Press "Enter" to skip to content

விர்ஜின் கேலக்டிக் விண்வெளிப் பயணங்களுக்கு தடை: ரிச்சர்ட் பிரான்சனை ஏற்றிச் சென்றபோது பயணத் தடத்திலிருந்து விலகியதாக புகார்

  • ஜொனதன் அமோஸ்
  • அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், VIRGIN GALACTIC

பிரிட்டன் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சனை அண்மையில் விண்வெளிக்கு இட்டுச் சென்று அதன் மூலம் வணிகரீதியான விண்வெளிப் பயண யுகத்தை தொடக்கிவைத்தது விர்ஜின் கேலக்டிக் நிறுவனம்.

ஒரு சர்ச்சை காரணமாக அந்த நிறுவனத்தின் சிறகுகளை இப்போதைக்கு முடக்கிவைத்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.

2021 ஜூலை 11ஆம் தேதி ரிச்சர்ட் பிரான்சனை விண்வெளிக்கு இட்டுச் சென்றது விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்வெளி வாகனம்.

ஆனால் அந்த நிகழ்வில் இந்த நிறுவனத்தின் விமானம் திட்டமிட்ட வழித்தடத்தில் இருந்து விலகியதாக ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது. அது தொடர்பாக விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் .

அது வரை விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் எந்த விண்வெளிப் பயணங்களையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது சர்ச்சையாகிப் போன அந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட விமானம் இரு பாகங்களைக் கொண்டது. நான்கு ஓட்டுவிசைகளைக் கொண்ட வொயிட் நைட் 2 மற்றும் ஸ்பேஸ்ஷிப் 2.

கடந்த ஜூலை 11ஆம் தேதி ரிச்சர்ட் பிரான்சன் தன் விர்ஜின் கேலக்டிக் விண்வெளி விமானத்தைப் பயன்படுத்தி புவியில் இருந்து 86 கிலோமீட்டர் வரை உயரே பறந்தார்.

வெர்ஜின் கெலாக்டிக் விமானம்

அவ்விமான பயணத்தில், விமானம் திட்டமிடப்பட்ட தடத்திலிருந்து விலகி பறந்தது என ‘நியூயார்க்கர்’ பத்திரிகை கூறுகிறது.

சம்பவம் நடந்த விதத்தை நியூயார்க்கர் பத்திரிகை விவரிக்கும் முறையில், விர்ஜின் கேலக்டிக் மாறுபடுகிறது.

ஜூலை 11ஆம் தேதி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருக்கும் ஸ்பேஸ்போர்ட் மீது நடந்த விர்ஜின் கேலக்டிக் ஸ்பேஸ் ஷிப் 2 இடையூறு குறித்து நடந்து வரும் விசாரணையை மேற்பார்வை செய்து வருவதாக எஃப்.ஏ.ஏ அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்த விசாரணை அறிக்கைக்கு எஃப்.ஏ.ஏ அமைப்பு ஏற்பளிக்கும் வரை அல்லது இந்நிகழ்வுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அது பொதுமக்களை பாதிக்காது என உறுதி செய்யப்படும் வரை விர்ஜின் கேலக்டிக் தன் விமானத்தை இயக்க முடியாமல் போகலாம் எனவும் எஃப்.ஏ.ஏ அமைப்பு ஒரு செய்தி அறிக்கையில் கூறியுள்ளது.

விர்ஜின் கேலக்டிக் நிறுவனமோ எஃப்.ஏ.ஏ அமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பிபிசியிடம் கூறியுள்ளது.

இந்த பிரச்சனையை தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் போது பயணத் தடத்திலிருந்து விமானம் விலகாமல் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது அந்நிறுவனம்.

நியூயார்க்கர் பத்திரிகையில், நிகோலஸ் ஸ்மிட்ல் என்பவர் எழுதி இருக்கும் கட்டுரையில், ஸ்பேஸ் ஷிப் 2 மூலம் எரிபொருளைப் பயன்படுத்தி உயரே பறக்கத் தொடங்கிய போது, அவர்களின் விமானம் திட்டமிட்ட பயணத் தடத்திலிருந்து விலகிச் செல்கிறது என காக்பிட்டில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

வெர்ஜின் கெலாக்டிக் விமான பயணத் திட்டம்

அந்த வழித்தட மாற்றம் சரி செய்யப்படவில்லை என்றும், அதையும் மீறி உயரத்துக்குச் சென்ற விமானத்தால், வானத்தில் இருந்து தரையிறங்கும் போது குறித்த இடத்தில் சரியாக வந்து சேர முடியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் விதிமுறைகளில் இது போன்ற காக்பிட் எச்சரிக்கைகள் எழும் போது, பொதுவாக மேற்கொண்டு பறக்கும் திட்டத்தை விமானிகள் ரத்து செய்வார்கள், ஆனால் அதற்கு மாறாக கடந்த முறை மேற்கொண்டு முன்னேறிச் செல்ல அழுத்தம் கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, விர்ஜின் கேலக்டிக் இதை மறுத்தது. மேலும் நியூயார்க்கர் தவறாக சம்பவங்களை விவரித்துள்ளதாகவும் கூறியது.

உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதத்தில் பலத்த காற்று வீசியதாகவும், விமானிகள் சரியாக வானத்தில் பறந்து, தரையிறங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

“திட்டமிடப்பட்ட பயணத் தடத்திலிருந்து விமானம் விலகிய போதும், அது கட்டுப்படுத்தப்பட்டது, விமானம் பயணிக்க வேண்டிய பாதையில் பறந்து, யுனிட்டி விமானம் வெற்றிகரமாக விண்வெளியைத் தொட்டு, வெற்றிகரமாக நியூ மெக்ஸிகோவில் உள்ள எங்களின் ஸ்பேஸ் போர்ட்டில் தரையிரங்கியது” என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

“விமானத்தின் பயணத் தடம் மாறியதால், எந்த ஒரு நேரத்திலும் அதில் பயணம் செய்தவர்களோ, விமானப் பணியாளர்களோ ஆபத்தில் சிக்கவில்லை. அதே போல விமானம் மக்கள் வசிக்கும் இடங்களின் மீதோ, பொதுமக்களுக்கு அச்சுறுத்தம் விதத்திலோ பறக்கவில்லை.” எனவும் கூறியுள்ளார் அவர்.

விமானம் பறந்த போதும், வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகும், விமான கட்டுப்பாட்டு அறையில் எஃப்.ஏ.ஏ அமைப்பினர் உடன் இருந்ததாகவும் அச்செய்தியாளர் கூறியுள்ளார்.

நியூயார்க்கர் பத்திரிகை தாங்கள் கூறிய விஷயத்தில் உறுதியாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனது.

விர்ஜின் கேலக்டிக்கின் வைட் நைட் 2 & ஸ்பேஸ் ஷிப் 2 இணைந்தபடி பறக்கும் படம்

பட மூலாதாரம், Virgin Galactic

இத்தாலிய விமானப் படையினரோடு ஓர் ஆய்வுப் பயணமாக அடுத்த பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக விர்ஜின் கேலக்டிக் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

அப்பயணம் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இப்போது எஃப்.ஏ.ஏ. அமைப்பின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்நிறுவனம்.

இந்த பயணத்துக்குப் பிறகு தன் விமான மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் விமான நிர்வாக அமைப்பின் தடை, நிறுவனத்தின் திட்டத்தில் எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தவில்லை என்றால், அடுத்த ஆண்டின் மத்திக்குள் தன் விண்வெளித் திட்டங்களைத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வணிக ரீதியிலான விண்வெளிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், மீண்டும் ஒருமுறை விமானம் பரிசோதிக்கப்படும் என கூறியுள்ளது அந்நிறுவனம்.

2.0 – 2.5 லட்சம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து சுமார் 600 பேர் பல ஆண்டுகளுக்கு முன்பே இருக்கைகளுக்கான பயணச்சீட்டு வாங்க முன்பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் தான் ஒரு இருக்கைக்கு 4.5 லட்சம் அமெரிக்க டாலர் என இப்பயணத்துக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படத் தொடங்கின என்பது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »