Press "Enter" to skip to content

பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் நொறுங்கி 17 பேர் பலி – பலர் தப்பினர்

பட மூலாதாரம், Reuters/Bogs Muhajiran

பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் நொறுங்கி 17 பேர் பலியாயினர். எரிந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரப்படி காலை 3.30) இந்த விபத்து நடந்துள்ளது.

ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

C130 ஹெர்குலஸ் என்ற இந்த விமானம் விபத்தில் சிக்கிய இடத்துக்கு மேலே பெரிய அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.

பல கட்டுமானங்கள் உள்ள பகுதிக்கு அருகே, மரங்களுக்கு மத்தியில் விமான பாகங்கள் எரிந்துகொண்டிருப்பதைக் காட்டும் படங்களை அரசு செய்தி முகமை பகிர்ந்துள்ளது.

விழுந்து நொறுங்கி எரிந்துகொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவ போக்குவரத்து விமானம். நாள்: 4 ஜூலை 2021.

பட மூலாதாரம், Reuters

விபத்து நடந்த இடம் ஜோலோ நகரத்துக்கு சில கிலோ மீட்டர் அருகே அமைந்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோ தீவில் உள்ள ககயான் டீ ஓரோ என்ற இடத்தில் இருந்து ராணுவத் துருப்புகளை ஏற்றிக்கொண்டு இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டுள்ளது.

“விமானம் ஓடுபாதையை விட்டு விலகிவிட்டது. அதை சரி செய்ய முயன்றது. ஆனால் முடியவில்லை,” என ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் சோபஜனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தெற்கு பிலிப்பைன்சில் அபு சய்யாஃப் போன்ற இஸ்லாமியவாத தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக ராணுவம் தனது துருப்புகளை அங்கே அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கப்பட்ட துருப்புகளின் ஒரு பகுதியே விபத்தை சந்தித்த சிப்பாய்கள்.

விமானம் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் புலன்விசாரணை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த அனைவரும் மிக சமீபத்தில்தான் அடிப்படை ராணுவப் பயிற்சியை முடித்தவர்கள் என்கிறது ஏ.எஃப்.பி. செய்தி முகமை.

line
Map
1px transparent line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »