Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபன் செல்வாக்கு: பாகிஸ்தான் பதறுவது ஏன்?

  • கமலேஷ் மட்டேனி
  • பிபிசி செய்தியாளர்

கமலேஷ் மட்டேனி

பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், AFP/ GETTY IMAGES

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவரும் நிலையில் , அங்கு தாலிபன்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில், ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை தாலிபன் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படை விலக்கம், மே 1ஆம் தேதி தொடங்கியது. அதன் பின்னர்,அரசுப் .படைகளுக்கு எதிரான மோதலை தாலிபன் அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் அதிகரித்து வரும் நடவடிக்கைகள் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் கவலை அளிக்கிறது.

அமெரிக்கப் படைகள் விலகிய பின்னர் ஆப்கானிஸ்தானில் வன்முறை மற்றும் அராஜகம் நிலவினால் பாகிஸ்தான் அந்த நாட்டுடனான எல்லையை மூடிவிடும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஏற்கனவே 35 லட்சம் ஆஃப்கன் அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளது. ஆனால் இப்போது மேலும் அதிக அகதிகளை நாடு ஏற்காது என்று குரேஷி கூறினார். அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் தாலிபன்களோடு, பாகிஸ்தான் தாலிபன்களும் வலுப்பெற்றுவருவது குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கவலை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக தனது மண்ணை அமெரிக்கா பயன்படுத்துவதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பதை ஷேக் ரஷீத் மீண்டும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்க தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்(டிடிபி) மற்றும் பிற கூறுகளை தாலிபன் அனுமதிக்காது என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானுக்கும் தாலிபனுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருப்பதாக கருதப்படும் நிலையில், பாகிஸ்தானின் இந்தக் கவலைகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி

பட மூலாதாரம், KAY NIETFELD/POOL VIA REUTERS

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தாலிபன்களை சம்மதிக்கவைப்பதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தாலிபனுடன் பாகிஸ்தானுக்கு நல்ல உறவு உள்ளது.

தற்போதைய ஆப்கானிய அரசுடனான பாகிஸ்தானின் இடைவெளி, தாலிபன் ஆட்சிக்கு வந்தால் குறையக்கூடும். இந்த நிலைமை இந்தியாவிற்கும் ஒரு சவாலாக மாறலாம்.

1996இல், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பு அரசமைத்தபோது, அந்த அரசை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.

இருப்பினும், இப்போது தாலிபன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது பாகிஸ்தானுக்கு புதிய சவால்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சவால்கள் பாதுகாப்பு மட்டுமல்லாது பொருளாதார மட்டத்திலும் பாகிஸ்தானுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் தாலிபன்

பாகிஸ்தானின் தொல்லைகளுக்கு ஒரு முக்கிய காரணம், தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்(TTP) ஆகும். இது பாகிஸ்தான் தாலிபன் என்றும் அழைக்கப்படுகிறது.

இது பாகிஸ்தானில் ஷரியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீவிர இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு 2007 டிசம்பர் மாதத்தில், 13 தீவிரவாத குழுக்களால் இணைந்து நிறுவப்பட்டது.

பாகிஸ்தான் தாலிபான், பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து மோதல் போக்கில் உள்ளது. அண்மையில் இந்த அமைப்பின் வலுக்கோட்டையான ஒரு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த ஒரு காவல் துறைகாரர் கடுமையாக தாக்கப்பட்ட செய்தி வெளியானது.

இதே தீவிரவாத அமைப்பு 2014இல் பெஷாவரில் உள்ள ஒரு ராணுவப் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இதில் கிட்டத்தட்ட 200 குழந்தைகள் பலியாயினர்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இந்த அமைப்பு குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வலுப்பெறுவதால், பாகிஸ்தான் தாலிபன்களும் ஊக்கம் பெறுவார்கள் என்பதே பாகிஸ்தானின் கவலை. ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரமாக செயல்படக்கூடும்.

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபான் செல்வாக்கு: பாகிஸ்தான் பதறுவது ஏன்?

பட மூலாதாரம், Alvaro Ybarra Zavala/gettyimages

இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் கவலை நியாயமானது என்று இஸ்லாமாபாத்தின் மூத்த பத்திரிகையாளர் ஹாரூன் ரஷீத் கருதுகிறார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் தாலிபன், பாகிஸ்தானுக்காக,தெஹ்ரீக்-இ-தாலிபனுக்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் குறைவு என்கிறார் அவர்.

“ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதலில் ஆட்சியில் இருந்தபோது, பாகிஸ்தான் தாலிபன் இருக்கவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தாலிபன்கள் மீண்டும் அரசமைத்தால், பாகிஸ்தான் தாலிபன்கள் குறித்த அவர்களின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை இப்போது சொல்வது கடினம்,” என்கிறார் ஹாரூன் ரஷீத்.

“ஆனால், ஆப்கானிஸ்தான் தாலிபன் பாகிஸ்தான் தாலிபானுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை வலுக்கட்டாயமாக தடுக்க முயற்சிக்கும் எந்த அறிகுறியும் இப்போது தென்படவில்லை. இருவருக்கும் ஒரே கருத்தியல் உள்ளது. அவற்றுக்கு இடையே ஒற்றுமைகள் உள்ளன, எனவே இது பாகிஸ்தான் மீது மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்,” என்கிறார் அவர்.

“நல்ல தாலிபன், மோசமான தாலிபன்”

நல்ல தாலிபன் மற்றும் மோசமான தாலிபன் என்ற சிந்தனை, பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவித்திருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் கே.பரத்வாஜ் கூறுகிறார்.

“ஆப்கானிஸ்தான் தாலிபனை வலுப்படுத்துவதன் மூலம் நீங்கள் பாகிஸ்தான் தாலிபனிடமிருந்து விடுபட முடியாது. தன் நோக்கத்தை நிறைவேற்றும் திசையில் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் நகரும். இது பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மையையும், உள் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடும்,” என்கிறார் அவர்.

2014இல் பாகிஸ்தான் ராணுவ பள்ளி ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பின் எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், A MAJEED/GETTYIMAGES

பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி பேசுகிறது, இதனால் பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு ஆபத்து உள்ளது. ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க அந்த அமைப்பு தீவிரவாத நடவடிக்கைகளை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பிற தீவிரவாத அமைப்புகள்

அண்மையில் நடந்த நிதி நடவடிக்கை பணிக்குழுவின்(FATF) கூட்டத்தில், பாகிஸ்தான் மீண்டும் “க்ரே” பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதாக கூறப்படுவதே, இதற்குக் காரணம். இருப்பினும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும் FATF இந்த முறை பாராட்டியுள்ளது.

ஆயினும், ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வலுப்பெறுவதால், பாகிஸ்தானில் தற்போதுள்ள தீவிரவாத அமைப்புகள் பலம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. க்ரே பட்டியலில் இருந்து வெளியேற பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது பின்னடைவையும் ஏற்படுத்தக்கூடும்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபனுக்கும் இடையிலான உறவுகள் நன்றாகவே இருப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் அரசு, தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதையும் பாகிஸ்தான் விரும்பவில்லை.

“ஆப்கானிஸ்தானில், ‘ஒரு கட்சி அரசு’ இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து சிறிய குழுக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்றும் அஷ்ஃரப் கானி, அப்துல்லா அப்துல்லா அல்லது தோஸ்தம் என அனைவருக்கும் அரசில் பங்கு கிடைக்க வேண்டும் என்றும் அது நினைக்கிறது. இது மோதல் வெடிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. “என்று ஹாரூன் ரஷீத் கூறுகிறார்.

“தற்போதைய தாலிபன் அமைப்பு 1990களின் இருந்த தாலிபன் அல்ல. அது இப்போது மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது. கூடவே அரசியல் ரீதியாக வலுவாகவும் உள்ளது. அவர்கள் மீது பாகிஸ்தானின் செல்வாக்கு முன்பை விட குறைவாகவே உள்ளது. ஓரளவிற்கு, அவர்கள் பாகிஸ்தான் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால் இறுதி முடிவை தங்களுக்கு ஏற்றவகையில் எடுப்பார்கள். அதனால்தான் பாகிஸ்தான் தாலிபன்கள் கட்டுப்படுத்த விரும்புகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

Why is Pakistan worried about the rising speed of the Taliban?

பட மூலாதாரம், Getty Images

டூராண்ட் லைன்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை 19ஆம் நூற்றாண்டில் தனது வேர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் வடக்குப் பகுதிகள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த 1893ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசு ஆப்கானிஸ்தானுடன் 2640 கி.மீ எல்லையை வரையறுத்தது. அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் சர் மோரித்மார் டுராண்ட் மற்றும் அமீர் அப்துர் ரஹ்மான் கானுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் காபூலில் கையெழுத்தானது.

இந்தக்கோடு, டூராண்ட் லைன் என்று அழைக்கப்படுகிறது. இது பஷ்டூன் பகுதி வழியாக செல்கிறது.

ஆனால் ஆப்கானிஸ்தான் டூராண்ட் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கவில்லை.

பாகிஸ்தானுடனான சில எல்லைப்பகுதிகள், மற்றும் சிந்து நதி வரை சில பகுதிகள், தனக்குச் சொந்தமானவை என்று ஆப்கானிஸ்தான் கூறிவருகிறது.

பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருக்கும் தாலிபன் ஆட்சிக்கு வந்தால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்குமா என்பதும் ஒரு கேள்வி.

இதற்கான வாய்ப்பு குறைவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தாலிபன்கள் முன்பு ஆட்சியில் இருந்தபோது, இந்த விஷயத்தை அவர்கள் எழுப்பவும் இல்லை, அதை தீர்க்கவும் இல்லை என்று ஹாரூன் ரஷீத் கூறுகிறார். அந்த நேரத்தில் கூட, பாகிஸ்தான் அதிக நெருக்குதல் கொடுத்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்போதும் அது நடக்க அதிக வாய்ப்பில்லை.

அகதிகள் நெருக்கடி

ஆப்கானிஸ்தானில் இருந்துவரும் அகதிகள் காரணமாக, பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பிலும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடி உள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் காரணமாக அங்கு வளர்ந்த உறுதியற்ற தன்மை, பாகிஸ்தான் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புவியியல் மற்றும் சமய ரீதியிலான நெருக்கம் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானியர்களுக்கு சிறந்த புகலிடமாக மாறுகிறது.

கடந்த நான்கு த

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபான் செல்வாக்கு: பாகிஸ்தான் பதறுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சாப்தங்களாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மில்லியன் கணக்கான அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.

இந்த அகதிகள் எந்தவொரு அகதி முகாமிலும் வசிப்பதில்லை.அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடிமக்களுடன் இடைகலந்து வாழ்கின்றனர். அவர்கள் பாகிஸ்தானில் கல்வி பெறுகிறார்கள. மேலும் வணிகத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள்.

பெரும்பாலான அகதிகள், கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தானிலிருந்து வருகிறார்கள். அவர்களில் ஏராளமானோர் கராச்சியிலும் உள்ளனர்.

அதிகரித்து வரும் தாலிபன் ஆக்கிரமிப்பு மற்றும் சண்டை காரணமாக ஆப்கானிஸ்தானில் வன்முறை மற்றும் பதற்றம் அதிகரித்தால், மக்களின் இடப்பெயர்வும் அதிகரிக்கும் என்று ஹாரூன் ரஷீத் கூறுகிறார்.

பாகிஸ்தான் ஏற்கனவே அகதிகளின் பொருளாதார சுமையை தாங்கி வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் உறுதியான முடிவை எட்டவில்லை என்றால், பாகிஸ்தான் மீண்டும் அகதிகள் பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும்.

“பாகிஸ்தானில் ராணுவத்தின் தலையீடு இருந்தாலும்கூட அங்கு ஒரு ஜனநாயக அரசு உள்ளது. ஜனநாயகத்தை ஆதரிக்கும் ஒரு முற்போக்கான வர்க்கமும் அங்கு உள்ளது. தீவிரவாதிகளின் வளர்ந்து வரும் சக்தி, பாகிஸ்தானின் இந்த வர்கத்தினருக்கு பிரச்னைகளை உருவாக்க க்கூடும்,” என்கிறார் பேராசிரியர் சஞ்சய் .

“சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பாகிஸ்தான், தாலிபன்களை ஆதரித்தபோதும் இது நடந்தது. ஆனால் சோவியத் யூனியனுக்கு எதிராக போரிட்ட முஜாஹிதீன் அகதிகள், பாகிஸ்தானின் முற்போக்கான கருத்துக்களுக்கு அச்சுறுத்தலாக மாறினர்.”

நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவுவதோடு கூடவே ஆப்கானிஸ்தான் அரசில் தனது செல்வாக்கும் அதிகரிக்கும் வகையிலான ஒரு தீர்வை பாகிஸ்தான் தற்போது விரும்புகிறது,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »