Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா இப்போது தலையிடவோ தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியுமா?

  • சலீம் ரிஸ்வி
  • பிபிசி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

பட மூலாதாரம், Getty Images

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 2001ல் நியூயார்க்கில் நடந்த அல்-காய்தா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து தாலிபான் அரசை வீழ்த்தியது அமெரிக்கா. ஆனால் ஆகஸ்ட் 30, 2021 அன்று, அமெரிக்கா இறுதியாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது.

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தேசத்திற்கு ஆற்றிய உரையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான தனது முடிவு முற்றிலும் சரியானது என்றும், முடிவில்லாத ஒரு போருக்குப் படைகளை அனுப்ப விரும்பவில்லை என்றும் கூறினார். “ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது. எனது முடிவு முற்றிலும் சரியானது, அது அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த முடிவு.” என்றார் அவர்.

அமெரிக்கா சாதித்தது என்ன?

கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் 2,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தவிர, சுமார் 4,000 அமெரிக்க ஒப்பந்ததாரர்களும் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பைடன், அதை நிறைவேற்றினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 1,30,000 க்கும் அதிகமான அமெரிக்க குடிமக்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக அமெரிக்க ராணுவம் மற்றும் பிற அதிகாரிகளை பைடன் பாராட்டினார்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பிய 90 சதவீத அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், சுமார் 200 அமெரிக்கக் குடிமக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ளனர். அவர்களை வெளியேற்ற உதவுவதாகத் தாலிபான்களிடம் இருந்து வாக்குறுதி பெற்றிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்க கிரீன் அட்டைகளை வைத்திருப்பவர்கள் பலர் உட்பட, போரில் அமெரிக்க ராணுவத்திற்கு உதவிய சுமார் 40,000 ஆப்கானிஸ்தான் குடிமக்களும் அம்மண்ணை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக அமெரிக்காவில் கூறப்படுகிறது.

தாலிபன்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவைப் பல அமெரிக்கர்கள் வரவேற்று வருகிற அதே வேளையில், ஒரு குழப்பமான சூழலில் அமெரிக்கா வெளியேறியதன் காரணமாக மக்களிடையே அமைதியின்மை நிலவுகிறது.

அமெரிக்காவில் எதிர்வினை

காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்த காட்சிகள், தீவிரவாதத் தாக்குதல்கள், அமெரிக்காவின் பதிலடி தாக்குதல்கள் ஆகியவற்றைப் பார்த்தால், முறையான திட்டமிடலின்றி பைடன் நிர்வாகம் செயல்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. ராணுவம் மற்றும் பிற அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் சிறப்பான திட்டம் தீட்டப்படவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இருந்தபோதே, தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை எனும்போது, இப்போது தங்களின் கோரிக்கையும் ஒப்பந்தத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளும் பின்பற்றப்படும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

அதே நேரத்தில், தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா பல உத்திகளை வகுத்துள்ளதாகவும் அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “தாலிபான்களை வற்புறுத்தி அழுத்தம் கொடுக்க உலகச் சந்தையில் எங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் ஐ நா-வின் பரிந்துரைகளையும் பயன்படுத்துவோம். அது மட்டுமல்லாமல், தாலிபானுடனான பேச்சுவார்த்தைக்கான எங்களது பாதை இன்னும் திறந்தே உள்ளது.” என்று கூறினார்.

அமெரிக்காவின் மதிப்பீடு எப்படித் தவறியது?

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை இவ்வளவு விரைவில் கைப்பற்றுவார்கள் என்று அமெரிக்கா முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று ஜென் சாகி ஒப்புக்கொண்டார். தாலிபன்களுக்கு முன்னால், ஆப்கானிஸ்தானின் அரசாங்கமும் ராணுவமும் மிக விரைவில் தோல்வியை சந்திக்கும் என்றும் அவர்கள் களத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என்றும் நினைக்கவில்லை என்றும் அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது.

சாதாரண மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கொண்டு தாலிபன் ஆட்சியாளர்களின் மனோபாவமும் பெண்கள் நடத்தப்படும் விதம், மனித உரிமைகள் குறித்த தாலிபன்களின் அணுகுமுறை போன்ற பல பிரச்சினைகள் கண்காணிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதன் பொருள் ஆப்கானிஸ்தானில் சாத்தியமான எந்த தாலிபன் அரசாங்கத்தையும் அமெரிக்கா தற்போது அங்கீகரிக்காது.

அமெரிக்காவில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியில் உள்ள பலரால் பைடன் விமர்சிக்கப்படுகிறார். “அமெரிக்காவின் 20 வருட கடின உழைப்பையும், ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பில்லியன் கணக்கான டாலர்களையும் வீணடித்துத் தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்ற அனுமதித்தார்.” என்பது அந்த விமர்சனம். அங்கு டேஷ் அல்லது ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த பைடன், தாலிபன்களுடன் முந்தைய அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்த ஒப்பந்தங்களைப் பின்பற்றியே அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப் பெற்றதாக கூறினார்.

தனது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானில் இன்னும் வான்வழித் தாக்குதலை நடத்த முடியும் என்று அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இப்போது 2021-ல் அமெரிக்காவிற்கு இருக்கும் அச்சுறுத்தல்கள், 2001-ல் இருந்த அச்சுறுத்தல்களிலிருந்து வேறுபட்டவை என்று கூறினார்.

ஆனால் தீவிரவாதிகள் எங்கு மறைந்தாலும் தப்பிக்க விட மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சர்வதேச விவகாரங்களில் நிபுணர்கள் சிலர், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து விலகியிருந்தாலும் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்றும் பாகிஸ்தான், துருக்கி மற்றும் சில அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா, தாலிபன்கள் மீது பல்வேறு பிரச்சனைகளில் தூதரக அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

இப்போது அமெரிக்கா தனது ராஜதந்திர தூதரகத்தை காபூலில் இருந்து அகற்றி தோஹாவுக்கு மாற்றியுள்ளது. அங்கிருந்து தாலிபன் தொடர்பான இராஜதந்திர விஷயங்கள் கையாளப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »