Press "Enter" to skip to content

செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் ‘இதயத்தை’ காயப்படுத்திய பயங்கரவாதிகள்

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் மூன்றாவது கட்டுரை இது.)

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன், ஐங்கோண வடிவத்திலான கட்டடம். பாதுகாப்புத் துறையையும், பாதுகாப்பு அமைச்சரையும் குறிப்பிடுவதற்கும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

தலைநகரான வாஷிங்டன் டி.சி.யை ஒட்டி வர்ஜீனிய மாநில எல்லைக்குள் அமைந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகங்களில் இதுவும் ஒன்று. இதன் கட்டுமானப் பரப்பு சுமார் 150 ஏக்கர். அதாவது 65 லட்சம் சதுர அடி.

5 பக்கங்கள், தரைக்கு மேலே 5 மாடிகள் என ‘பென்டகன்’ என்ற சொல்லுக்கான விளக்கத்தைத் தன்னுள்ளே கொண்ட கட்டடம் இது. இதன் மையத்தில் ஐங்கோண வடிவத்திலான 5 ஏக்கர் பரப்பு “கிசுற்று ஜீரோ” என்று அழைக்கிறார்கள்.

உலகின் பல முக்கியப் போர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதும், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதும் இங்குதான் என்று கருதப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தை 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி சில பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து கடுமையாகச் சேதப்படுத்தினார்கள்.

விமானத்தில் இருந்தவர்களும், பென்டகன் கட்டடத்தில் இருந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 189 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 1800களில் பிரிட்டிஷ் படைகள் வாஷிங்டன் நகரை எரித்த சம்பவத்துக்குப் பிறகு, அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.

செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையக் கட்டடங்களில் விமானங்கள் மோதிய செய்திகள் வெளியாகி உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நேரத்தில் பென்டகன் மீது மற்றொரு விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடந்தப்பட்டது. கடத்தப்பட்ட நான்கு விமானங்களில், தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தின் அடிப்படையில் மூன்றாவது விமானம் இது.

காலை 8.46 மணிக்கு, முதல் விமானமான ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11’, உலக வர்த்தக மைய வளாகத்தின் வடக்குக் கோபுரக் கட்டடத்தையும், காலை 9.03 மணிக்கு இரண்டாவது விமானமான ‘யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175’ தெற்கு கோபுரக் கட்டடத்தையும் தாக்கின.

இந்த இரு விமானங்களும் கடத்தப்பட்ட அதே நேரத்தில்தான் மூன்றாவது விமானமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் கடத்தப்பட்டது. கடத்தல் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருந்தன.

புஷ்

பட மூலாதாரம், Getty Images

அது வாஷிங்டன் டி.சி.யின் டல்லஸ் விமான நிலையம். இரு விமானங்கள் கடத்தப்பட்ட பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தெற்கே அமைந்திருக்கிறது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77, காலை 8.10 மணிக்கு லாஸ் ஏஞ்சலஸ் நோக்கிப் புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அது போயிங் 757 ரகத்தைச் சேர்ந்தது.

கலீத் மிஹ்தார், மஜேத் மொகேத் ஆகியோர் காலை 7.15 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அனுமதிச்சீட்டு கவுன்டரில் செக்-இன் செய்தனர். அடுத்த இருபது நிமிடங்களில் ஹனி ஹன்ஜோர், சகோதரர்களான நவாப் அல் ஹஸ்மி, மற்றும் சலேம் அல் ஹஸ்மி ஆகியோர் வந்து சேர்ந்தனர். இவர்கள் ஐந்து பேரும்தான் ‘கடத்தல்காரர்கள்’ என்கிறது அமெரிக்காவின் 9/11 விசாரணை ஆணையத்தின் அறிக்கை.

மிஹ்தாரும், மொகேத்தும் தங்களது கைப்பைகளை எக்ஸ்-ரே பரிசோதனைக்காக வைத்துவிட்டு, மெட்டல் டிடெக்டர் கருவியைக் கடந்தபோது, பெரும் சத்தத்தில் அலாரம் அடித்தது. இரண்டாவது மெட்டல் டிடெக்டர் வழியாகச் செல்லுமாறு காவலர்கள் கூறினார்கள். ஆனால் அதில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் கண்டறியப்படவில்லை. அதன் பிறகு 5 பேரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

இரு விமானிகள், நான்கு பணியாளர்கள் கடத்தல்காரர்களையும் சேர்த்து மொத்தம் 58 பயணிகள் ஆகியோர் விமானத்தில் இருந்தனர். சரியாக 8.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. 8.46 மணிக்கு 35 ஆயிரம் அடி உயரத்தை எட்டியது. 8.50 மணிவரை விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல்கள் வந்து கொண்டிருந்தன. அதன் பிறகு தகவல் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறது 9/11 விசாரணை அறிக்கை.

கடத்தல்கார்ரகள்
கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images

8.54 மணிக்கு தனது வழக்கமான பாதையில் இருந்து விமானம் தெற்கு நோக்கித் திரும்பியது. டிரான்ஸ்பாண்டர்கள் அணைக்கப்பட்டன. விமானத்தின் ரேடார் சிக்னல்களும் துண்டிக்கப்பட்டன. அதற்குச் சற்று முன்னர்தான் நியூயார்க் வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்குக் கோபுரத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11 மோதியிருந்தது. அமெரிக்காவின் வடமேற்கு விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் புறப்படக் கூடாது என உடனடியாக உத்தரவிடப்பட்டது.

9.12 மணிக்கு விமானப் பணிப்பெண் ரீனி மே, லாஸ் வெகாஸில் இருக்கும் தனது தாய்க்கு போன் செய்தார். ஆறு பேரால் விமானம் கடத்தப்பட்டு விட்டது என்று கூறினார். அந்தத் தகவல் அப்படியே விமான நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

9.12 மணிக்கு பார்பரா ஓல்சன் என்ற பயணி தனது கணவர் டெட் ஓல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். டெட் ஓல்சன் அமெரிக்காவின் சொலிசிட்டர் ஜெனரல். பயணிகள் அனைவரும் விமானத்தின் பின் பகுதியில் நிற்க வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தல்காரர்களிடம் கத்திகள் இருப்பதாகவும் பார்பரா தெரிவித்தார். அந்த நேரத்தில் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பார்பராவிடம் டெட் கூறினார்.

அந்த நேரத்தில் வாஷிங்டனை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்ததால், அமெரிக்க அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவை உஷார்படுத்தப்பட்டன. ஆனால் பயங்கரவாதிகளின் இலக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பென்டகன். கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த விமானம் சுமார் 850 கிலோ மீட்டர் வேகத்தில் பென்டகன் கட்டத்தின் மேற்குப் பகுதியில் சீறிப் பாய்ந்தது. விமானத்தில் இருந்த 5 சதிகாரர்கள் உள்பட 64 பேரும் உயிரிழந்தனர்.

அப்போது மணி 9.37. சுமார் 18 ஆயிரம் பேர் பென்டகனில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். அவர்களில் 125 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 75 ராணுவ அதிகாரிகளும் அடங்குவார்கள். கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. நவீன கருவிகளைக் கொண்டிருக்கும் இடம் என்பதால் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்தன. 10 நிமிடங்களில் மீட்புக் குழுவினர் தங்களது பணிகளைத் தொடங்கினார்கள்.

பென்டகன்

பட மூலாதாரம், Getty Images

வாஷிங்டனை நோக்கி கடத்தப்பட்ட விமானம் வருகிறது, அது ராணுவ தலைமையகத்தில் மோதப்போகிறது என்பதை அறிந்த ராணுவத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஓரிரு நிமிடங்களே இருந்தன என்று 9/11 விசாரணை அறிக்கை முடிவுக்கு வந்திருக்கிறது.

பென்டகனில் தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்புவரை அந்த விமானம்தான் நியூயார்க்கில் இரண்டாவது கோபுரத்தைத் தாக்கியது என்று அதிகாரிகள் தவறாகக் கருதியிருந்ததாகவும் விசாரணை அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

சேதமடைந்த பென்டகன் கட்டடத்தை சரி செய்ய சுமார் 3,500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அருகிலேயே ஒரு நினைவிடமும் அமைக்கப்பட்டது.

அந்த நாளில் மூன்று விமானங்கள் கடத்தப்பட்டு முக்கிய இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால், அமெரிக்கா முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. முதல் விமானம் பாஸ்டனின் இருந்து புறப்பட்டு வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்குக் கோபுரத்தில் மோதியது. இரண்டாவது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வர்த்தக மையக் கட்டத்தின் தெற்குக் கோபுரத்தில் மோதியது. மூன்றாவது விமானம் வாஷிங்டனில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பி, பென்டகன் கட்டத்தில் மோதியது. மூன்று கட்டடங்களுமே அமெரிக்காவின் அடையாளங்கள்.

முதல் விமானத்தை இயக்கிய அட்டாவின் பேச்சு உண்மையானால் பயங்கரவாதிகளின் பிடியில் சில விமானங்கள் இருக்கக்கூடும். அந்த எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி தெரியாததால்தான் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதே நேரத்தில் பயணிகள் அனைவரும் சேர்ந்தால் நான்கைந்து கடத்தல்காரர்களை தடுத்து விட முடியாதா என்ற கேள்வி எழுந்திருந்தது. இன்னொரு விமானம் அப்படிப்பட்ட வீரத்துக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக மாறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »