Press "Enter" to skip to content

27 முறை தரையில் அடிக்கப்பட்ட தைவான் ஜூடோ சிறுவன் மரணம் – “இனி உனக்கு வலிக்காது தம்பி”

பட மூலாதாரம், Getty Images

தைவானில் ஜூடோ தற்காப்புக் கலை பயிற்சியின்போது 27 முறை தரையில் அடிக்கப்பட்டவ 7 வயது சிறுவன் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தைத் தொடர்ந்து அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

சம்பவ நாளில் தன்னுடன் பயிற்சி பெற்ற மாணவரும் பயிற்சியாளரும் காயம் ஏற்பட்ட மாணவருடன் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

70 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் சுவாசக் கருவிகளை அகற்ற அவரது பெற்றோர் முடிவு செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மாணவர் காயம் அடைந்த விவகாரத்தில் வயதில் 60களில் உள்ள அவரது பயிற்சியாளர் மீது சிறாருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான உடல் ரீதியாக காயம் விளைவித்தல் தொடர்புடைய சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஹோ என்ற அவரது கடைசிப் பெயரை வைத்து மட்டுமே அடையாளப்படுத்தப்படும் அந்த பயிற்சியாளர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு லட்சம் டாலர்கள் செலுத்தி பிணையில் வெளி வந்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் இறப்பைத் தொடர்ந்து, உயிரைப் பறிக்கும் வகையிலான காயம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் மாற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகமான தைவான் நியூஸ் கூறியுள்ளது.

ஜூடோ

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த பயிற்சியாளருக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை வரை கிடைக்கக் கூடும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஜூடோ பயிற்சி கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, சிறாரின் உறவினர் ஒருவர் முன்னிலையில் நடந்துள்ளது. அந்த பயிற்சி சிறாருக்கு பொருத்தமற்றது என்பதை அவரது தாயாரிடம் காண்பிப்பதற்காக அதை தனது செல்பேசியிலும் சிறாரின் உறவினர் பதிவு செய்துள்ளார்.

அந்த காணொளியில்உயிரிழந்த சிறுவனை விடவும் மூத்த சக மாணவன் அவரை பல முறை தாக்குவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. தாக்கப்படும்போது சிறார் அலற, அவரை எழுந்து நிற்கும்படி அவரது பயிற்சியாளர் உத்தரவிடும் குரலும் காணொளியில் உள்ளது. ஒவ்வொரு முறை எழுந்து நிற்கும்போதும், அந்த சிறாரை மூத்த மாணவர் நையப்புடைத்து தரையில் அடித்து வீழ்த்தும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.

கடைசியில் சக்தியற்றவராக சிறார் துவண்ட நிலையில், அவர் மயக்கமானது போல நடிப்பதாக அவரது பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

சம்பவத்தின்போது மாணவர் அடிவாங்குவதை பார்க்கும்போதே அவரது உறவினர் ஏன் அவர் தாக்கப்படுவதை தடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், தைவானில் ஆசிரியர்களை மதித்து அவர்களின் சொல்லுக்கு அடிபணிவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஒருவித மரியாதை என்றும் அது எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

நடந்த சம்பவத்தால் உயிரிழந்த சிறாரின் உறவினர் அதிர்ச்சியில் உறைந்ததாக அவரது சகோதரியும் சிறாரின் தாயாருமான பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜூடோ பயிற்சியகம் நடத்துவதற்கான உரிமத்தை குற்றம்சாட்டப்பட்ட பயிற்சியாளர் பெற்றிருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

“எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அன்றைய தினம் பள்ளிக்கு அவனை அழைத்துச் செல்லும்போது அம்மா போய் வருகிறேன் என்று எனது மகன் கூறினான். ஆனால், இரவு உடல் தளர்ந்த அவனை மட்டுமே பார்க்க முடிந்தது,” என்று சிறாரின் தாயார் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, சிறார் சேர்க்கப்பட்டிருந்த ஃபென்குயென் மருத்துவமனை நிர்வாகம், சிறாரின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் பேசியதில், சிறாரின் உயிர் காக்கும் சுவாசக் கருவிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

சிறார் இறந்த சம்பவத்துக்கு இரங்கலும் வேதனையும் தெரிவித்து தைவானிய சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “இனி உனக்கு வலி இருக்காது தம்பி” என பலரும் வேதனை இடுகைகளை பகிர்ந்தனர்.

வேறு சிலர், “சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனை பறிகொடுத்த குடும்பத்துக்கு இழப்பீடு தரப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தி கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »