Press "Enter" to skip to content

ஷி ஜின்பிங் எச்சரிக்கை: “சீன உள்விவகாரத்தில் தலையிட்டால் அடித்து நசுக்குவோம்”

பட மூலாதாரம், Getty Images

சீனா உள்விவகாரத்தில் தலையிடும் அன்னிய சக்திகளின் தலையை நசுக்குவோம் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி இந்த ஆண்டு முழுவதும் தொடர் கொண்டாடங்களுக்கு அந்த நாட்டை ஆளும் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி இன்று நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் பேசிய ஷி ஜின்பிங், சீன உள்விவகாரங்களில் எப்படி நாங்கள் செயல்பட வேண்டும் போன்ற போதனைகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

வர்த்தகம், உளவு பார்த்தல், கொரோனா பெருந்தொற்று போன்ற விவகாரங்களில் சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வரும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கவனமாக கட்டியெழுப்பப்பட்டு வந்த இரு நாட்டு உறவுகள் மோசமான வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஹாங்காங், கொரோனா விவகாரங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தென் சீன கடலில் தமது ஆளுகை வட்டத்தை சீனா பெருக்க முயல்வதாக அந்த கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கு மத்தியில் தன்னை இறையாண்மை வாய்ந்த நாடாக தைவான் கருதும் வேளையில், அதை பிளவுபட்ட தங்களுடைய மாகாணங்களில் ஒன்றாகவே சீனா கருதி வருகிறது. இதனால் தைவான் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தைவான் தீவை சீனா கைப்பற்ற முயன்றால், அந்த தீவை காப்பாற்ற தமது படை பலத்தை பயன்படுத்தும் வகையில் தமது சட்டங்களில் மாற்றம் செய்யவும் அமெரிக்கா தயாராக உள்ளது.

இதுவும் அமெரிக்கா, சீனா இடையிலான இடைவெளி அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில் தங்களுடைய தேச இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுக்கும் சீனர்களின் ஆற்றலை எவரும் குறைத்து மதிப்பிடவோ மத்தியஸ்தம் செய்யவோ முயலக்கூடாது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி குறித்து ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெரும் திட்டத்தில் சீனா இருக்கிறது.

இது தொடர்பாக சிறப்பு “சிவப்பு சுற்றுலா” என்ற பெயரில் வரலாற்று தலங்கள், கட்சியின் அருங்காட்சியகங்கள் மற்றும் புரட்சிகர நினைவுச் சின்னங்களுக்கான பயண திட்டத்தின் மூலமா க வரலாற்றை நினைவுபடுத்தும் முயற்சிகளை சீனா எடுத்து வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுகையின் கீழ்தான் இந்நாடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. உலகளாவிய வல்லரசாகவும் ஆகியிருக்கிறது.

இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது? அக்கட்சியின் அடுத்த கட்டம் என்ன? 

முதலில் சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்படி தொடங்கியது என்பதை பார்க்கலாம்.

வெறும் 100 பேர் கொண்ட குழுவாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, தற்போது சுமார் 92 மில்லியன் உறுப்பினர்களை கொண்டிருக்கும் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. எப்படி?

சீனா

பட மூலாதாரம், Getty Images

கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, மார்க்சிசம் மற்றும் லெனினிஸம் கோட்பாடுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது.   

ரஷ்யாவில் இருந்து கம்யூனிஸ்டுகள் இக்கட்சிக்கான நிதியுதவியையும் ஆதரவையும் அளித்தனர்.  

அவர்களின் உத்தரவுகளை சீன கம்யூனிஸ்டுகள் பின்பற்றினர்.

பின்னர் ஷாங்காய், குவான்ஹு, நன்ஜிங் மற்றும் வூஹான் போன்ற நகரங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்தது

ஆனால் அப்போது சீனாவில் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புறங்களாக இருந்தன. பலரும் விவசாயம் செய்து வந்தனர்.

அதனால், கட்சியின் தலைவர் மாவோ சேதுங், கிராமப்புறங்களில் இக்கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.

பின்னர் ஹுனான் மற்றும் ஸியாங்சி ஆகிய பகுதிகளுக்கு இக்கட்சியை கொண்டு சென்று அங்கிருந்து, முதல் புரட்சிகர தளத்தை கட்ட ஆரம்பித்தார்.

அதாவது கிராமங்களில் இருந்து பின் நகரங்களை குறி வைப்பது தான் இதிலிருக்கும் தந்திரம்.

அது சரியாக வேலை செய்தது. தேசியவாத குயோமின்தாங் கட்சியை வீழ்த்தி, மாபெரும் அரசியல் சக்தியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்து 1949ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இயங்குகிறது?

சீனா

பட மூலாதாரம், Getty Images

மேலிருந்து கட்டுப்படுத்தப்படும் கோபுரம் போல, சொல்லப்போனால் பிரமிட் போன்றது அக்கட்சியின் இயக்கம்.

கட்சியின் பொதுச்செயலாளராக தற்போது இருக்கும் ஷி ஜின்பிங் தலைமையில் 7 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் தலைமைக்குழு எனப்படும் பொலிட் பீரோ தான் மேலிடம்.

இங்குதான் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது. அரசாங்கம், ராணுவம், மற்றும் கட்சியின் பிற முக்கிய அங்கங்களை சேர்ந்த 25 மேலிட அதிகாரிகள் அதற்கு கீழ் வருவார்கள்.

இவர்களை தேர்ந்தெடுப்பது மத்திய குழு.

கட்சி அமைப்புகள், உள்ளூர் மட்டத்திலிருந்து தொடங்கி, தலைமை வரை அனைத்தையும் தேர்ந்தெடுக்கின்றன. தேசிய  காங்கிரஸ் எனப்படும் மைய அமைப்பு ஒரு குழுவைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தக்குழு அரசியல் தலைமைக் குழுவைத் தேர்வு செய்கிறது.

அதற்கு கீழ் 92 மில்லியன் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அனைத்து மூத்த அரசு அதிகாரிகள், மாநில நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக குழுக்கள் என அனைத்தும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள்தான் வரும். கிராமங்களிலும் கூட குழுகள் செயல்படுகின்றன.

நீங்கள் கட்சி உறுப்பினராக இருந்தால், அரசு பொறுப்புகளில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சித்தாந்தம்

சீனா

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தங்கள் சித்தாந்தத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிக கவனம் செலுத்துகிறது.

இந்த காலத்தில் அது இணையத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும்,  தகவல்கள் மற்றும் வரலாற்றை மக்களுக்கு தெரிய வைக்காமல் இருட்டடிப்பு செய்வதாலும் நிகழ்கிறது.

இந்த வழக்கம் மாவோ சேதுங் காலத்தில் இருந்தே நடக்கிறது.

மார்க்ஸ், லெனின் மற்றும் தன் மீது மட்டுமே மக்கள் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மாவோ எண்ணினார்.

சீன பொருளாதாரத்தை  ரஷ்யர்களை விட அதிகமாக உயர்த்த சீனாவிடமே வழி இருப்பதாக மக்களுக்கு தெரியப்படுத்த நினைத்தார்.

1958ஆம் ஆண்டு The Great Leap forward என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாவோ, 5 ஆண்டுகளில் பிரிட்டனின் நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தி திறனை சீனா விஞ்சும் என்று தெரிவித்தார். 

நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. ஆனால், இது தோல்வியில் முடிய, அடுத்த 3 ஆண்டுகள் சீனாவில் பெரும் பஞ்சம் நிலவியது. ஆனால், மாவோ தனது உத்வேகத்தை இழக்கவில்லை.

கட்சிக்குள் இருக்கும் பெளத்த ஜீவிகள் மற்றும் எதிரிகளை இலக்காக கொண்டு 1966ஆம் ஆண்டு மேலும் ஒரு திட்டத்தை தொடங்கினார். 

இதற்காக கட்சி, சில இளைஞர்களை பணிக்கு அமர்த்தியது. இவர்கள் Red Guards என்று அழைக்கப்பட்டனர். வெளிப்படையாகவே எதிரிகளை இவர்கள் தாக்க ஆரம்பித்தனர். பலரும் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

மாவோவுக்கு பிறகு கட்சி எப்படி மாறியது?

சீனா

பட மூலாதாரம், Getty Images

ஒரு தலைமுறை கடந்து, சீனா மிகவும் ஏழ்மையான நாடு என்ற நிலையில் இருந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற நிலைக்கு மாறியது.

மாவோவுக்கு பிறகு வந்த டெங் ஷியோபிங், சீனாவை பொருளாதார சீர்திருத்த பாதைக்கு இட்டுச் சென்றார்.

1978ஆம் இவர் கொண்டு வந்த திறந்த வெளி கொள்கையால், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் தொழில் தொடங்க முன்வந்தன.

டெங் ஆட்சியின் கீழ் சீனா பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அவரது அரசியல் சீர்த்திருத்தங்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

தியானென்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த போராட்டங்களை கட்சி நசுக்கியது. 

2012ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக அதிபர் ஷி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து சமூகத்தில் மீதான பிடி மேலும் இறுகியிருக்கிறது.

பெரும் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, இணையத்தில் தகவல்களை தணிக்கை செய்வதற்கு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், சீனாவிற்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அக்கட்சிக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »