Press "Enter" to skip to content

டீக்ரே தனிநாடு கேட்ட போராளிகள் 5,600 பேர் கொல்லப்பட்டதாக கூறும் எத்தியோப்பியா

பட மூலாதாரம், AFP

தனிநாடு கோரி எத்தியோப்பியாவின் மத்திய அரசோடு போர் தொடுத்துவரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது விமானப் படை உதவியோடு நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் 5,600 போராளிகள் கொல்லப்பட்டதாக எத்தியோப்பியாவின் முன்னணி ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் முதல் டீக்ரே போராளிகளுக்கும், எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே சண்டை நடந்துவருகிறது. ஆனால், மூத்த ராணுவத் தளபதி பாச்சா தெபெலீ எந்த காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டன என்று தெளிவுபடுத்தவில்லை. சமீபத்தில் நடந்த சண்டைகளில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என்கிறார்கள் செய்தியாளர்கள்.

இறந்தவர்கள் தவிர, 2,300 போராளிகள் காயமடைந்திருப்பதாகவும், 2 ஆயிரம் பேர் பிடிபட்டிருப்பதாகவும் தளபதி பாச்சா கூறியுள்ளார்.

இந்த சண்டையால் பல பத்து லட்சம் பேர் பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டீ.ம.வி.மு) போராளிகள் அருகில் உள்ள அம்ஹாரா, அஃபார் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியுள்ள நிலையில், எத்தியோப்பியாவைப் பிளக்க டீ.ம.வி.மு. முயற்சி செய்வதாக லெப்டினன்ட் ஜெனரல் பாச்சா டெபெலீ குற்றம்சாட்டியுள்ளார்.

டீக்ரே – அம்ஹாரா எல்லைப் பகுதியில் உள்ள ஹுமேரா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க டீ.ம.வி.மு. படைப்பிரிவு ஒன்று முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால், அந்த முயற்சியில் அவர்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

தளபதியி பாச்சாவின் இந்த கூற்றுக்கு டீ.ம.வி.மு. தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

டீ.ம.வி.மு. தலைவர்களுக்கும் அதிபர் அபீ அகமது தரப்புக்கும் இடையே நடந்த நீண்ட முட்டல் மோதல்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு சண்டை தொடங்கியது.

டீ.ம.வி.மு. ஆளும் டீக்ரே மாகாண அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காக படையினரை அனுப்பினார் அதிபர். ராணுவ முகாம்கள் மீது டீ.ம.வி.மு. தாக்குதல் நடத்தியதாக கூறி இந்த படையெடுப்பை அவர் நியாயப்படுத்தினார்.

அது முதல் நடந்து வரும் சண்டையில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல பத்து லட்சம்பேர் தங்கள் வீடுகளில் இருந்து இடம் பெயரும் சூழ்நிலை ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. வீடுகளை விட்டு வெளியேறிய பலர் சூடானுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கொடுமைகளில் ஈடுபடுவதாகவும், பொது மக்களை கொல்வதாகவும், வன்புணர்வுகளில் ஈடுபடுவதாகவும் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர்.

line

சோக விளைவுகளுடன் தொடரும் போர்

கல்கிதான் யிபெல்டால், பிபிசி எத்தியோப்பியா செய்தியாளர்

டீக்ரே தரப்புக்கு ஏற்பட்ட சேதங்கள் என்று ராணுவம் அளித்துள்ள புள்ளிவிவரங்களை சுயேச்சையாக சரிபார்ப்பது கடினமானது. ஆனால், 10 மாதமாக நடக்கும் போர் சோகமான விளைவுகளோடு ஆக்ரோஷமாகத் தொடர்ந்து நடக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

எந்த காலகட்டத்தில் டீக்ரே தரப்புக்கு சேதங்கள் நிகழ்ந்தன என்ற கால விவரங்கள் லெப். ஜெனரல் பாச்சா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆக்ரோஷமான போர், வான் தாக்குதல் உதவியோடு நடந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

தொடக்கத்தில் ராணுவம் கைப்பற்றிய டீக்ரே பிராந்தியத்தை எதிர்பாராதவிதமாக கடந்த ஜூன் மாதம் டீ.ம.வி.மு. கைப்பற்றிய பிறகு அவர்கள் அருகில் உள்ள பிராந்தியங்களுக்கும் முன்னேறி சென்றனர். இதன் மூலம் போர்க் களம் விரிவடைந்தது.

எத்தியோப்பிய ராணுவம் கடந்த இரண்டு வாரங்களாக டீக்ரே படையினரை தடுத்து நிறுத்தியதோடு, சில இடங்களில் அவர்கள் பின்வாங்கிச் செல்லும் நிலையையும் ஏற்படுத்தியது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை எத்தியோப்பியப் படைகள் கைப்பற்றின. ஆனால், அஃபார், அம்ஹாராவில் முக்கியப் பகுதிகள் டீ.ம.வி.மு. கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

line

டீக்ரே பிராந்தியத்துக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை எத்தியோப்பிய அரசாங்கம் தடுப்பதாகவும் இதனால் பல பத்து லட்சம் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் ஐ.நா. வெள்ளிக்கிழமை எச்சரித்தது.

கடந்த சில பத்தாண்டுகளில் உலகம் பார்த்திராத வகையில் சுமார் 52 லட்சம் மக்கள் பஞ்சம் போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும், இது தவிர்க்கப்படவேண்டும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

ஆனால், மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏற்றிய 500 பார வண்டிகள் டீக்ரே பகுதியில் நுழைந்திருப்பதாக சனிக்கிழமை எத்தியோப்பிய அரசு கூறியது. இதில் 152 பார வண்டிகள் கடந்த இரண்டு நாள்களில் சென்றதாகவும், சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

சுயேச்சையாக இதனை சரிபார்க்க முடியவில்லை.

Map

அதே நேரம், ஆகஸ்ட் 22 முதல் ஒரே ஒரு பார வண்டி கூட டீக்ரே பிராந்தியத்தில் நுழையவில்லை என்றும் ஆனால், ஒரு நாளைக்கு 100 பார வண்டிகள் தேவை என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

1px transparent line

பிரச்னையின் பின்னணி

2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

மெனிகிஸ்டு ஹைலீ மரியம் - ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »