Press "Enter" to skip to content

சிங்கப்பூரில் 10ல் 3 பேருக்கு வேலை பறிபோகலாம் என கவலை: இந்தியர்கள் மனநிலை என்ன?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images

சிங்கப்பூர் மக்கள் மத்தியில் எதிர்காலம் குறித்த கவலை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் நீடிக்க முடியுமா என்பதே பெரும்பாலான சிங்கப்பூர் குடிமக்களின் முதல் கவலையாக உள்ளது.

அதே நேரம், ஒட்டுமொத்த ஒப்பீடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது பத்து சிங்கப்பூர்காரர்களில் 9 பேர் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள, ‘கொள்கை ஆய்வு மையம்’ இந்த ஆய்வை மேற்கொண்டது. 2019ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை நீடித்த ஆய்வு நடவடிக்கையின்போது 2,012 சிங்கப்பூர்காரர்களும் அங்குள்ள குடியிருப்பு உரிமை பெற்றவர்களும், தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மனித பண்புகள், மனோபாவம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஆய்வின் முதல் பகுதி அறிக்கை கடந்த பிப்ரவரியில் வெளியானது. அதில், பண்புகள் குறித்து விவரிக்கப்பட்டிருந்த நிலையில், மனோபாவம் தொடர்பிலான இரண்டாம் பகுதி கடந்த மார்ச் மாதம் வெளியீடு கண்டது.

ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் நேரடியாக பேட்டி காணப்பட்டு விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 21 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினரிடம் 2019 நவம்பர் மாதம் தொடங்கி 2020 மார்ச் வரை பேட்டிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சிங்கப்பூர் வாசிகள் மத்தியில் வேலை பாதுகாப்பு குறித்த கவலை உள்ளது தெரிய வந்துள்ளது. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்தும் சிங்கப்பூர்வாசிகள் கவலைப்படுகின்றனர் என்கிறது கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை.

10 பேரில் மூவர் வேலை பறிபோகக் கூடும்

சிங்கப்பூர்

பட மூலாதாரம், Getty Images

சிங்கப்பூரில் 10 பேரில் ஏழு பேர் தங்களை கீழ் நடுத்தர வர்க்கத்தினர் என்று அடையாளம் காட்டிக்கொள்வதாக ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் மூன்றாவது பகுதியில் கொள்கை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்று பேட்டியளித்துள்ள அனைவருமே தங்களது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.

காலப்போக்கில் மாறி வரும் பொது நம்பிக்கைகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து உலகளாவிய அளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற சிங்கப்பூரர்களில் பத்து பேரில் மூவர் தங்களின் வேலை பறிபோகக்கூடும் என்றும், புது வேலை கிடைக்காமல் போகக்கூடும் என்றும் மிகவும் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும், தற்போது படித்துக் கொண்டிருப்பவர்களும் மற்ற அனைத்துப் பிரிவினரைக் காட்டிலும் அதிக கவலையில் உள்ளதாக கூறியுள்ளனர்.

அதாவது, இப்பிரிவினரில் பத்து பேரில் ஏழு பேருக்கு இந்த கவலை உள்ளது. எனவே, வேலை வாய்ப்பு சந்தை குறித்த ஒரு தரப்பினரின் கவலை இதன் மூலம் தெரிய வந்ததாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைய சமூகத்தினரின் அச்சம்

சிங்கப்பூர்

பட மூலாதாரம், Getty Images

இளைய சமுதாயத்தினர் மேலும் பல அச்சங்களையும் வெளிப்படுத்தி உள்ளனர். 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களில் 33.32 விழுக்காட்டினர் தாங்கள் மிகுந்த கவலையில் உள்ளதாக கூறியுள்ள நிலையில், 36 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களிலும் 34.9 விழுக்காட்டினர் இத்தகைய கவலைக்கு ஆட்பட்டுள்ளனர்.

வயதில் மூத்தவர்களின் கவலை இளையவர்களைவிட அதிகமாக உள்ளது. ஏனெனில், இளைய ஊழியர்கள் தங்களுக்கு போட்டியாக இருக்கக்கூடும் என்று மூத்தவர்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

பத்து பேரில் ஆறு பேர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியவில்லையே என கவலைப்படுகின்றனர்.

எதுகுறித்தும் கவலை இல்லை என்று சொல்லக்கூடிய பிரிவினரும் கணிசமாக உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, சுமார் 26.5 விழுக்காட்டினர் தாங்கள் எது குறித்தும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளனர். அந்த எண்ணிக்கை 2020இல் 16.9 விழுக்காடாக சரிந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்று பேட்டி அளித்தவர்களிடம் சமூக மற்றும் வருமான அளவுகளின் அடிப்படையில் தங்களை சுயமதிப்பீடு செய்யுமாறு கொள்கை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டது. அப்போது தாங்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று 36.3 விழுக்காட்டினரும், கீழ்-நடுத்தர வர்க்கத்தினர் என்று 35.4 விழுக்காட்டினரும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சுமார் 75 விழுக்காட்டினர் தாங்கள் நடுத்தர வருமான பிரிவின் கீழ் இடம்பெற்றிருப்பதாக உணர்வதாகத் தெரிவித்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வது யார்?

சிங்கப்பூர்

பட மூலாதாரம், Getty Images

சமூக அடுக்குகளைப் பொறுத்தவரையில், சமூகப் பிரிவுகள், ஊதிய அடிப்படையில் தாங்கள் நடுத்தரமாக இருப்பதையே பெரும்பாலானோர்கள் விரும்புவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

ஆய்வில் பங்கேற்ற, சமூக பொருளியல் மதிப்பீட்டின்படி, கீழ்நிலையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோரைவிட வசதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இப்பிரிவினர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருப்பது தெரிய வருகிறது என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் வசதி குறைந்த மேலும் பலர் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், தாங்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.

1,500 சிங்கப்பூர் டாலருக்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்கள், 1,500 முதல் 2,999 சிங்கப்பூர் டாலர்கள் மாதாந்திர வருமானம் பெறுபவர்களில் 25.8 விழுக்காட்டினர், தாங்கள் 6,999 டாலர்கள் சம்பளம் பெறுபவர்களைவிட மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், 6,999 டாலர்கள் பெறும் பிரிவினரில் சுமார் 22 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வை வழிநடத்திய இணை ஆய்வாளரான மருத்துவர் தியோ கே கீ (Teo Kay Key) இவை ஒப்பீட்டு அளவிலான மாறுபட்ட தளங்கள் என்கிறார்.

“உதாரணத்துக்கு நீங்கள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம். மற்றொருவர் தரை வீட்டில் தனிக்குடும்பமாக வசிப்பதைப் பார்க்கும்போது, அவரைவிட சற்று வசதி குறைந்தவராக உங்களை கருதிக்கொள்ளக் கூடும்.

“அதே சமயம் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதும், அனைத்துத் தேவைகளும் நிறைவேறிய நிலையில், வேளைக்கு உணவருந்தினால் போதும் என்றும் நீங்கள் கருதக்கூடும். இந்த எண்ணமே மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்குமான ஊற்றாக இருக்கலாம்,” என்கிறார் மருத்துவர் தியோ கே கீ.

தமிழ்நாட்டு தொழிலாளர்களின் நிலை

குழாய் சுமந்து செல்லும் தொழிலாளர்கள்.

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் 80 சமுதாயங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட உலகப் பண்புகள் ஆய்வுக்கான அறிக்கையில் மேலும் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றுள் முக்கியமாக, சிங்கப்பூர் மக்களில் பத்து பேரில் ஒன்பது பேர் தங்கள் தேசம் குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளனர். தேசப்பற்றைப் பொருத்தவரையில் ஆசிய நாடுகளில் தாய்லாந்துக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக உலகெங்கிலும் கொழில் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் முன்பாகவே நடத்தப்பட்ட ஆய்வு இது.

எனவே, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்குப் பிறகு மக்களின் மனப்போக்கில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது பதிவு செய்யப்படவில்லை.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொரோனா பரிசோதனை.

பட மூலாதாரம், Reuters

இது குறித்து பிபிசி தமிழிடம் கடந்த ஆண்டிலேயே சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அங்கு பணியாற்றும் தமிழகத் தொழிலாளர்களும், அந்நாட்டு அரசு நன்கு கவனித்துக் கொள்வதாக கூறியிருந்தனர்.

சிங்கப்பூர்காரர்கள் மத்தியில் வேலை வாய்ப்பு, எதிர்காலம் குறித்த கவலை இருப்பதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அத்தகைய நிலை தங்களுக்கு நேரும் என்று தோன்றவில்லை என்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு பணி தொடர்பான எந்த நெருக்கடியும் கவலையும் இல்லை என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

“அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் சிங்கப்பூர் அரசு நல்ல முறையில் கவனிக்கிறது”

கொரோனா நெருக்கடியால் சிங்கப்பூரில் யாருக்கும் வேலை பறிபோகவில்லை என்கிறார் உணவக உரிமையாளரான வை.நடராஜன். மாறாக மேலும் ஆட்கள் தேவை என்பதே உண்மை நிலவரம் என்றும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

“கொரோனா நெருக்கடி காரணமாக சிங்கப்பூர் எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு சென்றவர்களால் மீண்டும் வந்து சேர முடியவில்லை. எல்லைகளைத் திறப்பது தொடர்பில் சிங்கப்பூர் அரசு மிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர் நலன் பேணப்படுகிறது

“சிங்கப்பூர்காரர்களும், நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்றோரும் மட்டுமே நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா நெருக்கடி வேளையில் நாட்டை விட்டு வெளியேறாத மற்ற அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் அரசு நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறது.

“தொழிலாளர் தங்கும் விடுதிகளில் போதுமான வசதிகளை செய்து கொடுப்பது, இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும், நீண்ட நாட்களாக வெளியே செல்ல முடியாமல் தங்கும் விடுதியிலேயே நேரத்தைக் கழித்துவிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது உள்நாட்டுச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

தானியங்கி சாதனங்களின் தாக்கம்

“உணவகம் உள்ளிட்ட சில துறைகளில் தானியங்கி வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. உணவுக்கூடங்கள், சிறு உணவுக் கடைகள் அமைந்துள்ள இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகளில் ரோபோக்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய உணவுக்கூடங்களில் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்துச் சென்ற எடுத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், வாடிக்கையாளர் இதற்கு முன் வரவில்லை என்றால் நாம்தான் தட்டுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது என்பதே உண்மை. தானியங்கி, ரோபோக்களின் பயன்பாட்டால் யாருக்கும் வேலை பறிபோகவில்லை என்பதுதான் சரி,” என்கிறார் உணவக உரிமையாளர் வை.நடராஜன்.

ஆக மொத்தத்தில், புதிய இயல்பு நிலைக்கு மாறிய பிறகு சிங்கப்பூர்காரர்கள் மனப்போக்கிலும் செயல்பாடுகளிலும் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »