்கள் (மால்கள்) கூட செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே காலை 8 முதல் மாலை 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து மற்றும் இந்தோனீசியா

தாய்லாந்திலும் நிலைமை வங்கதேசத்தைப் போலத் தான் இருக்கிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். தாய்லாந்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது கூட நாள் ஒன்றுக்கு 3,000 – 4,000 பேர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தோனீசியாவிலும் இதே நிலை தான். கடந்த வாரத்தில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஜனவரிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய உயிரிழப்பு எண்ணிக்கை இது. ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பிரிட்டன்

கொரோனா தடுப்பு பணிகள்

பட மூலாதாரம், Getty Images

டெல்டா திரிபு கொரோனா வைரஸால் பிரிட்டன் அரசு தன் கட்டுப்பாடுகளை ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது. கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் கொரோனா விதிமுறைகளைத் தளர்த்த பேச்சு வார்த்தை நடந்து வந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், பிரிட்டனில் சுமார் 14,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.கடந்த டிசம்பர் மாதம் முதல் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நிலையாக குறைந்து வந்தது.

ஆனால் இந்த டெல்டா திரிபு வந்த பிறகு பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

இஸ்ரேல்

இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

டெல்டா திரிபால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஜுலை 09ஆம் தேதிக்குள் 12 – 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு, குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் அந்நாட்டின் பிரதமர். ஜூலை 09ஆம் தேதியில் இருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

இஸ்ரேல் தன் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதத்தினருக்கு இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது. இஸ்ரேலில் ஏப்ரல் மாதத்தில் முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

அலுவலகம் போன்ற உள் அரங்குகளில் முகக்கவசம் அணிவதை ஜூன் 15ஆம் தேதி தளர்த்தியது. ஆனால் சமீபத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் மீண்டும் முகக்கவசம் அணிவது இஸ்ரேலில் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »