Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பஞ்ஷீர் படை

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

மத குருக்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தாக்குதலை தாலிபன்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன்கள் முன்னேறி உள் நுழைந்திருப்பதாகவும், தலைநகர் பசாரக்கை அடைந்துவிட்டதாகவும் தாலிபன்கள் தெரிவித்தனர். ஆனால், தேசிய எதிர்ப்பு முன்னணி அதை மறுத்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம், அஹமத் மசூத் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.

ஆனால், இதுதொடர்பாக தாலிபன்களிடமிருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் இல்லை.

வெள்ளைக் கொடி - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

மேற்குலகப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனில் இருந்து வெளியேறிய சில வாரங்களிலேயே, ஆப்கானிஸ்தானின் எல்லா நகரங்களையும் கைப்பற்றிவிட்டது தாலிபன்.

ஆனால் தலைநகர் காபூலுக்கு அருகிலேயே இருக்கும் பஞ்ஷீர் என்கிற மாகாணம் மட்டும், இப்போது வரை தாலிபன்களுக்கு அடிபணியாமல் ஆப்கன் தேசிய எதிர்ப்பு முன்னணி என்கிற அமைப்பு ஆயுதமேந்தி தாலிபன்களுக்கு எதிராக போராடி வருகிறது.

கரடு முரடான நில அமைப்பைக் கொண்ட சுமார் 2 லட்சம் பேர் வரை வாழும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராக போராடி வருகிறது. ரஷ்யா, தாலிபன் என எவருக்கும் இம்மாகாணம் அடிபணிந்ததில்லை.

இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்களும் இருக்கின்றனர். இப்படையை அஹ்மத் மசூத் தலைமை தாங்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

தாலிபன்களுடன் ஐநா மனிதாபிமான துறைத் தலைவர் மார்டின்

பட மூலாதாரம், HANDOUT VIA REUTERS

1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990களில் தாலிபன்களுக்கு எதிராகவும் இவரது தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஐ.நா பிரதிநிதி – தாலிபன் தலைவர் சந்திப்பு

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகள் துறையின் தலைவர் மார்டின் க்ரிஃபித் காபூல் நகரத்தில் தாலிபன் தலைவர்களைச் சந்தித்து, அனைத்து மக்களையும் குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.

தாலிபன் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவர் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ள முல்லா அப்துல் கனி பராதர் உடன் மார்டின் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான உதவிகள் தேவையான மக்களுக்கு கிடைக்கவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யும் ஆண் மற்றும் பெண் சேவகர்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபன் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி, ஆப்கனில் சுமார் 1.8 கோடி பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »