Press "Enter" to skip to content

டொனால்ட் ட்ரம்ப்: கொரோனா வூஹான் ஆய்வக கோட்பாடு மூலம் செல்வாக்கைப் பெருக்கும் புதிய உத்தி

  • தாரா மெக்கெல்வி
  • வெல்லிங்டன், ஒஹியோ

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் தான் தோன்றியது என்கிற கோட்பாடு ஆரம்பத்தில் நம்பப்படவில்லை. இப்போதுவரை, அது நிரூபிக்கப்படவிலை என்ற போதும், தற்போது அக்கோட்பாட்டை பலரும் நம்பத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதைப் பயன்படுத்தி தன் ஆதரவாளர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை ஓஹியோ மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் பேசிய போது, தான் சரி என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அறிவியல்பூர்வமாக சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என தன் நம்பிக்கையைக் குறித்துப் பேசினார்.

டொனால்ட் ட்ரம்ப்

பட மூலாதாரம், Getty Images

சிவப்பு நிற உடையோடு, மீண்டும் அமெரிக்காவை சிறப்பான நாடாக்குவோம் என்கிற வாசகங்கள் கொண்ட தொப்பியை அணிந்து கொண்டு, தெற்கு க்ளிவ்லாண்டில் குழுமி இருந்த ஆண் பெண் ஆதரவாளர்களுக்கு மத்தியில் “கொரோனா வூஹானின் ஆய்வகத்தில் இருந்து வந்தது என நான் கூறினேன்” என தன் ஆதரவாளர்களிடம் கூறினார். அப்படி ட்ரம்ப் சொன்ன உடன் மக்கள் ஆர்ப்பரித்தனர்.

“கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வந்திருக்கலாம் என இப்போது அவர்கள் கூறுகிறார்கள்” என ட்ரம்ப் கூறிய உடன் மக்கள் கூட்டம் மீண்டும் ஆராவாரம் எழுப்பியது.

சில மாதங்களுக்கு முன்பு வரை சில ஊடகங்களும், சில விஞ்ஞானிகளும் இதை நிராகரித்து வந்தனர்.

2020 ஏப்ரலில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியில் இருந்த போது, மக்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆய்வகத்திலிருந்து பரவிய கோட்பாட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என கூறினார்.

அப்போது அமெரிக்காவில் கொரோனா கடுமையாக பரவிக் கொண்டு இருந்தது. அதுவே பிறகு அமெரிக்க பொருளாதாரம் மற்றும் ட்ரம்பின் அரசியல் வாழ்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. அமெரிக்காவில் ஆறு லட்சம் பேருக்கும் மேல் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள்

இப்போது வரை அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை.இப்போது வரை வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிந்து இருக்கலாம் என்பது ஒரு யோசனை அல்லது கோட்பாடு தான், அதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பலருக்கோ அக்கோட்பாடு பெரிதும் நம்பத் தகுந்த ஒன்றாகிவிட்டது.

அமெரிக்காவின் ரகசிய உளவுத் துறை அறிக்கை ஒன்றில், உலகம் முழுக்க கொரோனா பரவத் தொடங்குவதற்கு முன், கடந்த நவம்பர் 2019 காலத்தில் வூஹான் ஆய்வகத்தைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது எனக் கூறுகிறது. இது சம்பந்தப்பட்ட செய்திகள் கடந்த மே மாதம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு இவ்வாண்டின் தொடக்கத்தில் வூஹான் ஆய்வகத்தைச் சென்று பார்வையிட்டது. அதன் பிறகு கொரோனா ஆய்வகத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் குறித்து விஞ்ஞானிகள் பேசத் தொடங்கினர்.

டொனால்ட் ட்ரம்போ தான் சரி என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்பது இயற்கையாகத் தோன்றியது என்றே நான் கருதுகிறேன், இருப்பினும் ஒரு சரியான காரணத்தைக் கண்டுபிடிக்கும் வரை நாம் அனைவரும் திறந்த மனதோடு இருப்போம்… ஆனால் விஞ்ஞானிகளோ இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றே கருதுகின்றனர்” என பிபிசி செய்திகளிடம் கூறினார் அமெரிக்க அதிபரின் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ளும் அணியின் ஒருங்கிணைப்பாளர் அந்தோனி ஃபாசி.

கடந்த மே மாதம், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எப்படி தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான புலனாய்வு விசாரணை ஒன்றுக்கு உட்தரவிட்டார் அமெரிக்க அதிபர். இவ்விசாரணை முடிவுகள் இவ்வாண்டு கோடை காலத்தில் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றியவர்கள், அங்கிருந்து தான் கொரோனா பரவியது என்பதை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்கள். சீன அதிகாரிகளோ, தங்களுக்கு எதிராக வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுகளுக்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

மேலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது எனவும் பதிலளித்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா குறித்த விசாரணைகளை சீனா தடுப்பதாக அதன் மீது குற்றசம் சாட்டப்பட்டது.

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்கலாம் என்கிற கோட்பாட்டு அமெரிக்காவில் உணர்வுப் பூர்வமாக செறிவடைந்து வருகிறது. ட்ரம்பின் விமர்சகர்களோ, கொரோனாவை சரியாக கட்டுப்படுத்தாததால் ஏற்பட்ட பேரழிவுக்கு ட்ரம்ப் பொறுப்பேற்காமல், சீனாவை குற்றம்சாட்டுகிறார் என்கிறார்கள்.

தொடக்கத்தில் பெரும்பாலான அமெரிக்க விஞ்ஞானிகள் இவ்வாதத்தை மறுத்தனர். இக்கோட்பாட்டை ஆதரிப்பதற்கு பதிலாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஒரு விலங்கிலிருந்து உருவாகி இருக்கலாம், வெளவ்வாலில் இருந்து தோன்றி இருக்கலாம் என கூறினர். பல மாதங்களுக்குப் பிறகும் அது நிரூபிக்கப்படவில்லை.

பழமைவாதிகளோ, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வூஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்தது என்கிற ட்ரம்பின் யோசனையை கையில் எடுத்துக் கொண்டார்கள். விஞ்ஞானிகள் வெளவ்வால்களை ஆய்வகத்தில் வைத்து சோதித்ததாகவும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஒரு ஆய்வகத்தில் இருந்து கசியவிடப்பட்டதாகவும் கூறுகிறார் ட்ரம்ப்.

இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து பழமைவாதிகளின் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை விட இக்கோட்பாட்டை அதிகம் நம்புவதாக மார்னிங் கன்சல்ட் வாக்கெடுப்பு கூறுகிறது. சுமார் 46 சதவீத குடியரசுக் கட்சியினர் இக்கோட்பாடு குறித்து கேட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்த தன் ஆரம்ப கால மதிப்பீடுகளை டொனால்ட் ட்ரம்ப் அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்கிறார்.

டொனால்ட் ட்ரம்ப்

பட மூலாதாரம், EPA

“பாருங்கள் நான் கூறியது உண்மையாகிவிட்டது. நான் குறிப்பிட்ட போது யாரும் என்னை நம்பவில்லை என்று கூற விரும்புகிறார் டொனால்ட் ட்ரம்ப்” என அக்ரோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் அறிவியல் பேராசிரியர் டேவிட் கோஹென் கூறுகிறார்.

ட்ரம்ப் இப்போதும் அமெரிக்காவின் பல பகுதிகளில் பெரிதும் கவனிக்கப்படாதவராக இருக்கிறார். தன்னை தாக்கிப் பேசியவர்களை, தான் வென்றுவிட்டதாக, தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் நிறுவ, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எங்கு தோன்றியது என்கிற சர்ச்சையை பயன்படுத்துகிறார். ட்ரம்பின் ஆதரவாளர்கள் அதை விரும்புகிறார்கள்.

ட்ரம்பின் ஆதரவாளர்களில் ஒருவரான பொறியாளர் பால் ரிக்கி ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் ட்ரம்பின் கூட்டத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டார். இவர் ட்ரம்பின் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆய்வகத்திலிருந்து பரவியது என்கிற கோட்பாட்டை ஆதரிக்கிறார்.

“கொரோனா தோற்றம் குறித்து ட்ரம்ப் கூறியது சரிதான் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக அவர் (ட்ரம்ப்) உணர்கிறார் என நான் கருதுகிறேன். அவர் மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லோரும் தாங்கள் கருதியது சரி என்கிற கருத்து நிரூபிக்கப்பட்டதாகக் கருதுகிறோம்” என்கிறார் ரிக்கி.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ட்ரம்பின் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தோற்றம் குறித்த கோட்பாட்டுக்கு விஞ்ஞானிகள் கொஞ்சம் முன்கூட்டியே முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம் என்கிறார்கள்.

“கொரோனா ஆய்வகத்தில் இருந்து தான் தோன்றியது. வேறு எங்கிருந்து அது வந்திருக்கும்?” என்கிறார் வெல்லிங்டனில் ஆலைத் தொழிலாளியாக இருக்கும் ஜேம்ஸ் க்ராப்.

ட்ரம்ப் கூறியது சரியே, ஆனால் ஊடகங்கள் அவரை பொருட்படுத்தவில்லை, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்கிற விஷயத்தில், ட்ரம்பின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

ஹோப் பாரோஸ்

ட்ரம்பின் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கோட்பாடு குறித்து விவாதித்த போது “ட்ரம்ப் கூறியது சரி” என்கிறார் ஹோப் பாரோஸ். அவரது கணவர் ஜெஃப்ஃபும் ட்ரம்ப் கூறியது 100 சதவீதம் சரி என ஆமோதிக்கிறார்.

“ஊடகங்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களை உருவாக்க விரும்புகிறார்கள்” என்கிறார் பொது ஒப்பந்ததாரரான மைக்கெல் பார்னெஸ்.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ட்ரம்ப் கூறியதோடு அறிவியல் பொருந்திப் போவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலரும் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »