Press "Enter" to skip to content

கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி

பட மூலாதாரம், Getty Images

கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.

அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவில் அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைட்டனில் பதிவானது. அதற்கு முந்தைய வாரம்வரை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடக்கவில்லை.

வான்கூவர் புறநகர் பகுதி காவல் துறை கேப்டன் மைக் கலன்ஞ், “உங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிகர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையை கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்னை,” என்று தெரிவித்துள்ளார்.

கனடா

பட மூலாதாரம், Getty Images

காவல்துறையைப் பொருத்தவரை, “வான்கூவர் புறநகர் பகுதிகளான பர்னபீ, சர்ரீ ஆகிய பகுதிகளில் மட்டும் வெப்ப தாக்கம் காரணமாக 69 உயிரிழப்புகளை கண்டுள்ளனர். அவர்களில் பலரும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த வயோதிகர்கள்.

சிறிய கிராமமான லைட்டனில் வாழும் குடியிருப்புவாசி மேகன் ஃபேண்டரிச் குளோபல் அண்ட் மெயில் நாளிதழிடம் கூறுகையில், “வசிப்பிடங்களை விட்டு வெளியே செல்வதே இயலாத ஒன்றாகி விட்டது,” என்று கூறினார்.

இந்த வெப்பநிலையை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்த மேகன், தமது மகளை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வெளியே உள்ள வெப்பநிலை குறைவாக பதிவாகும் இடத்துக்கு அனுப்பி விட்டதாக கூறினார்.

“இயன்றவரை நாங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறோம். அதிக வெப்பநிலையும் வறண்ட வானிலையும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால், 47 டிகிரியில் வாழ்வதற்கும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலையின் தாக்கத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

கனடா

பட மூலாதாரம், Getty Images

கனடா வானிலை துறை, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

“உலக அளவில் மிகவும் குளுமையான மற்றும் பனி அதிகம் பொழியும் நாடு எங்களுடையது. அடிக்கடி பனி மழை, பனிக்காற்று பற்றி நாம் அதிகம் பேசியிருப்போம். ஆனால், இப்படியொரு வெப்பநிலை பதிவாகும் என்பது பற்றி இதுவரை நாம் பேசியது கிடையாது. இப்போதுள்ள நிலையுடன் துபையை ஒப்பிட்டால் அங்கு இதை விட குளுமையான நிலை இருக்கும் என்பது போல உள்ளது,” என்று கனடா வானிலை துறையின் வெப்பநிலை மூத்த ஆய்வாளர் டேவிட் ஃபிலிப்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவை வெப்பச்சலனம் எப்படி பாதிக்கும்?

கனடா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நகரங்களான போர்ட்லாந்து, சியாட்டில் ஆகியவை மட்டுமே 1940களுக்கு பிறகு மிக அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளன.

ஓரிகனில் உள்ள போர்ட்லாந்தில் அதிகபட்சமாக 46.1 டிகிரியும் சியாட்டிலில் 42.2 டிகிரியும் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது. ஒரு கனமான கேபிளை உருக்குவதற்கு இந்த அளவு வெப்பமே போதுமானது. இதன் காரணமாக தமது சங்கிலி மின்னேற்றி சேவையை போர்லாந்து நகர நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

வாஷிங்டனின் ஸ்போகேன் பகுதியில் வெப்பம் காரணமாக அதிக அளவில் ஏசி சாதனங்களை பயன்படுத்தி வருவதால் மின்சார தேவை அதிகமாகியுள்ளது.

சியாட்டில் நகரில் உள்ள ஒரு குடியிருப்புவாசி, ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசும்போது, “வாஷிங்டன் மாகாணம் முழுவதும் பாலைவனம் போல வெப்பநிலை நிலவுகிறது,” என்று கூறினார்.

கனடா

பட மூலாதாரம், Getty Images

“வழக்கமாக வெப்பநிலை கடுமையாக இருக்கும்போது நகரவாசிகள் விளம்பரம்டுகள், அரைக்கால் பேன்டுகளை அணிவார்கள். ஆனால், இப்போதுள்ள வெப்பநிலை அப்படியெல்லாம் ஆடை அணிய முடியாத அளவுக்கு ஆக்கியிருக்கிறது,” என்று அந்த குடியிருப்புவாசி தெரிவித்தார்.

சியாட்டில் நகரில் உள்ள அமேசான் நிறுவனம், அதன் தலைமையத்தில் வெளிப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பாதுகாப்பான மற்றும் குளுமையான பகுதிகளில் தங்கியிருக்க வசதிகளை செய்துள்ளது. போர்ட்லாந்து நகரில் உள்ள குடியிருப்புவாசிகளும் குளுமை மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். வாஷிங்டனில் பெரும்பாலான மக்கள் நீர்வீழ்ச்சி ,செயற்கை நீரூற்று இடங்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

தீவிர பருவநிலை நிகழ்வுகள், வரும் காலங்களில் பருவநிலை மாற்றத்தை கடுமையாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், தற்போதைய வெப்பநிலை பதிவை உலகளாவிய வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »