Press "Enter" to skip to content

டோக்யோ ஒலிம்பிக்: இன்று தொடங்குகிறது – ஜப்பான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுகிறது.

இந்த வருடமும் கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என இதுவரை 80 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பலர் போட்டிகள் நடைபெறும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்கள். இருப்பினும் சில வீரர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடுமையான விதிமுறைகள்

போட்டி நடைபெறும் இடத்தில் நுழையப் போட்டியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கும் தினமும் பரிசோதனை செய்யப்படுகிறது.

ஜப்பானில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறதா?

ஜப்பானில் மே மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. பின்பு மெல்லக் குறைய தொடங்கி மீண்டும் ஜூன் மாத இறுதியில் புதிய தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. ஜூலை 21ஆம் தேதி வரையில் ஜப்பானின் சுகாதாரத் துறை அமைச்சகம் 4,933 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த வாரம் புதிய தொற்றின் சராசரி கடந்த வாரத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

இருப்பினும் மே மாதம் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் குறைவான எண்ணிக்கையே தற்போது பதிவாகி வருகிறது.

கொரோனா தொற்று ஒலிம்பிக் போட்டிகளை எவ்வாறு மாற்றும்?

டோக்கியோவில் நடைபெறும் போட்டிகள் எந்த பாதிப்பும் இன்றி நடைபெற புதிய தொற்று எண்ணிக்கை 100க்கு குறைந்ததாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

மே மாதம் மூன்றாம் வாரத்திற்கு பிறகு தொற்று எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியது. இருப்பினும் தற்போது தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. டோக்கியோவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை காணப் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

ஒலிம்பிக்

பட மூலாதாரம், Getty Images

டோக்கியோவில்மதுபானக்கடைகள், உணவகங்கள் திறப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. டோக்கியோ மக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்றும், வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு செயல்படுகிறது?

ஜூலை 19ஆம் தேதி வரையில், நாட்டின் 35 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். 23 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் 40-50 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். ஜப்பான் தடுப்பூசி வழங்கும் பணியை பிப்ரவரி மாதம் தொடங்கியது.

சில மாதங்கள் முன்பு வரை ஃபைசர் தடுப்பு மருந்துக்கு மட்டுமே அங்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் பரிசோதனைகள் நடைபெற்றிருந்தாலும், ஜப்பான் தான் சுயமாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததால் தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்க தாமதமாகியது.

தடுப்பு மருந்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர இவ்வாறான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆசாஹி ஷிம்பன் என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பக்க விளைவுகள் குறித்த அச்சத்தால் தடுப்பு மருந்து எடுத்து கொள்ள மக்கள் தயங்கினர்.

தடுப்பு மருந்து குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரி 15 நாடுகளில் நடத்திய ஆய்வில், ஜப்பானில்தான் அதிகப்படியான மக்கள் தடுப்பூசி குறித்து நம்பிக்கையற்றத் தன்மையுடன் இருப்பது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் அங்கு தடுப்பூசி விநியோகத்திலும் சிரமம் ஏற்பட்டிருந்தது.

ஜப்பான் சட்டப்படி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே தடுப்பு மருந்து பெற முடியும். பின்னர் அந்த சட்டம் தளர்த்தப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »