Press "Enter" to skip to content

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு: மாவோ முதல் ஜின்பிங் வரை வரலாற்றை மாற்றிய 11 முழக்கங்கள்

  • ஜோ பாயில்
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், AFP

சீனாவின் காலஞ்சென்ற தலைவர் மாவோ சேதுங் பிறந்து 127 ஆண்டுகள் கடந்துவிட்டன. தனது மூன்று தசாப்த கால ஆட்சியில் மாவோ, அரசியல் முழக்கங்களை கலை வடிவத்திற்கு உயர்த்தினார்.

மாவோவிற்குப் பிறகு வந்த தலைவர்கள் அவரது பல தீவிரமான கோட்பாடுகளை கைவிட்டாலும் கூட, அவர்களும் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான முழக்கங்களை வெளியிட்டு வருகின்றனர். சீனாவை மாற்றிய 11 கோஷங்கள் இங்கே.

1. 100 மலர்கள் மலரட்டும் (百花齐放) 1956

கோஷங்களின் பயன்பாடு அன்றாட சீன உரையில் வடிவங்களுடன் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது. அங்கு குறுகிய இசைநயமான சொற்றொடர்கள்,பேசுவதற்கான தெளிவான வழியாக கருதப்படுகிறது.

இந்த வகையான சொற்றொடர்கள் பெரும்பாலும் சீன மொழியில் நான்கு எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன, மேலும் அவை 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

மாவோ பெரும்பாலும் தொன்மையான சீன படைப்புகளில் இருந்து வரிகளை எடுத்துக்கொண்டார். அவரது செய்தி பெருமளவு மக்களின் இதயத்தில் பதிவதற்காக இசைநயம்மிக்க சொற்றொடர்களைப் பயன்படுத்தினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு: சீனாவை மாற்றிய 11 முழக்கங்கள்

பட மூலாதாரம், IISH/Stefan R Landsberger Collections

கிமு 221 இல் முடிவடைந்த ‘பழமையான சீன வரலாற்று ‘காலத்தின் ஒரு கட்டத்திலிருந்து “நூறு மலர்கள் மலரட்டும்; நூறு சிந்தனைகள் போட்டியிடட்டும்” என்ற சொற்றொடர் எடுக்கப்பட்டது.

கட்சி மீதான விமர்சனங்கள் அனுமதிக்கப்படும் என்பதைக் குறிக்க மாவோ இதைப் பயன்படுத்தினார். ஆனால் விமர்சனம் வந்தபோது, அது மிகவும் பரவலாகவும், வன்மத்துடனும் இருந்தது. அதிகாரிகளை விமர்சித்து ராட்சத சுவரொட்டிகள் தொங்கவிடப்பட்டன. மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கட்சி கொள்கைகளை வெளிப்படையாக கண்டித்தனர்.

நூறு மலர்கள் காலம் தொடங்கி ஒரு வருடம் கழித்து, மாவோ அதை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

“மார்க்சிசம் அல்லாத கருத்துக்கள் தொடர்பாக எங்கள் கொள்கை என்னவாக இருக்க வேண்டும்? சோஷியலிச காரணம் குறித்த தெளிவு இல்லாத எதிர் புரட்சியாளர்கள் மற்றும் நாசகாரர்களைப் பொருத்தவரை, விஷயம் எளிதானது, அவர்களின் பேச்சு சுதந்திரத்தை நாங்கள் பறிக்கிறோம்,” என்று அவர் ஒரு உரையில் கூறினார்.

வலதுசாரி எதிர்ப்பு , நடப்பிற்கு வந்தது. அறிவுஜீவிகள் கண்டனம் செய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது கிராமப்புறங்களில் வேலைக்கு அனுப்பப்பட்டனர்.

இது மனம் திறந்து பேச வைப்பதற்கான உண்மையான முயற்சியா அல்லது “எதிர் புரட்சியாளர்கள்” தங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் ஒரு இழிவான சூழ்ச்சியா? என்று கல்வியாளர்கள் இந்தப்பிரச்சாரம் குறித்து இப்போதும் வாதிடுகின்றனர்

2. சிந்திக்க துணிவு, செயல்படத்துணிவு (敢想) 1958

மாவோ, விவசாயிகளை கூட்டு பண்ணைகளில் சேர ஊக்குவித்த, இரண்டாண்டுகால கிரேட் லீப் ஃபார்வர்டின் காலகட்டத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான முழக்கம் இது. “சிந்திக்கத் துணி, பேசத் துணி, செயல்படத் துணி” என்பது விவசாயிகளை தனது வழியைப் பின்பற்ற ஊக்குவிப்பதற்காக மாவோ பயன்படுத்திய அறிவுரை.

ஆனால் அந்தக் காலகட்டத்தில் விவசாய உற்பத்தி சரிந்தது. மாவோவின் கொள்கைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக சுமார் 3 கோடி மக்கள் உயிரிழந்தனர்

பேரழிவை ஏற்படுத்திய கிரேட் லீப் ஃபார்வர்டுடன் அதன் தொடர்பு இருந்தபோதிலும்கூட இந்த சொற்றொடரை மாவோவின் ஆதரவாளர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து பயன்படுத்தினர்.

3. நான்கு “பழைய விஷயங்களை” நொறுக்கு (破四旧) 1966

நான்கு "பழைய விஷயங்களை" நொறுக்கு

பட மூலாதாரம், Getty Images

கலாச்சாரப் புரட்சியின் அத்துமீறல்களை சுருக்கமாகக்கூறும் ஒரு முழக்கம் இது. “பழையது” என்று கருதப்படும் எதையும் அழிக்க இளம் பணியாளர்களை அது அறிவுறுத்தியது – பழைய கருத்துக்கள், பாரம்பரியங்கள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் என இது வரையறுக்கப்படுகிறது.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஜெனிஃபர் ஆல்டெஹெங்கர், “மேற்கத்திய நாட்டு மக்கள் மனதில் இது’ கோவில்களை அழிக்கும் இளைஞர்களின்’ பிம்பங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது,” என்கிறார். ஆனால் இந்த இயக்கம் சூடுபிடித்தது. பல வயதானவர்களும் அறிவுஜீவிகளும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். அவர்களில் பலர் இறந்தனர்.

கலாச்சாரப் புரட்சி “கிளர்ச்சி செய்வது நியாயமானது” உள்ளிட்ட முடிவில்லாத முழக்கங்களை எழுப்பியது. இது “நான்கு பழையவற்றை அடித்து நொறுக்கு” என்பதன் துணை முழக்கமாக இருந்தது.

நிரந்தர புரட்சியை உருவாக்கும் முயற்சியில் மாவோ கிட்டத்தட்ட அனைத்து வகையான அதிகாரத்தின் மீதும் தாக்குதல்களை ஊக்குவித்தார். கிரேட் லீப் ஃபார்வர்ட் தனது நற்பெயரை கடுமையாக சேதப்படுத்திய பின்னர் அவர் தனது அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயன்றார்.

1976 இல் அதிகாரபூர்வமாக முடிவடைந்த இந்த இயக்கம், பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. கலாச்சார புரட்சி தொடர்பான வன்முறையில் லட்சக்கணக்கானவர்கள் இறந்ததாக சிலர் நம்புகின்றனர்.

4. நான்கு பேர் கொண்ட கும்பலை அடித்து நொறுக்குங்கள் (倒 四人帮) 1976

நான்கு பேர் கொண்ட கும்பலை அடித்து நொறுக்குங்கள்

பட மூலாதாரம், IISH

மாவோவின் மரணத்திற்குப் பிறகு, உயர்தலைமை பதவிக்கான அதிகாரப் போட்டி வெடித்தது.

மாவோ நியமித்த வாரிசான ஹுவா குஃபெங், உயர்தலைமையின் அனைத்து அதிகாரபூர்வ பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் மாவோவின் மனைவி ஜியாங் கிங் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளின் எதிர்ப்பை அவர் சந்தித்தார்.

அந்த நால்வரும் கலாச்சாரப் புரட்சியின் மிதமிஞ்சிய செயல்களுடன் தொடர்புடையவர்கள்.எனவே அவர்கள் விரைவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் பிரச்சார சுவரொட்டிகள் அவர்களை தேச துரோகிகளாக சித்தரித்தன. அவர்களின் முகத்தில் சிவப்பு சிலுவையுடன் வரையப்பட்ட மிகவும் பிரபலமான கேலிச்சித்திரங்கள், “வாங்-ஜாங்-ஜியாங்-யாவ் கட்சி எதிர்ப்பு குழுவை உறுதியுடன் தூக்கி எறியுங்கள்!” என்று கூறின.

பின்னர் வந்த டெங் ஷியாபிங், ஹூவாவை பதவியிலிருந்து நீக்கினார். சீனாவில் ஒரு சீர்திருத்த சகாப்தத்தை அவர் கொண்டுவந்தார். இறுதியில் இந்த நால்வர் மீதும் விசாரணை நடந்தது. நீதிமன்ற அறையில் நடைபெற்ற விசாரணை தொலைக்காட்சியில் ஒளிபரபானது. குறிப்பாக ஜியாங் கிங் சம்பந்தப்பட்ட காரசாரமான வாதங்கள் மக்களால் கூர்ந்து பார்க்கப்பட்டது. இந்த நால்வருக்கும் . ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட்து. ஜியாங் கிங் 1991 இல் தற்கொலை செய்துகொண்டார் என்று நம்பப்படுகிறது.

5. சீர்திருத்தம் மற்றும் தாராளமயமாக்கல் (改革) 1978

டெங் ஷியாபிங்

பட மூலாதாரம், AP

டெங் ஷியாபிங் பொருளாதார சீர்திருத்தத்திற்கான பாதையில் சீனாவை கொண்டுவந்தார். முதலில் அவர் “வர்க்கப் போராட்டம்” பற்றிய குறிப்புகளை அமைதியாக கைவிட்டார். முந்தைய 12 ஆண்டுகளாக செய்தித்தாள்களில் அச்சிடப்பட்டுவந்த மற்றும் வாசக அட்டைகளில் இடம்பிடித்திருந்த இந்த முழக்கம் கைவிடப்பட்டது.

அதற்கு பதிலாக, செய்தித்தாள்கள் மற்றும் சுவரொட்டிகள் இப்போது “நான்கு நவீனமயமாக்கல்களால்” நிரப்பப்பட்டன. இது 1960 களில் முன்மொழியப்பட்ட கொள்கையாகும். ஆனால் மாவோவின் கீழ் இது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

“சீன குணாதிசயங்களைக் கொண்ட சோஷியலிசம்” யோசனையையும் அவர் நிறுவினார். இது மார்க்சிச வாதத்திலிருந்து விலகுவதற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை தலைமைக்கு அளித்தது.

டெங்கின் திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள் “சீர்திருத்தம் மற்றும் தாரளமயமாக்கல்”என்று ஆனது.

இது இறுதியில் சீனாவின் அரசியலமைப்பின் முன்னுரையில் இணைக்கப்பட்டது. “அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சீன மக்கள் தொடர்ந்து மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தையும் சோஷியலிசப் பாதையையும் கடைப்பிடிப்பார்கள். சீர்திருத்தம் மற்றும் தாராளமயமாக்கலுக்காக விடாமுயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுவார்கள்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

6. உண்மைகளில் இருந்து உண்மையைத் தேடுங்கள் (实事求是) 1978

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு: சீனாவை மாற்றிய 11 முழக்கங்கள்

பட மூலாதாரம், IISH

நடைமுறைவாதத்தின் சிறிய அறிகுறி, பொது அறிவின் ஒரு பகுதி மற்றும் வெறுப்பூட்டும் தெளிவின்மை ஆகியவை கொண்ட இந்த முழக்கம், கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

“இது ஒரு பண்டைய சீன தத்துவக் கருத்தாகும், ஆனால் [1970 களின் பிற்பகுதியில்] சீர்திருத்த காலத்தில், அது உண்மையில் தொடங்குகிறது” என்று மருத்துவர் ஆல்டெஹெங்கர் கூறுகிறார்.

இது போன்ற சொற்றொடர்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய விவாதங்களில் முன்னோடிகளைக் கொண்டுள்ளன. “இயற்கையின் நிலைத்தன்மையைப் பின்பற்றுங்கள் : நான்கு பருவங்களுக்கு கட்டுப்படுங்கள்” போன்ற வாக்கியங்களை . சட்ட வல்லுநர்கள் வடிவமைத்தனர்.

உண்மையில், சீன கோஷங்கள். “செங்யுவுடன்” நெருக்கமாக இருக்கின்றன. அதாவது நான்கு எழுத்துக்கள் கொண்ட சொற்றொடர்கள் அல்லது ஆழமான கலாச்சார அர்த்தத்துடன் கூடிய தொடர் சொற்றொடர்கள்.

“உண்மைகளிலிருந்து உண்மையைத் தேடுங்கள்” இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமை அதை மீண்டும் பயன்படுத்தி, சட்டபூர்வமான தன்மையைக் பெறும்விதமாக இந்த சொற்றொடர் மாவோவால் 1930 களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். “நாம் நம் மனதை விடுவித்து, உண்மைகளிலிருந்து உண்மையைத் தேடி, எல்லாவற்றிலும் யதார்த்தத்திலிருந்து முன்னேறி, கோட்பாட்டை நடைமுறையுடன் ஒருங்கிணைத்தால் மட்டுமே, நமது சோஷியலிச நவீனமயமாக்கல் திட்டத்தை சுமுகமாக முன்னெடுத்துச்செல்லமுடியும்” என்று 1978 ஆம் ஆண்டு உரையில் டெங் கூறினார்.

இது ஒரு பரந்த கருத்து என்றும் ஒரு புறநிலை உண்மை இருப்பதாகவும், மருத்துவர் ஆல்டெஹெங்கர் கருதுகிறார். உண்மையில், யார் தலைமையில் இருக்கிறார்களோ அவர்கள் இதன் அர்த்தத்தை ஆணையிட முடியும்.

7. குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், அதிக பன்றிகளை வளர்த்திடுங்கள்

குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், அதிக பன்றிகளை வளர்த்திடுங்கள்

பட மூலாதாரம், IISH

ஒரு குழந்தைக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட சொற்றொடர்களின் ஒரு வினோதமான எடுத்துக்காட்டு இது.

இத்தகைய கோஷங்கள் எல்லாமே மத்திய தலைமையின் அங்கீகாரத்தைப்பெற்றவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஆர்வமுள்ள உள்ளூர் அதிகாரிகளால் பல தசாப்தங்களாக சுவர்களில் இந்த வாசகங்கள் பதிக்கப்பட்டன.

மேலும் பல கோஷங்கள் சேர்க்கப்பட்டுள்ளன: “உழைப்பைத் தூண்டுங்கள்! கருக்கலைப்பு செய்யுங்கள்! அதிகப்படியான குழந்தையைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்”. “ஒரு குடும்பத்திற்கு அதிகப்படியான குழந்தை இருந்தால், முழு கிராமத்திற்கும் கருத்தடை செய்யப்படும்” “மேலும் ஒரு குழந்தை என்றால் மேலும் ஒரு கல்லறை”.

சீனாவின் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவதால், ஒரு குழந்தைக் கொள்கை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப திட்டமிடல் ஆணையம் , 2007 ஆம் ஆண்டின் உத்தரவிலும், 2011 ஆம் ஆண்டின் பிரச்சாரத்திலும், நேரடி முழக்கங்களுக்கான மென்மையான மாற்று வாசகங்களை பரிந்துரைத்தது.

“அதிக குழந்தைகளை சுமக்க பூமித்தாய் மிகவும் சிரமப்படுகிறாள்” போன்ற சொற்றொடர் இந்த புதிய அணுகுமுறையின் கீழ் பரிந்துரைக்கப்பட்டன.

8. மூன்று பிரதிநிதித்துவம் (三个代表) 2000

மூன்று பிரதிநிதித்துவம்

பட மூலாதாரம், IISH

சீன அரசியலின் தலைமைப்பொறுப்பை 10 ஆண்டுகள் வகித்த ஜியாங் ஜெமினின் இந்த செல்லத்திட்டம் சீனாவின் அரசியலமைப்பின் முன்னுரையில் பொறிக்கப்பட்டுள்ளது. “மூன்று பிரதிநிதித்துவம்” மிக முக்கியமான ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திரு ஜியாங் அதை 2000 வது ஆண்டின் உரையில் முன்வைத்தார். மேலும் கட்சியின் 80 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2002 ஆண்டின் உரையின் போது இது குறித்து மேலும் விரிவாகக் கூறினார்.

“சீனாவின் மேம்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சீனாவின் மேம்பட்ட கலாச்சாரத்தின் வளர்ச்சியின் நோக்குநிலை மற்றும் சீனாவில் பெரும்பான்மையான மக்களின் அடிப்படை நலன்கள் ஆகியவற்றின் தேவைகளை கட்சி எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஆனால் பழமையான படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட மாவோவின் சில சொற்றொடர்களைப் போலல்லாமல், இவற்றில் சில ஆழமான கருத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.

மாறாக இது, ஒரு பொறியியலாளராக திரு ஜியாங்கின் பின்னணியை பிரதிபலிக்கிறது. மாவோவை போல உத்வேகம் அளிக்கும் கவிஞர்-வீரராக இல்லாமல் அவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநராக இருந்தார்.

9. இணக்கமான சமூகம் (和谐) 2005

சீனாவின் அரசியலமைப்பில் சேர்க்கப்படுவதே, ஒரு முழக்கத்தின் வெற்றியை மதிப்பிடும் வழி. ஆகவே ஹு ஜிந்தாவோ பதற்றத்துடன் காத்திருந்தார். சீனாவின் நாடாளுமன்றத்தில் (NPC) பிரதிநிதிகள், 2005 ஆம் ஆண்டில் அவரது ‘இணக்கமான சமுகம்” முழக்கத்தை அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என்று முதலில் முன்மொழிந்தனர். ஆனால் அவர் இன்னும் காத்திருக்கிறார்.

இருப்பினும், வெற்றியின் பிற அளவுகோல்கள் உள்ளன. ‘இணக்கமான சமுகம்’ என்ற ஆரம்ப யோசனையிலிருந்து டஜன் கணக்கான கொள்கைகள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் வெளிவந்துள்ளன. (அல்லது அதன் குடையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன).

எடுத்துக்காட்டாக, கிங்காய் மற்றும் உரும்கியின் மேற்கு நகரங்களை மேம்படுத்தும் பெரிய திட்டங்கள் அதன் கீழ் வருகின்றன. ஆனால் திபெத் மற்றும் சின்ஜியாங்கில் சுதந்திரமான பேச்சு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளும், இதே யோசனையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

1980 கள் மற்றும் 1990 களில் விரைவான பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக திரு ஹு தனது இந்த முழக்கத்தை தொடங்கினார். : “ஒரு இணக்கமான சமூகம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், நீதி, நேர்மை, நட்பு மற்றும் உந்துசக்தி ஆகியவற்றைக்கொண்டிருக்கவேண்டும்,” என்று 2005 ஆம் ஆண்டு ஆற்றிய ஒரு உரையில் அவர் கூறினார்

இருப்பினும், ‘இணக்கமான சமூகம்’ என்ற முழக்கத்தை சீன வலை பயனர்கள் பரவலாக கேலி செய்துள்ளனர். தணிக்கைகளை மீறாமல் அரசை விமர்சிக்கும் ஒரு வழியாக “இணக்கம்” என்ற சொல்லைப்போலவே ஒலிக்கும் “நதி நண்டு” என்பதற்கான சீன வார்த்தையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

10. மூன்று உயர் கோட்பாடுகள் (三个) 2007

இது ‘மோடவுன் இசைக்குழு’ போல தோன்றலாம். ஆனால் சீர்திருத்த எண்ணங்கள் வளர்ந்து வரும் நீதித்துறையை கட்டுப்படுத்தும் ஒரு வழியாக ஹு ஜிந்தாவ் இதை கருதினார்.

” பெரிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், தங்கள் பணியில் எப்போதுமே கட்சியின் கொள்கைகள், மக்களின் நலன் , அரசியலமைப்பு மற்றும் சட்டம் ஆகியவற்றை மிக உயர்ந்ததாக கருதவேண்டும்” என்று அவர் கூறினார்.

சட்ட அனுபவம் இல்லாத வாங் ஷெங்ஜுன்ஐ, உச்சநீதிமன்றத் தலைவராக, நியமித்ததன் மூலம், திரு ஹூ சட்ட சீர்திருத்தங்களை முடக்கினார்.

நீதிமன்றங்கள் மூன்று உயர் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதை திரு வாங் உறுதிசெய்தார். அப்போதிலிருந்து, கட்சியின் நலன்கள் மற்ற இரண்டையும் விட உயர்ந்த இடத்திற்கு வந்தது.

11. சீன கனவு (中国) 2013

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு: சீனாவை மாற்றிய 11 முழக்கங்கள்

பட மூலாதாரம், AFP

‘சீன கனவு’ முழக்கத்தின் வெற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிபராகப்பொறுப்பேற்ற ஷி ஜின்பிங்கிற்கு விருப்பமான முழக்கம் இது. கட்சி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்குக்கூட இந்த முழக்கம் சற்று தெளிவற்றதாகத் தெரிகிறது.

“சீன அரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே சிக்கல் உள்ளது. இந்த முழக்கங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய பொது மக்கள் அல்லது அரசியல் வர்கத்தினரிடையே இப்போது எதிரொலிப்பதில்லை” என்கிறார் வாஷிங்டனில் உள்ள ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் சீன நிபுணர் டாம் கெல்லாக்.

“ஷி ஜின்பிங் ‘சீன கனவு” என்ற முழக்கத்துடன் அதை மாற்ற முயன்றார். ஆனால் அது சிக்கலானது. ஏனென்றால் மற்றவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே அரசியலமைப்பின் சீன கனவு அல்லது சமூக நல்லிணக்கத்தின் சீன கனவு போன்றவற்றை நீங்கள் பெறமுடியும்.”

இந்த முழக்கம் இங்கிலாந்து தொழிற்கட்சியின் 2005 தேர்தல் முழக்கமான, “முன்னோக்கி, பின்நோக்கி அல்ல” என்பதைப்போல தெளிவற்றதாக உள்ளது. அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா அணியின் முழக்கம் ‘முன்னோக்கி” என்று இருந்தது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..

அடிப்படையில், சீன கனவு என்பது எதை வேண்டுமானாலும் குறிக்கும். ஷி ஜிங்பிங் எந்த முழக்கத்திற்கு தன் முழு ஆதரவை அளிப்பது என்று தீர்மானிப்பதற்கு முன் இன்னும் பலவிதமான முழக்கங்களை அவர் முன்வைக்க வாய்ப்புள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »