Press "Enter" to skip to content

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு: நாட்டை ஆளும் ஒரே சக்தியின் வியப்பூட்டும் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images

சீனா 1949 அக்டோபர் 1 முதல் ஒரே கட்சியால் ஆளப்படுகிறது. அதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி.

சேர்மன் மாவோவின் காலத்திலிருந்து நாட்டை பொருளாதார அதிகார மையமாக மாற்றும் திசையில் கட்சி செயல்பட்டது. ஆனால் அந்தப் பாதையில் எந்த எதிர்ப்பையும் கட்சி சகித்துக்கொள்ளவில்லை. கருத்து வேறுபாடுகளை வேருடன் கிள்ளி எறிந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி நூறாண்டு நிறைவைக்கொண்டாட இருக்கும் நிலையில், நாட்டின் முன்னேற்றத்தில் இந்தக்கட்சியின் பங்கு என்ன, அது சீனாவை எவ்வாறு வழி நடத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்களுக்கு நேரம் அதிகம் இல்லையென்றால் சுருக்கமாகவும், உங்களுக்கு நேரம் இருந்தால் விரிவாகவும் இதை படிக்கலாம்.

சுருக்கமான விவரம்

அரசு, காவல் துறை முதல் ராணுவம் வரை நாட்டின் முழு கட்டுப்பாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் உள்ளது..

சுமார் 90 மில்லியன் (9 கோடி) உறுப்பினர்களுடன், இது ஒரு கோபுரம் போல ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பொலிட் ப்யூரோ மற்றும் அனைத்திற்கும் மேலாக அதிபர் ஷி ஜின்பிங் உள்ளார்.

தேசிய மக்கள் காங்கிரஸ் என்ற நாடாளுமன்றம் இருக்கும்போதும் அது கட்சித் தலைமையால் எடுக்கப்படும் முடிவுகளை கேள்வி ஏதும் இல்லாமல் ஆமோதிக்கிறது.

கருத்து வேறுபாடுகளை ஒடுக்க, ஊடகங்கள் மற்றும் இணையத்தின் மீதும் கட்சிக்கு இறுக்கமான பிடி உள்ளது.

சீனா மீதான பற்று என்பது கட்சி மீதான பற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அரசின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக நெறிகள், தேசிய ஒத்திசைவு மற்றும் வளர்ச்சிக்காக நிராகரிக்கப்படுகின்றன.

விரிவான விவரம்

சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் ஒரு கட்சி அரசுதான் செயல்படுகிறது என்று சொல்லலாம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. பல சிறிய கட்சிகள் இருக்கும்போதும் கூட, அவைகள் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளன.

நிறுவனர் மாவோ சேதுங்கின் கீழ், கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான சர்வாதிகார சோஷியலிசத்தை அமல்படுத்தியது. ஆயினும்கூட ‘முன்னேற்றிச் செல்வதற்கான நீண்ட பாய்ச்சல்’ (The Great Leap Forward) என்ற இயக்கத்தின் பொருளாதார தோல்வி, நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் கலாசாரப் புரட்சியின்போது ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

1976இல் மாவோ இறந்த பிறகு, டெங் சியாவ் பிங் அமல்செய்த சீர்திருத்தங்களுடன் நாடு மெதுவாக தேக்க நிலையிலிருந்து வெளியே வந்தது.

தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் 2012ல் ஆட்சிக்கு வந்தார். சீனா உலகளாவிய வல்லரசாக உருவெடுப்பதை அவர் வழிநடத்தி வருகிறார்.

மேலிருந்து கட்டுப்படுத்தப்படும் கோபுரம்

சீனாவின் மக்கள்தொகையில் சுமார் 7% பேர் கட்சியின் உறுப்பினர்கள். அரசியல், வணிகம் அல்லது பொழுதுபோக்கு போன்ற எதுவாக இருந்தாலும் தொழில் ஏணியில் ஏற விரும்பும் எவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமான உறுப்பினராக இருப்பது அவசியம்.

ஈ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் ஜாக் மா, தொலைத் தொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவகர் ரென் ஷெங்ஃபி, அல்லது நடிகை ஃபேன் பிங்பிங் போன்ற பிரபலங்களுக்கும் கூட இது பொருந்தும்.

கட்சி கொள்கைகளுக்கு எதிராக யாராவது செல்கிறார்கள் என்றால், ரகசியமான தடுப்புக்காவல் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்தும் தங்களைக் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த ஆண்டு நடிகை ஃபேனுக்கும் இதுதான் நடந்தது.

கட்சி அமைப்புகள் ,உள்ளூர் மட்டத்திலிருந்து தொடங்கி, தலைமை வரை அனைத்தையும் தேர்ந்தெடுக்கின்றன. தேசிய கட்சி காங்கிரஸ் ஒரு மையக் குழுவைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தக்குழு பொலிட் ப்யூரோவை தேர்வு செய்கிறது.

இந்தத் தேர்தல்கள் வழக்கமாக முன்பே தீர்மானிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன, உண்மையான வலு பொலிட் ப்யூரோவிடம் உள்ளது.

அனைத்திற்கும் மேலே இருக்கும் அதிபர் ஷி ஜிங்பிங், வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதற்கான வழியை 2017ஆம் ஆண்டில், கட்சி ஏற்படுத்திக்கொடுத்தது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

அவரது பெயரையும் சித்தாந்தங்களையும் அரசியல்சாசனத்தில் பொறிக்கவும் கட்சி வாக்களித்தது. அவர் கட்சி நிறுவனர் மாவோ சேதுங்கின் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

சக்திவாய்ந்த பொலிட் ப்யூரோ

அரசு, காவல்துறை, ராணுவம் போன்ற அனைத்துமே கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

பொலிட் ப்யூரோ, கட்சி வரிசை சரியாக செயல்படுவதை உறுதிசெய்கிறது மற்றும் மூன்று முக்கிய அமைப்புகளையும் அது கட்டுப்படுத்துகிறது:

  • மாகாண சபை
  • மத்திய ராணுவ ஆணையம்
  • தேசிய மக்கள் காங்கிரஸ் அல்லது நாடாளுமன்றம்.

மாகாண சபை என்பது பிரதமரின் தலைமையிலான அரசாகும். தற்போது பிரதமராக இருக்கும் லி கெக்கியாங், பதவியில் அதிபருக்கு கீழே இருப்பவர்.

நாடு முழுவதும் கட்சி கொள்கைகளை செயல்படுத்துவதே அதன் பணி. உதாரணமாக தேசிய பொருளாதார திட்டம் மற்றும் அரசின் வரவு செலவுத் திட்டத்தை நிர்வகித்தல் போன்றவை.

ராணுவத்திற்கும் கட்சிக்கும் இடையிலான தொடர்பு இரண்டாம் உலகப் போருக்கும் அதன் பின்னர் நடந்த உள்நாட்டுப் போருக்கும் முந்தையது. சீனாவின் ஆயுதப் படைகளை வழிநடத்தும் ராணுவ ஆணையம், இந்த நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான வீரர்களைக்கொண்ட உலகின் மிகப்பெரிய ராணுவமும், இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

மக்கள் கருத்துகள் மீது இறுக்கமான பிடி

சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கருத்து வேறுபாட்டை பொறுத்துக்கொள்ளாது. உண்மையான எதிர்க்கட்சிகள் எதுவும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அரசை விமர்சிப்பவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆபத்து நிலவுகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீதான அடக்குமுறை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அதிபர் ஷி ஜிங்பிங் ஆட்சியின் கீழ் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கட்சி உறுப்பினர்களையும் விட்டுவைக்கவில்லை.

ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த பிராந்திய கட்சி தலைவராக இருந்த போ ஜிலாய், ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர் என 201 ஆம் ஆண்டில் ஒரு விசாரணையில் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தான் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதாக சீனா வலியுறுத்துகிறது. கூடவே லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டுவருவது தனிநபர் சுதந்திரத்தைவிட முக்கியமானது என்று கூறி கருத்து வேறுபாடுகளை கடுமையாக ஒடுக்கும் தனது போக்கை நியாயப்படுத்துகிறது.

சமூக ஊடகங்கள் உட்பட எல்லாவிதமான ஊடகங்களும் இணையமும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. சீனாவின் “கிரேட் ஃபயர்வால்” என்ற இணைய தணிக்கை, பல மேற்கத்திய செய்தி வலைத்தளங்கள், கூகுள், ஃபேஸ்புக், யூட்யூப் மற்றும் ட்விட்டர் போன்றவைகளின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.

அன்றாட வாழ்க்கையின் கணினி மயமானமயமாக்கலானது, மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்த கட்சியை அனுமதிக்கிறது. மக்களின் விசுவாசத்தை கண்காணிக்கும் ‘சோஷியல் க்ரெடிட் சிஸ்டமும்’ இதில் அடங்கும்.

ஊடகங்களின் மீதான முழுக்கட்டுப்பாடு, பொதுமக்களின் கருத்தை திசைதிருப்பவும் கட்டுப்பாட்டை அமல்படுத்தவும் கட்சிக்கு உதவியுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »