Press "Enter" to skip to content

‘ஏமன் நடிகை இந்த்திசார் அல்-ஹம்மாதிக்கு சிறையில் சித்திரவதை’ – என்ன நடந்தது?

பட மூலாதாரம், INTISAR AL-HAMMADI

போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் ”அநாகரிகமாக நடந்து கொள்ளுதல்” ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஏமன் நடிகை மற்றும் மாடல் ஒருவர் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் நியாயமற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் படையினரால் 20 வயதாகும் இந்த்திசார் அல்-ஹம்மாதி சனாவில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுக்கிறார்.

விசாரணையாளர்கள் இந்த்திசார் அல்-ஹம்மாதியை உடல் ரீதியாகவும் வசவுகளாகவும் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த்திசாருக்கு இனரீதியான அவமானப்படுத்துதலும் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவரது வழக்கறிஞர், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அவர் வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரைக் கைது செய்துள்ள விசாரணையாளர்கள் அவருக்கு ”கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனை” நடத்தப்படும் என்று மிரட்டியதாகவும் வழக்கறிஞரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந்த்திசார் இரண்டு முறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரைச் சந்திக்கவும் அவருக்காக வாதாடவும் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களும் தம்மிடம் காட்டப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுடன் போரிட்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஏமனின் மிகப்பெரிய நகரான சனா உள்ளிட்ட நாட்டின் வடமேற்கு பகுதிகள் ஹூத்தி படையினர் வசம் உள்ளன.

பட மூலாதாரம், EPA

இந்த்திசார் அல்-ஹம்மாதியின் தந்தை ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்; அவரது தாய் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். இந்த்திசார் நான்காண்டுகள் மாடலாகப் பணியாற்றியதுடன், இரு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

பழமைவாத இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏமன் நாட்டில், கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளை மீறி தலையை மறைக்காத ஆடைகள் அணிந்து இணையதளத்தில் அவரது படங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஹூத்தி படையின் கிளர்ச்சியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு சனாவில் கைது செய்யப்பட்ட பொழுது இந்த்திசார் வேறு மூன்று பேருடன் தேர் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் குற்றவியல் விசாரணைகள் இயக்குநரகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட முதல் 10 நாட்களுக்கு அவரிடம் எந்த விதமான தகவல் தொடர்பும் மேற்கொள்ள இயலவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.

“அவரது செல்பேசி பிடுங்கப்பட்டது; அவர் மாடலிங் செய்வதற்காக எடுக்கப்பட்ட படங்கள் அநாகரிகமான நடவடிக்கைகள் என்று கருதப்பட்டன. புதிய கிளர்ச்சியாளர்களின் பார்வையில் இவர் ஒரு பாலியல் தொழிலாளி,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

“சனாவில் உள்ள மத்திய சிறைக்கு மார்ச் மாதம் இந்த்திசார் மாற்றப்பட்டார். அங்குள்ள சிறை காவலர்கள் அவரை ‘அடிமை’ என்றும் ‘நடத்தை சரியில்லாத பெண்’ என்றும் கூறினர்.

இதற்குக் காரணம் அவரது தாயின் எத்தியோப்பிய பூர்விகம் மற்றும் அடர் நிறம் உடைய தோல் ஆகியவையே,” என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »