Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது? – கள நிலவரம்

  • ரஜினி வைத்தியநாதன்
  • தெற்காசிய செய்தியாளர்

வெளிநாட்டுப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாகாணங்களைச் சேர்ந்த நான்கு பேர் பிபிசியிடம் பேசினார்கள். அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

(பாதுகாப்புக் கருதி சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

மஸார்-இ-ஷெரீப்

மஸார்-இ-ஷெரீப் என்பது தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு அருகில், ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள ஒரு பெரிய நகரம். முக்கியப் பொருளாதார மையம். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளின் கோட்டையாக இது இருந்தது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி இது தாலிபன்களிடம் வீழ்ந்தது.

மஜீப் ஓர் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இப்போது அவர் உணவைத் தேடிச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். மஸார்- இ-ஷெரீப்பில் இருந்து ஒரு காணொளி அழைப்பு மூலம் பேசிய அவர், பாழடைந்த கட்டடத்தின் அழுக்குத் தரையில் சில போர்வைகள் அடுக்கப்பட்டிருந்ததைக் காட்டினார். இப்போது அதுதான் அவரது புதிய வீடு.

நான்கு வாரங்களுக்கு முன்புதான் அவர் இங்கு வந்து சேர்ந்தார். தாலிபன்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையேயான சண்டை காரணமாக நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்த ஐந்து லட்சம் ஆப்கானிஸ்தானியர்களில் அவரும் ஒருவர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தா தாலிபன்களால் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். 10 ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், “வெளியே செல்வதற்கு அஞ்சுகிறேன்” என்று அவர் கூறுகிறார். ஏனெனில் “ஒவ்வொரு நாளும் அவர்கள் மக்களைத் தாக்குகிறார்கள்” என்கிறார்.

கடந்த வாரம் ஏராளமானோர் மஸார்-இ-ஷெரீப் நகரில் இருந்து பெட்டிகளுடன் வெளிநாட்டுக்குத் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு காபூல் நகரத்துக்குச் செல்வதற்காக பேருந்துகளில் ஏறும் காட்சிகளைக் காணமுடிந்தது.

மூடப்பட்ட சந்தை

பட மூலாதாரம், EPA

ஆனால் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு கடந்த சில நாள்களாக காபூல் நகரத்தில் இருந்து மஸார்-இ-ஷெரீப் நகரத்தை நோக்கி மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் எல்லை வழியாக நாட்டைவிட்டு வெளியேற அவர்கள் முயற்சிப்பதாக மஜீப் கூறுகிறார்.

மஜீப்பும் நாட்டை விட்டு வெளியேற மிகத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்கான வழி என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை. “மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேறுவதை தாலிபன்கள் விரும்பவில்லை ” என்கிறார் மஜீப்.

லஷ்கர் கா, ஹெல்மண்ட் மாகாணம்

ஹெல்மண்ட் மாகாணம் தெற்கில் உள்ளது. போரின்போது இங்குதான் பிரிட்டிஷ் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று இது தாலிபன்களால் கைப்பற்றப்பட்டது. மாகணத்தின் தலைநகரான லஷ்கர் காவில் கடைசி சில வாரங்களில் கடுமையான சண்டை நடந்தது.

மருத்துவர் விக்டர் யூரோசெவிக்கின் அலுவலக அறிவிப்புப் பலகையில் தோட்டாக்கள் அடங்கிய சிறிய நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் குத்தப்பட்டிருக்கின்றன. “இது நாங்கள் அவமானச் சுவர் என்று அழைக்கிறோம்” என்று பிபிசிக்கு அளித்த காணொளி நேர்காணவில் அவர் கூறினார்.

இவை இளம் நோயாளிகளின் உடலிலிருந்து தாம் எடுத்த தோட்டாக்கள் என்றும் கூறுகிறார்.

லஷ்கர் காவில் உள்ள விபத்து மற்றும் படுகாய மருத்துவமனையில் யூரோசெவிக் பணிபுரிகிறார். போர் முடிந்துவிட்டதால் சில வாரங்களுக்கு முன்பு இருந்ததைப் போல நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழியவில்லை என்று சொல்கிறார். தோட்டாக்களும் குண்டுகளும் பொழிவது நின்றுவிட்டன என்றும், தெருக்கள் அமைதியாக இருப்பதாகவும் சொல்கிறார்.

“இது விநோதமானது. நான் சில வருடங்களாக இங்கு இருக்கிறேன், ஆனால் இந்த இடம் இத்தனை அமைதியாக இருந்ததில்லை. புயலுக்கு முந்தைய அமைதியாக இதைப் பார்க்கிறேன். நான் சொல்வது தவறாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். பார்க்கலாம். குண்டுவெடிப்புகளில் பல கட்டடங்கள் சேதமாகியிருக்கின்றன. போரின்போது வெளியேறிய பல குடும்பங்கள் அந்த சிதிலங்களுக்கு மீண்டும் வந்திருக்கின்றன.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

மசூதிகளுக்கு முன்பும் தெருக்களிலும் அவர்கள் தூங்குகிறார்கள். வீடுகளை மீண்டும் கட்ட அவர்களிடம் பணம் இல்லை. ஆகவே தெருக்களில் வசிப்பது, உறவினர்களுடன் வசிப்பது என்று காலத்தைக் கழிக்கிறார்கள். ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி இங்கு பலர் வறுமையில்தான் இருக்கிறார்கள்” என்கிறார்.

பல நாட்களாக வங்கிகள் மூடியிருப்பதால் பணமும் கிடைப்பதில்லை, அதுவும் பிரச்னையைப் பெரிதாக்கியிருக்கிறது. இதுபோன்ற உதவிகளைச் செய்துவந்த வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் தாலிபன்கள் வந்தவுடன் வெளியேறிவிட்டார்கள். இங்கேயே இருப்பதாக முடிவு செய்து தங்கியிருப்பவர்களில் யூரோசெவிக்கும் ஒருவர்.

“இந்த மாகாணத்தின் ஒரே விபத்து மற்றும் படுகாய மருத்துவமனை இது. எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. மக்களுக்கு உணவு வேண்டும், பணம் வேண்டும், மருந்துகள் வேண்டும்” என்கிறார்.

படாக்‌ஷன்

ஆப்கானிஸ்தானின் வறுமை நிரம்பிய மாகாணங்களில் ஒன்றான படாக்‌ஷன், தஜிகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் வடகிழக்கு நிலப்பரப்பில் இருக்கிறது. இந்த மாகாணத்தின் தலைநகரத்தைத் தாலிபன்கள் ஆகஸ்ட் 11ம் தேதி கைப்பற்றினார்கள்.

படாக்‌ஷனைச் சேர்ந்த மருத்துவர் அப்துல். தாலிபன்கள் சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது மாணவராக இருந்தார்.

“அப்போது நிலைமை மோசமாக இருந்தது. இப்போதும் அதேதான், எனக்கு ஒன்றும் மாற்றம் தெரியவில்லை” என்கிறார்.

இப்போது தாலிபன்களால் பாதுகாக்கப்படும் மருத்துவமனையின் பல புகைப்படங்களை அப்துல் அனுப்புகிறார். அதில் ஒரு புகைப்படத்தில், மெலிந்துபோன 18 வயது இளைஞன் படுக்கையில் கிடக்கிறான், அவனது அம்மா அவனைக் காப்பாற்றுமாறு ஊழியர்களிடம் இறைஞ்சுகிறார்.

“அவனுக்கு உணவளிக்க அவரிடம் பணம் இல்லை” என்கிறார் அப்துல்.

“நாளுக்கு நாள் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஐ.நாவின் ஒரு கணக்குப்படி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் பாதிப்பேர் அடுத்த வருடத்துக்குள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாகாணத்தில் ஏற்கனவே வறுமை இருந்தாலும், தாலிபன்களின் எழுச்சிக்குப் பிறகு பலருக்கு அரசு வேலையும் போய்விட்டது, உணவு மற்றும் எரிபொருள் விலையும் உயர்ந்துவிட்டது. சென்ற மாத ஊதியமே இன்னும் பலருக்கு வழங்கப்படவில்லை.

படாக்சன்

பட மூலாதாரம், Getty Images

இங்கு இருக்கும் பெண்களின் உரிமை பற்றியும் அப்துல் கவலை தெரிவிக்கிறார். பெண் மருத்துவமனை ஊழியர்களுக்குப் பணியாற்ற அனுமதி இருந்தாலும் வேறு பெண்களுக்கு வேலை செய்ய அனுமதி இருப்பதில்லை என்றும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

“ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்க பெண் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை. மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை போய்விட்டது. படாக்‌ஷானில் மக்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்கிறார் அப்துல்.

ஹெராத்

இரான் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டுச்சாலை நகரமான ஹெராத், ஆப்கானிஸ்தானிலேயே மிகவும் சுதந்திரமான பகுதியாகக் கருதப்பட்டது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய மறுநாள், நூற்றுக்கணக்கான தாலிபன் ஆதரவாளர்கள் தெருக்களில் குவிந்தனர். மற்றவர்கள் வீடுகளில் பயத்தால் முடங்கினர்.

அப்போதுதான்சந்தையில் இருந்து திரும்பியிருக்கும் குல், பிபிசியிடம் பேசுகிறார். “சந்தை முழுக்க தாலிபன்கள் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். பணக்காரர்கள், பெண்கள் எல்லாரும் அவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பதால் அவர்களைத் தெருக்களில் பார்க்க முடிவதில்லை” என்கிறார்.

தாலிபன்

குல்லின் மனைவி அஃப்ஸூன், ஆண் துணையின்றியோ முகத்தை மூடும் புர்கா அணியாமலோ வெளியில் செல்ல முடியாது. “என் மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது” என்கிறார் அவர்.

குல்லின் சகோதரி ஒரு மருத்துவர். பெண்கள் மருத்துவமனைகளில் வேலை செய்ய தாலிபன்கள் அனுமதிக்கிறார்கள் என்றாலும் குல்லின் சகோதரியிடம் இப்போதைக்கு வெளியில் போகவேண்டாம் என்று சொல்லப்பட்டது.

சில நாட்கள் கழித்து அவர் வேலைக்குச் சென்றாலும் பல பெண்கள் இன்னும் வீட்டில்தான் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு தாங்கள் உருவாக்கிய வாழ்வைத் தொடர முடியுமா என்று குழம்புகிறார்கள்” என்கிறார் குல். தானும் தன் குடும்பமும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நம்புவதாகக் கூறுகிறார்.

“எங்கு வேண்டுமானாலும் போகத் தயார், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி…. எங்கு வேண்டுமானாலும்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »