Press "Enter" to skip to content

ப்ராவிஸிமோ: பருமனான பெண்களுக்கு பிரத்யேக உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் – நடத்துபவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண் தொழிலதிபர்

  • டோகல் ஷா
  • பிபிசி வணிக செய்தியாளர்

தான் அரிதானவர் என்று லியான் காஹில்லுக்கு ஏற்கனவே தெரியும். உழைக்கும் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த மாற்றுத்திறனாளிப் பெண்மணியான இவர், இப்போது பெரிய அளவில் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

பிரிட்டனின் பெரிய அளவிலான விற்பனைத் தொழில்களில் உச்சத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் சொற்பம் என்று இவர் குறிப்பிடுகிறார்.

“இந்தப் புரட்சி முன்பே வந்திருக்கவேண்டும்” – என்று அவர் முன்பு கூறியிருந்தார். பிரட்டனின் மிகப்பெரிய பொது நிறுவனங்களின் டாப்-350 பட்டியலில் பெண் தொழிலதிபர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மிகக் குறைவு என்கிறார் இவர்.

காஹிலின் நிறுவனமான ப்ராவிஸிமோ, பருமனான உடல்வாகு கொண்ட பெண்களுக்கான உள்ளாடைகளைத் தயாரிக்கும் தனித்துவம் கொண்டது.

25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இப்போது பிரிட்டனில் மட்டுமே 26 கிளைகளைக் கொண்ட பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் வருடாந்திர வியாபாரம் 60 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது.

2019 அக்டோபரில் இந்த நிறுவனத்தின் லாபம் 1,30,000 பவுண்டுகளாக இருந்தது. தொழிலை அமெரிக்காவில் விரிவாக்குவதற்காக இந்த நிறுவனம் முதலீடு செய்திருப்பதால் இந்த லாப சரிவு. அதற்கு முந்தைய ஆண்டை விட 10,000 பவுண்டுகள் லாபம் குறைந்திருந்தது.

பட்டம் பெற்ற லீன் காஹில்

பட மூலாதாரம், LEANNE CAHILL

பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு பெரிய நிறுவனத்துக்குத் தான் நிறுவனராவோம் என்று 1990களில் சுண்டர்லாண்டில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காஹில் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்.

“எனக்கு அப்போதிலிருந்தே கணிதமும் எண்களும் பிடிக்கும், நான் பெரிய இலக்குகள் உள்ளவளாக இருந்தேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் தான் முதலாவதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் பெண்கள் யாரும் முன்னேறி நான் பார்த்ததில்லை என்பதால் என்னை அவ்வாறு கற்பனை செய்துபார்க்கவே தெரியவில்லை. அது ஒரு பெரிய தடைதான்” என்கிறார்.

தொழில்ரீதியான முன்னோடிகள் கிடைக்கவில்லை என்பதோடு, இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உழைக்கும் வர்க்கப் பின்னணியில் இருந்து வந்ததால், புதிய தொழில்களை பற்றிய புரிதலும் அவருக்கு இருக்கவில்லை.

“தொழில்ரீதியாக வேலை செய்தவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. அலுவலகங்களில் உள்ளவர்கள் என்ன மாதிரியான வேலை செய்வார்கள் என்பதும் எனக்குத் தெரியாமல் இருந்தது” என்கிறார். தன் பள்ளிக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு அவருக்கு நன்றாக நினைவிருக்கிறது.

“வேலை வாய்ப்புகள் பற்றிய நிகழ்வில் எங்களை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். ஆண் மாணவர்கள் தனியாக அழைத்துப் போய் நிஸான் தேர் நிறுவனத்தில் வேலை செய்வதைப் பற்றிப் பேசினார்கள்.

பெண்களைத் தனியாக அழைத்துப் போய் ஆடை நிறுவனமான ட்யூஹர்ஸ்ட்டில் வேலை செய்வதைப் பற்றிப் பேசினார்கள். எங்களுக்கு அதை செய்யத்தான் பிடிக்கும் என்று இவர்களாகவே முடிவு கட்டிவிட்டார்கள்” என்கிறார்.

அவரது கல்வி நிறுவனத்தில் பெரிய அளவிலான கல்வித்திட்டங்கள் இல்லாததால் உள்ளூர் கல்லூரிக்கு இடம்பெயர்ந்தார். பல்கலைக்கழகத்தில் கணிதமும் கணிதவியலும் படித்தார்.

ப்ராவிஸிமோவில் உள்ள படம்

ஒரு பாதுகாப்பான, வருமானம் வரக்கூடிய வேலைக்குப் போகவேண்டும் என்பதால் சட்டம் மற்றும் நிதித்துறை பற்றிய படிப்புகளை எடுக்கலாம் என்று யோசித்தார். ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்குப் பிறகு நீதித்துறை தான் தன் தேர்வு என்பதில் உறுதியாக முடிவெடுத்தார்.

“நீதிமன்றங்களை சுற்றிக்காட்டியபோது ஒருவர், ‘நீதிமன்றத்தில் நீங்கள் பேசுவது கவனிக்கப்படவேண்டுமானால் மேடைப்பேச்சுக்கான பயிற்சியையும் பெறவேண்டும்’ என்றார். உடனே நான் நீதித்துறைதான் எனக்கானது என்று முடிவெடுத்துவிட்டேன்” என்கிறார்.

தன் வடக்கு இங்கிலாந்து வட்டார மொழியால் பல சிக்கல்களை சந்திக்க நேர்கிறது என்று குறிப்பிடும் அவர், இப்போதும் அது தொடர்கிறது என்கிறார்.

சமீபத்தில் இவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்பிய ஆலோசகர் ஒருவர், தொலைபேசியில் இவர் பேசியதைக் கேட்டதும் தவறான எண்ணுக்கு அழைத்துவிட்டதாக நினைத்திருக்கிறார். “இந்த வட்டார வழக்கில் பேசுவதால் நான் நிறுவனத் தலைவராக இருக்க முடியாது என்று அவர்களாகவே முடிவுகட்டிவிட்டார்கள்” என்கிறார்.

பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தபிறகு, மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நடத்திய ஒரு மேலாண்மை பயிற்சியில் காஹில் கலந்துகொண்டார்.

“அது எல்லா திறன்களையும் சொல்லித் தருவதாக, ஆழமானதாக இருந்தது” என்கிறார் காஹில். வாழ்நாள் முழுக்க உதவுகிற முக்கியமான சில பாடங்களையும் அவர் கற்றுக்கொண்டார்.

லீன் காஹில்

துவக்கநிலையில் இருந்து மெல்ல முன்னேறிய அவர், 2017ம் ஆண்டில் ப்ராவிஸிமோவில் மூத்த மேலாளர் பணியில் சேர்ந்தார்.

1995ல் சாரா ட்ரெமெல்லென் என்பவரால் ப்ராவிஸிமோ தொடங்கப்பட்டது. தன் அறையிலிருந்து அவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். 2017ல் நிதி இயக்குநராக ப்ராவிஸிமோவில் இணைந்த காஹில், 2020ல் முதன்மைச் செயல் அதிகாரி பதவிக்கு உயர்த்தப்பட்டார். தொழிலை அடுத்த நிலைக்கு அவர் எடுத்துச் செல்வார் என்று நம்பப்பட்டது.

ஸாரா ட்ரெமெல்லன் உருவாக்கிய இந்த நிறுவனத்தின் நோக்கம் தன்னை மிகவும் ஈர்த்ததாகவும், தானே அதனோடு தன்னைப் பொறுத்திப் பார்த்துக் கொண்டதாகவும் காஹில் கூறுகிறார். சாதாரண ஆடை நிறுவனங்கள் வழங்காத ஒரு சேவையை வழங்குவதாக ப்ராவிஸிமோ வடிவமைக்கப்பட்டிருந்தது.

“எங்களது எல்லா வாடிக்கையாளர்களும் ப்ரா அளவு டி-கப்புக்கு மேல் கொண்டவர்கள். அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உணரச் செய்வது எங்கள் வேலை” என்கிறார்.

பிரிட்டனில் உள்ள பெண்களின் சராசரி ப்ரா அளவு 36 DD எனவும், உடை அளவு 16 எனவும் மாறிவிட்டது. ஆனால் பல முக்கிய ஆடை நிறுவனங்கள் இதை விட குறைவான அளவுகளைக் கொண்ட ஆடைகளையே பெரும்பாலும் விற்கின்றன.

ஆனால் ப்ரா அளவு அதிகம் உள்ள பெண்களுக்கான ஆடைகளைப் பொறுத்தவரை பிரிட்டன் கொஞ்சம் முன்னேறியதாகத்தான் இருக்கிறது என்று காஹில் தெரிவிக்கிறார்.

அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் இதுபோன்ற தனி கடைகள் கிடையாது என்றும் தெரிவிக்கிறார். நியூயார்க்கில் ப்ராவிஸிமோவின் புதிய கடை ஒன்று துவக்கப்பட்டிருக்கிறது.

ப்ராவிஸிமோ விளம்பரப் பதாகை

“ஒரு கடைக்குள்ளே நீங்கள் நுழையும்போது உங்கள் அளவுக்கேற்ற ஒரே ப்ரா மட்டும்தான் இருக்கிறது என்றால், என்னிடம் ஏதோ பிரச்சனை என்று நீங்கள் உணரத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்” என்கிறார் காஹில்.

அதிக ப்ரா அளவுள்ள மாடல் பெண்களையும் சராசரியான உடல் அளவுள்ள வாடிக்கையாளர்கள், பணியாளர்களையும் புகைப்படங்களில் முன்னிறுத்துவதன்மூலம் விளம்பரங்களிலும் இந்த நிறுவனம் ஒரு புதுமையைக் கொண்டு வந்திருக்கிறது.

“வெறுமனே பன்முகத்தன்மைக்காக மட்டும் இதை நாங்கள் செய்வதில்லை. எங்கள் நோக்கமே அதுதான். நாங்கள் முன்னோடிகளா என்று எனக்குத் தெரியாது. இப்போது பல நிறுவனங்கள் இதைச் செய்கின்றன. அது வரவேற்கத்தக்கது” என்கிறார்.

உடல் சார்ந்த பிம்பங்களில் பெண்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைகளை அவர் புரிந்துகொள்வதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. அவருக்கு உடல் சவால் இருக்கிறது, காஹிலுக்கு வலது கை இல்லை.

“கருவிலேயே என் கை வளராமல் இருந்தது. இதற்கு சூழலோ வேறு எதுவோ காரணமாக இருக்கலாம். நான் பிறக்கும்வரை என் பெற்றோருக்கு இது தெரியாது. இதனால் எதுவும் எனக்குத் தடைகள் வரவில்லை, யாரும் என்னை வேறுமாதிரி நடத்தவில்லை என்றாலும் அது என்னை பாதித்திருக்கிறது.

இதனால் பல சவால்கள் ஏற்படுகின்றன. நீங்கள் விஷயங்களை வேறு மாதிரி செய்ய வேண்டியிருக்கும். முதல் முறை ஒரு விஷயத்தை செய்வதே கடினமாக இருக்கும், உடலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வீர்கள்.

ஆகவே நான் மிகவும் வலுவானவளாக இருக்கிறேன். கடினமான விஷயங்களிலிருந்து என்னால் உடனே மீண்டு வர முடியும். எப்போதும் இப்படித்தான் இயங்கியிருக்கிறேன்” என்கிறார்.

“நீங்கள் படைப்பாளியாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லாரும் இயல்பாகச் செய்யும் மிகச்சிறிய செயல்களைச் செய்வதற்குக் கூட வித்தியாசமான வழிமுறைகளைத் தேடவேண்டியிருக்கும். ஒரு வித்தியாசமான தன்னம்பிக்கையை அது வழங்கும்” என்கிறார்.

“உடல் சவால் பற்றி யாரும் பேசாத விஷயம் இது. அந்த வாழ்வனுபவம் கொண்டவர்கள், தாங்கள் வளர்த்துக்கொண்ட தகுதிகளால் எதையாவது செய்ய முடியும் – அது ஒரு நல்ல விஷயம். என் தனித்துவத்துக்கும் மனநிலைக்கு அது பெரிய உந்துதலாக இருந்தது” என்கிறார்.

வளரும்போது பெண் முன்னோடிகள் இல்லை என்றால், இப்போது அந்தப் பிரச்சனையே எதிர்மறையாக மாறியிருக்கிறது என்கிறார் காஹில். அவரது தலைமைக் குழுவில் ஏழில் ஆறு பேர் பெண்கள். ப்ராவிஸிமோ பணியாளர்களில் 90% பேர் பெண்களே.

பெண்களுக்கு உள்ளாடைகள் தேர்ந்தடுப்பதிலும் ப்ரா அளவு சரிபார்ப்பதிலும் பெண்களே உதவ முடியும் என்பதால் இந்தப் பணியாளர் அமைப்பு வந்திருக்கிறது. பெரும்பாலும் பெண்களே இருக்கிற குழுவுக்குத் தலைமை ஏற்பதால் எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்குமா?

“பெண் பணியாளர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்பதிலும் தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்வதிலும் கவனமாக இருக்கிறேன். ஒரு வேடிக்கையான விஷயம் சொல்கிறேன். பாலின பன்முகத்தன்மை பற்றிப் பேசும்போது நாங்கள் அதை வேறு விதமாக அணுகுகிறோம் – எங்கள் குழுவில் இன்னும் ஆண்கள் இருந்தால் நன்றாக இருக்கும்!” என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »