Press "Enter" to skip to content

சீனாவில் தினம் 12 மணி நேரம், வாரத்துக்கு 6 நாள் வேலை: கேள்வி கேட்கத் தொடங்கும் அரசு

  • வாய்யீ யிப்
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் சில பெரிய நிறுவனங்களில் பல இளம் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள்.

‘996 பணி கலாசாரம்’ என்று அறியப்படுகிற இந்த முறை கொடூரமான உழைப்புச் சுரண்டல் முறை சட்டவிரோதமானது என அத்தகைய பணி முறையை அமல்படுத்தியிருக்கும் நிறுவனங்களுக்கு சீன ஆட்சியாளர்கள் கடுமையான நினைவூட்டலை விடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை சீனாவின் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நீதிமன்றம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், தொழிலாளர் பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய 10 உத்தரவுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

அவற்றில் பல வழக்குகள், கூடுதல் பணி நேரத்துக்கு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் தொழிலாளர்கள் தொடர்புடையவை.

தொழில்நுட்பம், ஊடகம், கட்டுமானம் என பலதரப்பட்ட துறைகளில் இப்படிப்பட்ட பணிக் கலாசாரம் கடைபிடிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் அவை.

அந்த வழக்குகளின் முடிவுகள் ஒன்று போல இருந்தன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழக்கில் தோல்வியை சந்தித்தன.

“சட்டரீதியாக, தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வு நேரம் அல்லது விடுமுறை நாட்களை பெற உரிமை உண்டு. தேசிய பணி நேர முறைக்கு இணங்குவது வேலைக்கு பணியமர்த்தும் நிறுவனங்களின் கடமை,” என்று அரசு விடுத்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் நிலவும் தொழிலாளர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தற்போதைய வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சீன அரசின் இந்த தெளிவான எச்சரிக்கை, அதிக நேரத்துக்கு வேலை செய்யும் குடிமக்கள் உண்மையான மாற்றத்தைக் காண வழி வகுக்குமா?

கொந்தளித்த ஊழியர்கள், திரும்பிப் பார்த்த அரசு

சீனாவின் தொழிலாளர் சட்டங்களின்படி, ஒரு நிலையான வேலை நாள் என்பது எட்டு மணி நேரம், வாரத்துக்கு அதிகபட்சமாக 44 மணி நேரம் வேலை செய்யலாம். அதைக் கடந்தும் பணியாற்றும் எந்த தொழிலாளருக்கும் கூடுதல் உழைப்புக்கான ஊதியம் தரப்பட வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை.

நாட்டின் பல பெரிய நிறுவனங்களில் – குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் – ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், கூடுதல் பணி நேரத்துக்கு எப்போதும் அவர்கள் ஈடுசெய்யப்படுவதில்லை.

பல ஆண்டுகளாக ஊழியர்கள் தங்களுடைய மிருகத்தனமான பணி நேர அட்டவணையைப் பற்றி முணுமுணுத்துள்ளனர், சிலர் போராட முயன்றனர். 2019ஆம் ஆண்டில், ‘புரோகிராமர்’ பதவி வகித்த குழுவினர் சிலர், குறியீடு பகிர்வு தளமான கிட்ஹப்பில் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் கூடுதல் பணி நேரத்துக்கு ஊழியர்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் வகையிலான திறந்தவெளி கோடுகளை அவர்கள் பதிவேற்றினர். அவர்களின் செயல்பாடு அப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.

ஆனாலும், அரசு கண்டுகொள்ளாமல் செயல்பட்டதால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து ‘996’ கலாசாரத்தை தொடர்ந்தன.

எல்லாவற்றையும் விட, தங்களுடைய வெற்றியின் உந்துசக்தியாக இந்த கூடுதல் பணி நேரம் இருப்பதாக இந்த நிறுவனங்கள் கருதின. அந்த நிறுவனங்கள் உலக தொழிற்துறை அரங்கில் நம்பமுடியாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கணினிமய சில்லறை விற்பனை நிறுவனமான அலிபாபாவை நிறுவிய ஜேக் மாவைப் போலவே, மின்னணு வணிக தளமான ஜேடி.காம் தலைவர் ரிச்சர்ட் லியு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் சோம்பேறிகள் என்று கூறி ‘996’ பணி கலாசாரத்தை நியாயப்படுத்தினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் இனியும் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது என்ற விழிப்பை அரசுக்கு மக்களின் கோபம் புரிய வைத்தது என்று நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

“ஹாங்காங்கில் தொழிலாளர்களிடையே பிரபலம் அடைந்த சில முக்கிய பிரமுகர்கள் இறந்த நிலையில், மிருகத்தன பணி முறையின் உச்சத்துக்கு இந்த விவகாரம் சென்றது. இதனால், அரசு தலையிட வேண்டிய அவசரத்தைப் புரிந்து கொண்டதாலேயே இப்போது இந்த கூட்டறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர், என்கிறார் ஹாங்காங் பாலிநுட்பம் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜென்னி சான்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், Pinduoduo என்ற மின் வணிக தளத்தில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் சில வாரங்கள் இடைவெளியில் இறந்தனர். – ஒரு இளம் தொழிலாளி நீண்ட நேரம் வேலை செய்த பிறகு வீட்டிற்கு செல்லும் வழியில் சரிந்து விழுந்தார். மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம், ஒரு உணவு விநியோக ஓட்டுநர் தனக்கு தாமதமான ஊதியமான $ 770-ஐ மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகக் கூறி தீக்குளித்தார், இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் கணினிமய தளமான Ele.me க்காக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்ட மற்றொரு தொழிலாளியும் இறந்தார்.

இந்த உயிரிழப்புகள் கூடுதல் பணி நேர சுமையுடன் நேரடியாக தொடர்புடையவை தானா என்பது தெளிவாகவில்லை, ஆனாலும் சமூக ஊடகங்களில் கோபாவேசத்துடன் காணப்பட்ட இணையப் பயனாளர்கள், ‘996 கலாசாரம்’ மற்றும் நாட்டின் சில பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் “இருண்ட பக்கம்” பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.

சீன தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

அந்த விவாதங்களைத் தொடர்ந்து, சட்ட வரம்பை மீறி ஒவ்வொரு மாதமும் 300 மணி நேரத்திற்கும் மேலாக தாங்கள் வேலை வாங்கப்படுவதாக மற்ற தொழிலாளர்கள் துணிச்சலாக இந்த தளங்களில் கருத்துகளை பகிரத் தொடங்கினர். அவை சமூக ஊடகங்களில் வைரலாயின.

பெருந்தொற்றுக்கு மத்தியிலும் முன்பிருந்ததை விட அதிக நேரத்துக்கு தாங்கள் வேலை வாங்கப்படுவதால் போதும், போதும் என்ற நிலைமைக்கு பல தொழிலாளர்கள் வந்தனர்.

“நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். கடைசியாக எப்போது முழு பகலையும் ஓய்வான நிலையில் பார்த்தேன் என எனக்கு நினைவில் இல்லை. இதற்கிடையில், பெரிய நிறுவனங்கள் மேலும் பணக்கார நிறுவனங்களாகின்றன. இது எப்படி நியாயமாகும்?” என ஒரு பயனர் மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போவில் எழுதியிருந்தார்.

‘தொழிலாளர்களை போட்டித்திறனுடன் சீனா வைத்திருக்க வேண்டும்’

சமூக ஸ்திரத்தன்மையை பராமரிக்க சீன அரசு முயல்கிறது. ஆனால், இங்கு, கணினி மயமான பொருளாதாரம் உள்ள எல்லா இடத்திலும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் இதில் அரசு கவனம் செலுத்துவது முக்கியமாகிறது.

“இணையம் சார்ந்த தொழில்களில் ஞானம் பெற்ற ஊழியர்களாக இருந்தாலும் சரி, விநியோக தளங்களில் சீரூடை அணிந்து பணியாற்றும் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி – இரு தரப்பு பணியாற்றும் துறைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் பலரும் 996 பணி நேர முறையின்படியே வேலை வாங்கப்படுகிறார்கள் என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் மருத்துவர் சாங் ஸாலி.

தொழிலாளர்களிடையே குறைகள் அதிகரித்து வருவதால், சிலர் கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கின்றனர். ஹாங்காங்கை சேர்ந்த அரசு சாரா அமைப்பான ‘சீன லேபர் புல்லட்டின்’ அறிக்கைப்படி 2016 முதல் 2021வரை உணவு விநியோக தொழிலாளர்கள் 131 போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

“அரசாங்கம் அமைதியாக உட்கார்ந்து இந்த பிரச்னை பூதாகரமாக அனுமதிக்கக் கூடாது. அரசு உள்நாட்டு அமைதியை விரும்புகிறது,” என்று மருத்துவர் சான் தெரிவித்தார்.

பல இளம் சீனர்களின் அணுகுமுறைகள் மாறியுள்ளதால், சிறந்த தொழிலாளர் பாதுகாப்பை நோக்கிய ஒரு நகர்வும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடின உழைப்பு பலன் தரும் என்று நம்பிய தங்களின் பெற்றோரை போலல்லாமல், சோர்ந்துபோன இளைஞர்களிடையே அதிருப்தி உணர்வு அதிகரித்து வருகிறது.

இதேவேளை, சிலர் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். “டாங் பிங்” இயக்கம் – அதாவது “தட்டையாக படுத்துக்கொள்” – என்ற இயக்கத்தை முன்னெடுத்த சிலர், அதன்படி அதிக வேலை செய்யக்கூடாது. அதற்கு மாறாக அதிக சாதனைகளில் திருப்தி அடைய வேண்டும் என்ற கருத்தை கொண்டு செயல்பட்டனர். ஆனால், அந்த இயக்கத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

“இளைஞர்கள் மற்ற சாத்தியக்கூறுகளை பார்க்கிறார்கள். அவர்கள் மிகவும் நெகிழ்வு தரக்கூடிய வாழ்க்கை முறையை விரும்புகிறார்கள்,” என மருத்துவர் சாங் அவர்களின் நிலையை விளக்குகிறார்.

சீன தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த போக்கு இனி வரும் ஆண்டுகளில் சீனாவின் தொழிலாளர் சக்தி சுருங்கும் நிலையில் இருப்பது ஆட்சியாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கணக்கெடுப்பு விவரம் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டபோது, நாட்டின் மக்கள்தொகை மிகவும் மெதுவாக வளருவது கண்டறியப்பட்டது.

“இது அரசாங்கத்திற்கு பெரிய கவலையாக இருக்கிறது, ஏனென்றால் பொருளாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்த அரசுக்கு தொழிலாளர்கள் தேவை” என்கிறார் மருத்துவர் சான்.

“அதனால்தான் இளம் தொழிலாளர்களுக்கு மிகவும் மனிதாபிமானமாகத் தோன்றும் வகையிலான வேலைவாய்ப்பு முறையை உருவாக்க அரசு இப்போது முயற்சிக்கிறது – செய்யும் தொழிலை பிடித்தமானதாக்க சீனர்களை போட்டித்தன்மை மிக்கவர்களாக சீனா தக்க வைக்க வேண்டும்.”

அடுத்தது என்ன?

அரசின் கடந்த வார அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பொதுவான எதிர்வினைகள் எச்சரிக்கும் விதமாகவே இருந்தன. உண்மையில் இந்த நடவடிக்கை தங்களுடைய வேலை வாழ்க்கையை மேம்படுத்துமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இந்த விவகாரத்தில் நிபுணர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

சில பெரிய நிறுவனங்கள் தனது ஊழியர்கள் மீது காட்டும் செல்வாக்கை தடுக்க சீன அரசு அவற்றின் மீது அடக்குமுறையைத் தொடர்ந்தால், அவை தமது வரம்பை கடக்கத் துணியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“முதலாளிகளுக்கு ஒரு தெளிவான செய்தியை விடுக்கவே சில நீதிமன்ற உத்தரவுகளும் அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டு உள்ளன. நீங்கள் உங்கள் தொழிலாளர்களை நன்றாக நடத்தவில்லை என்றால், இழப்பது நீங்கள்தான்” என்று மருத்துவர் சான் கூறினார்.

அந்த எச்சரிக்கை வேலை செய்யவும் தொடங்கியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை, திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ “பெரிய/சிறிய வாரங்கள்” என்ற நடைமுறையை கைவிடுவதாகக் கூறியிருக்கிறது. அந்த நடைமுறைப்படி ஒரு வாரத்தில் ஆறு நாட்களும் மறுவாரத்தில் ஐந்து நாட்களும் ஊழியர்கள் வேலை செய்யும் வழக்கம் இருந்தது.

“இனிமேல், நாங்கள் முழு வார இறுதி நாட்களைக் கொண்டவர்கள்! எங்கள் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் முற்போக்கான சூழலை உருவாக்க உழைப்போம்” என்று விவோ நிறுவனம் ஒரு கணினிமய பதிவில் கூறியுள்ளது.

தொழிலாளர்கள் இப்போது தங்கள் முதலாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் துணிச்சலை அரசின் கூட்டறிக்கை கொடுத்திருக்கிறது என உணரலாம்.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ஏங்சலா ஸாங், “தாங்கள் தவறாக நடத்தப்படுவதாக உணரும்பட்சத்தில் தங்களுடைய உரிமையை நிலைநாட்ட தொழிலாளர் சட்டப்படி முறையிட பல ஊழியர்கள் இனி வரலாம் என எதிர்பார்க்கிறேன்,” என்கிறார்.

“சீன உச்ச நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால், அதுவே இதுபோன்ற தொழிலாளர் பிரச்னைகளில் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்,” என்றும் பேராசிரியர் ஏங்கலா ஸாங் தெரிவித்தார்.

line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »