Press "Enter" to skip to content

துவாரகநாத் கோட்னிஸ்: இந்திய மருத்துவரான இவருக்கு ஏன் சீனாவில் சிலை வைத்திருக்கிறார்கள்?

  • பார்த் பாண்ட்யா
  • பிபிசி குஜராத்தி

பட மூலாதாரம், AFP / STRINGER VIA GETTY IMAGES

கொரோனாவால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. முதல் சில அலைகளுக்கே உலகம் சின்னாபின்னமாகிவிட்டது இன்னும் எத்தனை கொரோனா அலைகள் வரவுள்ளன, என்ன மாதிரியான சவால்களை நாம் எதிர்கொள்ளப் போகிறோம் எனத் தெரியவில்லை.

இப்படி ஒரு நெருக்கடியான சூழலில், துவாரக்நாத் கோட்னிஸ் என்கிற இந்திய மருத்துவர் ஆற்றிய சேவைக்காக சர்வதேச அளவில், குறிப்பாக சீனாவில் நினைவுகூரப்படுகிறார்.

அவர் செய்த மருத்துவ சேவைக்காக, சீனாவில் அவருக்கு ஒரு சிலையே வைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி அவர் என்ன செய்தார்? அவர் ஏன் சீனா சென்றார்? மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தாரா இல்லையா?

சீனா – ஜப்பான் போர்

சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் போர் நடந்து கொண்டிருந்த காலமது. அப்போது சீனாவில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால், சீன கம்யூனிஸ்ட் ஜெனரல் ஒருவர் ஜவஹர்லால் நேருவுக்கு மருத்துவ ரீதியில் உதவுமாறு 1938ஆம் ஆண்டு கடிதம் எழுதினார்.

அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர பாவனை ஐந்து மருத்துவர்கள், ஒரு உதவூர்தி வாகனம், 22,000 ரூபாய் ரொக்கம் என உதவிக்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது தான் மருத்துவ பட்டப்படிப்பில் தேறி இருந்தார் துவாரகநாத் கோட்னிஸ். தம் பட்டமேற்படிப்புக்காக தயார் செய்து கொண்டிருந்தார் துவாரகநாத்.

அந்த நேரத்தில் சீனா செல்ல துவாரகநாத்துக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்றுக் கொண்டார். அப்போது பம்பாய் மாகாணத்தில் இருந்த தம் சொந்த ஊரான சோலாபூருக்குச் சென்று தாம் சீனா செல்லவிருப்பதை தம் குடும்பத்திடம் கூறினார். குடும்பத்தினர் துவாரகநாத்தை சீனாவுக்கு அனுப்ப விரும்பவில்லை.

“அந்த காலத்தில், எங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கும் சீனா குறித்து அதிகம் தெரியாது. சீனர்கள் பட்டு விற்பதற்காக இந்தியா வந்தார்கள் என்பது மட்டுமே தெரியும்” என துவாரகநாத்தின் இளைய சகோதரி மனோரமா 2013ஆம் ஆண்டு கூறினார்.

“தன் மகன் வீட்டை விட்டு வெகு தொலைவுக்குச் செல்லவிருக்கிறான், அதோடு அவன் செல்லவிருக்கும் நாட்டில் போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் அவரது தாயார் மிகவும் வருத்தமடைந்தார்” என்றார் மனோரமா.

நூலிழையில் உயிர் தப்பிய இந்திய மருத்துவர்கள்

சீனா

பட மூலாதாரம், Getty Images

துவாரகநாத் செப்டம்பர் 1938-ல் சீன மக்களுக்கு உதவ இந்தியாவின் மருத்துவ மிஷனில் இணைந்ததாக ‘மகான் ஸ்வதந்திர சேனானி மருத்துவர் கோட்னிஸ் கி ஸ்ம்ரிதி மே’ என்கிற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அவரோடு எம். அதுல், பி.கே. பாசு, எம். சோல்கர், டி. முகர்ஜி என நான்கு மற்ற இந்திய மருத்துவர்களும் உடன் சென்றனர். 1939 ஜனவரி 15ஆம் தேதி ஜப்பான் நடத்திய வான் வழித் தாக்குதலில் இந்திய மருத்துவர்கள் கிட்டத்தட்ட நூலிழையில் உயிர் தப்பினர்.

1939 பிப்ரவரியில் மருத்துவர் துவாரகநாத் யினன் பகுதிக்கு வந்தடைந்தார். பிறகு போர் எல்லைக்கு அனுப்பப்பட்டார். போர்முனை மருத்துவர் என்பதால் துவாரகநாத்துக்கு பணி அழுத்தம் அதிகமாக இருந்தது. பல நூறு சீன வீரர்களுக்கு சிகிச்சையளித்தார்.

ஒரு பக்கம் ஜப்பானிய ராணுவத்துடனான மோதலில் சீனர்கள் காயமடைந்து வருகிறார்கள் என்றால் மறுபக்கம், பிளேக் நோயும் பரவத் தொடங்கி இருந்தது. மெல்ல இந்த தொற்று நோய் பொது மக்களையும் பாதிக்கத் தொடங்கியது.

அப்படி ஓர் இக்கட்டான சூழலில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க, ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமக்குத் தாமே பிளேக் தொற்றை ஏற்படுத்திக் கொண்டார்.

ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அவர் இருந்ததாக, அவரது சுய சரிதை குறிப்பிடுகிறது. ஆனால் அதில், தமக்குத் தாமே பிளேக் தொற்றை ஏற்படுத்திக் கொண்டது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

துவாரகநாத் சீனா சென்றிருந்த காலத்தில், தங்கள் மீது நோய் தொற்றை ஏற்படுத்திக் கொண்டு பரிசோதிப்பதுதான் ஒரே வழி என மத்திய மருத்துவ சேவை மைய குழுயின் தலைவரான மருத்துவர் விநாயக் நாரில்கர் கூறுகிறார்.

மருத்துவர் துவாரக்நாத் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் எனும் போது, அவர் தன் உடலில் தான் பரிசோதித்து இருக்க வேண்டும். சீனாவில் கூட இதே போன்ற சோதனைகளை அவர் மேற்கொண்டிருக்கலாம் என்கிறார் மருத்துவர் விநாயக்.

சீனாவில் ஒரு காதல் கதை

மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் சிலை, சோலாபூர், மகாராஷ்டிரா

பட மூலாதாரம், SALAHODDIN SHAIKH, SOLAPUR

சீனர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவச் சென்ற துவாரகநாத்துக்கு சீனாவும், சீனர்களையும் ரொம்பவே பிடித்துப் போனது. எந்த அளவுக்கு பிடித்துப் போனது என்றால், அவர் சீன மொழியில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதுமளவுக்கு பிடித்துப் போனது.

துவாரகநாத் 8வது ரூட் ராணுவத்தில் இருந்தார். பிறகு பிதுன் சர்வதேச அமைதி மருத்துவமனைக்கு இயக்குநரானார். அம்மருத்துவமனையில் தான் க்யோ க்விங்லனைச் சந்தித்தார்.

க்யோ தன் 23வது வயதில் ரூட் ராணுவத்தில் தன்னார்வலராக இணைந்தார். பிறகு மருத்துவர் துவாரகநாத்துக்கு உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார் அச்செவிலியர்.

உயரமான, சுருட்டை முடி கொண்ட துவாரக்நாத் மீது க்யோவுக்கு காதல் ஏற்பட்டது. அவர் துவாரகநாத்துக்கு ஒரு கம்பளிச்சட்டையைப் பரிசளித்தார். அப்படி தொடங்கிய காதல் கதை திருமணத்தில் வந்து சேர்ந்தது. பிறகு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.

1942 டிசம்பர் 09ஆம் தேதி உடல் நலம் குன்றி வெறும் 32 வயதில் திடீரென துவாரகநாத் இறந்து போனதாக ‘மகான் ஸ்வதந்திர சேனானி மருத்துவர் கோட்னிஸ் கி ஸ்ம்ரிதி மே’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மனோரமா, துவாரகநாத்தின் சகோதரி

பட மூலாதாரம், Getty Images

அவர் சீனாவுக்கு வந்த ஐந்து ஆண்டு காலத்திலேயே சீன மக்களின் அன்புக்குரியவராகி இருந்தார். ஜூலை 1942ஆம் ஆண்டு அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததாகவும் சில ஆதாரங்கள் கூறுகின்றன.

துவாரகநாத் கோட்னிஸ் சீன ராணுவ வீரர்களுக்கு மருத்துவ ரீதியாக ஆற்றிய உதவிக்கு, அஞ்சலி செலுத்தும் விதத்தில் சீனாவில் அவருக்கு ஒரு சிலையும் ஒரு சிறிய அருங்காட்சியகமும் நிறுவப்பட்டிருக்கிறது.

அப்போதைய சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான மாவோ சேதுங், துவாரகநாத்தின் உதவியைப் பாராட்டி நெகிழ்ந்தார்.

துவாரகநாத்தின் மரணத்துக்குப் பிறகு, க்யோ க்விங்லன் பல்வேறு இந்திய சீன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்தியாவில் துவாரகநாத் கோட்னிஸை மக்கள் மறந்தார்கள், ஆனால் சீனர்கள் இன்னமும் அவரை மறக்கவில்லை.

போர் நடந்து கொண்டிருந்த சீனாவில் உதவிக்காகச் சென்ற துவாரகநாத், கடைசி வரை இந்தியா திரும்பவே இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »